நடப்பு
தொடர்கள்
Published:Updated:

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 34 - செட்டில்மென்ட் தொகையை எப்படி முதலீடு செய்வது?

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 34 - செட்டில்மென்ட் தொகையை எப்படி முதலீடு செய்வது?
பிரீமியம் ஸ்டோரி
News
நிம்மதி தரும் நிதித் திட்டம் - 34 - செட்டில்மென்ட் தொகையை எப்படி முதலீடு செய்வது?

ஓவியம்: பாரதிராஜா

“என் பெயர் ஜாபர் பாட்ஷா. வயது 42. நான் மதுரையைச் சார்ந்தவன். பி.காம் படித்துள்ளேன். என் மனைவி வீட்டு நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்கிறார். எங்களுக்கு இரண்டு குழந்தைகள். மகளுக்கு 12 வயது. 7-ம் வகுப்பு படிக்கிறாள். மகனுக்கு ஐந்து வயது; முதல் வகுப்புப் படிக்கிறான்.

நான் கத்தாரில் உள்ள நிறுவனம் ஒன்றில் அக்கவுன்டன்டாகப் பணிபுரிந்து வருகிறேன். நான் பணிபுரியும் நிறுவனத்தை, 2018-ம் ஆண்டின் இறுதியில் மூடவுள்ளதாக அறிவித்துள்ளார்கள். எனவே, எனக்கு செட்டில்மென்ட் தொகையாக ரூ.30 லட்சம் கிடைக்கக்கூடும்.

நான் 2019 ஜனவரியில் இந்தியா வந்து செட்டில் ஆகும்போது மாதம் ரூ.15,000 வருமானம் வரும் வகையில், இந்தத் தொகையை நல்ல திட்டங்களில் முதலீடு செய்யலாமா அல்லது எதிர்கால இலக்குகளுக்கு முதலீடு செய்யலாமா எனக் குழப்பமாக உள்ளது. எது சரியாக இருக்கும்..?

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 34 - செட்டில்மென்ட் தொகையை எப்படி முதலீடு செய்வது?

நான் ஏற்கெனவே இரண்டு எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்துள்ளேன். ஆண்டுக்கு பிரீமியமாக ரூ.26,000 வரை செலுத்தி வருகிறேன். ஆனால், குறைவான முதிர்வுத்தொகைதான் (ரூ.8 லட்சம் மட்டுமே) கிடைக்கும் என்பதால், அவற்றை குளோஸ் செய்துவிட்டு டேர்ம் இன்ஷூரன்ஸ் ரூ.50 லட்சத்துக்கு எடுக்க வேண்டும் என நினைத்துள்ளேன். இது சரியா..?

எஸ்.ஐ.பி முதலீட்டில் மாதம் ரூ.2,000 முதலீடு செய்து வருகிறேன். இதுவரையில் ரூ.1.5 லட்சம் உள்ளது. மியூச்சுவல் ஃபண்டில் மொத்த முதலீட்டில் ரூ. 53,000 வரை உள்ளது. வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சம் உள்ளது. கொஞ்சம் தங்க நகை உள்ளது. வேறு சொத்துகள் எதுவும் இல்லை. ஆனால், கத்தாரில் சம்பாதித்த பணத்தில் ரூ.20 லட்சம் அளவுக்குச் செலவு செய்து, மதுரையில் வீடு கட்டி முடித்துள்ளேன்.

என் மகளின் மேற்படிப்புக்கு அடுத்த 6 வருடங்களில் ரூ.10 லட்சம் தேவை. மகளின் திருமணத்துக்கு இன்னும் 12 வருடங்களில் ரூ.15 லட்சம் சேர்க்க வேண்டும். என் மகனின் மேற்படிப்புக்கு அடுத்த 12 வருடங்களில் ரூ.15 லட்சம் தேவை. மகன் திருமணத்துக்கு எந்தத் திட்டமும் தேவை யில்லை (தொகை அனைத்தும் பணவீக்கத்தைச் சேர்த்து அன்றைய மதிப்பில்). அவனுடைய திருமணத்துக்கு அவனே சம்பாதித்துக்கொள்வான் என்பதே என் நம்பிக்கை.

அடுத்ததாக, நான் 58 வயது வரை வேலை பார்க்கத் திட்டமிட்டுள்ளேன். இந்தியாவுக்கு வந்தபிறகு எனக்கு ரூ.20,000 சம்பளத்தில் வேலை கிடைக்கும் வாய்ப்புண்டு. என் குடும்பச் செலவாக எனக்கு மாதம் ரூ15,000 முதல் ரூ.20,000 வரை ஆகிறது. அப்படி யானால்,  என் ஓய்வுக்காலத்துக்காக அடுத்த 16 ஆண்டுகளில் நான் எவ்வளவு சேர்க்க வேண்டும்? எனக்குக் கிடைக்கும் செட்டில்மென்ட் தொகையை வேறு எப்படிப் பயனுள்ளதாக முதலீடு செய்யலாம்..?”  என்று பல கேள்விகளைக் கேட்டிருந்தார். 

