நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வறியவர்களை வறுத்தெடுப்பதே வரித் துறையின் வேலையா?

வறியவர்களை வறுத்தெடுப்பதே வரித் துறையின் வேலையா?
பிரீமியம் ஸ்டோரி
News
வறியவர்களை வறுத்தெடுப்பதே வரித் துறையின் வேலையா?

ஹலோ வாசகர்களே..!

2017-18-ம் நிதியாண்டுக்கான வருமான வரித் தாக்கலுக்கான விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளது மத்திய அரசின் நேரடி வரிகளுக்கான வாரியம். வழக்கமாக, கொஞ்சம் தாமதமாகவே இந்த விண்ணப்பம் வெளியிடப்படும். ஆனால், இந்தமுறை நிதியாண்டின் தொடக்கத்திலேயே வெளியிடப்பட்டிருப்பது பாராட்டத்தகுந்த விஷயம்தான்.

வறியவர்களை வறுத்தெடுப்பதே வரித் துறையின் வேலையா?


ஆனால், கடந்த ஆண்டில் வரித் தாக்கலுக்காகப் பயன்படுத்திய விண்ணப்பத்திலிருந்து ஏறக்குறைய 25 மாற்றங்களை வருமான வரித் துறை செய்துள்ளது சற்று ஆச்சர்யத்தையே அளிக்கிறது. வரித் தாக்கல் செய்யும் போது வழக்கமாகக் கேட்கப்படும் கேள்விகளைவிட, கூடுதலாக பல கேள்விகள் இந்தமுறை கேட்கப்பட்டிருக்கின்றன. சகஜ் அல்லது ஐ.டி.ஆர்-1 (ITR1) விண்ணப்பத்தில், மாதச் சம்பளம் தொடர்பான முக்கிய விவரங்களைக் கேட்கிறது. அதுமட்டுமல்ல, வீட்டை வாடகைக்கு விடுவதன்மூலம் கிடைக்கும் வருமானம், அதற்குக் கட்டிய வரி, கடன் வாங்கியிருந்தால், அதற்காகச் செலுத்திய அசல் மற்றும் வட்டி ஆகியவை தொடர்பான விவரங்களையும் முழுமையாகக் கேட்கிறது. இந்தத் தகவல்கள் எல்லாம் ஃபார்ம் 16-லேயே உள்ள நிலையில், வரி கணக்கு தாக்கல் செய்யும்போது மீண்டும் ஏன் கேட்கப்படுகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

ரூ.50 லட்சத்துக்கும் குறைவான வருமானம் பெறுபவர்கள் தொடர்பான தகவல்களைப் பெறவேண்டும் என்பதில் வருமான வரித் துறை அதிக அக்கறையுடன் செயல்படுகிறது. இந்தப் பிரிவில் இருப்பவர்கள்தான் நம் நாட்டில் மிக அதிகம். அதிலும் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் சம்பாதிக்கும் பிரிவைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கைதான் அதிகம். இவர்கள் சம்பாதிக்கும் பணத்துக்குக் கட்டியாகவேண்டிய வரியினை அவர்கள் வேலை பார்க்கும் அலுவலகமே கட்டச்செய்துவிடுகிறது. இதையெல்லாம் தாண்டி அவர்கள் பெரிய அளவில் வரி ஏய்ப்பு செய்துவிட வாய்ப்பில்லை என்கிறபோது, குறைந்த வருமானம் ஈட்டும் பிரிவினரை வருமான வரித் துறை கொஞ்சம் கருணையுடன் அணுகுவதை விடுத்து, ஏன் வறுத்தெடுக்கிறது என்பது தெரியவில்லை.

தனிமனிதர்கள் தங்களுக்குரிய வருமான வரியை மறைக்காமலும், குறைக்காமலும் கட்ட வேண்டும் என்பது அடிப்படையான விஷயம் என்றாலும், பெரிய வர்த்தக நிறுவனங்களும், பெரும் பணக்காரர்களும் வரி கட்டாமல் ஏமாற்றுவதை வருமான வரித் துறை இன்னும் உன்னிப்பாகக் கவனிக்கலாம். மகன் அல்லது மகளின் உயர்கல்விக்காகவும், குடும்ப உறுப்பினர்களின் உடல்நலத்துக்காகவும் பல லட்சங்களைச் செலவு செய்து விட்டு, கிடைக்கும் சம்பளத்தைக்கொண்டு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவே படாதபாடுபடும் சம்பளக்காரர்களின்மீது மட்டும் கவனம் செலுத்தாமல், உண்மையான ஏமாற்றுப் பேர்வழிகளைக்  கண்காணித்தால், நம் நாட்டின் வரி வருமானம் நிச்சயம் அதிகரிக்கும்!

- ஆசிரியர்