நடப்பு
தொடர்கள்
Published:Updated:

தடுமாறும் தங்க நகைத் துறை!

தடுமாறும் தங்க நகைத் துறை!
பிரீமியம் ஸ்டோரி
News
தடுமாறும் தங்க நகைத் துறை!

சுமதி மோகனப் பிரபு

ன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகவும் சர்ச்சைக்குள்ளான துறையாக மாறியிருக்கிறது தங்க நகைகளைத் தயாரித்து விற்கும் துறை. இத்தனை ஆண்டுகளுக்காக ஓஹோவென வளர்ந்த இந்தத் துறை, இன்றைக்கு வாராக் கடனில் சிக்கித் தவிக்க, நீரவ் மோடி, மொஹல் சோவ்ஸ்கி எனப் பெரிதாகப் பேசப்பட்ட நகை நிறுவன அதிபர்கள் இன்று சத்தம் இல்லாமல் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இந்தத் துறை இத்தனை பெரிய புயலில் சிக்கித் தவிக்க என்ன காரணம் என்பதைப் பார்க்குமுன், இந்தத் துறையின் பின்னணியைச் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

 46 லட்சம் பேருக்கு வேலை

     இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தித் துறையில் ரத்தினங்கள் மற்றும் நகைத் துறையின் பங்கு 7 சதவிகிதமாகவும், அந்நிய நாடுகளுக் கான ஏற்றுமதியில் இந்தத் துறையின் பங்கு 15.71 சதவிகிதமாகவும் உள்ளன.

  சர்வதேச நகைச் சந்தையில் 29 சதவிகிதப் பங்கைப் பெற் றுள்ள இந்திய நகைத் துறை, 46 லட்சத்துக்கும் மேலான உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புக்களையும் தந்துள்ளது.

இப்படி  இந்தியப் பொருளா தாரத்தில் அதிமுக்கியப் பங்கு வகிக்கும் நகைத் துறை, சமீப காலமாக பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. நீரவ் மோடி, கீதாஞ்சலி ஜெம்ஸ் ஆகிய மோசடி குற்றச்சாட்டுகளின் தொடர்ச்சியாக, தமிழகத்திலும் நகைத் துறை சார்ந்த பெரு நிறுவனங்கள், வாராக் கடன் மற்றும் மோசடிப் பட்டியலில் இடம் பெற்றுவருவது இந்திய நகைத் தொழில் துறை மற்றும் இந்தத் துறையில் பணியாற்றி வரும் லட்சக்கணக்கான ஊழியர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.  தங்க நகைத் துறை சர்ச்சையில் சிக்கித் தவிக்க, பல காரணங்கள் உள்ளன.அவற்றை ஒவ்வொன் றாகப் பார்ப்போம்.

தடுமாறும் தங்க நகைத் துறை!

   பணப் பரிவர்த்தனை கட்டுப்பாடு

பணமதிப்பு நீக்கத்தின் தொடர்ச்சியாக, பணப் பரிவர்த்தனைகளின்மீது பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது.தங்கத்தைப் பொறுத்தவரை, பெரிய அளவிலான விற்பனை, முறைசாரா நுகர்வோரிடமே நடத்தப்படுகிறது. மேலும், கறுப்புப் பணத்தைப் பதுக்குபவர்கள் பெரும்பாலும் தங்க நகையிலேயே முதலீடு செய்கிறார்கள் என்ற புறத் தோற்றத்தின் விளைவாக, புலனாய்வு அமைப்புகளின் கண்காணிப்பிலேயே இந்தத் துறை இருந்துவந்ததும், தங்க நகை விற்பனையில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. சமீபத்தில், தங்க நகை வாங்குவதற்கான பணப் பரிவர்த்தனைகளில் ரூ.2 லட்சம் வரை தனிநபர் ஆதாரங்கள் வழங்கப்பட வேண்டியதில்லை என்று மத்திய அரசு தனது விதி களைத் தளர்த்தியது. ஆனாலும், நகைத் துறையால் விற்பனையில் பெரியதொரு முன்னேற்றத்தைக் காண முடியவில்லை.

