நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஷேர்லக்: விலை வீழ்ச்சி... தள்ளிப்போகும் ஐ.பி.ஓ-க்கள்!

ஷேர்லக்: விலை வீழ்ச்சி... தள்ளிப்போகும் ஐ.பி.ஓ-க்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்: விலை வீழ்ச்சி... தள்ளிப்போகும் ஐ.பி.ஓ-க்கள்!

ஓவியம்: அரஸ்

“சூடாக இஞ்சி டீ ஆர்டர் செய்யுங்கள். அடுத்த ஐந்தே நிமிடங்களில் உங்கள் அலுவலக கேன்டீனுக்கு வந்துவிடுவேன்” என ஷேர்லக் வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்ப, நாமும் அதன்படி செய்துவிட்டு, கேன்டீனில் அவருக்காகக் காத்திருந்தோம். சொன்னபடி ஷேர்லக் வந்து நிற்க, அடுத்த அரை நொடியில் டீ வந்தது. டீயை வாங்கிப் பருகிக்கொண்டே அவர் சைகை காட்ட, நாம் தயாராக வைத்திருந்த  கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.  

மியூச்சுவல் ஃபண்ட் துறை 50 லட்சம் புதிய முதலீட்டாளர்களைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளதே! 


“பங்குச் சந்தையில் ஸ்திரமான நிலை காணப்படாவிட்டாலும், மியூச்சுவல் ஃபண்ட் துறை, தனது ‘மியூச்சுவல்  ஃபண்ட் சரியே’ என்கிற ஆம்ஃபி பிரசாரம் மூலம் அடுத்த ஓராண்டில் சுமார் 50 லட்சம் புதிய முதலீட்டாளர்களை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில்  கொண்டுவரத்  திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் 30 முன்னணி நகரங்களுக்கு அப்பாலுள்ள பகுதிகளிலும் தீவிரக் கவனம் செலுத்தி, இந்த இலக்கை நிறைவேற்ற அது திட்டமிட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 32 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ளனர்.  மொத்தம் 2.05 கோடி எஸ்.ஐ.பி கணக்குகள் மூலமாக மியூச்சுவல் ஃபண்டில் மாதமொன்றுக்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. 

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த விழிப்பு உணர்வு மற்றும் நுணுக்கங்களை முதலீட்டாளர் களிடையே பரப்புவதற்காக, ஆம்ஃபி  விரைவிலேயே தனது இரண்டாவது கட்ட பிரசாரத்தைத் தொடங்கவுள்ளது. அப்போது, நீண்டகால அடிப்படையிலான முதலீட்டினால் எத்தகைய பலன்கள், குறிப்பாக சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்வேளையில் ஏன் அவசியம் முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கமாக எடுத்துச் சொல்ல திட்டமிட்டிருக்கிறது.’’

ஷேர்லக்: விலை வீழ்ச்சி... தள்ளிப்போகும் ஐ.பி.ஓ-க்கள்!

சமீபத்தில் ஐ.பி.ஓ வந்த பங்குகள் எதுவுமே சொல்லிக் கொள்கிற மாதிரி லாபத்தைத் தரவில்லையே!

“சமீபத்தில் மத்திய அரசு நிறுவனமான, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்ஸின் ஐ.பி.ஓ-வுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. கடைசி நேரத்தில் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி, அதில் முதலீடு செய்து அந்த ஐ.பி.ஓ-வைக்  காப்பாற்றியது.

அதன்பிறகு பிரபல வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ பேங்கின் ஓர் அங்கமான, ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் ஐ.பி.ஓ வந்தது. மொத்தம் 78% பங்குகளுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் வந்தன. ஏற்கெனவே, பெரிய முதலீட்டாளர்கள் மூலம் கணிசமான பங்கு முதலீட்டை இந்த நிறுவனம் பெற்றதால், ஐ.பி.ஓ மூலம் திரட்ட வேண்டிய மூலதனத்தை ஒருவழியாகத் திரட்டியது.  ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் நிறுவனப் பங்குகள், அதன் வெளியீட்டு விலையைவிட, பட்டியலிடப் பட்டபோது 14% இறக்கம் கண்டது.

