மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இனி உன் காலம் - 15 - உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!

இனி உன் காலம் - 15 - உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
இனி உன் காலம் - 15 - உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!

டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம்

ந்தக் காலத்து இளைஞர்கள் எதிலும் பொறுமையில்லாமல், எப்போதும் பரபரப்பாகவே இருக்கிறார் கள். அவர்கள் பார்க்கும் படங்கள், விளையாடும் விளையாட்டுகள் என எல்லாமே பரபரவென இருப்பதால், அவர்களும் அப்படி ஆகிவிடுகிறார்கள் என்றே நினைக்கிறேன்.

கடந்த வாரத்தில் என்னைச் சந்திக்க  இளைஞன் ஒருவன் என் அலுவலகத்துக்கு வந்திருந்தான். அதுவும் சொன்ன நேரத்துக்கு வராமல், ஒரு மணி நேரம் தாமதமாக வந்துவிட்டு, உடனே என்னை உடனே பார்க்க வேண்டுமென ரிசப்ஷனிஸ்ட்டிடம் சண்டை வேறு போட்டிருக்கிறான். அவனைச் சந்தித்தேன். அவனுக்கு வேலை வேண்டுமாம். எப்படிப்பட்ட வேலை தெரியுமா?

இனி உன் காலம் - 15 - உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!

“என்னை அழைச்சிட்டுப் போகவும், டிராப் பண்ணவும் வீட்டு வாசலுக்கே கார் வந்துடணும். எட்டு மணி நேரம் வேலைன்னா, எட்டு மணி நேரம்தான் வேலை செய்யணும். சனி, ஞாயிறு லீவு வேணும். மதியச் சாப்பாடு கொடுத்திடணும். வருஷத்துல ஒருதடவை ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு புராஜெக்ட்டுக்காக கம்பெனியோட செலவுல அனுப்பணும்...” என்று முடித்தான்.

அவன் சொன்னதையெல்லாம் கேட்டபோது எனக்குள் சிரிப்புதான் வந்தது. இன்றைக்குச் சில இளைஞர் களுக்கு இந்தமாதிரி வசதிகள் கிடைக்கிறது என்பதற்காக எல்லோருமே அதுமாதிரி ஆசைப்படுவது எப்படி சரி? இந்த இளைஞன் விரும்பும் வேலை  கிடைக்குமோ, கிடைக்காதோ தெரியாது. ஆனால், இன்றைய இளைஞர்கள் விரும்பும் வேலை பெறுவதற்கு முதலில் பெற்றோர்கள் தங்கள் மகன் அல்லது மகளை எப்படி வளர்க்க வேண்டும், எப்படிப் படிக்க வைக்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்துகொள்வது நல்லது. இதற்கான விஷயங்களை இனி சொல்கிறேன். பிடித்ததைப் படிக்க வையுங்கள். இந்த விஷயங்கள் பெற்றோர்களுக்கு மட்டுமல்ல, இன்றைய இளைஞர்களுக்கும் சேர்த்துத்தான்.

இனி உன் காலம் - 15 - உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!


   பிடித்ததைப் படியுங்கள்!


உங்கள் மகன் அல்லது மகள் 10-ம் வகுப்பிலோ அல்லது 12-ம் வகுப்பிலோ நல்ல மதிப்பெண் எடுத்திருக்கலாம். மேற்கொண்டு எந்தப் படிப்பு படித்தால் நல்லது என்பதை அவனுடைய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யுங்கள். என்ன படிப்பு படித்தால், எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பது குறித்து நீங்கள் நிச்சயமாக உதவலாம். ஆனால், இந்தப் படிப்புத்தான் படிக்க வேண்டும் என்று அவர்களின் விருப்பத்துக்கு மாறாக எதையும் திணிக்காதீர்கள். அப்படித் திணித்தீர்கள் என்றால், அதன் மூலம் பாசிட்டிவான விளைவு களை நீங்கள் அவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.

