
ட்விட்டர் சர்வே: ஏர் இந்தியாவைத் தனியாருக்கு விற்பது சரியா?

அரசு நிறுவனங்களின் நோக்கம் லாபமல்ல என்றாலும், அவற்றைத் தொடர்ந்து நஷ்டத்தில் நடத்த முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். அப்படிப் பெரும் கடனில் நடக்கும் நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியாவின் 76% பங்குகளைத் தனியாருக்கு விற்றுவிட முடிவு செய்திருக் கிறது மத்திய அரசு. அரசின் இந்த முடிவு சரியா, இல்லையா என்பது பற்றி நாணயம் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) ஒரு சர்வே நடத்தினோம்.

இந்த சர்வேயில் 58% பேர், அரசின் இந்த முடிவு சரியே என்று சொல்லியிருக்கின்றனர். இப்படியொரு கருத்தை அவர்கள் சொல்வதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஒன்று, ஏர் இந்தியாவைத் தனியாருக்கு விற்பது தொடர்பாக நீண்ட காலமாகவே பேசப்பட்டு வருகிறது. இரண்டாவது, இது சாதாரண மக்களுக்குச் சேவை தரும் நிறுவனமல்ல. மூன்றாவது, இனியும் இந்த நிறுவனத்தை லாப பாதைக்குக் கொண்டுவர முடியும் என்கிற நம்பிக்கை இல்லாமல் இருப்பது. இவையெல்லாம் சரியான காரணங்கள் என்றே நாம் கருதலாம்.

இந்த சர்வேயில் 42% பேர், அரசின் இந்த முடிவு சரியல்ல என்று சொல்லி யிருக்கிறார்கள். அரசு நிறுவனங்களை எந்த நிலையிலும் தனியாருக்குத் தரக்கூடாது என்று வாதிடுபவர்கள் சொல்லும் கருத்தாகவே இது உள்ளது. இந்த நிறுவனத்தை எப்படியாவது லாபப் பாதைக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் எனக் கடந்த இருபது ஆண்டுகளாக அரசாங்கங்கள் முயற்சி செய்து பார்த்தபிறகுதான், தற்போது இந்த முடிவுக்கு வந்திருக்கிறது அரசு என்பதைத் தனியார்மய எதிர்ப் பாளர்கள் புரிந்துகொள்வது அவசியம்.
ஆக, ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியார்மயப்படுத்துவதில், இந்த முறை அரசுக்குப் பெரிய எதிர்ப்பு எதுவும் இருக்காது என்றே தெரிகிறது!
- ஏ.ஆர்.கே