மற்ற எபிசோடுகள்
Published:Updated:

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - விவசாயிகளுக்கு எளிதில் கடன் தரும் புதிய தொழில்நுட்பம்!

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - விவசாயிகளுக்கு எளிதில் கடன் தரும் புதிய தொழில்நுட்பம்!
பிரீமியம் ஸ்டோரி
News
டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - விவசாயிகளுக்கு எளிதில் கடன் தரும் புதிய தொழில்நுட்பம்!

சூப்பர் ஸ்டார்ட்அப்களின் தொழில் ஜாதகம்! - 17

ங்கிகள், மைக்ரோ ஃபைனான்ஸ் என விவசாயிகளுக்குக் கடன்கொடுக்க நிறைய நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், இவை மூலம் விவசாயிகள் கடன் வாங்குவது  அவ்வளவு சுலபமான காரியமல்ல; அப்படியே கடன் பெற்றாலும்கூட பல்வேறு விவசாயிகளால் அவற்றை முழுமையாகத்  திருப்பிச் செலுத்த முடிவதில்லை. “இதில் பாதித் தவறு விவசாயிகள் மீதுதான் என்றாலும், மீதித் தவறு கடன்கொடுக்கும் நிறுவனங்களின் மீது” என்கிறார் சமுன்னதி நிறுவனத்தின் நிறுவனர் அனில்குமார். சமுன்னதி சாதித்தது என்ன?

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - விவசாயிகளுக்கு எளிதில் கடன் தரும் புதிய தொழில்நுட்பம்!

   இன்ஸ்பிரேஷன்

“கிராமப்புற மக்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் KGFS மாடலை நச்கேத் மோர் தமிழகத்தில் தொடங்கியபோது அதில் நானும் பணியாற்றிக்கொண்டிருந் தேன். அப்போதுதான் விவசாயிகளின் நிதித் தேவைகள் மற்றும் அதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது. அதற்குமுன்பு 24 வருடங்கள் வங்கிகளில் பணியாற்றியிருக் கிறேன். விவசாயிகளுக்குக் கடன்கொடுக்கும் அனைத்து நிறுவனங்களுமே பணத்தைத் தருவதுடன் தன் பணியை முடித்துக் கொள்கின்றன. அதற்கடுத்து அந்தக் கடனை வசூலிப்பது மட்டும்தான் அவற்றின் பணி.

நிஜமாகவே விவசாயி அந்தப் பணத்தை விவசாயத்துக்குத்தான் செலவிடுகிறாரா, எவ்வளவு தவணைகளில் பணத்தைத் திருப்பி செலுத்த முடியும், இதன்மூலம் அந்த விவசாயி லாபம் அடைவாரா என்பது குறித்தெல்லாம் அவர்கள் கவலைப் படுவதில்லை. இதனால் பல விவசாயிகள் கடனைக் கட்ட முடியாமல் தவிக்கின்றனர். இந்தப் பிரச்னைகளை எல்லாம் சரிசெய்ய நினைத்தபோதுதான் சமுன்னதியைத் தொடங்கும் ஐடியா பிறந்தது.

   அடித்தளம்

விவசாயக் கடன்களில் நிறைய சிக்கல்கள் உண்டு. அவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.  ஒரு விவசாயிக்கு ரூ.2 லட்சம் தேவை எனில்,  வங்கிகள் அதை முழுமையாகக் கொடுக்காமல் குறைவாகவே கொடுக்கும். எனவே, மீதிப் பணத்துக்குப் பழைய படியே வட்டிக்குத்தான் அவர் வாங்கவேண்டியிருக்கும். சில விவசாயிகளிடம் கடனுக்கான செக்யூரிட்டியும் இருக்காது. இப்படிப் பெறும் பணத்தையும் விவசாயிகள் பலரும் விவசாயத் திற்கே செலவிடமாட்டார்கள். வேறு விஷயங்களுக்காகச் செலவழித்து விடுவார்கள். இதனால் விவசாயமும் நடக்காது;  கடனையும் கட்டமுடியாது.