இந்தத் தொடர் பின்னடைவுகளை அடுத்து ஐ.பி.ஓ மூலம் லாபகரமாகப் பணம் திரட்டிவிடலாம் எனத் திட்டமிட்டிருந்த பல நிறுவனங்கள், அவற்றின் திட்டங்களைத் தள்ளிப்போட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ஏ.சி.எம்.இ சோலார் ஹோல்டிங்ஸ், பிரின்ஸ் பைப்ஸ் அண்டு ஃபிட்டிங்ஸ், செவன் ஐலேண்ட்ஸ் ஷிப்பிங் உள்ளிட்ட அரை டஜன் கம்பெனிகள் அவற்றின் ஐ.பி.ஓ-க்களை சில மாதங் களுக்குத் தள்ளிவைத்திருப்பதாக இன்வெஸ்ட்மென்ட் பேங்கர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பங்கின் விலையை அதிகமாக நிர்ணயம் செய்திருப்பது, பங்குச் சந்தையின் மந்தநிலை, ஐ.பி.ஓ வரும் நிறுவனம் குறித்த தவறான தகவல்கள் போன்றவற் றால்தான் ஐ.பி.ஓ-க்களுக்கு அதிக ஆதரவு இல்லாமல் போகின்றன என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.”  

என்.சி.டி-க்கள் வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதி குறைந்துள்ளதே? 

“கடந்த 2017-18-ம் நிதியாண்டில் இந்திய நிறுவனங்கள், விரிவாக்கத் திட்டங்களுக்கான நிதித் தேவை, கடனைத் திருப்பிச் செலுத்துதல், தொழில் மூலதனத் தேவைகளுக்கு உதவுதல் போன்ற தங்களது தொழில் தேவைகளுக்காக, மாற்றத் தக்க வகையில் அல்லாத கடன் பத்திரங்கள் (NCDs) வெளியீட்டின் மூலம் சிறு முதலீட்டாளர் களிடமிருந்து ரூ.4,975 கோடி நிதி திரட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது  83% குறைவாகும். என்.சி.டி மூலம் 2016-17-ம் நிதியாண்டில் ரூ.29,558 கோடி திரட்டப்பட்டுள்ளது.   

2016-17-ம் நிதியாண்டில் 16 என்.சி.டி-க்கள் வெளியிடப்பட்ட நிலையில், சமீபத்தில் முடிவடைந்த நிதியாண்டில்  வெறும் 7 என்.சி.டி-க்கள் மட்டுமே வெளியிடப் பட்டுள்ளன. காரணம், பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு லாபகரமாக இருக்கவே, அதனைப் பெரும்பாலான முதலீட்டாளர்கள் பயன்படுத்திக் கொண்டதால்தான்.”

ரிலையன்ஸ் பவர் ரூ.2,000 கோடி நிதி திரட்ட உள்ளதே?


“ரிலையன்ஸ் பவர், கடன் பத்திரங்கள் வெளியீட்டின் மூலம் ரூ.2,000 கோடி நிதி திரட்ட அதன் பங்கு முதலீட்டாளர் களிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளது. இவ்வாறு திரட்டப்படும் நிதியைத் தனக்கும், தனது துணை நிறுவனங் களுக்கும் இருக்கும் கடன் சுமையைக் குறைக்கவும், இதரப் பொது பயன்பாட்டுக் காகவும் பயன்படுத்த ரிலையன்ஸ் பவர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.”

 அபராதம் கட்டத் தவறியவர்களின் பட்டியலை செபி வெளியிட்டுள்ளதே?


“பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு, அதற்காக விதிக்கப்பட்ட அபராதத்தைக் கட்டத் தவறிய நிறுவனங்களின் முழுமை யான பட்டியலை, பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி வெளியிட்டுள்ளது. இதில் 2,000-க்கும் அதிகமான நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. எஸ்.பி.ஐ கேப்பிட்டல், ஆக்ஸிஸ் கேப்பிட்டல், ஜி.எம்.ஆர் ஹோல்டிங்ஸ், யுனைடெட் ப்ரூவரீஸ், ஆல்பிக் ஃபைனான்ஸ், சாரதா ரியால்டி, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் டிரைடன்ட் இந்தியா போன்ற நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கிய நிறுவனங்களாகும். இந்த நிலையில், இவ்வாறு அபராதம் கட்டத் தவறியவர் களின் வங்கிக் கணக்குகள் மற்றும் டீமேட் கணக்குகளையும், இதரச் சொத்துகளையும் முடக்கித் தனது அபராதத்தை வசூலிக்க, செபி தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி வருகிறது.’’

இந்திய நிறுவனங்கள் ஐ.பி.ஓ-க்கள் மூலம், முடிந்த நிதியாண்டில் ரூ.84,357 கோடி ரூபாய் திரட்டிச் சாதனை படைத்துள்ளனவே?

“முடிந்த 2017-18-ம் நிதியாண்டில் இந்திய நிறுவனங்கள் ஐ.பி.ஓ-க்கள் மூலம் ரூ.84,357 கோடி திரட்டியுள்ளன.  முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், இது மூன்று மடங்கு அதிகமாகும். 2016-17-ம் நிதியாண்டில் இந்திய நிறுவனங்கள், ஐ.பி.ஓ-க்கள் மூலம் திரட்டிய தொகை ரூ.29,050 கோடி ஆகும்.”

பாரத் -22 இ.டி.எஃப் இரண்டாவது பகுதி மூலம் மத்திய அரசு ரூ.80,000 கோடி நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதே?

“2017 நவம்பர் மாதத்தில் பாரத் -22 இ.டி.எஃப் முதல் பகுதி மூலம் மத்திய அரசு ரூ.14,500  கோடி நிதி திரட்டியது.  இதன் இரண்டாவது பகுதி மூலம் மத்திய அரசு ரூ.80,000  கோடி நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இ.டி.எஃப்-ஐ நிர்வகித்துவரும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், இது தொடர்பாக விண்ணப்பங்களை செபியிடம் தாக்கல் செய்துள்ளது. புதிய பாரத் இ.டி.எஃப் -22-ல் ஓ.என்.ஜி.சி, ஐ.ஓ.சி, எஸ்.பி.ஐ, பி.பி.சி.ல், கோல் இந்தியா மற்றும் நால்கோ பங்குகள் இடம்பெறுகின்றன. நடப்பு நிதியாண்டில் இ.டி.எஃப் மூலமான மத்திய அரசின் முதல் நிதி திரட்டல் நடவடிக்கை இதுவாகும்” எனச் சொல்லிவிட்டு கிளம்பினார். இரவு இதழை முடிக்கும்போது வாட்ஸ்அப்பில் நமக்கு ஒரு தகவலை அனுப்பினார்.

‘வீடியோகான் நிறுவனத்துக்கு ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் கடன் அளித்தது தொடர்பான சர்ச்சையில் சாந்தா கோச்சர், தீபக் கோச்சர், வீடியோகான் வேணுகோபால் தூத் ஆகியோர் வெளிநாடு செல்லத் தடை. இந்தச் செய்தியைக்  கடைசி செய்தியாகப் போட்டுவிடுங்கள்’ என்று அதில் இருந்தது.

சந்தர் டெக்னாலஜீஸ் - பங்கு விலை ஏற்றமும் இறக்கமும்!

சமீபத்தில் ஐ.பி.ஓ வெளியிட்ட ஆட்டோ உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான சந்தர் டெக்னாலஜீஸின் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. அப்போது வெளியீட்டு விலையான ரூ.332-ஐ 3.9% அதிகரித்து ரூ. 345-க்கு பட்டியலிடப்பட்டது. ஆனால், அன்றைய தினம் வர்த்தகம் முடிவடைந்தபோது அதன் பங்கு ஒன்றின் விலை, வெளியீட்டு விலையைவிட 2.85% சரிந்து,  ரூ.322.55 -ல் நிலைபெற்றது. இந்தப் பங்குகள் வேண்டி 6.2 மடங்கு அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.