மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 4

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 4
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 4

ஓவியங்கள்: ராஜன்ரவி சுப்ரமணியன் (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)

‘`ரெகுலேஷன் நைஜீரியன் ஃபிஷிங் ஸ்கேம், சுவாமி.’’ வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்ட இ-மெயிலைப் பரிசீலித்தபின் என்.ஒய்.ஐ.பி (NYIB) பேங்கின் தொழில்நுட்பத் தலைவரான சரண் ராவத் இவ்வாறு கூறினார். இந்த இ-மெயில், சுவாமியின் அப்பார்ட்மென்டில் வசித்துவரும் மங்களாவுக்கு மட்டும் அனுப்பப் படவில்லை. இன்னும் நிறைய பேருக்கு அனுப்பப் பட்டிருக்கிறது என்பது தெரிந்தது.

அப்போது அங்கிருந்த பேங்க் மானேஜர் பக்கம் சுவாமி திரும்பினார். ‘`இன்று வரை இது தொடர்பா எத்தனை கம்ப்ளைன்ட்ஸ் வந்திருக்கு?’ என்று கேட்டார்.

‘`கடந்த மூணு நாளா 36 கம்ப்ளைன்ட்ஸ்.’’ 

‘`இதை ஏன் என் கவனத்துக்குக் கொண்டுவர வில்லை? நாம் இது சம்பந்தமாக அலர்ட்டா இருந்திருப்போம், இல்லையா? ஒரு ஃபிஷிங் சம்பவம் 36 புகார்களுக்குக் காரணமாக இருந்திருக் கிறது. இதுவொன்றும் குறைந்த எண்ணிக்கை யில்லை!”- சுவாமி ஆத்திரத்துடன் பேசினார்.

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 4

‘`நான் இதை முதன்முதலாக முந்தாநாள்தான் ஒரு கஸ்டமர்கிட்ட இருந்து கம்ப்ளைன்ட் வரும் போது பார்த்தேன்.’’

சரண், தான் அசட்டையாக இருந்ததை நியாயப்படுத்துவதற்குச் சிரமப்பட்டார்.

‘`உங்களுடைய துறை சார்ந்த அதிகாரியிடம் இது குறித்து ரிப்போர்ட் செய்யவேண்டுமென்று நீங்கள் நினைக்கவில்லையா...?’’ என நக்கல் கலந்த குரலில் சுவாமி பேசினார்.

‘`இல்லை, சுவாமி. அப்படியெல்லாம் இல்லை. இந்தச் சின்ன விஷயத்துக்காக நான் உங்களைத் தொந்தரவு செய்ய விரும்பலை. அதோட நானே பிரச்னையை ஹாண்ட்ல் பண்ணலாம் அப்படின்னு நெனச்சேன்’’

‘`ஓ, உண்மையாகவா? தாங்க் யூ!” சுவாமி தனது பொறுமையை இழந்தார். ‘`இந்த மாதிரியான ஃபிஸ்ஸிங் தாக்குதல் நடக்கும் போது ஸ்டாண்டர்டு ப்ரோடோக்காலைப் பின்பற்ற வேண்டுமென்று தெரியாதா? வழக்கம்போல, அதைக் கண்டுக்காம விட்டுட்டீங்க, அப்படித்தானே?” சுவாமி கத்தினார்.

சரணின் அமைதி, சுவாமியின் பயத்தை உறுதிப்படுத்தியது. அது இவருடைய அம்மாவின் தோழியாக இல்லாவிட்டால், அவரால் இன்னும் இந்தப் பிரச்னையைக் கண்டுபிடித்திருக்க முடியாது. அவர் வலதுபக்கமாக இருக்கும் புக் ‌ஷெல்ஃப் வரை நடந்துசென்று, அதிலிருக்கும் ஒரு பாக்ஸ் ஃபைலை எடுத்து, அதில் சில பக்கங்களைத் திருப்பிக் கொண்டே வந்து, `ஆப்ரேஷன்ஸ் மேனுவல் ஷரத்து 27–ன்படி துறைத் தலைவர், கன்ட்ரி ஹெட் மற்றும் பிராந்திய அலுவலகத் திலிருக்கும் தொழில்நுட்பக் குழுவினர் ஆகிய அனைவருக்கும் தகவல் அளிக்க வேண்டும்… சிஸ்டத்துக்குள் இருக்கும் லீக்கைத் தடுக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். அது சம்பந்தமான அப்டேட்டை ஒவ்வொரு நாளும் வங்கியின் பிராந்திய எக்ஸிக் யூட்டிவ் கவுன்சிலுக்கு அனுப்ப வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டே நிமிர்ந்து பார்த்தார். ‘`இதில் எதையெல்லாம் செஞ்சிருக்கீங்க  சரண்?’’