அடுத்த பிரச்னை, கடன் வழங்கும் முறை. விதை நடுவது, உரம் இடுவது, பராமரிப்பு, அறுவடை என விவசாயத்தில் அவ்வப்போது பணம் தேவைப்படும். ஆனால், வங்கியில் ஒரே தவணையில் மொத்தப் பணத்தையும் தந்துவிடுவார்கள். இதனால் ஒருசில வாரங்களி லேயே மொத்தப் பணத்தையும் விவசாயிகள் செலவிட்டுவிடு வார்கள். கடனைத் திருப்பிச் செலுத்துவதிலும் இப்படிச் சிக்கல்கள் உள்ளன. ஒருவர் கரும்பு விதைக்கிறார் என்றால், அவரால் ஒரு வருடத்துக்குப் பின்புதான் வருமானமே பெறமுடியும். ஆனால், மாதந்தோறும் கடன் கட்ட வேண்டியிருக்கும். ஒருவேளை விளைச்சல் இல்லை என்றால் நஷ்டம்தான். இதுவும் விவசாயிகளுக்குப் பிரச்னைதான்.

வீட்டுக் கடன் வாங்கும் ஒருவருக்கு மாதந்தோறும் சம்பளம் வரும். அதனால் அவரால் மாதந் தோறும் தவணையைச் செலுத்த முடியும். ஆனால், வருடத்துக்கு மூன்றுமுறை மட்டுமே வருமானம் பெறும் விவசாயி எப்படி மாதந்தோறும் கடனைச் செலுத்த முடியும்? இப்படித் தற்போதுள்ள அமைப்பில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கின்றன. எனவே, விவசாயத்திற்கென்றே புதியதொரு கடன் வழங்கும் முறையை உருவாக்க வேண்டும் என நினைத்தோம். அப்படி நாங்கள் உருவாக்கியதுதான் AMLA  (Aggregation, Market Linkage &  Advisory services). சமுன்னதி ஒரு என்.பி.எஃப்.சி  (Non Banking Financial Company) நிறுவனம். நாங்கள் கடன் கொடுப்பதோடு மட்டுமின்றி, விதைப்பதில் இருந்து விவசாயப் பொருளைச் சந்தைக்கு எடுத்துச் செல்வது வரைக்கும் முழுமையாக நாங்கள் நிதியுதவி செய்கிறோம். இதற்காக என்.ஜி.ஓ-க்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றினோம். அவர்கள் மூலமாக விவசாயிகளை உள்ளே கொண்டு வந்தோம்.

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - விவசாயிகளுக்கு எளிதில் கடன் தரும் புதிய தொழில்நுட்பம்!

   சவால்கள்

இந்த நிறுவனத்தைத் தொடங்கியபோது பலரும் சொன்னது, ரிஸ்க் நிறைந்த விவசாயத் துறையில் ஏன் ஈடுபட வேண்டும் என்றுதான். ஆனால் நாங்கள், விவசாயிகளை ஒன்றிணைப்பது, கடனுதவி செய்வது, நிபுணர்கள் மூலம் ஆலோசனை வழங்குவது என மூன்றையுமே செய்வதால், கடன் மீதான ரிஸ்க் குறைகிறது. அதேபோல, எங்களின் சேவை முழுவதுமே கணினிமயமாக்கப்பட்டது. ஒப்பந்தம் மட்டும்தான் காகிதத்தில் போடப்படும். மற்றவையெல்லாமே மொபைல் மூலமாகவே நடக்கும். ஆரம்பத்தில் விவசாயிகளிடத்தில் வங்கிச் சேவையோடு ஒப்பிட்டு, எங்களைப் பற்றி விளக்குவது சிக்கலானதாக இருந்தது. மேலும், வங்கிப் பின்னணியில் இருந்துவந்த நாங்கள் விவசாய முறைகள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள வேண்டியதும் அவசியமாக இருந்தது. இவற்றையெல்லாம் அனுபவத்தின் மூலம் கடந்துவந்தோம்” என அனில்குமார் நிறுத்த, சமுன்னதியின் நிர்வாக இயக்குநர் குருநாத், நிறுவனம் வெற்றியடைந்த விதத்தைப் பகிர்ந்துகொண்டார்.

