நடப்பு
தொடர்கள்
Published:Updated:

உலகை உலுக்கும் டிரேட் வார்... ஜெயிக்கப்போவது யார்?

உலகை உலுக்கும் டிரேட் வார்... ஜெயிக்கப்போவது யார்?
பிரீமியம் ஸ்டோரி
News
உலகை உலுக்கும் டிரேட் வார்... ஜெயிக்கப்போவது யார்?

உலகை உலுக்கும் டிரேட் வார்... ஜெயிக்கப்போவது யார்?

டந்த 22-ம் தேதி, உலகையே உலுக்குகிற மாதிரி சீனாவின்மீது இறக்குமதி வரியை விதித்து வர்த்தகப் போரை அறிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள்மீது அமெரிக்கா 50 பில்லியன் டாலர் அளவுக்குப் புதிய வரி விதித்ததைக் கண்டு ஆடிப்போனது சீனா. பதிலுக்கு அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு இறக்குமதியாகும் பொருள்கள் மீது 3 பில்லியன் டாலர் அளவுக்கு வரி விதித்தது சீன அரசாங்கம்.

உலகை உலுக்கும் டிரேட் வார்... ஜெயிக்கப்போவது யார்?

   காப்புரிமைத் திருட்டு

அமெரிக்காவின் இந்த வர்த்தகப் போருக்குப்  பல காரணங்களைச் சொல்கிறார்கள் நிபுணர்கள். அதில் முக்கியமானது காப்புரிமைத் திருட்டு. அமெரிக்காவில் உருவாக்கப்படும் எந்தப் புதிய பொருளும், உற்பத்தி செய்யப்படுவதற்குமுன்  காப்புரிமை பெறப்படும். இப்படிக் காப்புரிமை பெறுவதற்குக் காரணமே, அந்தப் பொருளை உருவாக்கிய நிறுவனத்தின் அனுமதியின்றி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அந்தப் பொருளைத் தயாரிக்கக்கூடாது என்பதற்காகத்தான்.

ஆனால், காப்புரிமை மீறும் விஷயத்தில் சீனா உலக அளவில் முதலாவது இடத்தில் இருக்கிறது என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு. அமெரிக்காவில் காப்புரிமை பெற்ற பொருள் களைக் கொஞ்சம்கூட வித்தியாசமில்லாமல் மிகக் குறைந்த செலவில் தயார் செய்து, அந்தப் போலியான பொருள்களை அமெரிக்காவின் நிஜமான பொருள்களுடன் கலந்துவிற்றுவிடும் வித்தையில் கில்லாடியாக இருக்கிறது சீனா.

‘‘உலக அளவில் தயாராகும் போலியான பொருள்களில் 80 சதவிகிதப் பொருள்கள் சீனாவில்தான் தயாராகிறது’’ என்கிறார் ‘தி கவுன்டர்ஃபீட் ரிப்போர்ட்’ என்கிற அமைப்பை உருவாக்கிய க்ரைக் க்ராஸ்பை. அமெரிக்காவில், போலியான பொருள்கள் முன்னணி இ-காமர்ஸ் தளங்களில் லட்சக்கணக்கில் வர்த்தகமாவது கண்டுபிடிக்கப்பட்டு, சமீபத்தில் நீக்கப்பட்டது. அமெரிக்க ராணுவ விமானங்களிலும், ஆயுதங்களிலும் பயன்படுத்தப்படும் பொருள்களில் 70% சீனாவில் தயாரான போலியான பொருள்கள் என்ற திடுக்கிடும் உண்மையும், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இப்படிப் போலியான பொருள்கள் அமெரிக்காவில் சுனாமியைப்போல வருவதால், அங்கு தயாராகும் பொருள்கள் விற்க முடியாமலே போகின்றன. இதனால், அமெரிக்காவில் தொழில் வளர்ச்சி குறைந்து, தொழில் செய்பவர்கள் தங்கள் நிறுவனங்களை இழுத்து மூடவேண்டிய நிலை ஏற்பட்டு, பலரும் வேலை இழக்கும் அபாயம் கடந்த சில ஆண்டுகளாக இருந்துவருகிறது. அமெரிக்காவின் நலனுக்காகப் பாடுபடுவேன் என்கிற வாக்குறுதியைக் கொடுத்து, தேர்தலில் ஜெயித்த டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவின் தொழில் நலனைக் காக்க இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார்.

