நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஷேர்லக்: சர்ச்சையில் சிக்கிய தனியார் வங்கி!

ஷேர்லக்: சர்ச்சையில் சிக்கிய தனியார் வங்கி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்: சர்ச்சையில் சிக்கிய தனியார் வங்கி!

ஓவியம்: அரஸ்

“தொடர் விடுமுறை என்பதால், பர்சனல் விஷயமாக மும்பை வந்து விட்டேன். கேள்விகளை வாட்ஸ் அப்பில் அனுப்புங்கள்” என ஷேர்லக்  தகவல் அனுப்பவே, நாம் கேள்விகளை உடனே அனுப்பி வைத்தோம். அடுத்த ஒரு மணி நேரத்தில் பதில்களை அனுப்பி வைத்தார் ஷேர்லக்.

பத்து மாதங்களில் புதிதாக 1,200 வெளிநாட்டு நிறுவனங்கள் செபியில் பதிவு செய்திருக்கிறார்களே?

“2017-18-ம் நிதியாண்டில், முதல் பத்து மாதங்களில் செபியிடம் புதிதாக 1,276 வெளிநாட்டு போர்ட் ஃபோலியோ முதலீட்டாளர்கள் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து 2017  மார்ச்சில் 7,807-ஆக இருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை, 2018 ஜனவரியில் 9,083- ஆக அதிகரித்துள்ளது.

இந்த முதலீட்டாளர்கள், நம் நாட்டில் பங்குச் சந்தை, பாண்டுகள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள். உலகின் இதர நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் இந்த முதலீடுகள் லாபகரமாக இருப்பது மற்றும் இதுதொடர்பான விதிமுறைகளை செபி எளிமையாக்கி இருப்பது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம் நாட்டில் தொடர்ந்து அதிகளவில் முதலீடு செய்துவருவது முக்கியக் காரணங்களாக உள்ளன.

ஐ.பி.ஓ மூலம் சந்தையில் முதலீடு செய்வதில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 2017 ஜனவரியிலிருந்து மார்ச் 26-ம் தேதி வரை யிலான காலத்தில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்தியப் பங்குச் சந்தையில் ரூ.61,000 கோடி முதலீடு செய்துள்ளனர். இதில் 85% ஐ.பி.ஓ மூலம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள், நடப்பாண்டில் இதுவரை  180 கோடி டாலர் மதிப்புள்ள  பங்குகளை வாங்கி யுள்ளனர். இதில் 149 கோடி டாலரை, ஐ.பி.ஓ மூலம் முதலீடு செய்துள்ளனர்.”

ஷேர்லக்: சர்ச்சையில் சிக்கிய தனியார் வங்கி!

இந்தியப் பங்குச் சந்தை இறக்கத்தில் இருந்தாலும் கிராமப்புற சந்தையை மையமாக வைத்துச் செயல்படும் நிறுவனப் பங்குகள், நல்ல லாபம் கொடுக்கும் என்கிறார்களே?

“பேங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லிஞ்ச், ‘வருகிற 2018 டிசம்பர் இறுதியில், சென்செக்ஸ் 32000 புள்ளிகள் என்கிற அளவுக்கு இறங்கிக் காணப்படும்’ என எச்சரித்திருக்கிறது.  ஆனால், அடுத்த சில மாதங்களுக்கு இந்தியப் பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதேசமயம், சந்தை  இறங்கி யுள்ள இந்த நிலையிலும், கிராமப்புறச் சந்தையை அடிப்படையாக வைத்து இயங்கும் நிறுவனப் பங்குகளின் செயல்பாடு லாபகரமாக இருக்கும் எனச் சொல்லியிருக்கிறது. இருசக்கர வாகனங்கள், சிமென்ட், நுகர்வோர் பொருள்கள் போன்ற நிறுவனங்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் எனவும் அந்த நிறுவனம் சொல்லியிருக்கிறது.

மத்திய அரசு, வரும் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்கு அதிகமாகச் செலவழிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம்,  கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து,  அவர்களின் வாங்கும் திறனும் அதிகரிக்கும்.

