நடப்பு
தொடர்கள்
Published:Updated:

இ-வே பில்... சாதனையா, சோதனையா?

இ-வே பில்... சாதனையா, சோதனையா?
பிரீமியம் ஸ்டோரி
News
இ-வே பில்... சாதனையா, சோதனையா?

ஜி.கார்த்திகேயன், ஆடிட்டர் , கோவை

ப்ரல் 1-ம் தேதியிலிருந்து மீண்டும் நடைமுறைக்கு வந்திருக்கிறது மின்வழிச் சீட்டு என்று சொல்லப்படுகிற இ-வே பில். கடந்த பிப்ரவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்குக் கொண்டுவர முயற்சி செய்யப்பட்ட இந்த இ-வே பில், சிலபல தொழில்நுட்பக் காரணங்களினால் நிறுத்திவைக்கப்பட்டது. அந்தத் தொழில்நுட்பக் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு, இப்போது அதனை மீண்டும் கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசாங்கம்.

அரசின் பார்வையில், பில் போடாமல் செய்யப் படும் வியாபாரத்தைத் தடுக்கவும் குறைக்கவும் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்தான் இ-வேபில் முறை. மேலும், ஏராளமான பொருள்கள் கணக்கில் கொண்டுவரப்படாமல் செல்வதால், உடனடியாக இந்த இ-வே பில் முறையை அறிமுகப்படுத்த நினைக்கிறது மத்திய அரசு. 

இ-வே பில்... சாதனையா, சோதனையா?

   எப்படி உருவாகிறது இ-வே பில்?

50,000 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பொருள்களை எடுத்துச்செல்பவர்கள் பொது வலைதளம் மூலம் விற்பனை ரசீதைத் தயார் செய்து, அந்தப் பொருள் பற்றிய விவரத்தையும், அந்தப் பொருளைக் கொண்டுசெல்கிற நபர் தொடர்பான விவரத்தையும் பதிவு செய்து ஆவணங்களை எடுத்துச் செல்லவேண்டும்.

இந்தப் பொருளை எடுத்துச்செல்கிற வழியில்    ஜி.எஸ்.டி அதிகாரிகள் சோதனை செய்ய முடியும். இ-வே பில் முறையில் இரண்டு பகுதிகள் உள்ளன. பகுதி A என்பது இன்வாய்ஸ் (Invoice) சம்பந்தப்பட்ட விவரங்கள் அதாவது, விநியோகிப்பாளர், வாங்குபவர், விற்பவர் ஆகியோருடைய விவரங்கள் இருக்கும்.

பகுதி B என்பது பொருள்களைக் கொண்டுசெல்லக்கூடிய வாகனத்தின் விவரங்கள் இருக்கும். ரூ.50,000-க்குமேல் மதிப்புள்ள பொருள்களைக் கொண்டு செல்பவர்கள் இந்தத் தகவல்களைத் தயார் நிலையில் எடுத்துச் செல்ல வேண்டும்.

மேலும், இது இணையதளம் வழியாகச் செயல்படுவதால், இந்தத் தகவல்கள் உடனடியாக ஜி.எஸ்.டி அதிகாரிகளுக்கும், எடுத்துச்செல்லும் பொருள்களின் நகர்வு குறித்தும் தெரியவரும். இ–வே பில்லை இணையதளம், குறுஞ்செய்தி (SMS) மற்றும் செயலி மூலம் தயார் செய்யலாம்.

இ-வே பில்... சாதனையா, சோதனையா?

கூலிக்காக செய்துதரப்படும் வேலையாக  (Job works) இருக்கும்பட்சத்தில், யார் அந்த வேலையைச் செய்ய வேண்டும் என்று தருகிறாரோ, அவரே இ-வே பில்லைத் தயார் செய்து தரலாம்.

தற்போது இது மாநிலங்களுக்கிடையே (Inter State) நடைபெறும் வர்த்தகங்களுக்கு மட்டும்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலங்களுக்குள்ளே (Intra State) நடக்கும் வர்த்தகத்திற்காகக் கொண்டுசெல்லும் பொருள்களுக்கு ஜூன் 30-ம் தேதிக்குமுன் இ-வே பில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஜி.எஸ்.டி கவுன்சில் அறிவுறுத்தி யுள்ளது.

ஆனால், கர்நாடகா மாநிலம் தனது மாநிலத்துக்குள்ளே (Intra State) வர்த்தகத்திற்குக் கொண்டுசெல்லும் பொருள்களுக்கு இ-வே பில் முறையை அறிமுகம் செய்துள்ளது.

   கொண்டுசெல்ல வேண்டிய ஆவணங்கள்

* வரிப் பட்டியல் / விநியோகப் பட்டியல் அல்லது டெலிவரி சலான்.

* இ-வே பில் / இ-வே பில் நம்பர்

* பொருள் ஒப்படைக்கும் பில் ஒன்று, விற்பனைப் பட்டியல் ஒன்று, இ-வே பில் ஒன்று.