   வர்த்தகப் பற்றாக்குறை

சீனாமீது அமெரிக்கா வர்த்தகப் போர் தொடுக்க இன்னொரு முக்கியக் காரணம், வர்த்தகப் பற்றாக்குறை. தற்போது அமெரிக்கா வுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை சுமார் 375 பில்லியன் டாலருக்கு மேல் இருக்கிறது. எப்படி இத்தனை பெரிய இடைவெளி வந்தது? அமெரிக்காவானது சீனாவிலிருந்து 506 பில்லியன் டாலர் அளவுக்குப் பல்வேறு பொருள்களை இறக்குமதி செய்கிறது. ஆனால், அமெரிக்காவோ சீனாவுக்கு 130 பில்லியன் டாலர் அளவுக்கு மட்டும் பொருள்களை ஏற்றுமதி செய்கிறது.

எலெக்ட்ரானிக்ஸ், ஜவுளி மற்றும் இயந்திரங்களைச் சீனாவிலிருந்து எக்கச்சக்கமாக இறக்குமதி செய்கிறது அமெரிக்கா. ஆனால், சீனாவோ சில வகையான பழங்கள், மாட்டு இறைச்சி, ஸ்டீல் பைப் போன்ற மிகச் சில பொருள்களையே அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்கிறது.

பத்து ஆண்டுகளுக்குமுன் இருந்த நிலையுடன் ஒப்பிடும்போது, இப்போது அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே இருக்கும் வர்த்தகப் பற்றாக்குறைக் குறைவுதான். கடந்த 2007-08-ம் ஆண்டில் அமெரிக்கா, 700 பில்லியன் டாலர் அளவுக்குச் சீனாவிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்தது. 2008-ல் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, 400 பில்லியன் டாலர் அளவுக்கு அது குறைந்தது. 2009 முதல் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்த இந்த இறக்குமதி, தற்போது 2017-ல் 568 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்தது. தற்போது இது, 506 பில்லியன் டாலர் என்கிற அளவில் குறைந்து வந்தபோதிலும், இதனை 100 பில்லியன் டாலர் என்கிற அளவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இலக்கு. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்குக்கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறார் ட்ரம்ப். அந்த அளவுக்கு வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க முடியுமா என்பதே இப்போது கேட்கப்படும் முக்கியமான கேள்வி.

உலகை உலுக்கும் டிரேட் வார்... ஜெயிக்கப்போவது யார்?

   அமெரிக்கா ஜெயிக்குமா?

அமெரிக்கா, சீனாமீது வர்த்தகப் போர் தொடுக்க இப்படிப் பல காரணங்கள் இருந்தாலும், இந்தப் போரில் யார் ஜெயிப்பார்கள் என்பதுதான் முக்கியம். வர்த்தகப் போரை அறிவித்த கையோடு ‘‘இந்தப் போரில் நாம் ஜெயிப்பது சுலபம்’’ என்று தனது ட்விட்டரில் சொன்னார் ட்ரம்ப். ஆனால், அமெரிக்கா நினைக்கிற மாதிரி அது அத்தனை சுலபமல்ல என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். சீனாவிலிருந்து இறக்குமதியாகும் அலுமினியம், இரும்பு உள்பட ஆயிரக்கணக்கான பொருள்கள்மீது அமெரிக்கா வரி விதிக்கும்போது, அந்தப் பொருள்கள் இறக்குமதியாவது குறையும். அப்படிக் குறைந்தால், அந்தப் பொருள்களுக்குத் தேவை அதிகரித்து, விலை உயர வாய்ப்புண்டு. இதனால் அவற்றின் பணவீக்கம் அதிகமாகி, வட்டி விகிதம் உயர்வதற்கு வாய்ப்பு அதிகம். பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தகுந்த அளவில் உயராமல், வட்டி விகிதம் மட்டும் உயர்வது எந்த நாட்டின் பொருளாதாரத்துக்கும் நல்லதல்ல. இதனால், மக்கள் தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி ஓட வாய்ப்புண்டு. ஆக, யாரை நோக்கியோ எறிந்தது, கடைசியில் தன்னை நோக்கியே திரும்பவரும் பூமராங் போல, சீனாவுக்கு எதிராக ட்ரம்ப் என்னவோ செய்ய நினைத்து, கடைசியில் வேறு பிரச்னையில் மாட்டிக் கொள்ளப் போகிறார் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

   தவிர்க்க முடியாத சீனா

கடந்த முப்பது ஆண்டுகளாக அமெரிக்காவின் ‘அசெம்ப்ளிங்க் ஸ்பாட்’-ஆகத்தான் சீனா உள்ளது. செல்போன் முதல் அனைத்துப் பொருள்களையும் குறைந்த செலவில் சீனாவில் தயார் செய்து, அமெரிக்கா உள்பட உலகம் முழுக்கக் கொண்டுபோய் விற்று லாபம் சம்பாதிப்பதுதான் அமெரிக்காவின் பிசினஸ் மாடல். உதாரணமாக, கடந்த பத்து ஆண்டுகளில் சீனாவிலிருந்து தயார் செய்து அமெரிக்காவுக்குக் கொண்டுவந்து விற்ற ஆப்பிள் போன்களின் மதிப்பு மட்டுமே 100 பில்லியன் டாலருக்கு அதிகமாக இருக்கும் என்கிறார்கள். 

