
வித்யா பாலா, தலைவர் – மியூச்சுவல் ஃபண்ட் ஆய்வு, FundsIndia.com
இந்தியப் பங்குச் சந்தை, கடந்த ஒன்றரை மாதத்தில் அதிக ஏற்ற இறக்கத்தில் இருக்கிறது. இது முதலீட்டாளர்களிடையே கவலையை உண்டாக்கி யிருக்கிறது. தற்போதைய நிலையில், பெரும்பாலான முதலீட்டாளர்களின் நிலை இரண்டு விதமாக இருக்க வாய்ப்புள்ளது.
1. சந்தை இறக்கம் கண்டுவருகிறது. எனவே, முதலீடு செய்ய இன்னும் சில காலம் காத்திருக்கப் போகிறேன்.
2. சந்தை இறக்கம் கண்டுவருகிறது. எனவே, இன்னும் முதலீடு செய்து, பணத்தை இழக்க நான் விரும்பவில்லை.

அடுத்த பக்கத்திலுள்ள அட்டவணையில் உள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில், குறுகிய காலச் சந்தை இறக்கத்தில் நீங்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு, 100-ல் இரண்டு முறை மட்டுமே கிடைத்திருக்கும். இதை வைத்துப் பார்க்கும் போது, கடந்த ஒன்றரை மாதங்களில் சந்தையில் ஏற்பட்டுள்ள இறக்கமானது பெரிய இறக்கம் என்று சொல்லவே முடியாது. தவிர, சந்தை தற்போது இறங்குவதற்கு நம் நாட்டுப் பொருளாதாரம் முக்கியக் காரணமல்ல. எனவே, பயத்தின் காரணமாகச் சந்தை இப்போது சரிவதாகச் சொல்ல முடியாது.
சந்தை தற்போது இறங்குவதற்கு வேறு சில காரணங்கள் உள்ளன. அமெரிக்காவில் வட்டி விகித உயர்வினால் உலகச் சந்தைகளில் ஏற்பட்ட மாற்றம், சீனா - அமெரிக்கா இடையேயான வர்த்தகப் போர், சர்வதேச அரசியல் குழப்பங்கள் போன்றவைதான் நம் பங்குச் சந்தை இறங்குவதற்கு முக்கியக் காரணங்கள் ஆகும். இப்படிப் பல பிரச்னைகள் இருந்தாலும், யதார்த்தமான நிலைமை முன்னேறி வருவதை நாம் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.
பங்குச் சந்தையில் ஒருவர் முதல்முறையாக ஏற்ற இறக்கத்தைச் சந்திக்கும் நபராக இருந்தாலோ அல்லது சந்தையில் ஏற்கெனவே முதலீடு செய்திருப்பவர் என்றாலோ, சந்தை சரிந்துள்ள நிலையிலும் ஏன் இப்போது முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான மூன்று முக்கியமான காரணங்களைப் பார்ப்போம்.
1. அதிகரிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருமானம்
பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகம் இருக்கும் வேளையில், நிறுவனங்களின் வருமானத்தை முதலீட்டாளர்கள் கவனிக்கத் தொடங்குவது நல்லது. தற்போதைய நிலையில், முதலீட்டாளர்களும் அதைத்தான் செய்ய வேண்டும். நமது கார்ப்பரேட் நிறுவனங்களின் வருமானம் அதிகரிக்கும் என்று கடந்த 2017–ம் ஆண்டு இறுதியிலேயே நாங்கள் சொல்லியிருந்தோம்.
2017 டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள், முதலீட்டாளர் களை ஏமாற்றவில்லை. சந்தையில் பட்டியலிடப்பட்ட எல்லா நிறுவனங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், (தோராய மாக 3,450) டிசம்பர் 2017–ல் நிகர லாபம் 4.4% வளர்ச்சியடைந்து உள்ளது. இதிலிருந்து வங்கிகளை நீக்கிவிட்டால், லாப வளர்ச்சி 17.5 சதவிகிதமாக உள்ளது.
கடந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், சென்சென்ஸ் 30 நிறுவனங்களின் வருமான வளர்ச்சி 9.7% ஆகும். நஷ்டத்தைப் பதிவுசெய்த எஸ்.பி.ஐ-யை இதிலிருந்து நீக்கிவிட்டால், வருமான வளர்ச்சி 17.5 சதவிகிதமாக அதிகரிக்கிறது.