   எந்தப் பாடப்பிரிவு..?

உங்களுக்கு எந்தப் பாடப் பிரிவில் ஆர்வம் இருக்கிறது அல்லது நீங்கள் சேரக்கூடிய பாடப் பிரிவினை உங்களால் எந்தளவு முழுமையாகப் புரிந்து படிக்க இயலும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துப் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் விரும்பாத ஒரு பாடத்தைத் தேர்வு செய்தாலும், அதில் 80% மதிப்பெண்கள் உங்களால் வாங்க முடியும். அதன்மூலம் நீங்கள் டிகிரியும் வாங்கிவிட முடியும். ஆனால், நீங்கள் படித்த படிப்பினால், நீங்கள் எந்தவிதமான மாற்றத்தையும் பெறாமல் இருப்பீர் கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

   தகுதிப்படுத்திக்கொள்ளுங்கள்!

எந்தவொரு செயலைச் செய்வதற்கு முன்பும் அதற்கு  நாம் நம்மைத் தகுதிபடுத்தியிருக் கிறோமா என்று சிந்திக்க வேண்டும். அந்த விஷயத்தைச் செய்வதன் மூலம் நம் வாழ்வில் எந்தவிதமான வளர்ச்சி கிடைக்கும் என்று  சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அதுமட்டுமல்ல, கல்லூரியில் சேர்ந்ததும் நமக்குக் கிடைக்கும் நண்பர்கள், அவர்கள் நல்லவர் களாக இருக்கும்பட்சத்தில் எந்தவிதப் பாதிப்பும் இல்லை. கல்லூரியில் சேர்ந்ததும் நமக்கு ஏற்படும் ஒரு சுதந்திர உணர்வு நம்மைப் படிப்பிலிருந்து வேறு செயல்பாடுகளில் ஈடுபட வைக்கிறது. பள்ளியில் ஒழுங்காகப் படித்த மாணவர்கள் பலர் கல்லூரிக்குச் சென்றதும் தாறுமாறாகச் செயல்பட ஆரம்பிப்பது பெரும்பாலும் கெட்ட சகவாசத்தினால்தான். ஒருசில மாணவர்கள்கூட இந்தக் கருத்தினை நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள்.

சுதந்திரம் என்பது சுய உணர்வுடன் தங்களுடைய எதிர்காலத்திற்கான முடிவுகளை எடுப்பதற்காகக் கொடுப்பது. அதனை நாம் அர்த்தமற்றதாக ஆக்கிவிட்டு, இந்தச் சமூகத்தினைக் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இவை அனைத்தின் உச்சமாகத்தான் எதன்மீதும் இந்த இளைஞர்களுக்கு ஆர்வமற்றுப்போகிறது. அந்த ஆர்வமற்ற தன்மைதான் என்னைச் சந்தித்த அந்த இளைஞனிடம் நான் கண்டது.

இனி உன் காலம் - 15 - உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!

10-ம் வகுப்பிலும், 12-ம்   வகுப்பிலும் நல்ல மதிப்பெண் எடுத்து, கல்லூரியில் மோசமான சூழலால் சரிவரப் படிக்காத காரணத்தால் மதிப்பெண்ணும் குறைந்து, ஆர்வமும் குறைந்து இறுதியில் வேலையைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறான்.

இந்த இடத்தில் நான் சொல்ல விரும்புவது சூழ்நிலை சார்ந்த மனிதர்களாய் இருக்காதீர்கள். எந்தச் சூழ்நிலை யையும் எதிர்கொள்ளும் மனிதராக இருங்கள்.