‘`இதையெல்லாம் இப்ப செய்ய ஆரம்பிச்சுடுறேன்’’.

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 4



‘`ப்ளீஸ்’’

சுவாமி படாரென்று பாக்ஸ் ஃபைலை மூடினார். சரண் அறை யிலிருந்து வெளியேறிய அந்தத் தருணத்திலேயே ஃபோன் மூலம் என்.ஒய்,ஐ.பி-ன் சி.இ.ஓ–ஆன மாள்விகாவைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தார்.

‘`மாள்விகா, நமக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. நாங்கள் அதை ஹாண்ட்ல் பண்ணிக்கொண்டிருக்கிறோம். இருந்தாலும், உங்களுக்கும் தகவல் தெரிவிக்கலாமென்றுதான் போன் பண்ணினேன்’’.

‘`சொல்லுங்க, என்னாச்சு?’’ 

‘`நமது வாடிக்கையாளர்களில் சிலர் ஃபிஷிங் தாக்குதலுக்கு ஆளாகியிருக்காங்க. அடையாளம் தெரியாத ஒருவரால் அந்த மெயில் அனுப்பப்பட்டிருக்கு. ஆனா, பார்க்க அது வோடோஃபோன் நிறுவனத்துல இருந்து  அனுப்பப் பட்ட மெயில் மாதிரி இருந்திருக்கு. அந்த மெயிலில் அவங்க என்.ஒய்,ஐ.பி கணக்கை லாக்-இன் செய்யவேண்டுமெனக் கேட்டு, ஒரு லிங்க்கும் தந்திருக்காங்க.  அதை வாடிக்கையாளர்கள் க்ளிக் செஞ்சவுடனே ட்ரோஜான் வைரஸ் அவங்க வங்கிக் கணக்கு எண், பாஸ்வேர்டு எல்லாத்தையும் ரெக்கார்டு செஞ்சு, அதன் உதவியால அவங்க  கணக்கிலிருந்து தேசிய வங்கி ஒன்றில் இருக்கும் வங்கி கணக்குக்குப் பணம் மாற்றப்பட்டிருக்கு’’ என்றார்.

‘`ஐயயோ, அப்புறம்...?’’

`இதுவரை ரூ.79 லட்சம் மாற்றப்பட்டிருக்கு. எத்தனை வாடிக்கையாளர்களுக்கு இது தெரியும் என்றுகூட தெரியல. நாங்கள் இந்தப் பிரச்னை பற்றி விசாரிச்சுக்கிட்டு இருக்கோம், மாள்விகா. இன்று இரவு நான் உங்களுக்கு அப்டேட் செய்றேன்.’’

‘`நான் ஆபீஸிலிருந்து கொஞ்சம் சீக்கிரமாகவே கிளம்பிடுவேன்.அதனால என்னோட மொபைல் ஃபோன்ல கூப்பிடுங்க. நாம இதில சிங்கப்பூர் ஆபீஸை இன்வால்வ் பண்ண வேண்டும்’’ என்றார்.

என்.ஒய்,ஐ.பி-ன் ஏசியா-பசிபிக் பிராந்தியத்தின் தலைமை அலுவலகம் சிங்கப்பூரில் இருக்கிறது.

அன்றிரவு சுவாமி, மாள்விகாவை போனில் கூப்பிடும்போது சுமார் ரூ.1 கோடிக்கு மேல் பணம் மாற்றப் பட்டிருந்தது. அதோடு, வாடிக்கை யாளர்களின் கம்ப்ளைன்ட்களின் எண்ணிக்கையும் 58-யைத் தொட்டிருந்தது. இது, கடந்த ஐந்து வருடங்களில் என்.ஒய்,ஐ.பி எதிர்கொண்ட மிக மோசமான ஃபிஷிங் ஸ்கேம் ஆகும்.

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 4

கோவா

அது ஒரு சோம்பேறித்தனமான காலை நேரம். சொல்லப்போனால் இன்னும் சிறிது நேரத்தில் மதிய மாகிவிடும். தான்யா அப்போது தான் படுக்கையிலிருந்து எழுந்தாள்.

