
சர்வதேசப் பொருளாதார நிபுணர் டாக்டர் அனந்த நாகேஸ்வரன்
இன்றைக்கு உலகப் பொருளாதாரத்தின் முன்னேற்றத்துக்கு ஒரு தடைக்கல்லாக மாறியிருக் கிறது சீனாமீது அமெரிக்கா தொடுத்திருக்கும் வர்த்தகப் போர். இது உலகப் பொருளாதாரத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றி, சர்வதேசப் பொருளாதார நிபுணர் டாக்டர் அனந்த நாகேஸ்வரன் நமக்களித்த பேட்டி இனி...

ஏன் இந்த வர்த்தகப் போர்?
‘‘இது வெறும் வர்த்தகப் போர் மட்டுமல்ல, சீன அரசாங்கத்துக்கு அமெரிக்கா விடுத்திருக்கும் பகிரங்க எச்சரிக்கை. பொருள்களை அதிக அளவில் உற்பத்தி செய்துகொண்டுவந்து அடைப்பது, தொழில்நுட்பங்களைத் திருடுவது, வெளிநாட்டினர் சீனாவில் முதலீடு செய்வதற்கு நிபந்தனைகளை விதிப்பது எனப் பல விஷயங் களில் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அமெரிக்கா மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளும்கூட சீனாவின் வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளைப் பார்த்து வெறுத்துப்போனது. ஆனால், இதுவரை எந்த நாடும் இதுபற்றி வெளிப்படையாகப் பேசாமல் தங்களுக்குள் புலம்பின. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மட்டும் செயல்படத் தொடங்கி இருக்கிறார்.’’
இந்த வர்த்தகப் போரினால் சீனா பாதிப்படையுமா?
‘‘நிச்சயமாக. காரணம், சீனப் பொருளாதாரம் ஏற்றுமதியை அதிகம் நம்பியிருக்கிறது. தவிர, 2025-க்குள், தான் அடையவேண்டிய பொருளாதார வளர்ச்சி பற்றி முக்கியமான, பெரிய திட்டங்களை வகுத்துவைத்திருக்கிறது சீனா. இந்தப் பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டுமெனில், தொழில்நுட்ப உதவிகள் சீனாவுக்குக் கட்டாயம் தேவை. எனவே, இந்த வர்த்தகப் போரினால் சீனாவுக்குத்தான் அதிக பாதிப்பு ஏற்படும்.’’
உலக அளவில் என்ன மாதிரியான பாதிப்புகளை இந்த வர்த்தகப் போர் ஏற்படுத்தும்?
‘‘சீனாவின்மீது மட்டுமல்ல, தனது திறந்த பொருளாதாரத்தைப் பயன்படுத்தி நன்மை பெறும் நாடுகள் மீதும் நடவடிக்கை எடுக்க இலக்கு நிர்ணயித்திருக்கிறது அமெரிக்கா. இது மாதிரியான வர்த்தகச் சச்சரவுகளைத் தீர்க்கத் தான் உலக வர்த்தக மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னை தொடர்பாக அமெரிக்கா - சீனாவுக்கிடையே பேச்சுவார்த்தை நடந்து, ஏதாவது ஒரு சுமுகமான முடிவு எடுக்கப்படலாம். அப்படி எதுவும் நடக்காமல்போனால், குறுகிய காலத்தில் உலகப் பொருளாதாரம் கொஞ்சம் பாதிப்படையவே செய்யும்.’’

இந்த வர்த்தகப் போரினால் இந்தியப் பொருளாதாரம் பாதிப்படையுமா?
