ஃபண்ட் டேட்டா! - 17 - பிரின்சிபல் குரோத் ஃபண்ட்... - சந்தையைவிட சற்று அதிக ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்!

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)
சில குறிப்பிட்ட காலத்தில், ஒரு ஃபண்ட் நிறுவனம் நிர்வாகம் செய்யும் அனைத்து ஃபண்டுகளும் மிக அற்புதமான வருமானத்தை அள்ளித் தரும். அதுபோன்ற தருணம்தான் பிரின்சிபல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திற்கு இப்போது.
பிரின்சிபல் எமர்ஜிங் புளூசிப், பிரின்சிபல் குரோத், பிரின்சிபல் பேலன்ஸ்டு, பிரின்சிபல் டாக்ஸ் சேவர், பிரின்சிபல் டிவிடெண்ட் யீல்ட் என இந்த நிறுவனத்தின் பல ஃபண்டுகள் தொடர்ந்து நன்றாகச் செயல்பட்டு வருகின்றன.

இந்த வாரம் நாம் அலசுவதற்கு எடுத்துக் கொண்டுள்ள ஃபண்ட் பிரின்சிபல் குரோத் ஃபண்ட் ஆகும். இது ஒரு மல்டிகேப் ஃபண்டாகும். இதன் ஃபண்ட் மேனேஜர் பி.வி.கே மோகன் ஆவார். இவர் ஃபண்ட் மேனேஜ்மென்ட் துறையில் 20 வருடங்களுக்கும் மேலான அனுபவமுடையவர். இவர், இந்தத் திட்டத்தை 2010-ம் ஆண்டிலிருந்து நிர்வகித்து வருகிறார். தற்போது இந்தத் திட்டம் ரூ.620 கோடி மதிப்புள்ள சொத்துகளை நிர்வகித்து வருகிறது.
தற்போது இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் கிட்டத்தட்ட 60% லார்ஜ்கேப் பங்குகளிலும், எஞ்சியவை மிட் அண்டு ஸ்மால்கேப் பங்கு களிலும் முதலீடு செய்யப் பட்டுள்ளன.
இந்த ஃபண்ட் வைத்திருக்கும் பங்குகளின் ஆவரேஜ் சந்தை மதிப்பு சுமார் ரூ.46,000 கோடி ஆகும். இந்த ஃபண்டின் பீட்டா, சந்தையைவிட சற்று அதிகமாக 1.12 என்ற அளவிலும், ஆல்ஃபா 6.58 என்ற அளவிலும் உள்ளது.

இந்த ஃபண்டை நாம் பரிந்துரைக்கு எடுத்துக்கொண் டதற்கு முக்கியக் காரணம், இதன் மார்தட்டிக்கொள்ளும் வருமானமே. 1, 3, 5, 7 வருடங்கள் என எந்தக் காலகட்டத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த ஃபண்ட், குறியீடு மற்றும் கேட்டகிரி ஆவரேஜ் ஆகிய இரண்டையும் தாண்டி மிக நல்ல வருமானத்தைக் கொடுத்துள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், எல் அண்டு டி போன்ற பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்குகளாக உள்ளன.கே.இ.சி இன்டர்நேஷனல், இந்தியா சிமென்ட்ஸ், டாபர் இந்தியா, பாம்பே பர்மா போன்ற மிட் அண்டு ஸ்மால் கேப் பங்குகளும் இதன் போர்ட் ஃபோலியோவில் இடம் பெற்றுள்ளன. தற்சமயம் கிட்டத்தட்ட 93 சதவிகிதத்தை பங்குகளிலும், எஞ்சிய 7 சதவிகிதத்தைப் பணமாகவும் வைத்துள்ளது.
இந்த ஃபண்ட் தொடங்கப்பட்டபோது (அக்டோபர் 2000) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், தற்போது ரூ.13,74,800- ஆக உள்ளது. இது சி.ஏ.ஜி.ஆர் அடிப்படையில் 16.24% ஆகும்.
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களைக் கண்காணித்துவரும் செபியானது, ஃபண்டு களைப் புதிதாக வகைப்படுத்தியுள்ளது. இதனடிப்படையில், வரும் மாதங்களில் சில ஃபண்டுகளின் வகை மாறுவதற்கு வாய்ப்புள்ளது. பிரின்சிபல் குரோத் ஃபண்ட், தற்போது ஒரு மல்டிகேப் ஃபண்டாக உள்ளது.
புதிய வகைப்படுத்து தலின் அடிப்படையிலும், இது ஒரு மல்டிகேப் ஃபண்டாகவே இருக்கும். புதிய விதிமுறைகளின்படி, இந்த வகை ஃபண்டுகள் லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் என எந்த வகையான பங்கு களிலும், எந்தவிதமான சதவிகிதத்திலும் முதலீட்டை வைத்துக்கொள்ளலாம்.
ஆனால், குறைந்தது 65% பங்கு சார்ந்த முதலீட்டில் இருக்க வேண்டும்.

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் முதலீட்டை மேற்கொள்ளத் தயாராக இருப்பவர்கள், நல்ல வருமானத்தை எதிர்பார்ப்பவர்கள், இளைஞர்கள் போன்ற அனைவரும் இந்த ஃபண்டில் தாராளமாக எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை மேற்கொள்ளலாம். இதுபோன்ற சமயங்களில் எஸ்.டி.பி மூலமாக மொத்த முதலீட்டையும் மேற்கொள்ளலாம்.
யாருக்கு உகந்தது?
அனைத்து வயதினர், முதன்முறை முதலீட்டாளர்கள், பணம் உபரியாக உள்ளவர்கள், சந்தையைவிட சற்று அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள், பங்கு சார்ந்த முதலீட்டில் மீடியம் ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள், ஏற்கெனவே மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ளவர்கள், செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்கள், பணம் உடனடித் தேவை இல்லாதவர்கள்.
யார் முதலீடு செய்யக்கூடாது?
குறுகிய காலத்தில் பணம் தேவைப்படு பவர்கள், முதலீடு செய்வதற்குக் கையிருப்பு இல்லாதவர்கள், உறுதியான/ நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள், பங்குச் சந்தை ஏற்ற இறக்கம் குறித்துப் போதிய ஞானம் இல்லாதவர்கள்.