   ஏற்ற இறக்கங்கள்

இந்தியாவைப் பொறுத்தவரை,  பெரும் மதிப்பிலான தங்கம் வெளி நாடுகளிலிருந்துதான்  இறக்குமதி செய்யப்படுகிறது. பன்னாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை, சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழலுக்கேற்ப நிறைய மாற்றங்களை அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கிறது. மேலும், தங்கக் கொள்முதல் விலை யானது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பைப் பெருமளவு சார்ந்தி ருப்பதால், இறக்குமதி விலையில் காணப்படும் நிலையற்றத் தன்மை, இந்தத் தொழில் துறைக்கு எதிர்மறை பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

  பெரிய லாபம் இல்லை

தங்கம் வாங்கினால், நிறைய லாபம் கிடைக்கும் என்று நினைத்து, நம்மவர்கள் தங்கத்தை வாங்குவ தில்லை. என்றாலும், கடந்த 10 - 15 ஆண்டுகளில் தங்கத்தின் விலை கணிசமாக உயரவே செய்தது. இதற்கு முக்கியக் காரணம், தங்கத்தின் விலை அதிகரித்ததைவிட டாலரின் மதிப்பு உயர்ந்ததுதான் காரணம். இனிவரும் நாள்களில் டாலரின் மதிப்பு சரியும் பட்சத்தில், தங்கம் விலை குறையவே செய்யும். இந்த நிலையில், தங்கத்தில் மூலம் கிடைக்கும் லாபமானது குறிப்பிட்டுச் சொல்கிற மாதிரி இல்லை என்பதால், அதை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

   மாற்று அடையாளங்கள்

கடந்த பல காலமாகவே, தங்க நகைகள் பொருளாதார முன்னேற்றத்தின் அதிமுக்கிய அடையாளமாகவே  காணப்பட்டன. ஆனால், இன்றைய இளையதலைமுறையின் கண்ணோட்டம் பெருமளவிற்கு மாறியுள்ளது. அதிநவீன ஸ்மார்ட் போன்கள், ஆடம்பர உணவகங்கள், உடை அலங்காரங்கள், வெளி நாட்டுப் பயணங்கள் எனத் தமது பொருளாதாரச்  செழுமையை வெளிக்காட்ட  பல அடையாளங்கள் வந்துவிட்ட நிலையில், இளைய தலைமுறை யினருக்குத் தங்க நகையின் மீதான மோகம் பெருமளவிற்குக் குறைந்துவிட்டது.

   குறையும் வேலைவாய்ப்புகள் மற்றும் சேமிப்பு விகிதம்


வேலைவாய்ப்புகள் மிகப்பெரிய அளவில் அதிகரிக்காததே இன்றைக்கு இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாகும். மத்திய அரசு, தொடர்ந்து பல உறுதிமொழிகளை அளித்து வந்தாலும், தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு என்பது இன்னும்கூட கானல் நீராகவே காணப்படுகிறது. கடந்த 2011-ம் ஆண்டில் 39 சதவிகிதமாக இருந்த தேசியச் சேமிப்பு விகிதம், படிப்படியாகக் குறைந்து 2017-ல் 30 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது கவலைக்குரிய விஷயமாகும். தனிமனித சேமிப்பு விகிதம் பெருமளவு வீழ்ச்சியடைந்த நிலையில், தங்க நகை போன்ற ஆடம்பரச் செலவினங்களின் மீதான ஆர்வம் குறைவது இயல்பான ஒன்றாகும்.

