மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - இருமடங்கு வருமானம் தரும் வாழை! - 15

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! ( துரை.நாகராஜன் )

மதிப்புக் கூட்டல் தொடர் - 15

முக்கனிகளில் ஒன்றான வாழை அதிகம் விளையும் மாவட்டங்களில் முக்கிய இடம் திருச்சிக்கு உண்டு. வாழைக்குத் தனியாக ஆராய்ச்சி நிறுவனமும் இங்குதான் உள்ளது. இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள தொட்டியத்தில், 13 விவசாயிகள் சேர்ந்து வாழைப்பழங்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்து வருகின்றனர். இந்தக் கூட்டு முயற்சியில் இருக்கும் விவசாயிகளில் ஒருவரான சுப்ரமணியத்திடம் பேசினோம்.

“வாழைப்பழம் அதிகபட்சம் மூன்று நாள்களுக்குமேல் தாங்காது. எனவே, ஆறு மாதங்கள், ஒரு வருடம் என வைத்திருந்து சாப்பிடும் அளவுக்கு வாழைப்பழத்தை மதிப்புக்கூட்டி பல பொருள்களைத் தயார் செய்து வருகிறோம். இதற்கு முக்கியமான  இன்னொரு காரணமும் உண்டு. வாழைக்கு நிலையான விலை கிடையாது. அப்படியே விலை இருந்தாலும் விவசாயிக்கு லாபம் கிடைக்காது. இதற்காக விவசாயிகள் சந்தையில் நேரடியாக விற்பனை செய்தாலும், விற்ற பழங்கள் போக மீதமுள்ளப் பழங்கள் வீண்தான். இவற்றையெல்லாம் தவிர்க்கத்தான் வாழையில் மதிப்புக்கூட்டல் தொழிலைத் துவங்கினோம்.

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - இருமடங்கு வருமானம் தரும் வாழை! - 15

கடந்த 2014-ம் ஆண்டு மதிப்புக்கூட்டல் தொழிலைத் தொடங்கினோம். வாழை விவசாயம் அதிகமான தொல்லை தரக்கூடியது. சரியான பருவத்திலும் பக்குவத்திலும் காய்களை வெட்டி, சந்தைக்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பாததால், பல விவசாயிகள் வாழையால் அதிகமாகக் கடன்பட்டிருந்தனர். காற்று பலமாக அடித்தால்கூட வாழை மரங்கள் அதிகமாகச் சேதமாகிவிடும். இதனால் பல நேரங்களில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க நாங்கள் 13 பேர் ஒன்றிணைந்து ‘மதூர் ஃப்ரூட்ஸ்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினோம். இதனை ஆரம்பிக்க, விவசாயம் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவி பெரிதும் தேவைப்பட்டது. இங்கு இருக்கும் இயந்திரங்கள் தாய்லாந்து நாட்டில் பயன்படுத்தக்கூடியவை.

வாழைப்பழம் மதிப்புக்கூட்டலில் முக்கியமான முதல் வேலை, வாழைப்பழங்களைச் சூரிய ஒளி டிரையரில் உலர்த்துவது. உலர்த்தும் வாழைப்பழம் அப்படியே பாக்கெட் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர வாழைப்பழப் பொடி, பிஸ்கட், சாக்லேட், வாழைக்காய் மிட்டாய் ஆகிய பொருள்களைத் தயார் செய்து வருகிறோம்.

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - இருமடங்கு வருமானம் தரும் வாழை! - 15

முதன்முதலாக இந்தத் தொழிலை ஆரம்பிக்கும் போது அதிகமான சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. தொழில் செய்வதற்கான இடம், பணவசதி, இயந்திரம், மூலப்பொருள்கள் என அனைத்தையும் முழுமையாக அமைத்த பின்பே தொழிலைத் தொடங்கினோம். இதனை முழுமையாக ஆரம்பிக்க ரூ.10 லட்சம் வரை செலவானது.

இந்தத் தொழிலை ஆரம்பித்தபின், சந்தை வாய்ப்பை அமைத்துக்கொள்வதில் சறுக்கலைச் சந்தித்தோம். பழங்கள் கொள்முதல் செய்த விலையையும், விற்பனை செய்த விலையையும் ஒப்பிட்டால் நஷ்டம் வருவதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. ஆனால், அதைக் கண்டு நாங்கள் துவண்டு போய்விடவில்லை. நாங்கள் தயாரிக்கும் பொருள்களைப் பெரும்பாலான கண்காட்சிகளில் ஸ்டால் போட்டு, பலருக்கும் அறிமுகம் செய்தோம். நாங்கள் தயார் செய்த பொருள்களை இலவசமாகத் தந்த காலமும் உண்டு. இப்படித்தான் பொருள்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தோம்.