* பல பொருள்களை ஒப்படைக்க ஒரே ஒரு இ-வே பில்லைஉருவாக்க இயலாது. பல இ-வே பில்கள் உருவாக்கப்பட வேண்டும்.

   வாகன விவரங்கள்

பொருள்களை வழங்குபவரின் இடத்திலிருந்து கொண்டு செல்லப்படும் இடத்துக்கிடையேயான தூரம் உள்மாநிலத்தில் 10 கி.மீ-க்கும் குறைவாக இருந்தாலோ, பொருள்களை ஏற்றும் இடத்திலிருந்து அதனைப் பெறுபவரின் இடம் உள்மாநிலத்தில் 10 கி.மீ-க்கும் குறைவாக இருந்தாலோ, அது தொடர்பான விவரங்களை இ-வே பில்லில் குறிப்பிடத் தேவையில்லை.

   செல்லுபடியாகும் காலம்


இ-வே பில் படிவம் பகுதி B-ல் முதல் பதிவு மேற்கொள்ளும்போது, செல்லுபடியாகும் காலம் தொடங்குகிறது. மேலும், இ-வே பில்லில் மாற்றம் செய்யும்போது செல்லுபடியாகும் காலம் மாறாது. ஒவ்வொரு 100 கிலோ மீட்டருக்கு ஒரு நாளும், அடுத்த 100 கிலோ மீட்டருக்குக் கூடுதலாக ஒருநாளும் செல்லுபடியாகும்.

   வாகனத்தை மாற்றினால்...


பொருள்களைக் ஒரு வாகனத்திலிருந்து மற்றொரு வாகனத்திற்கு மாற்றவேண்டியிருந்தால் EWB–01 பகுதி B-யில் மாற்றம் செய்துகொள்ளலாம். பொருள்களைப் பெறுபவரின் இடத்திற்குக் கொண்டு செல்லப்படும் வரை, எத்தனை முறை வேண்டுமானாலும் வாகனம் தொடர்பான விவரங்களை மாற்றிக்கொள்ளலாம்.

கொண்டு செல்லப்படும் பொருள்களில் ஏதேனும் தவறுகள் தென்பட்டால், உருவாக்கப்பட்டுள்ள இ-வே பில்லை 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்ய வேண்டும்.

   என்ன சிரமங்கள்?

1.
கூலிக்காக வேலை செய்து தருபவர்கள் (Job workers) பெரும்பாலும் சிறுதொழில்கள் செய்பவர்களே இருப்பார்கள். இவர்கள், கணினியில் இத்தகைய தகவல்களைப் பதிவு செய்வது சற்றுச் சிரமத்தை ஏற்படுத்தும்.

2. ஒருவர் ஒரு மாநிலத்திலிருந்து பொருளை வாங்கிவரும்போது, விற்க நினைத்த மாநிலத்துக்குப் பதிலாக வேறொரு மாநிலத்தில் விற்றால், அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்கிற விவரங்கள் இல்லை. உதாரணமாக, சென்னையில் இருக்கும் ஒருவர் மும்பையில் இருந்து பொருள்களைக் கொண்டு வருகிறார்; பொருளைக் கொண்டுவரும் வழியிலேயே அதைக் கர்நாடகாவில் விற்றுவிட முடிவு செய்கிறார் எனில், இதனை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்த விவரங்கள் இல்லை. (முன்பு இதை E1 படிவத்தில் ‘Sale in Transit’ என்பார்கள்.)

3. பதிவு செய்யப்படாத நிறுவனங் களிலிருந்து வாங்கும்போது சிரமங்கள் இருக்கலாம். பொதுவாக, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களை ஜி.எஸ்.டி அதிகளவில் பாதித்துள்ளது.

இ-வே பில் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ள இந்த சில நாள்களில் உள்ள நிலைமையை வைத்துப் பார்க்கும்போது, பெரிய பிரச்னை எதுவும் இல்லை என்றே தெரிகிறது.

தற்போது ஒரு நாளைக்குச் சராசரியாக ஆறு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இ-வே பில்லை உருவாக்குகிறார்கள் என்றாலும், இன்னும் கூடுதலானவர்கள் இந்த பில்லை உருவாக்கும்போதுதான் இது சோதனையா, சாதனையா என்பது   தெரியவரும்!

ஒருங்கிணைந்த இ-வே பில்!

ஒரே வாகனத்தில் பலவகையான பொருள்களைக் கொண்டு சென்று ஒப்படைக்க வேண்டிய நிலையில், ஒவ்வொன்றின் மதிப்பும் ரூ50 ஆயிரத்துக்கு மேல் இருந்தால், அந்தப் பொருளைக் கொண்டு செல்பவர் இ-வே பில் EWB-02-ல் உருவாக்கலாம். இந்த ஒருங்கிணைந்த இ-வே பில்லுக்குத் தனியாக செல்லுபடி காலம் ஏதும் கிடையாது. அதிலுள்ள ஒவ்வொரு இ-வே பில்லுக்கு உரிய சரக்குகள் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் வாங்குபவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.