  குறைவான லாப சதவிகிதம்

நகைத் துறை எப்போதுமே சந்தித்துவரும் ஒரு முக்கியப் பிரச்னை, குறைந்த மார்ஜின் விகிதமாகும். பெரிய அளவிலான முதலீட்டுத் தேவைகள் இருக்கும் அதேசமயத்தில், கடும் போட்டியின் விளைவாக, விற்பனை விலையைப் பெரும்பாலும் சந்தையே நிர்ணயிக்கும் சூழ்நிலையும் ஒருங்கே நிலவுவதால், நேர்மையான முறையில் வியாபாரம் செய்யும் ஒருவரால், வெறும் விற்பனை மார்ஜினை மட்டும் வைத்துக்கொண்டு தொடர்ந்து தொழிலை வெற்றிகரமாக நடத்துவது கடினமான ஒன்றாக இருக்கிறது. 

  குறைவான வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை


உற்பத்திச் செலவுக்கும், விற்பனை விலைக்கும் அதிக வித்தியாசம் இல்லாத ஒரு சூழ்நிலையில், தங்கத்தில் பெருமளவு கறுப்புப் பணமும் முதலீடு செய்யப்படுவதால்,  இந்தத் துறை சார்ந்த பல நிறுவனங்களால் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் இயங்க முடிவதில்லை. வெளிப்படைத்தன்மை குறைவாக உள்ள இந்தத் துறையில் முதலீடு செய்யவும் கடன் வழங்கவும், பெரும்பாலான அமைப்பு ரீதியான நிதி நிறுவனங்கள் முன்வருவதில்லை.

இந்த நிலையில், நிறுவனத்தில் சிறிய சரிவு ஏற்பட்டாலும், அதைச் சரிசெய்யத் தேவையான நிதி உதவி, உரிய நேரத்தில் அமைப்பு சார்ந்த நிறுவனங்களிடமிருந்து உடனடியாகக் கிடைப்பதில்லை. இதனாலேயே பல நகை நிறுவனங்கள் நொடிந்துபோகின்றன. மேலும், தங்கம் மற்றும் வைரம் உள்ளிட்ட ரத்தினங்களின் இருப்பு மதிப்பை (Inventory Value) உரிய வகையில் கணக்கிடுவதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் முறைகேடுகள் போன்றவையும் வங்கி மோசடிகளுக்கு அடிகோலுகின்றன. 

  தங்க நகைத் தொழிலும் மின்ன வேண்டும்


லட்சக் கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரமான இந்தத் துறையை மத்திய அரசு கவனத்துடன் கையாள வேண்டும். தங்க நகைத் தொழில் துறையில் நிலவிவரும் தற்போதைய தேக்கநிலை, ஊழியர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குவதுடன், இந்தியப் பொருளாதாரத்திலும் பெரியதொரு பாதிப்பை ஏற்படுத்திவிடும். தவறு செய்பவர்களைச் சட்டரீதியாக தண்டிக்கும் அதே வேளையில், முறையாகத் தொழில் செய்பவர்களுக்குத் தேவையான கடன், வங்கி களிடமிருந்து எளிதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மத்திய அரசாங்கம் மட்டுமல்லாமல், தனி நிறுவனங்கள், தொழில் கூட்டமைப்புக்கள் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சிக் கூட்டமைப்புகள் ஆகிய அனைவரும் இணைந்து, தற்போதைய தேக்க நிலைக்கான காரணங்களைக் கருத்தில்கொண்டு, மீட்சிக்குரிய வழிமுறைகளை மேற்கொண்டால், தங்க நகைத் துறையும் கூடிய விரைவில் மின்னும்!

‘‘மோசடி பேர்வழிகளைத் தப்பவிட்டு, அப்பாவிகளைத் துன்புறுத்துகிறார்கள்!’’

ஆடிட்டர் சதீஷ்குமார்

தடுமாறும் தங்க நகைத் துறை!

‘‘தங்க நகை வியாபாரத்தைப் பொறுத்தவரை, பல கறாரான விதிமுறைகள் இருந்தாலும், அவர்களின் விற்பனை தொடர்பான கணக்கு விவரங்களை அடிக்கடி சோதனை செய்யத் தவறிவிடுகிறார்கள். இதனால் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் தவறு செய்துவிட்டு, கடைசியில் அது வெளிச்சத்துக்கு வரும்போது நாட்டைவிட்டு ஓடிவிடுகிறார்கள்.