பங்குகள் மீதான மதிப்பீடுகள் மிதமாக இருப்பதற்கு, வருமான வளர்ச்சி அதிகரிப்பும் ஒரு காரண மாகும். அதாவது, நிறுவனங்களின் வருமானங்கள் ஒருபக்கம் உயர, இன்னொருபக்கம் சந்தைகள் இறக்கம் கண்டிருப்பதால், பங்குகள் மீதான மதிப்பீடு கொஞ்சம் குறைந்துள்ளது.
உண்மையில், நாம் எந்த வகையிலும் வங்கித் துறையை விட்டுவிடவில்லை. ஏனெனில், வங்கிகள் இன்றி, தொழில் துறை மீண்டும் சிறப்பான வளர்ச்சியைக் காணமுடியாது. திவால் சட்டத்தினாலும், மோசமான கடன்களாலும் வங்கித் துறை சிக்கலில் சிக்கியுள்ளன. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் நிகர வாராக் கடன்களில் ஏறக்குறைய பாதி, தற்போது திவால் சட்டம் வழியாக தேசிய நிறுவனச் சட்டம் தீர்ப்பாயத்திற்கு (NCLT) பரிந்துரைக் கப்பட்டுள்ளது. இது, நடுத்தரக் காலத்தில் வாராக் கடன்களைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கலாம். வாராக் கடன் பணம் திரும்ப வசூலாவதுடன், புதிதாக வாராக் கடன் உருவாவது குறைந்து வருவது ஆரோக்கியமான விஷயமாகும்.

2. இழப்பிலிருந்து லாபத்துக்கு மீண்டு வருதல்
கடந்த ஆண்டு ஏப்ரல் 17 முதல் டிசம்பர் 2017 வரையிலான காலத்தில், தொழில் உற்பத்தி வளர்ச்சி (ஐ.ஐ.பி) தொடர்பான புள்ளிவிவரங்கள், பல துறைகள் வளர்ச்சியடைந்து வருவதையே காட்டுகின்றன. ஏற்றுமதி வளர்ச்சி, கடந்த ஜனவரியில் 9.5 சதவிகிதமாக இருந்தது, இந்த ஆண்டு முழுக்க தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.
நமது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில், வாகன விற்பனை அதிகரித்துள்ளது. நிறுவனங்கள், விரிவாக்கத்துக்காகக் கடன் வாங்குவதும் மற்றும் தனிநபர்கள் செலவழிப்பதற்காகக் கடன் வாங்குவதும் அதிகரித்து வருகிறது. 2017 டிசம்பர் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.எஸ்.டி) வளர்ச்சியும் 7.2 சதவிகிதத்தைத் தொட்டுள்ளது. இதன் மூலம், வேகமாக வளர்ந்து வரும் நாடு என்னும் நிலையை நம் நாடு தக்கவைத்துக் கொண்டுள்ளது.
எனினும், எல்லா விஷயங்களும் வளர்ச்சிக்கு ஆதரவாக, சிறப்பாகவே இருப்பதாகச் சொல்லிவிட முடியாது. உலகளவில் வர்த்தகம் மேம்பட்டாலும், ஏற்றுமதி தொடர்ந்து குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) நடைமுறைக்கு வந்ததன் மூலம் ஏற்பட்ட விளைவுகள் மற்றும் மூலதனச் செலவுகள் மீதான பாதிப்புகள், சீனா - அமெரிக்கா இடையான வர்த்தகப் போர் ஆகியவை நீண்டகால வளர்ச்சியில் சில பாதிப்புகளை உண்டாக்கலாம். இவை தவிர்த்து, மோசடிகள், கடன் வளர்ச்சிக் குறைவு போன்றவற்றால் வங்கிகள் சில ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்கலாம். இது வங்கிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியதைப் பிரதிபலிக்கிறது.

3 வளர்ந்துவரும் கிராமங்கள்
இரு சக்கர வாகனங்கள் மற்றும் ட்ரக்கர்கள் விற்பனை அதிகரித்ததன் விளைவாக, பங்குச் சந்தையில் வாகனத் துறை பங்குகளின் விலை ஏற்றம் கண்டுள்ளன. அது மட்டுமல்ல...
