மற்ற எபிசோடுகள்
Published:Updated:

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - பணப் பரிவர்த்தனையைச் சுலபமாக்கும் புதிய தொழில்நுட்பம்!

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - பணப் பரிவர்த்தனையைச் சுலபமாக்கும் புதிய தொழில்நுட்பம்!
பிரீமியம் ஸ்டோரி
News
டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - பணப் பரிவர்த்தனையைச் சுலபமாக்கும் புதிய தொழில்நுட்பம்!

சூப்பர் ஸ்டார்ட்அப்களின் தொழில் ஜாதகம்! - 18

து ஃபின்டெக் ஸ்டார்ட் அப்களுக்கான காலம். ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை நோக்கித் தான் இன்றைக்கு உலகமே சென்று கொண்டிருக்கிறது. இந்தச் சூழலைச் சரியாகப் புரிந்துகொண்டு, வெற்றி கண்ட நிறுவனங்களில் ஒன்றுதான் M2P சொல்யூஷன்ஸ். நிதி நிறுவனங் களுக்கும், வங்கிகளுக்கும் இடையே பணப்பரிவர்த்தனைகளுக்கான YAP என்ற பிளாட்ஃபார்மை உருவாக்கி யுள்ளது இந்த நிறுவனத்தின் வெற்றிக்கு அடிப்படை. இந்த நிறுவனத்தின் வெற்றிக் கதையை நம்முடன் பகிர்ந்துகொண்டனர்  இந்த நிறுவனத்தின் நிறுவனர்களான பிரபு மற்றும் முத்துக்குமார். 
  இன்ஸ்பிரேஷன்

“நம் நாட்டின் பெருமளவிலான நிதிச் சேவைகள் அனைத்துமே வங்கிகளின் மூலம் நடப்பவைதான். வாடிக்கையாளர்களின் பணத்தைக் கையாளும் பொறுப்பு முழுவதுமே வங்கிகளைச் சார்ந்ததுதான். தொழில்நுட்பம் வளர்வதற்குமுன்,  பணம் அனுப்புவதற்கும்கூட வங்கிகளின் சேவையைத்தான் பயன்படுத்த வேண்டியிருந்தது. இதனை மாற்றுவதற்காக 2008-ல் ரிசர்வ் வங்கி ‘Prepaid Instrument       Providers (PPI)’ என்ற முறையைக் கொண்டுவந்தது. அதாவது, பணத்தை ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்கிற்கு அனுப்புவதற்கான ஒரு வழிமுறை. பேடிஎம் நிறுவனம்கூட முதலில் இந்த வழிமுறையைப் பயன்படுத்தித்தான் சேவையை வழங்கிவந்தது. பிறகு பணம் அனுப்பு வதுடன், இன்னும் சில வசதிகளையும் அறிமுகம் செய்ய நினைத்து ரிசர்வ் வங்கி, மைக்ரோ ஃபைனான்ஸ், வங்கிகள் தவிர்த்த நிதி நிறுவனங்கள் போன்றவற்றையும் அறிமுகம் செய்தது. இதன்மூலம் வங்கிகள் அல்லாத பிற நிறுவனங்களும் சிறிய அளவில் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - பணப் பரிவர்த்தனையைச் சுலபமாக்கும் புதிய தொழில்நுட்பம்!

இதுவரைக்கும் வங்கிகளுக்கும், மற்ற நிறுவனங்களுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. பிறகு, ரிசர்வ் வங்கியானது புதிய விதிமுறை ஒன்றைக் கொண்டுவந்தது. அதன்படி, வங்கிசாரா நிதி நிறுவனங்களும் (NBFC), மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களும் வங்கிகளோடு கட்டாயம் இணையவேண்டும் என்றது. சில நிறுவனங்கள் வங்கிகளோடு இணைந்தன. சில நிறுவனங்கள் பேமென்ட் வங்கிகளைத் துவங்கின. இன்று நாம் பயன்படுத்தும் இ-வாலட் சேவைகள் எல்லாம் இந்த நிறுவனங் களால் நடத்தப்பட்டவைதான். அதேபோல, வங்கிகளும் இ-வாலட் சேவைகளைச் சொந்தமாகத் தொடங்க விரும்பின. ஆனால், நாட்டின் முன்னணி வங்கிகள் சிலவற்றைத் தவிர்த்து மற்ற எந்த வங்கிகளிடமும் அதற்கான தொழில்நுட்பங்கள் அப்போது இல்லை. இதனால் புதிய தொழில்நுட்பங்களை அமல்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்தன. அவர்களுக்கு எப்படி உதவலாம் என்று யோசித்தோம். அந்தச் சிந்தனையில் இருந்து தொடங்கியதுதான் M2P நிறுவனத்தின் பயணம்.