நீரவ் மோடி விஷயத்தில் நடந்த தவறுக்குக் காரணம் வங்கிதான். எல்.ஓ.யு (Letter of Undertaking) கொடுப்பதில்தான் ஏமாந்திருக்கிறார்கள். எல்.ஓ.யு-வின் அடிப்படையில் வெளிநாடுகளில் கடன் தருகிறார்கள் என்னும்போது, வெளிநாட்டு வங்கி அதிகாரியும், இந்திய வங்கி அதிகாரியும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வோடு செயல்பட்டிருந்தால், இத்தகைய மோசடி நிகழாமலே போயிருக்கும்.  ஒவ்வோர் ஆண்டும் வங்கியின் பணப்பரிமாற்றத்திற்கான பேலன்ஸ் ஷீட்டை சோதனை செய்து, அவ்வப்போது சரிசெய்து வந்தாலே  போதும், இவ்வளவு பெரிய தவறை நடக்காமல் தடுத்துவிட முடியும். இவ்வளவு பெரிய மோசடி திடீரென ஒருநாள் தெரியவருவதற்கு முழுக்க முழுக்க வங்கிகளின் குறைபாடுதான் காரணம்.

கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்தும் சராசரி பொதுமக்கள் வங்கியில் போடும் பணத்தை எடுத்து, இந்த நகைக்கடைக்காரர்களுக்குக் கடனாகத் தருகிறார்கள். அப்படிக் கொடுக்கும்போது, அவர் சரியான நபர்தானா என்பதைச் சரிபார்க்காமல் கடன் கொடுப்பதும், கொடுத்த கடனை வசூலிப்பதிலும் கவனம் செலுத்தாமல் விடுவது தவறு.

கடன் வாங்கியவர்கள் அந்தக் கடன்களைச் சரியாக திருப்பிச் செலுத்தாமல், அந்தக் கடன்களை வாராக் கடன்களாக்கிவிட்டு தப்பியோடிவிடுகிறார்கள். விஜய் மல்லையாவோ, நீரவ் மோடியோ நாட்டை விட்டே தப்பியோடினால் என்ன! அவர்களின் பெயரில் இந்தியாவிலிருக்கும் அனைத்து சொத்துகளையும் முடக்கி, அதன்மூலம் அந்தக் கடன்களுக்கான தொகையைத் திரட்டுவதில் கடுமையாக நடக்க வேண்டும். அவர்களின் சொந்தக்காரர்களின் சொத்துகளைக்கூட முடக்கினால் தப்பில்லை. மோசடிப் பேர்வழிகளைத் தண்டிப்பதை விட்டுவிட்டு, அப்பாவிகளைத் துன்புறுத்துவது என்ன நியாயம்?’’

- தெ.சு.கவுதமன்

நகைக் கொள்ளை... இன்ஷூரன்ஸ் எடுத்தால் இழப்பீடு பெறலாம்!

டி.எல்.அருண்

தடுமாறும் தங்க நகைத் துறை!

‘‘வங்கி லாக்கரில் உள்ள நகைகள் கொள்ளை போனால் யார் இழப்பீடு தருவார்கள்? இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அந்த இழப்பீட்டைத் தரும் பொறுப்பினை எடுத்துக்கொள்கின்றன. வாடிக்கையாளர்கள் தங்கள் வீடு மற்றும் வீட்டிலுள்ள பொருள் களுக்குக் காப்பீடு எடுத்திருக்க வேண்டும்.