* 99% இந்தியக் கிராமப்புறங்கள் தற்போது வங்கிக் கணக்குகளைக் கொண்டுள்ளன.
* மொபைல் பிராட்பேண்டைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நகர்ப்புறங்களில் 11.7 சதவிகிதமாகவும், கிராமப்புறங்களில் 48.4 சதவிகிதமாகவும் உள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக, 2018-ல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், கிராமப்புறங்கள், வேளாண் மற்றும் வேளாண்சாரா வருமானத்தைப் பெருக்க அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கிராமப்புற வளர்ச்சியானது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. ஒன்று, குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) உயர்வுக்கேற்ப கிராமப்புற மக்களின் வருமான வளர்ச்சி அதிகரிக்கும். மகாத்மா காந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம், கிராமப் புறங்களின் விவசாயம் சாராத மக்களின் கைகளில் அதிக பணம் புழங்க வாய்ப்புள்ளது.
அதிகரிக்கும் கிராமப்புற மக்களின் வருமானம்
முதலாவதாக, பருவ மழை நன்றாக இருக்கும் பட்சத்தில், வேளாண் விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைத்தால், விவசாயிகளின் வருமானம் 20 - 30% அதிகரிக்கும்.
இரண்டாவதாக, பணமதிப்பு நீக்கம் மற்றும் அனைவருக்கும் வங்கிக் கணக்கு ஆகிய நடவடிக்கைகளினால் பலரும் தங்களிடமிருக்கும் பணத்தைப் புழக்கத்துக்குக் கொண்டு வருகின்றனர். இதன் விளைவாகக் கிராமப்புற மக்களின் வாழ்க்கை முறை மேம்படும் நிலை உருவாகியிருக்கிறது.
மூன்றாவதாக, அனைவருக்கும் மின்சாரம், போக்குவரத்து வசதி மேம்பாடு போன்றவற்றின் மூலம் கிராமங்களின் வளர்ச்சிக்கு அரசும் உதவி செய்து வருகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள், கிராமப்புற மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, வேளாண் உள்ளீடுகள், வாகனம் மற்றும் வாகன உதிரிபாகங்கள், கட்டுமானப் பொருள்கள், வங்கி மற்றும் நிதிச் சேவைகள் மற்றும் மிக முக்கிய நுகர்வோர் பொருள்கள் ஆகியவற்றின்மீது கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன. இந்தப் பிரிவுகளில் சில, மேம்பட்ட வருவாயைக் கிராமப் புறங்களில் அளித்து வருகின்றன.

கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள்
பணவீக்க விகிதம் என்பது மிக முக்கியமாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விஷயமாக இருக்கிறது. சமீபத்தில், உணவுப்பொருள்களின் விலை குறைந்ததால் பணவீக்கம் குறைந்திருக்கிறது. உலகளாவிலான கமாடிட்டிப் பொருள்களின் விலை ஓரளவுக்குக் குறைந்து காணப்படும் நிலையில், பற்றாக்குறை மற்றும் தேவை அதிகரிப்பால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், நிறுவனங்களின் வருமான வளர்ச்சி பணவீக்கத்தைவிட அதிகமாக இருப்பதால், விலை அதிகரித்தாலும் அதை வாடிக்கையாளர்கள் எளிதில் ஏற்றுக்கொள்ளும் நிலையே இருக்கிறது.
அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர், அண்மைக் காலத்தில் இந்தியப் பங்குச் சந்தையின் இறக்கத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. இதன் தாக்கம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஏற்றுமதியின் வளர்ச்சி பல ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருந்துவருவதால், உள்நாட்டு வளர்ச்சியைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. நமது ஏற்றுமதிகளில் அமெரிக்காவின் பங்களிப்பு சுமார் 15% மட்டுமே. இதுகூட கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது.
