
சூப்பர் ஸ்டார்ட்அப்களின் தொழில் ஜாதகம்! - 16
பொதுவாக, இ-காமர்ஸ் தளங்கள் என்றாலே பி-டு-சி (B2C) நிறுவனங்கள்தான் நினைவுக்கு வரும். அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்றவை சில உதாரணங்கள். அதாவது, பொருள்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்பவை. ஆனால், இவைதவிர, பி-டு-பி (B2B) என்கிற வகையில் செயல்படும் சில இ-காமர்ஸ் தளங்களும் இருக்கின்றன. அது என்ன பி-டு-பி?
பி-டு-பி நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் அல்ல; வணிக நிறுவனங்கள். பெரிய வணிக நிறுவனங்களுக்குத் தேவையான பல பொருள்களை விநியோகிப்பதுதான் பி-டு-பி நிறுவனங்கள். இந்த வாரம் நாம் பார்க்கப்போவது அப்படியொரு நிறுவனத்தை.
அந்த நிறுவனத்தின் பெயர் ஆஹா. ஒரு நிறுவனத்தின் அலுவலகம் இயங்குவதற்கான ஒட்டுமொத்தப் பொருள்களையும், அனுப்பிவைப்பதுதான் இந்த ஆஹா ஸ்டோர்ஸின் பணி. இந்தியாவின் பல முன்னணி நிறுவனங்கள் இதன் வாடிக்கை யாளர்கள். ஆஹாவின் வேலை என்ன, வெற்றி அடைந்தது எப்படி என்பது பற்றி விரிவாக விளக்குகிறார்கள் ஸ்ரீஹரிஷ் கண்ணன் மற்றும் ராஜாராமன் சுந்தரேசன் ஆகிய இருவரும்.

இன்ஸ்பிரேஷன்
‘‘நாங்கள் இருவரும் அசோகன் சட்டநாதன் என்பவருடன் இணைந்துதான் இந்த நிறுவனத்தைத் தொடங்கினோம். நாங்கள் இருவரும் ஏற்கெனவே இ-காமர்ஸ் துறையில் அனுபவம் பெற்றவர்கள். அவர் வேறொரு முன்னணி நிறுவனத்தின் சப்ளை செயின் முழுவதையும் பார்த்துக்கொண்டிருந்தார். அங்குதான் அவர் ஒரு பிரச்னையைக் கண்டறிந்தார்.
உதாரணமாக, இரும்புத் தொழிற்சாலை ஒன்று இயங்குகிறது என வைத்துக்கொள்வோம். அதற்கு முக்கியமான மூலப்பொருள் இரும்பு. இதனை எங்கிருந்து வாங்க வேண்டும், என்ன விலைக்கு வாங்க வேண்டும், எப்போது வாங்க வேண்டும் போன்ற அத்தனை விஷயங்களையும் அந்த ஆலையின் தலைமை முடிவு செய்யும். அந்த ஆலையானது ஒரு பெரிய நெட்வொர்க் எனில், அதன் தலைமை அலுவலகம் இவற்றையெல்லாம் கவனித்து அந்தந்தக் கிளைகளுக்கு பிரித்தனுப்பும்.
இந்த இரும்பு வர்த்தகம் முழுவதும் முறைப்படுத்தப்பட்ட வர்த்தகம். அந்தந்த நிறுவனங்களின் விதிமுறைகளுக்கேற்ப நடக்கும். இதுதவிர, அந்தத் தொழிற்சாலை இயங்குவதற்கு வேறு சில பொருள்களும் தேவை. கணினிகள், ஸ்டேஷனரி பொருள்கள், அலுவலகப் பராமரிப்புப் பொருள் கள், ஊழியர்களின் சீருடைகள், எலெக்ட்ரானிக் சாதனங்கள் போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.
இவையனைத்தும் எங்கே வாங்க வேண்டும், என்ன விலையில் வாங்க வேண்டும் என்பதை நிறுவனங்களின் தலைமை முடிவு செய்வதில்லை. ஒரு நிறுவனத்திற்கு 100 கிளைகள் இருக்கின்றன என்றால், எல்லாக் கிளைகளிலும் இருக்கும் மேலாளர்கள்தான் இதனை முடிவு செய்வார்கள். ஒரு வங்கிக் கிளைக்குத் தேவையான பேப்பர், பேனா, பின் போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.
ஒரு பொருளை சென்னையில் இருக்கும் கிளை ஒரு விலைக்கு வாங்கியிருக்கும். கோவையில் இருக்கும் கிளை இன்னொரு விலைக்கு வாங்கியிருக்கும். இப்படி 100 கிளையிலும் தரம், விலை போன்றவை எல்லாம் மாறும். ஒருசில வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டும்தான் தங்கள் தர நிர்ணயத் திற்காக வேறு சில வழிமுறை களைப் பின்பற்றுகின்றன. இதனால், கூடுதல் செலவு ஏற்படும்.
இந்தச் சிக்கலுக்கு ஒரு தீர்வு காணவேண்டும் என அசோகன் விரும்பினார். அப்படி உருவானது தான் ஆஹா ஸ்டோர்ஸ்.

அடித்தளம்
எங்களின் வாடிக்கையாளர்கள் அனைவருமே பெரிய நிறுவனங் கள்தான் என்பதை முன்னரே முடிவு செய்துவிட்டோம். ஐ.டி நிறுவனங்கள், உற்பத்தி துறை மற்றும் வங்கி போன்ற நிதிசார்ந்த நிறுவனங்கள் ஆகியவைதான் எங்கள் முதல் இலக்கு. அங்கு இதனை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்துத் தெரிந்துகொள்வ தற்காக,அருகிலிருக்கும் வங்கிகளுக்கு நேரில் சென்று, அவர்களுக்கு என்னென்ன பொருள்கள் தேவை, அதனை எப்படி வாங்கு கிறார்கள், அவர்களுக்குத் தற்போது இருக்கும் சிக்கல்கள் என்ன என்பது குறித்துத் தெரிந்துகொண்டோம்.