பாடத் திட்டங்கள், வழிமுறைகள் இதிலெல்லாம் மாற்றம் வேண்டும்தான். நான் இல்லையென்று சொல்ல வில்லை. அதற்காகத்தான் பலர் போராடிக்கொண்டிருக் கிறோம். ஆனால், இதே பாடத் திட்டம்தான், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமையும்,  சுந்தர் பிச்சையையும் இன்னும் பலரையும் உருவாக்கியுள்ளது. இவர்கள் யாரும் பாடத் திட்டத்தைக் குறை சொல்லிக் கொண்டு அங்கேயே நின்றுவிடவில்லை, பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று சொல்லக்கூடிய தகுதியான இடத்திற்குத் தன்னைத் தகுதிபடுத்திக் கொண்டனர். அதேமாதிரி உங்களை, நீங்கள் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

   கனவு வேலைக்குக் காத்திருங்கள்

வேலை வேண்டும் என்று என்னைத் தேடிவந்த அந்த இளைஞன் சொன்ன மாதிரி கனவு வேலைக்கு நீங்கள் காத்திருப்பதில் தவறில்லை. ஆனால், எப்போது தெரியுமா? அந்தக் கனவு வேலையை அடைய நீங்கள் உங்களை எந்த அளவுக்குத் தகுதிப்படுத்தி யிருக்கிறீர்கள். மென்திறன், செயல்திறன் மற்றும் அறிவுத்திறன் இவையனைத்திலும் நீங்கள் எந்தளவுக்கு உங்களை மேம்படுத்தி இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

நீங்கள் உங்கள் கனவு வேலைக்குக் காத்திருங்கள். இவை ஏதேனும் ஒன்றில் குறைவாக இருந்தாலும் கிடைத்த வேலையில் சேர்ந்து உங்களைத் தகுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

எனக்குத் தெரிந்த இரு மாணவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்தனர். கிடைத்த வேலையில் சேர்ந்தான் ஒருவன். மற்றொருவன் தான் எதிர்பார்த்த வேலைதான் வேண்டும் என்று இரண்டு வருடங்கள் காத்திருந்தபிறகு, கிடைத்த வேலைக்குச் சேர்ந்தான்.

இதிலிருந்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இதுதான். நாம் நினைத்தது நடக்கவேண்டும் என்றால், நாம் நம் லட்சியத்தின்மீது வைத்திருக்கக்கூடிய முழு நம்பிக்கையினாலும், அதற்காக நாம் எடுக்கக்கூடிய நடவடிக்கையினாலும் மட்டுமே சாத்தியம்.

முதலாமவன், தனக்குக் கிடைத்த வேலையில் சம்பளம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும், அவனுக்கு நல்ல சம்பளம் கிடைக்கக்கூடிய வேலையாக அதை மாற்றிக்கொண்டிருக்கிறான்.

ஆனால் இரண்டாமவன், தான் எதிர்பார்த்த வேலை  கிடைக்காமல் இரண்டு வருடங்கள் ஆனதால், அனுபவமும் கிடைக்காமல் ஏதோ ஒருவேலையில் சேர்ந்து இன்று குறைவான சம்பளம் பெற்று வருகிறான். எனவே, நினைத்த வேலை கிடைத்தாலும் சரி, கிடைக்கவில்லை என்றாலும் சரி, நீண்ட நாள் காத்திருக்காமல், கிடைக்கும் வேலையில் சேர்ந்து அதில் உங்களைத் திறம்படுத்தி நீங்கள் நினைத்த லட்சியத்தை அடையுங்கள்.

பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கும் எண்கள்தான் லட்சத்தை அடை கின்றன. எனவே, ஆரம்பத்தில் பூஜ்ஜியமாய் இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், இறுதிவரை பூஜ்ஜியமாகவே  இருந்து விடாதீர்கள். பதவிக்கு ஏற்ற தகுதிக்கு நம்மை முழுமையாகத் தயார்படுத்திக்கொன்டால்  பதவியுயர்வு தானாக வரும். எனவே, முதலில் நீங்கள் உங்களைத் தகுதிப்படுத்திக்கொண்டால், நிச்சயம் வெற்றி அடைவீர்கள். 

(காலம் வெல்லும்)

படங்கள்: ப.சரவணக்குமார்