வீடு மற்றும் வீட்டுப் பொருள்கள் காப்பீட்டை அனைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் வழங்கி னாலும், அதை எடுப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான். கொள்ளைச் சம்பவங்கள் தினமும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. வட மாநிலத்தவரோ அல்லது நம் ஊர் கொள்ளையர்களோ, நம் வீட்டிலிருந்து கொள்ளையடித்துச் சென்ற நகைகள் நமக்குத் திரும்பக் கிடைக்குமா என்பது விடை சொல்ல முடியாத கேள்வி. ஆனால், அவற்றை ஒழுங்கான முறையில் இன்ஷூரன்ஸ் செய்திருந்தால், இழந்த நகைக்கான இழப்பீடாவது கிடைக்கும்.

இந்த பாலிசியை மிகச் சிலர் எடுத்தாலும், அவர்கள்  எடுக்கும் விதம் சரியாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். அனைத்து நகைகளையும் சரியாகப் பட்டியலிட்டு, எடையைச் சரியாக நிறுத்திப் பார்த்துக் குறித்து வைக்கவேண்டும். மேலும், எந்தவொரு  நகை வாங்கினாலும் அதன் ரசீதைப் பாதுகாக்க வேண்டும். நகை தொலையும்போது, இன்ஷூரன்ஸ் சர்வேயர் கேட்கும் முதல் ஆவணம் அதுதான். அநேகமாக நகையைத் தொலைக்கும்முன் நாம் பில்லைத் தொலைத்துவிடுவோம்.

அடுத்து, பாலிசி எடுக்கும்போது, வீட்டு முகவரிக்கான (கதவு எண், எந்த மாடி, அப்பார்ட்மென்டின் பெயர், தெருவின் பெயர் போன்றவை) தகவல்களைப் பிழையில்லாமல் கொடுக்க வேண்டும். வங்கி லாக்கரில் இருந்தால், எந்த வங்கி, எந்தக் கிளை, முகவரி போன்றவை சரியாக பாலிசியில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். பிறகு, நகையின் மதிப்பை அதன் எடைக்கு இன்றைய தங்கத்தின் விலைக்கு ஏற்றவாறு உயர்த்திக் காப்பீடு செய்ய வேண்டும். சிலர் வாங்கியபோது உள்ள மதிப்பிற்கே காப்பீடு செய்யும் தவற்றைச் செய்கிறார்கள். அப்போது முழுக் காப்பீடும் கிடைக்காது.

இப்படிச் சரியான முறையில் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தால், இந்தச் சம்பவம்போல் நடந்தால், நகையின் உரிமையாளர்கள் ‘கெத்’தாக க்ளெய்ம் செய்யலாம். இதற்கு பிரீமியமாக கொஞ்சம் பணத்தைச் செலவு செய்தால், என்னவாகிவிடுமோ என்கிற பயமின்றி இருப்பது எத்தனை நிம்மதி.’’

நகைச் சீட்டு மோசடி: தப்பிக்கும் வழிகள்!

வ.நாகப்பன், பங்குச் சந்தை நிபுணர்

தடுமாறும் தங்க நகைத் துறை!

‘‘தங்க நகைச் சீட்டுகளில் சிறுகச் சிறுகத் தங்கம் சேர்ப்பதை லாபமான சேமிப்பாகவும், எதிர்காலத்தில் குழந்தைகளின் திருமணத் தேவையைக் கணக்கில்கொண்டும் பொதுமக்கள் பணத்தைப் போடுகிறார்கள். நகைச் சீட்டு கட்டுவதை ஒரு முறைப்படுத்தப்பட்ட திட்டம் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். அப்படி நினைப்பது தவறு என்கிற மாதிரி சில செய்திகள் அண்மையில் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், தங்கத்தை வாங்க எந்த வகையில் சேமிப்பது என்பதைச் சிந்தித்தாக வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

தங்கம் சேமிப்பதற்குக் கடந்த காலங்களில் வேறு வாய்ப்புகள் இல்லாத சூழல் இருந்தது. ஆனால், தற்போது வேறு பல மாற்று வழிகள் வந்துவிட்டன. கோல்ட் இ.டி.எஃப் (Gold Exchange Traded Funds) என்கிற திட்டம் இருக்கிறது. ஒரு கிராம் தங்கத்திற்குச் சமமாக ஒரு யூனிட் கிடைக்கும். தங்கம் விலை ஏறும்போது இதுவும் ஏறும்; விலை இறங்கும்போது இதுவும் இறங்கும். நமக்கு எப்போது தங்கம் தேவையோ, அப்போது இந்த யூனிட்டை விற்றுவிட்டு, தங்கத்தை வாங்கிக்கொள்ளலாம்.

