
மதிப்புக் கூட்டல் தொடர் - 14
இன்றைய தேதியில், பல வகையான விவசாய விளைபொருள்கள் மதிப்புக் கூட்டல் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துகொண்டிருக்கின்றன. இன்று நமது கைகளில் தவழும் பெரும்பான்மையான உணவு பதார்த்தங்கள், ஏதோ ஒருவகையில் மதிப்புக் கூட்டல் செய்து உருவாக்கப் பட்டவையே. அந்த வகையில் வேப்பமரத்தி லிருந்து விளையும் பொருளை மதிப்புக் கூட்டி விற்பனை செய்து, நல்ல லாபம் பார்த்து வருகிறார் அருண் நேச்சுரல்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் லெனின்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகிலுள்ள மீனாட்சிபுரத்தில் உள்ளது இவருடைய தொழிற்கூடம். வேப்பங்கொட்டையிலிருந்து எண்ணெய், பூச்சி விரட்டி, பிண்ணாக்கு ஆகியவற்றைத் தயார் செய்து, உள்ளூர் முதல் வெளிநாடு வரை ஏற்றுமதி செய்துவருகிறார் லெனின். தொழிற்கூடத்தில் வேலையில் இருந்த அவரைச் சந்தித்துப் பேசினோம்.

“1996-ம் வருடம் முதலே எண்ணெய் பிரித்தெடுக்கும் நிறுவனத்தில்தான் நான் வேலை செய்துவந்தேன். அதனால் இந்தத் தொழிலில் நல்ல அனுபவம் இருந்தது எனக்கு. அங்கு வேலை செய்தபோது உற்பத்தியான பொருள்களில் தரம் குறையத் தொடங்கியது. அதனால், எனக்கு அங்கே வேலை செய்யப் பிடிக்காமல் வெளியேறிவிட்டேன். அதன்பின்னர், தனியாகத் தொழில் தொடங்கும் யோசனை தோன்றியது. முதலில் சந்தை வாய்ப்புகள் பற்றி நன்கு தெரிந்துகொண்டு, 2009-ம் ஆண்டு தொழிலைத் தொடங்கிவிட்டேன். தொடக்கத்தில் தேனிக்குள் மட்டுமே மூலப்பொருள்கள் வாங்க ஆரம்பித்தோம். இந்தத் தொழிலை முதல்முறையாக ஆரம்பிக்கும்போது, என்னையும் சேர்த்து மூன்றுபேர் வேலை செய்தோம். இப்போது 20 பேர் வரை வேலை செய்துவருகிறோம். சிறிய அளவில் ஆரம்பித்த மதிப்புக் கூட்டல் தொழிலை இன்று பெரிய அளவில் வளர்த்திருக்கிறோம். என் பொருளுக்கு இன்று வெளிநாடுகளில் நல்ல கிராக்கி இருக்கிறது. இதற்குப் பொருள் களின் தரம் மிக முக்கியம்.
முதல்முதலில் மாதம் மூன்று டன் வேப்ப எண்ணெய், ஒன்றரை டன் வேப்பம் பிண்ணாக்கைத்தான் உற்பத்தி செய்தோம். அப்போதைய விற்பனை வாய்ப்பு மிகக் கடுமையானதாக இருந்தது. மக்கள் வேப்ப எண்ணெய்யைப் புறக்கணித்த காலகட்டமும் அதுதான். அதன்பின்னர் விவசாயத்திலும் வேப்ப எண்ணெய், வேப்பம் பிண்ணாக்கு களைப் பயன்படுத்தத் தொடங்கிய பின் நன்கு விற்பனை ஆனது.
வெளிமார்க்கெட்டுகளில் ஒரு லிட்டர் வேப்ப எண்ணெய் 70 ரூபாய்க்குக் கொடுக்கிறார்கள். ஒரு லிட்டர் வேப்ப எண்ணெய் தயாரிப்பதற்கு 2.5 கிலோ பருப்பு தேவை. மூலப்பொருள்களுக்கு ரூ.112 முதல் ரூ.187 வரை செலவாகும்போது, எப்படி 70 ரூபாய்க்கு எண்ணெய் கொடுக்க முடியும்?
நான் விற்பனை செய்யும் தரமான வேப்ப எண்ணெய்யின் விலை ரூ.300. தரமான வேப்பம் பருப்புகள், இயந்திரச் செலவு, போக்குவரத்து என எல்லாச் செலவுகளும் போக 10% லாபம் கிடைக்கிறது. பிண்ணாக்கை ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன்.இதற்கு உள்ளூரிலேயே அதிக டிமாண்ட் இருக்கிறது.