வெளிப்புற நிகழ்வுகள் மட்டுமின்றி, இந்தியாவின் உள்நாட்டு அரசியல் நிகழ்வுகளும் குறிப்பிட்ட தாக்கத்தை இந்தியப் பங்குச் சந்தையில் ஏற்படுத்தியுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் நாடாளுமன்றத்தின் இரண்டு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வியடைந்தது மற்றும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கெதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம், 2019 பொதுத் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி விஷயங்களில் நிச்சயத்தன்மையற்ற நிலை போன்றவை பங்குச் சந்தையைப் பாதிக்கும் அம்சங்களாக உள்ளன.

இருந்தாலும், வாக்காளர்களைக் கவர, குறிப்பாகக் கிராமப்புற வாக்காளர்களைக் கவரும் நோக்கில், அரசு செலவு செய்யலாம். இதனால், கிராமப்புறங்களில் நுகர்வோர் பொருள்களின் விற்பனை அதிகரிக்கவே செய்யும்.
அரசியலில் நிலவும் பிரச்னைகளுக்கு, வரும் ஆண்டில் தெளிவு கிடைக்கும். தவிர, ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களை, 2019–ல் ஆட்சிக்கு வரும் எந்தவொரு அரசியல் கட்சியினாலும் அவ்வளவு சுலபமாக மாற்றிவிட முடியாது. எனவே, தற்போதைய நிலையின் அடிப்படையில் பார்த்தால், அரசியல் கட்சிகள் தொடர்பான பிரச்னைகளைக் குறித்துக் கவனத்தில் கொள்வதைவிட, நீண்ட கால சீர்திருத்தங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறதா என்பதைக் கவனிப்பதே முக்கியம்.
முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது...
அனைத்துச் சிக்கல்களும் தீரும் வரை முதலீட்டாளர்கள் காத்திருக்கக் கூடாது. முதலீடு செய்ய எல்லா நேரமும் நல்ல நேரமே. அரசியல், பொருளாதாரம் மற்றும் வர்த்தக இடர்பாடுகள் போன்ற சச்சரவுகளை ஒதுக்கிவிட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சி வாய்ப்பு களை மட்டும் முதலீட்டாளர்கள் கருத்தில் கொண்டு செயல்பட்டால், 2018-ம் ஆண்டு ஒரு வெற்றிகரமான ஆண்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
பங்குச் சந்தையில் தற்போதைய ஏற்ற இறக்கம் தொடரும் என்று எதிர்பார்ப்பதால், சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) மூலம் முதலீட்டினை மேற்கொள்வதும், ஏற்கெனவே செய்த முதலீட்டைத் தொடர்வதும் முக்கியம். முதலீட்டாளர்களிடம் அதிக உபரித் தொகை இருப்பின், சந்தை இறக்கத்தின்போது அதை முதலீடு செய்யலாம். 2018-ம் ஆண்டு, முதலீட்டாளர்களுக்குச் சராசரி வாய்ப்புகளையே தரக்கூடும்.
பொறுப்புத் துறப்பு : மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், சந்தை அபாயங்களுக்கு உட்பட்டதாகும். முதலீடு செய்வதற்கு முன்பாக திட்டத் தகவல் மற்றும் பிற சம்பந்தப்பட்ட ஆவணங்களை கவனமாகப் படிக்கவும்.

உணவு பொருள்கள்... முந்தும் கிராமங்கள்!
வளர்ந்துவரும் இந்தியா வில், கிராமங்களின் முன் னேற்றம் என்பது பிரதான மாகக் கருதப்படுகிறது. கிராமப்புற நுகர்வு அதி கரித்துவரும் நிலையில், பல நிறுவனங்களும் கிராமப்புறச் சந்தையைக் குறிவைத்து உள்ளன. கோல்ட்மேன் சாக்ஸ் அறிக்கையின்படி, நகர்ப்புறத்தினர் உணவு மற்றும் பானங்களுக்குச் செலவிடுவது 33 சதவிகிதமாக இருக்கும் நிலையில், அதற்கான கிராமப்புறப் பயன்பாடு 58 சதவிகிதமாக உள்ளது. எனவே, நுகர்வோர் பயன்பாட்டுப் பொருள் களைத் தயாரித்து விற் பனை செய்யும் நிறுவனங் கள், கிராமப்புறங்களை நோக்கித் தங்களின் கவனத்தைத் தற்போது திருப்பத் தொடங்கியுள்ளன.