   வெற்றி


“முதன்முதலாக திருவண்ணாமலையில் பால்பண்ணைத் தொழிலில் எங்கள் திட்டத்தைச் செயல்படுத்தினோம். அங்கிருந்த கூட்டுறவுச் சங்கம் மூலமாக விவசாயிகளுக்கு மாடுகள் வாங்கக் கடன் கொடுத்தோம். அடுத்ததாக, தீவனம் வாங்குவதற்குப் பணம் கொடுத்தோம். மிகக் குறைந்த விலையில் விவசாயிகள் தீவனம் பெறுவதற்காக சித்தூரில் இருக்கும் ஒரு நிறுவனத்தோடு கைகோத்தோம்.

வங்கியல்லாத அமைப்பு என்பதால், வங்கிகளைவிடவும் எங்களிடம் வட்டி விகிதம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஆனால், அதையும் தாண்டி எங்களிடம் விவசாயிகள் வருவதற்குக் காரணம், எங்களின் ஒன்றிணைந்த சேவைதான். சரியான நேரத்தில் சரியான நிதியுதவி, நிபுணர்களின் ஆலோசனை என அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் எங்களின் சேவை இருப்பதால்தான் எங்களை நம்பி வருகின்றனர். இதுவரைக்கும் 11 மாநிலங்களில் விவசாயிகளுக்குக் கடன் தந்திருக்கிறோம். கடந்த மூன்று வருடங்களில் 250-க்கும் மேற்பட்ட அமைப்புகள் எங்கள் மூலம் உதவி பெற்றுள்ளன. பல லட்சம் விவசாயிகள் சமுன்னதி மூலம் வெற்றியடைந்துள்ளனர்.

   இலக்கு

கடனுக்கான முழு ரிஸ்க்கையும் விவசாயிகள் மீதே சுமத்தாமல் நாங்களும் அதில் பங்கெடுத்துக்கொள்வது, எல்லா விவசாய நடைமுறை களுக்கும் ஒரே மாதிரி கடன் கொடுக்காமல் அவர்களின் பாசன முறைக்கேற்ப கடன் வழங்குவது, விவசாயிகள் கடன்பெறும் முறையை எளிதாக்குவது போன்றவைதான் எங்களின் சிறப்பம்சங்கள். இவற்றின்மூலம் இன்னும் நிறைய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே லட்சியம்” என்கிறார் குருநாத்.

விவசாயிகளுக்கு முக்கியத் தேவை அவசியமான நேரத்தில் கடன் கிடைப்பதுதான். அதற்கு வழி செய்யும் சமுன்னதி நிச்சயம் ஜெயிக்கும்.

-ஞா.சுதாகர்

படங்கள்: ப.பிரியங்கா

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - விவசாயிகளுக்கு எளிதில் கடன் தரும் புதிய தொழில்நுட்பம்!

நேரடி வரி வருவாய் ரூ.9.95 லட்சம் கோடி!

கடந்த 2017-18-ம் நிதியாண்டில் மத்திய அரசாங்கம் நிர்ணயம் செய்த நேரடி வரித் தொகை ஏறக்குறைய  ரூ.9.95 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. கடந்த நிதியாண்டில் மத்திய அரசாங்கம் நேரடி வரி மூலம் ரூ.9.80 லட்சம் கோடி ஈட்ட வேண்டும் என பட்ஜெட்டில் அறிவித்தது. பிறகு இது ரூ.10.05 லட்சம் கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது ரூ.9.95 லட்சம் கோடி வசூலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் நிகர வரி வசூல் ரூ.11.44 லட்சம் கோடி வரி வசூலானதாகவும், இதில் ரூ.1.49 லட்சம் கோடி திரும்ப அளிக்கப்பட்டி ருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.