
ஹலோ வாசகர்களே..!
தனியார் வங்கிகளிலேயே பலரும் பொறாமைப்படும் அளவுக்கு வேகமாக முன்னேறிவந்த ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இப்போது சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3,250 கோடி கடன் தந்ததுதான் இந்தச் சர்ச்சையின் ரிஷிமூலம்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் சி.இ.ஓ சாந்தா கோச்சரின் கணவர் தீபக் கோச்சரும், வீடியோகான் நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் தூத்-ம் தொழில் கூட்டாளியாக இருந்தனர். வீடியோகான் நிறுவனம் இப்போது திவாலாகி, அதற்குத் தரப்பட்ட கடன் 3,250 கோடியில், 2,810 கோடி வாராக்கடனாகக் காரணம் சாந்தா கோச்சர்தான் என்கிற அளவுக்குச் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இந்தச் சர்ச்சையில் பல கேள்விகளை எழுப்புகிறார்கள் ஆய்வாளர்கள். உதாரணமாக, தீபக் கோச்சரும் வேணுகோபால் தூத்-ம் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தபின், ஒரே மாதத்தில் அந்த நிறுவனத்திலிருந்து வேணுகோபால் விலக என்ன காரணம், தீபக் நடத்திய நிறுவனத்துக்கு வேணுகோபால் ரூ.64 கோடி கடனாகத் தந்து, பின்பு அந்த நிறுவனத்தில் 94.99% பங்குகளைப் பெற்று, அதே பங்குகளைப் பல பரிவர்த்தனைகளுக்குப்பின் தீபக்கின் டிரஸ்ட்டுக்கு ரூ.9 லட்சத்துக்கு மாற்றியது ஏன், வேணுகோபாலின் வீடியோகான் நிறுவனத்துக்குக் கடன் தரப்பட்டபோது, தன் கணவருக்கும் அந்த நிறுவனத்துக்கும் தொடர்பு இருந்தது என்பதை சாந்தா கோச்சர், வங்கி இயக்குநர்கள் குழுவிடம் சொன்னாரா, அவர் அதைச் சொல்லவில்லை எனில், ஏன் சொல்லவில்லை எனப் பல கேள்விகள் எழுகின்றன.
இந்த நிலையில், இந்தப் பரிவர்த்தனைகளில் சாந்தா கோச்சர் எந்தவிதத் தவறும் செய்யவில்லை என்றும், 20 வங்கிகள் (ஸ்டேட் பேங்க் முதன்மை வங்கி) சேர்ந்து ரூ.40,000 கோடியை வீடியோகான் குழுமத்துக்குக் கடன் வழங்கியுள்ளன என்றும், இதில் ஐ.சி.ஐ.சி.ஐ தந்த கடன் ரூ.3,250 கோடிதான் என்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைவர் சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது.
‘புகார்களின் புகலிடமாக இருக்கிற பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவதுதான் ஒரே தீர்வு’ என்று சமீபகாலத்தில் பலரும் பெரிதாகப் பேச ஆரம்பித்தார்கள். இனி யாரும் அப்படிப் பேச முடியாது என்று வாய்ப்பூட்டு போடும் வகையில் வெடித்து வெளியே வந்திருக்கிறது இந்த சர்ச்சை.
அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, எதுவாக இருந்தாலும், அதன் உயர்பதவியில் இருப்பவர்கள் தனிப்பட்ட முறையில் லாபம் அடைய நினைத்தால், தவறுகள் அணிவகுக்க ஆரம்பித்துவிடும். வங்கி நடைமுறைகளை இன்னும் கறாராக மாற்றுவதன்மூலமும், பெரிய பதவியில் இருப்பவர்கள் தவறு செய்கிறார்களா என்று தொடர்ந்து கண்காணிப்பதன் மூலமும்தான் இனிவரும் காலத்தில் தவறுகள் நிகழாமல் தடுக்க முடியும். வங்கிகளைக் கட்டுப்படுத்தும் ரிசர்வ் வங்கி சுதந்திரமாகச் செயல்பட்டு, பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் வங்கிகளைச் சரியான முறையில் நிர்வகிக்க, தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!
- ஆசிரியர்