இதில், மோசடி நடக்காதா என்ற சந்தேகம் எழலாம். ஆனால், இதனை செபி முறைப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் சேர விருப்பமில்லை எனில், மத்திய அரசாங்கம் ரிசர்வ் வங்கியின் மூலமாகத் தங்கப் பத்திரங்கள் கொடுக்கிறது. இதற்கு வட்டியாகவும் வருடத்திற்கு 2.5% கொடுக்கிறார்கள். இதனை ஒரு கிராம்கூட வாங்கலாம். 

நகைச் சீட்டில் பணம் போடுவதாக இருந்தாலும் சீட்டு முடிந்த பிறகுதான் நகை வாங்க முடியும். அதேபோல, இந்தத் தங்கப் பத்திரத்திலும் பணம் முதலீடு செய்துகொண்டே கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கத்தைச் சேமிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை ரிசர்வ் வங்கியில் மட்டுமில்லாமல் அருகிலுள்ள வங்கிகளிலும் பெற்றுக்கொள்ளலாம். அல்லது அருகிலுள்ள பங்கு வர்த்தகர்களிடம் கேட்டாலும் கிடைக்கும். இதன் மூலம் வாங்கும் தங்கத்தைச் சான்றிதழ்களாகவோ, டீமேட் கணக்காகவோ சேர்த்து வைத்துக் கொள்ளலாம். அதன்பின் இரண்டு அல்லது மூன்றாண்டுகள் கழித்து இவற்றைக் கொடுத்து, அன்றைய தேதியில் தங்கம் என்ன விலையில் இருக்கிறதோ, அந்த மதிப்பில் நமக்குப் பணத்தைத் திருப்பித் தருவார்கள். அதோடு 2.5% வட்டியும் கொடுப்பார்கள். இந்தப் பணத்தை வைத்து, நகைக்கடைக்குச் சென்று, நமக்கு எந்த டிசைனில் நகை வேண்டுமோ அதை வாங்கிக் கொள்ளலாம். ஆக, மக்கள் மெள்ள மெள்ள நகைச் சீட்டிலிருந்து மாறி இவற்றை நோக்கி நகரத் தொடங்கினால், நகைச் சீட்டு மோசடிகளிலிருந்து ஓரளவு தப்பலாம்.”  

- தெ.சு.கவுதமன்

ஆஃப் லைனிலும் பத்திரப் பதிவு..!

தடுமாறும் தங்க நகைத் துறை!

தமிழ்நாட்டில் அண்மை யில் இணையதள ஆவணப்பதிவு கொண்டு வரப்பட்டது. பல இடங் களில் நெட் ஒர்க் பிரச்னை, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களால் பத்திரப் பதிவு தாமதமானது. பல இடங்களில் பத்திரப் பதிவுக்காக நாள் கணக்கில் அலையும் நிலையே காணப்பட்டது. இந்த நிலையில், 2018 ஜூன் 30-ம் தேதி வரையில்  இணையதளம் மற்றும் இணையதளமற்ற இரு முறைகளிலும் பத்திரப் பதிவை மேற்கொள்ளலாம். உரிய காரணங்கள் இல்லா மல் யாரையும் பத்திரம் பதிவு செய்யாமல் திருப்ப அனுப்பக்கூடாது என அறிக்கை ஒன்றில் தமிழ் நாடு பத்திரப் பதிவுத் துறை தலைவர் ஜெ.குமர குருபரன்  தெரிவித்துள்ளார்.