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - இருமடங்கு வருமானம் தரும் வாழை! - 15

நாங்கள் தயாரிக்கும் பொருள்களுக்கு மவுசு உருவாவதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அதன்பின் படிப்படியாகப் பெரிய கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் என எங்களின் சந்தையை விரிவுபடுத்தினோம். அந்த விற்பனை விரிவாக்கம் இப்போது இணையத்தில் விற்கிற வரை போய் நிற்கிறது. எங்கள் நிறுவனத் தயாரிப்புகளை விற்றுத்தர அமேசான் நிறுவனம்  முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. நாங்கள் முழுமையாக எல்லா விஷயங்களையும் எடுத்துச் சொன்னபின்புதான் எங்கள் பொருள்களை அமேசானில் விற்பனை செய்ய ஒப்புக்கொண்டனர். 

பழுத்த வாழைப்பழங்களைத் தேன் கலந்த நீரில் நனைத்து, சூரிய ஒளி டிரையரில் வைத்து விடுவோம். 35-40 மணி நேரத்தில் பழத்தின் ஈரப்பதம் வெகுவாகக் குறைந்துவிடும். இதை நேரடியாக பேக்கிங் செய்தும் விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். ஆரம்பத்தில் பொருள்களைக் கைகளால் மட்டுமே பேக்கிங் செய்தோம். அதற்கும் இப்போது இயந்திரத்தைக் கொண்டு வந்துவிட்டோம்.

எங்கள் வியாபாரத்திற்குத் தேவையான பழங்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே கிடைத்துவிடுகிறது. தமிழ்நாடு தவிர, கேரளாவில் இதற்கு அதிகமான வாடிக்கையாளர்கள் இருப்பது பிறகுதான் தெரிந்தது. அதனால் கேரளச் சந்தையில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தோம்.  சென்னை போன்ற பெருநகரங்களில் எங்கள் பொருள்கள் அதிக அளவில் விற்பனையாக ஆரம்பித்திருக்கின்றன. இதுதவிர, சிங்கப்பூர், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தி வருகிறோம். இந்தத் தொழிலைத் தொடங்கி நடத்த, மாநில அரசின் மானியம் உதவியாக இருந்தது.

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - இருமடங்கு வருமானம் தரும் வாழை! - 15

வாழைப்பழங்களை டிரையரில் காய வைப்ப தால் ஈரப்பதம் குறையுமே தவிர, சுவையும், சத்தும்  குறையாது. அதனால் எதிர்காலத்தில் இதற்கான சந்தை வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கும். ஒரு மடங்கு செலவு, மும்மடங்கு வருமானம் கிடைப்பது மதிப்புக்கூட்டல் தொழிலில் மட்டும் தான். இந்தத் தொழிலின் மூலம் எங்கள் 13 பேரின்  வாழ்க்கையும் சீரடைந்துள்ளது. இது தவிர, தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் சங்கம் மூலம் ஆயிரம் விவசாயிகளிடம் வாழைப்பழம் வாங்கி மதிப்புக் கூட்டி விற்பனை செய்கிறோம். அவர் களுக்கும் மாத வருமானம் கிடைக்கவும் இந்தத் தொழில் வழிவகை செய்கிறது.

இந்தத் தொழிலைச் சிறிய அளவில் தொடங்க ரூ.5 லட்சம் ஆகும். இப்போது வாழை மதிப்புக் கூட்டல் தொழிலில் வருடம் ரூ.20 லட்சம்  வரை  லாபம் கிடைக்கிறது. இந்தத் தொழில்முறை வடிவிலேயே தக்காளி, மாம்பழம் உள்ளிட்ட பல பொருள்களை மதிப்புக்கூட்டல் செய்தும் விற்பனை செய்யலாம்’’ என்றார் சுப்பிரமணியம். 

மூன்று நாள்கூட தாங்காத வாழைப்பழத்தை ஆறு மாதங்கள் வரைக்கும் வைத்திருந்து சாப்பிடும் அளவுக்குச் சாத்தியமாக்கி, வியாபாரத்தில் வெற்றிகண்ட இந்த விவசாயிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள்தான்.

(மதிப்புக்கூடும்)

- துரை.நாகராஜன்

படங்கள்: தே.தீட்ஷித்