மூலப்பொருளான வேப்பங் கொட்டையை வாங்கி, அதிலிருந்து பருப்பை எடுத்துத் தனியாகப் பிரித்து, பருப்பை அரைத்து எண்ணெய்யைப் பிழிந்து, வடிகட்டி எடுக்க வேண்டும். அதன்பின் பருப்பின் கழிவுகள் பிண்ணாக்குகளாக வெளியேறி விடும். இதனால் ஒரே பொருளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கிறது. இதனை வெறும் வேப்பங்கொட்டையாக விற்றால், குறைந்த அளவில்தான் லாபம் கிடைக்கும். அதனையே மதிப்புக் கூட்டி விற்பனை செய்யும்போது அதிக லாபம் கிடைக்கிறது.

மாதம் 15 டன் எண்ணெய்யும், 20 டன் பிண்ணாக்கையும் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறேன்.
இப்போது தமிழ்நாடு முழுவதிலுமிருந்து வேப்பங்கொட்டைகளை வாங்கி, மதிப்புக்கூட்டி விற்பனை செய்கிறேன். தமிழ்நாட்டு வேம்புக்குத்தான் அதிக கசப்புத்தன்மை உண்டு. அதனால்தான் தமிழ்நாட்டு வேப்பங் கொட்டைகளையே மூலப்பொருள்களாகக் கொண்டு பொருள்களைத் தயாரித்து வருகிறேன். மூன்றரை கிலோ பருப்பை மதிப்புக் கூட்டினால் ஒண்ணேகால் லிட்டர் எண்ணெய், ஒன்றரை கிலோ பிண்ணாக்கு கிடைக்கிறது.
மேலும், வேப்ப எண்ணெய்யிலிருந்து பூச்சி விரட்டித் தயார் செய்து வருகிறேன். மேலும், வேப்பம் பழத்திலிருந்து கேக் தயாரிக்க முயற்சி எடுத்து வருகிறேன். பொதுவாக, வேப்ப மரப்பொருள்கள் கசக்கத்தான் செய்யும். என்னைப் பொறுத்தவரை, இனிப்பான லாபம் கொடுக்கும் தேவாமிர்தம் ‘வேப்பமரப் பொருள்கள்’தான்.
இப்போது உள்ளூரிலும், வேப்ப எண்ணெய்க்கு அதிகமான வாடிக்கையாளர்கள் வந்துவிட்டதால் தேவைக்கு ஈடாகப் பொருள்களின் உற்பத்தியைத் அதிகரிக்க முடியவில்லை. அதற்கான முக்கியமான காரணம், தரம்தான். அதிகமாக உற்பத்தி செய்யப்போய் பொருள்களின் தரத்தில் குறைபாடு இருந்தால், அது மொத்த உற்பத்தியையும் பாதிக்கும்.
எனக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது சந்தை வாய்ப்புகள்தான். இதில் எனக்கு முன் அனுபவம் இருந்தாலும் சந்தையில் என்னை நிற்க வைத்தது, என் கடின உழைப்புதான். அந்த உழைப்புக்கேற்ற வருமானம் நமக்குக் கிடைக்குமா என்பதைத் தெரிந்துகொண்டுதான் தொழிலில் இறங்க வேண்டும்.
இந்தத் தொழிலில் இறங்குமுன் முன் அனுபவமும், பயிற்சியும் மிகவும் அவசியம். ஒரு பொருளை முதன்முதலில் நமது ஊரில் மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும்போது, அதற்கேற்ற பலன் உடனடியாகக் கிடைக்காது. ஆனால், உள்ளூர் சந்தையில் நம்முடைய பொருள்களை வாங்க ஆரம்பித்தால், நமக்கு லாபமும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.
தொழில் தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் பெரிய வருமானம் எதுவும் கிடைக்காது. எனக்கே எல்லாச் செலவுகளும் போக 10% லாபம்தான் கிடைக்கிறது. இன்னும் அதிக லாபம் ஈட்டப் பல வருடங்களாகும். ஆனால், சோர்ந்து போகாமல் தொடர்ந்து தொழிலில் ஈடுபட வேண்டும்” என்றார் லெனின்.
மதிப்புக் கூட்டல் பொருள்களில் தரத்தில் எந்தவிதச் சமரசமும் செய்யாமல் இருந்தால், வெற்றி நிச்சயம் என்பதற்கு லெனின் ஓர் உதாரணம்.
(மதிப்புக் கூடும்)
-துரை.நாகராஜன்
படங்கள்: வீ.சக்திஅருணகிரி