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 34 - செட்டில்மென்ட் தொகையை எப்படி முதலீடு செய்வது?

இனி, இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன். காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

“வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் எத்தனை ஆண்டுகாலம் வெளிநாட்டில் பணியில் இருப்போம் என்பது கணிக்க முடியாத விஷயம். எனவே, பணியில் சேர்ந்தவுடன் ஆரம்பக் காலத்திலிருந்தே எதிர்கால இலக்குகளைத் திட்டமிட்டுக் கொண்டு முதலீடு செய்யத் தொடங்க வேண்டும்.

நீங்கள் இந்த ஆண்டு டிசம்பருக்குப்பின் இந்தியாவுக்கு வரும்நிலையில், உங்கள் செட்டில்மென்ட் தொகையை மாத வருமானம் கிடைக்கும் திட்டங்களில் முதலீடு செய்வது சரியாக இருக்காது. நீங்கள் ரூ.20,000 சம்பளத்தில் வேலை பார்க்க வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளீர்கள். சொந்த வீடு இருக்கும் நிலையில், உங்கள் சம்பளத்தைக்கொண்டு மதுரையில் வாழ முடியும். எனவே, உங்கள் செட்டில்மென்ட் தொகை ரூ.30 லட்சத்தை அப்படியே எதிர்கால இலக்குகளுக்குப் பிரித்து முதலீடு செய்வதே பாதுகாப்பானதாக இருக்கும்.

உங்கள் மகளின் படிப்புக்கு ரூ.5.06 லட்சம் முதலீடு செய்து கொள்ளுங்கள். 6 ஆண்டுகளில் 12% வருமான அடிப்படையில் ரூ.10 லட்சம் கிடைக்கும். அடுத்து மகளின் திருமணத்துக்கு ரூ.3.85 லட்சம் முதலீடு செய்யுங்கள். 12 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கிடைக்கக்கூடும். மகன் மேற் படிப்புக்கு ரூ.3.85 லட்சம் முதலீடு செய்தால், 12 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கிடைக்கும். இந்த மூன்று இலக்குகளுக்கும் சேர்த்து ரூ.12.76 லட்சமாகும்.

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 34 - செட்டில்மென்ட் தொகையை எப்படி முதலீடு செய்வது?

உங்கள் ஓய்வுக்காலத்தில் மாதம் ரூ.47,400 தேவையாக இருக்கும். உங்கள் ஆயுள்காலம் 85 ஆண்டு,  பண வீக்கம் 7% என்கிற அடிப்படையில் கணக்கிட்டால் ரூ.1.34 கோடி கார்ப்பஸ் தொகை சேர்க்க வேண்டும். ரூ.17 லட்சத்தை 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், ரூ.93 லட்சம்
கிடைக்கும்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் தற்போது உங்களுக்குச் சரியாக ரூ.2.17 லட்சம் உள்ளது. இதை மறுமுதலீடு செய்தால், ரூ.13.3 லட்சம் கிடைக்கும். தற்போது உங்களிடமுள்ள இன்ஷூரன்ஸ் பாலிசிகளை சரண்டர் செய்தால், ரூ.2.85 லட்சம் கிடைக்கும். இதை மறுமுதலீடு செய்தால், 15 ஆண்டு களில் ரூ.17.47 லட்சம் கிடைக்கும். மொத்தமாக ரூ.1.24 கோடி கிடைக்கும். மீதம் ரூ.10 லட்சம் சேர்க்க மாதம் ரூ.2,000 முதலீடு செய்யவேண்டும். தற்போது செய்யும் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர்ந்து செய்யவும்.

செட்டில்மென்ட் தொகையில் மீதமுள்ள ரூ.23 ஆயிரத்தை வைத்து டேர்ம் இன்ஷூரன்ஸ் ரூ.40-50 லட்சத்துக்கும், ஹெல்த் பாலிசி ரூ.5 லட்சத்துக்கும் எடுத்துக் கொள்ளவும்.

சந்தை 20-25% வருமானம் தரும் சமயங்களில், 12 சதவிகிதத்துக்கும்  அதிகமாக உள்ள வருமானத்தை எடுத்து அவசரகால நிதியாக வைத்துக்கொள்ளவும்.”

குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்குமானதல்ல. உரிய நபர் ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor - Reg.no - INA200000878

 - கா.முத்துசூரியா

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 34 - செட்டில்மென்ட் தொகையை எப்படி முதலீடு செய்வது?

உங்களுக்கும்  நிதி ஆலோசனை வேண்டுமா?

finplan@vikatan.com என்கிற மெயில் முகவரிக்கு உங்கள் குடும்ப நிதி நிலவரங்களைக் குறிப்பிட்டு  குடும்ப புகைப்படங்களுடன் அனுப்புங்கள்.

உங்கள் செல்போன் நம்பரைத் தவறாமல் குறிப்பிடவும்.

தொடர்புக்கு:  9940415222