‘‘ஏற்றுமதிக்கு இந்தியா அளித்து வரும் மானியத்தைக் குறைக்கவும், இறக்குமதிக்கானத் தடைகளை நீக்கக்கோரியும் இந்தியாவுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்து வருகிறது. ஏற்றுமதியைப் பொறுத்தவரை, இந்தியா சக்தி வாய்ந்த நாடல்ல. கடந்த இரு ஆண்டுகளாக உலகப் பொருளாதாரம் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருந்தாலும், இந்தியாவின் ஏற்றுமதி பெரிய அளவில் உயரவில்லை. ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பு நீக்கத்தினால் பணப் புழக்கம் குறைந்தது போன்ற தற்காலிகக் காரணங்கள் ஒருபக்க மிருக்க, இந்திய ஏற்றுமதியாளர்கள் சர்வதேச ஏற்றுமதியாளர்களுடன் போட்டியிட முடியாத அளவுக்குச் சிலபல நிரந்தரப் பிரச்னைகளும் இருக்கவே செய்கின்றன.
இந்த வர்த்தகப் போரினால் இந்தியாவுக்கு நேரடியான பெரிய விளைவுகள் ஏதும் இருக்காது. ஆனால், மறைமுகமாக ஏற்படும் விளைவுகள் கவனிக்கத்தக்கதாக இருக்கும். இந்த வர்த்தகப் போரினால் பல்வேறு நாடுகளின் இந்தியாவின் மீதான எண்ணம் மாறி, அவை முதலீடுகளைக் குறைத்து, வர்த்தகத்தை நிறுத்தும்பட்சத்தில், அதனால் ஏற்படும் விளைவுகள் எப்போது முடிவுக்கு வரும் என்று யாராலும் சொல்ல முடியாது.
இந்த வர்த்தகப் போர் நடக்கிற அதேசமயத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது பாதுகாப்பு ஆலோசகராக ஜான் போல்டனை நியமித்திருக்கிறார். ஈரானுக் கெதிரான தீவிரமான போக்கைக் கடைப்பிடித்துவந்த இவர், பாதுகாப்பு ஆலோசகராக மாறியபின், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 70 டாலர் என்கிற அளவை எட்டியது. இது, இந்தியாவுக்கு நல்ல செய்தியே அல்ல.’’
இந்த வர்த்தகப் போரினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து இந்தியா தப்பிக்க என்ன வழி?
‘‘உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பலப்படுத்த இந்தியா பல விஷயங்களைச் செய்ய வேண்டும். இந்தியாவின் தேசியச் சேமிப்பு விகிதம் குறைந்து வருகிறது. கடந்த ஒன்பது ஆண்டு களில் இந்தச் சேமிப்பு விகிதம் 9% குறைந்திருக்கிறது. சேமிப்பு குறைவதற்குக் காரணம், அரசாங்கம் எளிதில் அளிக்க வேண்டிய சில விஷயங்களை மக்கள் அதிக விலை தந்து வாங்குவதே. மக்களுக்குச் செய்து தரவேண்டிய பல வசதிகளை மத்திய, மாநில, உள்ளூர் அரசாங்கங்கள் சரியாக நிறைவேற்றித் தரவில்லை. எனவே, திறமையான நிர்வாகத்தை முதலில் உருவாக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசாங்கங்கள் நிலத்தின் மூலமான உற்பத்தியைப் பெருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமானப் பரப்பு விகிதம் (Floor Space Index) உருவாக்கப்பட வேண்டும். நிலத்தை எளிதில் மாற்றிப் பயன்படுத்துகிற மாதிரி விதிமுறைகள் மாற்றப்பட வேண்டும். இந்த விஷயத்தில் தற்போது அதிக அளவில் லஞ்சம் இருப்பதை மாற்றியமைக்க வேண்டும். சுருக்கமாக, வர்த்தகப் போர் பற்றி அதிகம் கவலைப் படாமல், உற்பத்தியைப் பெருக்கி, வருமானத்தை உயர்த்தி, சேமிப்பை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.’’
நமது பொருளாதாரத்தை நாம் பலமாக வைத்திருந்தால், வெளி நாடுகள் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமிருக்காது என்பது சரிதானே!
- ஏ.ஆர்.குமார்