நாஸ்காம் (Nasscom) அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றை ஒருங்கிணைக்கும் குழுவில் ஒருத்தியாக அவள் சில நாள்களுக்குமுன் கோவாவுக்கு வந்திருந்தாள். தொழில்நுட்பம் மற்றும் செயல்முறைத் துறைகள் சம்பந்தப்பட்ட உலகெங்கிலுமிருந்து வந்திருந்த நிபுணர்கள் எல்லோரும் அங்கிருந்தனர். இந்தியாவைச் சேர்ந்த சில தொழில்நுட்பத் துறை ஜாம்பவான்களும் வந்திருந்தனர். அந்த நிகழ்வு நேற்று இரவு முடிந்தது, அதன்பின் `காக்டெயில்’ விருந்து அதிகாலை நான்கு மணி வரை நீடித்திருந்தது. அங்கு தங்கியிருந்த சில விருந்தினர்கள் ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் செய்தபின் வலுக்கட்டாயமாக நான்கு மணியோடு பார்ட்டி முடிவுக்கு வந்தது.

‘ரூமைச் சுத்தம் செய்ய வேண்டுமா?’ என்று ஹோட்டல் சிப்பந்தி வந்து, அவர் தங்கியிருக்கும் ரூம் கதவைத் தட்டாமல் இருந்திருந்தால், தான்யா இன்னும் தூங்கிக்கொண்டிருந்திருப்பாள்.

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 4


`ஸ்பாகெட்டி டாப்’பிலும் கறுப்பு கலர் ஜீன்ஸிலும் அவள் அமர்க்களமாக இருந்தாள். அவளுடைய ப்ரெளன் நிற முடி கலைந்திருந்தாலும் அதிலும் ஓர் அழகு இருந்தது.

‘`நீங்கள் இங்கு தங்கியிருப்பதில் சந்தோஷம்தானே, மேடம்?” எனச் சிப்பந்தி தனது மூக்கை நுழைத்தான். தான்யாவும் வலுக் கட்டாயமாக ஒரு புன்முறுவல் செய்து தலையாட்டினாள்.

அவனது சீருடையில் இருந்த `டாக்’கில் லியான் டிசவூசா என்றிருந்தது. அவள் எழுந்து நின்றுகொண்டபின் அவன் மிகவும் கவனத்துடன் படுக்கையைச் சுத்தம் செய்தான். அவன் அவளை வெறித்துப் பார்த்தது அவளை என்னவோ செய்தது. எனவே, அவள் ஷால் மூலம் தன் உடம்பை மூடிக்கொண்டு பால்கனி பக்கம் சென்றாள்.

‘`க்ளீன் பண்ணிட்டேன், மேடம்’’ லியான் அங்கிருந்தபடியே கூறினான். ‘`வேறு ஏதாவது தேவையா?” எனக் கேட்டான்.

‘`இல்லை, தாங்க் யூ’’.

‘`உங்களுக்கு எதுவும் வேண்டுமெனில்….’’ என்று நிறுத்திய அவன், அவள் அறைக்குள் நுழையட்டும் எனக் காத்திருந்தபின் மீண்டும் அவளிடம், ‘‘உங்களுக்கு எதுவேண்டுமென்றால், தயவுசெய்து என்னைக் கூப்பிடுங்கள்’’ என்று சொல்லிவிட்டு அவனுடைய விசிட்டிங் கார்டை அங்கிருந்த டேபிளில் வைத்தான். அவன் வெளியே சென்றபின், அறையைத் திரும்பிப் பார்த்தான். அவனுடைய முகத்தில் நக்கலான ஒரு புன்சிரிப்பு. ‘`எதுவேண்டுமென்றாலும்...’’, அவன் அழுத்தமாகக் கூறிவிட்டுக் கதவை மூடிவிட்டுச் சென்றான். தான்யாவுக்குக் குழப்பமாக இருந்தது.