பொருள்களை விற்பனை செய்வதற் காக விற்பனையாளர்களைத் திரட்டி னோம். முழுக்க முழுக்கத் தொழில் நுட்பம் சார்ந்து இயங்கப்போகும் நிறுவனம் என்பதால், அவற்றையும் நன்கு திட்டமிட்டு வடிவமைத்தோம். இப்படி அடிப்படை வேலைகள் அனைத்தும் முடிந்தபின்தான் நிறுவனங்களிடம் எடுத்துச்சென்றோம்.
வெற்றி
இன்று, அசோக் லேலேண்ட், விப்ரோ, பாஷ், மஹிந்திரா, ஆக்ஸிஸ் பேங்க் என நாட்டின் பல முன்னணி நிறுவனங்கள் எங்களின் வாடிக்கை யாளர்களாக உள்ளன. மொத்தம் இப்படி 156 நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இந்த நிறுவனங்களின் அலுவலகங் களுக்குத் தேவையான அத்தனை பொருள்களையும் நாங்கள்தான் டெலிவரி செய்கிறோம். இந்தியாவில் எங்கிருந்து ஆர்டர் செய்தாலும் 48 மணி நேரத்திற்குள் அவர்களுக்குப் பொருள் கள் சென்றுவிடும். இதற்காக எட்டு சேமிப்புக் கிடங்குகளும் இருக்கின்றன. தரமான பொருள்களை, குறைவான விலையில் கொடுப்பதற்காகப் பொருள் களைத் தயாரிக்கும் நிறுவனங் களுடனேயே நேரடியாக ஒப்பந்தம் செய்துவிடுவோம். இதனால், மிகக் குறைவான விலையில் நிறுவனங்களால் பொருள்களைப் பெற முடியும்.
ஜி.எஸ்.டி.யில் வாங்கிய பொருள் களுக்கு இன்புட் டாக்ஸ் கிரெடிட் எடுப்பதற்காக, அந்த இன்வாய்ஸ்கள் அனைத்தையும் நிறுவனங்கள் ஃபைல் செய்யவேண்டும். 100 கிளைகள் கொண்ட நிறுவனம் ஒன்று, ஒவ்வொரு பொருளையும் வெவ்வேறு கடைகளில் வாங்கினால், ஆயிரக்கணக்கில் இன்வாய்ஸ் வரும். இவற்றை ஃபைல் செய்வது மிகக் கடினம். ஆனால், எங்களிடம் வாங்கும் பொருள்கள் அனைத்துக்கும் ஒரே இன்வாய்ஸ்தான். எனவே, எளிதாக ஃபைல் செய்துவிட முடியும். எங்களிடம் மொத்தமாகப் பொருள்களை வாங்குவதன் மூலம் 7 - 8% பணம் மிச்சமாகும். வாங்கும் பொருள்களின் எண்ணிக்கையும் குறையும்.
இலக்கு
இது சுமார் ரூ.20,000 கோடி மதிப்புள்ள மார்க்கெட். இதில் எங்களின் இடம் மிகச் சிறியளவுதான். நாங்கள் எட்டிப் பிடிக்க வேண்டிய நிறுவனங்களும், துறைகளும் இன்னும் நிறைய இருக்கின்றன. அவற்றைப் பிடிப்பதும், இதே துறையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதும்தான் எங்கள் இலக்கு” என்றபடி விடைகொடுத்தனர் இருவரும்.
வித்தியாசமாக யோசிக்கும் இவர்கள் முயற்சி நிச்சயம் ஜெயிக்கும்!
- ஞா.சுதாகர்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்
கடந்துவந்த சவால்கள்!
“நாங்கள் முழு பி-டு-பி (B2B) நிறுவனம் என்பதால் பொதுமக்கள் எங்கள் வாடிக்கையாளர்கள் கிடையாது. எனவே, பெரிய நிறுவனங்களிடம் நேரடியாக எடுத்துச் சென்றோம். பலரும் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். காரணம், இது ஒரு முறைப்படுத்தப்படாத துறை என்பதால், ‘ஆஹா’ நல்லதொரு தீர்வாக இருக்கும் என நம்பினர்.
அதேசமயம், இன்னும் சில சிக்கல்களும் இருந்தன. பல ஆண்டுகாலமாக பின்பற்றிவந்த நடைமுறைகளைத் திடீரென மாற்றுவதற்குச் சிலர் தயங்கினர். இன்னும் சில நிறுவனங்கள், நாளொன்றுக்கு அல்லது மாதமொன்றுக்கு எவ்வளவு பொருள் கொள்முதல் செய்யப்படுகிறது என்ற தகவல் இல்லை. அவர்களுக்கெல்லாம் உதவினோம். நிறையக் கிளைகள் கொண்ட நிறுவனம் என்றால், ஒவ்வொரு கிளைக்கும் பட்ஜெட், அனுமதி அளிக்கும் மேலாளர், டெலிவரி தேதி போன்றவை எல்லாம் மாறும். இதற்காக எங்களின் மென்பொருளிலும் மாற்றங்கள் செய்யவேண்டியிருந்தது. இப்படி ஆரம்ப காலத்தில் வந்த எல்லாச் சவால்களையும் வெற்றிகரமாகக் கடந்தோம்” என்றனர் ஸ்ரீஹரிஷ் கண்ணன் மற்றும் ராஜாராமன் சுந்தரேசன்.