இப்படி உலகம் முழுக்கத் தேவை யான பொருள்களை ஏற்றுமதி செய்தே தனது நாட்டின் பொருளா தாரத்தைப் பெருமளவில் வளர்த்துக் கொண்டது சீனா. இப்படித் தனது நாட்டு மக்கள் அனைவருக்கும் வேலை தந்ததுடன், தனது ஆண்டு சராசரி வருமானம் 16,600 ஆயிரம் டாலர் என்கிற அளவுக்கு உயர்த்திக்கொண்டது சீனா. இப்படித் தொடர்ந்து பல ஆண்டுகளாக வருமானத்தை உயர்த்திக் கொண்டதுடன்,  சீன மக்கள் பெருமளவு சேமிக்கும்  இந்தப் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்தது சீன அரசாங்கம்.

கடன் வாங்கியாவது அதிரடி யாகச் செலவு செய்வதில் அமெரிக்கா என்றும் சளைத்ததில்லை. சீன அரசாங்கம், தனது நாட்டின் பாண்டுகளை வாங்கத் தயாரான போது, அதை மனமுவந்து ஏற்றுக்கொண்டு, சீனாவிடமிருந்து நிறையவே கடன் பெற்றது அமெரிக்கா. கடந்த 2017-ம் ஆண்டு கணக்கின்படி, சீனா அமெரிக்காவுக்குக் கடனாகத் தந்த தொகை 1.17 ட்ரில்லியன் டாலர் ஆகும்.

ஜப்பானிடம் அமெரிக்கா 1.07 பில்லியன் டாலர் கடன் வைத்திருக் கிறது. இந்தக் கடன் அளவை  ஜப்பான் தொடர்ந்து குறைத்து வருகிறது. ஆனால், 2017 ஜனவரியில் 1.05 பில்லியன் டாலராக இருந்த சீனா தந்துள்ள கடன், தற்போது 1.17 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

ஆக, அமெரிக்காவே சீனா வுடனான  தொழில் உறவை முழுமை யாகத் துண்டித்துக்கொள்ள நினைத்தாலும், அப்படிச் செய்ய முடியாது என்பதே இன்றைய உலக யதார்த்தம்.

   இனி என்ன?

சீனாமீது அமெரிக்கா வர்த்தகப் போர் அறிவித்தபின், உலக அளவில் பங்குச் சந்தைகள் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளன. உலகப் பொருளாதாரமே மீண்டும் ஸ்தம்பிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால் ஏற்பட்ட பதற்றநிலையைத் தடுக்க, அமெரிக்காவுக்கும் சீனாவுக் கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான சூழல் உருவாகியுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவுகள் எடுக்கப் பட்டால், பொருளாதார வளர்ச்சி யானது அனைத்து நாடுகளிலும் தடையில்லாமல் நடக்கும் சூழ்நிலை உருவாகும். அப்படியொரு முடிவு ஏற்படாமல் போனால், உலக வர்த்தக மையத்தின் தலைவர் சொன்னது போல, உலக அளவில் பொருளாதார வளர்ச்சி மோசமான நிலையை அடையும் என்பதில் சந்தேகமில்லை.

வர்த்தகப் போர் விஷயத்தில் சுமுகமான முடிவு ஏற்படுவதே எல்லோருக்கும் நல்லது!

 - ஏ.ஆர்.குமார்

இந்தியப் பங்குச் சந்தை இனி எப்படி இருக்கும்?

அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போரினால்,  இந்தியப் பங்குச் சந்தையின் எதிர்காலம் எப்படியிருக்கும் என ஈக்வினாமிக்ஸ் ரிசர்ச் அண்டு அட்வைஸரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.சொக்கலிங்கத்திடம் கேட்டோம். அவர் விரிவாக விளக்கிச் சொன்னார்.

“இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி), பொருள்களின் ஏற்றுமதி சுமார் 15 சதவிகிதமாக உள்ளது. மேலும், நம் நாட்டின் மொத்தப் பொருள்கள் ஏற்றுமதியில் அமெரிக்காவுக்குச் செல்வது கிட்டத்தட்ட 15 சதவிகிதம்தான். ஏற்றுமதியில், அமெரிக்காவின் 9-வது பெரிய நாடாக இந்தியா உள்ளது. அமெரிக்காவுக்கான பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் வர்த்தக உபரி சுமார் 3% அதாவது, 80,000 கோடி டாலராக உள்ளது.  ஆனால், நமது அண்டை நாடான சீனாவுக்கும் இந்தியாவுக்குமான பன்னாட்டு வர்த்தகத்தில், இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 2017-ம் ஆண்டு நிலவரப்படி, சுமார் 6,000 கோடி டாலராக உள்ளது.

உலகை உலுக்கும் டிரேட் வார்... ஜெயிக்கப்போவது யார்?

அண்மையில் சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையே அதிகாரிகள் நிலையிலான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க, இந்தியா கோரிக்கை வைத்தது. இதை சீனா ஏற்றுக் கொண்டுள்ளது.

அமெரிக்காவுக்கு இந்தியா செய்யும் மொத்த ஏற்றுமதியில் வைரம் மற்றும் மருந்துப் பொருள்களின் பங்கு, கிட்டத்தட்ட 40 சதவிகிதமாக உள்ளது. இதனால், இந்தியப் பங்குச் சந்தைக்குப் பெரிய பாதிப்பு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், வைரம் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமில்லை. 

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி செய்வது கணிசமாக இருக்கிறது.  அமெரிக்காவில், இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கெனவே விலை விஷயத்தில் அதிகச் சிக்கலைச் சந்தித்து வருகிறது. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பெரும்பாலான இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் லாபம். ஏற்கெனவே குறையத் தொடங்கிவிட்டது. எனவே, ஏற்கெனவே பாதிப்பில் இருப்பதால், புதிதாக அதிக வரி விதிப்பதால், அதிக பாதிப்பு ஏற்படாது எனலாம்” என்றவர் சற்று நிறுத்தித் தொடர்ந்தார்.

‘’சாஃப்ட்வேர், ஐ.டி மற்றும் ஐ.டி சார்ந்த சேவைகள் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அதிகமாக ஏற்றுமதி யாகின்றன. 2016-17-ம் நிதியாண்டில் இந்தியாவின் சாஃப்ட்வேர், ஐ.டி மற்றும் ஐ.டி சார்ந்த சேவைகள் ஏற்றுமதிமூலம் அமெரிக்காவுக்குச் சென்றது 11,100 கோடி டாலராக உள்ளது. இதன் மீது அமெரிக்கா ஏதாவது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. அப்போது, சாஃப்ட்வேர் மற்றும் சேவைகள் ஏற்றுமதியில் அமெரிக்காவை அதிகம் சார்ந்திருக்கும் இந்திய ஐ.டி நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகக்கூடும். இந்தியப் பொருள்களின் இறக்குமதிமீது அமெரிக்கா அதிக வரி விதித்தால், இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிக்கக்கூடும். இதனால், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறையக்கூடும். மேலும், இந்தியாவில் வேலைவாய்ப்பு நிலையும் பாதிப்புக்குள்ளாகும். இதனால், ஐ.டி நிறுவனப் பங்குகளின் விலை மட்டுமே குறையும் எனச் சொல்ல முடியாது. ஒட்டுமொத்த இந்தியப் பங்குச் சந்தையும் இறக்கம் காண வாய்ப்புள்ளது.

என்றாலும், இது நடப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. காரணம், இந்தியா மற்றும் சீனா இடையே வர்த்தகம் அதிகரிக்கக்கூடும். இது, அமெரிக்காவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, அமெரிக்காவின் வர்த்தகத் தடை குறித்து இந்திய முதலீட்டாளர்கள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை, பருவ மழை ஆருடம், சட்டசபைத் தேர்தல் முடிவுகள், பொதுத் தேர்தல் போன்றவைதான் தற்போதைய நிலையில் இந்தியப் பங்குச் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் முக்கியக் காரணிகளாக உள்ளன. இவற்றையும் தாண்டி, உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்துவரும் நிறுவனங்களின் பங்குகளில் அதிக கவனம் செலுத்தினால், கணிசமான லாபம் பார்க்க முடியும். கூடவே, நிறுவனங்களின் மதிப்பு, நிர்வாகம் மற்றும் நிதிநிலைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு முதலீடு செய்வது அவசியம்’’ என்றார்.    

                                                                              
- சி.சரவணன்