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 4

மதியம் போன் அடித்தது. ‘`நாங்கள் மத்தியான லஞ்ச்சுக்காக பீச்சிலிருக்கும் டென்ட்டுக்கு சாப்பிடப் போகிறோம், வருகிறாயா ஸ்வீட்ஹார்ட்?” அவளது சக பணியாளர்களில் ஒருவர் போன் மூலம் விசாரித்தார். ‘`நீங்கள் போகலாம். எனக்கு ஓய்வு தேவை’’ என்று அவர்களிடம் சொன்னாள். லஞ்ச்சுக்காக பிரியாணி ஆர்டர் செய்தபோது, லியான் விட்டுச் சென்ற கார்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தது. அது, அவனுடைய தனிப்பட்ட கார்டு – ஹோட்டலின் பெயர் அதில் இல்லை. அவளுடைய மனதில் ஒரு மோசமான எண்ணம் எழுந்தது. தான் தனியாக இருக்கும்போது முட்டாள்தனமாக எதையும் முயற்சி பண்ணி பார்க்க வேண்டாம் எனத் தீர்மானித்து சும்மா இருந்துவிட்டாள். 

அன்றிரவு, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களெல்லாம் குடிப்பதற்காக தான்யாவின் அறையில் ஒன்று கூடினார்கள். நன்றாக ஆரம்பித்த பார்ட்டி, நேரம் ஆக ஆக, அதன் சோபையை இழந்து கொண்டிருந்ததால் தான்யா போனை எடுத்து ஏதோவொரு நம்பரை அழைத்தாள்.

‘`லியான், நான் ரூம் நம்பர் 204-லிருந்து பேசுறேன். நீங்க இங்க கொஞ்சம் வரமுடியுமா?’’

`’என்ன வேணும், மேடம்?” தான்யா தயங்கியபடியே, ‘`கொஞ்சம் கஞ்சா கிடைக்க வாய்ப்பிருக்கா?”

லியான் லேசாகச் சிரித்தான். ‘‘இது கோவா மேடம். உங்களுக்கு என்ன வேண்டுமோ எல்லாம் கிடைக்கும். எனக்கு 10 நிமிஷம் மட்டும் கொடுங்க’’ என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.

பதினைந்து நிமிடங்களுக்குப்பிறகு, லியான் கதவருகில் நின்று கொண்டிருந்தான். யூனிஃபார்ம் எதுவுமில்லை. அவனுக்கு டியூட்டி முடிந்திருந்தது. அவன், அவள் தோளைத் தாண்டி அறையைக் கண்ணால் துழாவினான். அதிகமானவர்களை அங்கு பார்த்ததும் அவனுக்கு ஆச்சர்யமாக இருந்ததோடு, ஒருவிதமான பதற்றமும் அவனைத் தொற்றிக்கொண்டது. அவன் வந்த வேலை ஒருவருக்கொருவர் கச்சிதமாக முடிக்க வேண்டிய வேலையாக இருந்தது.

‘`கிடைச்சிருச்சா?” தான்யா கேட்டாள். அவள் தனது குரல் மிகவும் மெதுவாக இருப்பதுபோல பார்த்துக் கொண்டாள்.

‘`இங்கே இருக்கிற என்னோட ஃப்ரெண்ட் உங்களுக்கு உதவுவான்’ என்று சொல்லிவிட்டு லியான் வலதுபக்கம் பார்த்தான்.

வெளியே இருட்டாக இருந்தது.  தான்யா அங்கே நின்றுகொண்டிருப்பது யார் எனப் பார்ப்பதற்காகத் தனது தலையை வெளியே நீட்டினாள். யாரோ ஒருவர் அந்த இருட்டிலிருந்து வெளியே வந்து மிகவும் கவனத்துடன் அடி மேல் அடி வைத்து அவர்களை நோக்கி வந்தார். ‘`வருண்... நீயா? வாட் எ ப்ளசண்ட் சர்ப்ரைஸ்’’ என்று  அவள் ஆச்சர்யப்பட்டாள். 

(பித்தலாட்டம் தொடரும்)

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்

மத்திய அரசு கடன் குறைப்பு!

2018-19-ம் நிதியாண்டில் மத்திய அரசாங்கம் வாங்கவிருக்கும் கடன் தொகை ரூ.2.88 லட்சம் கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலத்தில் இது ரூ.3.72 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2018-19-ம் நிதியாண்டில் மத்திய அரசாங்கம் மொத்தம் ரூ.6.06 லட்சம் கோடி அளவுக்கு கடன் வாங்க, பட்ஜெட்டில் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட இந்த இலக்கைவிடக் குறைவாகவே கடன் வாங்கப்படும் எனத் தெரிகிறது. அரசாங்கம் குறைவான அளவில் கடன் வாங்கினால், அதிக வட்டிக்கட்ட வேண்டிய அவசியம் இருக்காது. எனவே, அரசின் இந்த முடிவை நினைத்து மக்கள் மகிழ்ச்சி அடையலாம்.