அதேபோல, கிராமப்புறங்களில் மானிய விலையில் வீடு கட்டும் திட்டமான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் அரசாங்கம் தொடர்ந்து மானியம் அளித்து வருவதால், கிராமங்களில் கட்டுமானப் பொருள்களுக்கான தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 2017-18-ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், சிமென்ட் பயன்பாடு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல, நுகர்பொருள் சாதனங்கள் துறையும் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுவருகிறது. குறிப்பாக சோப், ஷாம்பு, ஹேர் ஆயில் ஆகியவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது. இரு சக்கர வாகனங்களின் விற்பனையும் சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது சார்ந்த நிறுவனங்களின் பங்கு களின் விலையும் கணிசமாக அதிகரிக்க வாய்ப்புண்டு’’.

ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் ஐ.பி.ஓ வெற்றி என்று சொல்லலாமா?

“பிரபல வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ பேங்கின் ஓர் அங்கமான ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் சமீபத்தில் ஐ.பி.ஓ வெளியிட்டது. இதன் பங்கொன்றின் விலை ரூ.519-520 என நிர்ணயிக்கப்பட்டது. 4.42 கோடி பங்குகள் விற்பனைக்குவந்த நிலையில், 3.47 கோடிப் பங்குகள் மட்டுமே வேண்டி விண்ணப்பங்கள் வந்தன. அதாவது, 78% பங்கு களுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் வந்துள்ளதால், இந்த ஐ.பி.ஓ மூலம் எதிர்பார்த்த நிதியைத் திரட்ட முடியவில்லை. பங்கு விலை அதிகமாக நிர்ணய மானது, பங்குச் சந்தை தொடர்ந்து இறக்கத்தின் போக்கில் இருந்தது போன்றவை இதற்குக் காரணங்களாக சொல்லப்படுகின்றன’’. 

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் - வீடியோகான் சர்ச்சை பெரிதாகி வருகிறதே!

‘‘கடந்த 2012-ம் ஆண்டு வீடியோகான் குழுமத்துக்கு ஐ.சி.ஐ.சி.ஐ பேங்கின் கிரெடிட் கமிட்டி ரூ.3,250 கோடி கடன் வழங்க ஒப்புதல் வழங்கியது. இந்த கமிட்டியில் ஐ.சி.ஐ.சி.ஐ பேங்கின் தலைமைச் செயல் அதிகாரி சாந்தா கோச்சர் இடம்பெற்றிருந்தார். சாந்தா கோச்சரின் கணவர் தீபக் கோச்சர், நியூபவர் (NuPower) என்கிற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் ஒன்றை       2008-ம் ஆண்டில் நடத்தி வந்தார். அதில், வீடியோகான் குழுமத்தின் புரோமோட்டர் வேணுகோபால் தூத், ஆரம்பத்தில் பங்கு முதலீடு செய்திருந்தார். அந்தப் பங்குகளை விற்பனை செய்துவிட்டபோதிலும், 2013-ம் ஆண்டு வரையில் வேணுகோபால் தூத், அதன் நிர்வாகத்தைத் தன் கட்டுக்குள் வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், அப்போது வீடியோகான் நிறுவனத்துக்குக் கடன் வழங்கிய விஷயம்,  இப்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இந்தக் கடன் வழங்க ஒப்புதல் தந்ததில்  சாந்தா கோச்சருக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் இரு அறிக்கைகளில் சொன்னாலும், இந்த வங்கியின் பங்கு விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த ஜனவரி 28-ம் தேதி, இந்த வங்கியின் பங்கின் விலை ரூ.365-ஆக இருந்தது, இப்போது ரூ.278-க்கு வர்த்தகமாகிறது. ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் பங்குகள் விலை சரிந்துவரும் நிலையில், அதன் துணை நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸில் முதலீடு செய்ய வேண்டுமா என முதலீட்டாளர்கள் நினைத்து ஒதுங்கியதும்தான் அந்த  ஐ.பி.ஓ முழுமையடையாமல் போகக்  காரணம் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.   

ஐ.டி நிறுவனங்கள் பைபேக்கில்  ஆர்வமாக இருக்கின்றனவே?

“நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அதிகளவில் பங்குகளைத் திரும்பப் பெற்றுள்ளன. இதற்காக ரூ.52,350 கோடியை இதுவரை செல விட்டுள்ளன. இது, கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 54% அதிகம். மேலும், நடப்பு நிதியாண்டில் 56 நிறுவனங்கள், முதலீட்டாளர்களிட மிருந்து பங்குகளைத் திரும்பப் பெற்றுள்ளன. குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் டி.சி.எஸ் ரூ.16,000 கோடி, இன்ஃபோசிஸ் ரூ.13,000 கோடி, விப்ரோ மற்றும் ஹெச்.சி.எல் நிறுவனங் கள் முறையே ரூ.11,000 மற்றும் ரூ.3,500 கோடி மதிப்புள்ள பங்குகளை முதலீட்டாளர்களிடமிருந்து திரும்ப வாங்கியுள்ளன.

டிவிடெண்ட் விநியோக வரியைத் தவிர்த்தல், கூடுதல் டிவிடெண்ட் வரியைத் தவிர்த்தல், விரிவாக்கத் திட்டங்களில் சுணக்கம் போன்ற காரணங்களால் பங்குகளைத் திரும்ப வாங்கி வருகின்றன. இதன்மூலம் நிறுவனங்களின் புத்தக மதிப்பு அதிகரித்து, நிறுவனத்தின் மதிப்புக் கூடியுள்ளது.

தனது சேவைக்கான தேவை குறைந்திருப்பதால், கடந்த சில ஆண்டுகளாக நிறுவனங்கள், பெருமளவு நிதியைத் தொழிலில் முதலீடு செய்வதைத் தவிர்த்து வருகின்றன. கடந்த 2014-ம் ஆண்டில், புதிய முதலீட்டுத் திட்டங்களுக்கான நிதி 16.2 ட்ரில்லியன் டாலர், 2015-ம் ஆண்டில் 15.3 ட்ரில்லியன் டாலர், 2016-ம் ஆண்டில் 14.5 ட்ரில்லியன் டாலர், 2017-ம் ஆண்டில் 7.9 ட்ரில்லியன் டாலர் என்கிற அளவில் தொடர்ச்சியாகக் குறைந்து வருகின்றன.’’

சந்தையின் போக்கு இனி எப்படி இருக்கும்?

“ஐ.டி, மீடியா, எஃப்.எம்.சி.ஜி பங்குகளில் அதிக அளவில் லாங்க் பொசிஷனை ஏப்ரல் மாத ரோல் ஓவரில் பார்க்க முடிகிறது. பொதுத் துறை வங்கிகள், சிமென்ட் நிறுவனப் பங்குகளில்  அதிக சார்ட் பொசிஷன் ரோல் ஓவர் பார்க்க முடிகிறது. நிஃப்டி ரோல் ஓவர் கடந்த மூன்று மாதங்களில் சராசரியாக 67 சதவிகிதமாக உள்ள நிலையில், ஏப்ரலில் அது 69 சதவிகிதமாக உள்ளது.  நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரஸ்ட், ஏப்ரல் சீரிஸில் ரூ.21,200 கோடியாக உள்ளது. இது, மார்ச் கான்ட்ராக்டில் ரூ.19,900-ஆக இருந்தது. ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் ரோலோவரை வைத்துப் பார்க்கும்போது ஏப்ரல் மாதத்திலும் சந்தை, பலவீனமாக இருக்கும் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.

நிஃப்டி 10000 புள்ளிகளுக்கும் கீழே போனால், 300 முதல் 400 புள்ளிகள் குறையலாம். சந்தை குறையக் குறைய நல்ல பங்குகளை வாங்க அருமையான வாய்ப்பு என்பதை மறக்காதீர்கள்” என்கிற முக்கியமான ஆலோசனையுடன் தனது பதிலை முடித்திருந்தார் ஷேர்லக்!

பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு பம்பர் பரிசு

அண்மையில், ஐ.பி.ஓ மூலம் பங்கு சந்தைக்கு வந்தது பந்தன் பேங்க். இந்தப் பங்கின் வெளியீட்டு விலையாக ரூ.375 நிர்ணயிக்கப்பட்டது. கடந்த செவ்வாயன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகமாகத் தொடங்கிய இந்தப் பங்கு, முதல் நாளன்றே வெளியீட்டு விலையைவிட 29%  அதிகரித்து, ரூ.485-க்கு வர்த்தகமாகத் தொடங்கியது.  இதனையடுத்து, இந்த வங்கியின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ. 56,920 கோடியாக உயர்ந்து, பங்குச் சந்தை  அடிப்படையில் இந்தியாவின் எட்டாவது பெரிய வங்கியாக உருவெடுத்துள்ளது.