   அடித்தளம்

தொழில்நுட்பம் மற்றும் நிதிச் சேவைகளை வழங்கிவரும் உலகின் முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் எங்களுக்கு ஏற்கெனவே இருந்ததால், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணமுடியும் என்று நினைத்தோம். நாங்கள் இருவரும், எங்கள் நண்பர் மதுசூதனனுடன் இணைந்து 2014-ல் இந்த நிறுவனத்தைத் தொடங்கினோம். வணிக நிறுவனங்கள், மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள், வங்கிகள் என எல்லோருக்குமான தொழில்நுட்பக் கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் எங்கள் பணி. அது இ-வாலட்டாக இருக்கலாம்; யூ.பி.ஐ ஆப்பாக இருக்கலாம்; டெபிட் கார்டாக இருக்கலாம். எல்லா வழிமுறைகளுக்கும் ஏற்ற தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்கி, அதனை அந்தந்த நிறுவனங்களுக்குத் தந்து விடுவோம். அதனை அந்த நிறுவனம் தனது தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளும்.

சுருக்கமாகச் சொன்னால், வங்கிகள் எங்களின் API-யைப் பயன்படுத்தித் தங்களுக்குத் தேவையான ஆப், இணைய தளம் போன்றவற்றை வடிவமைத்துக் கொள்ள முடியும். ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்குப் பணம் செல்கிறது என்றால் இடையே பாலமாகச் செயல்படுவதுதான் எங்களின் வேலை. இதற்கான தொழில் நுட்பங்களை முதலாண்டிலேயே உருவாக்கி, அதற்கு எல்லாவிதமான பாதுகாப்புத் தரச்சான்றிதழ்களையும் பெற்றோம். வங்கிகள் நம்மிடம் நம்பி வரவேண்டுமென்றால், நம் நிறுவனம் பாதுகாப்பான நிறுவனம் என்பதை உறுதிசெய்ய வேண்டும். எனவே, முதல் ஆண்டிலேயே அதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டோம்.

  சவால்கள்


நாங்கள் முதன்முதலில் எங்கள் சேவைகளை B2C வாடிக்கையாளர் களுக்கேற்பவே வடிவமைத்தோம். ஆனால், அது அவ்வளவு சுலபமல்ல என்பது சில நாள்களிலேயே தெரிய வந்தது. ஆரம்பக்காலத்தில் அவர்களுக் காக வடிவமைத்த திட்டங்கள் அனைத்தும் பெரியளவில் வெற்றி பெறவில்லை. பின்னர் எங்கள் முடிவை மாற்றிக்கொண்டு B2B வாடிக்கையாளர் களை நோக்கிக் கவனத்தைத் திருப்பி னோம். முன்னணி வங்கிகளைத் தவிர்த்து, பிற எல்லா வங்கிகளுக்கும் எங்கள் சேவைக்கான தேவை இருந்தது. அவர்களையெல்லாம் எங்களின் வாடிக்கையாளர்களாக மாற்றினோம். வங்கிகள், நிதி நிறுவனங்கள்  மட்டுமின்றி, எல்லா நிறுவனங்களிலும் எங்கள் சேவைக்கான தேவை எங்கெல்லாம் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அவர்களையும் வாடிக்கை யாளர்களாக மாற்றினோம். இதன்மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே சென்றது.

இன்றைக்கு நிதிச் சேவைகள் அளிக்கும் அனைத்து நிறுவனங்களுமே விரும்பும் ஒரு அம்சம் மிக வேகமான பணப் பரிவர்த்தனை என்பதுதான். ஆனால், சின்னச் சின்ன நிறுவனங்கள் அதிகம் செலவு செய்து சொந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்க முடியாத தால், அவர்களால் அந்த இலக்கை அடைய முடியாது. அவர்களைப் போன்றவர்களுக்கு உதவுவதுதான் எங்கள் வேலை.

   வெற்றி


இன்று நகைக்கடன் வழங்கும் நிறுவனங்கள், மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள், உடனடிக் கடன் வழங்கும் நிறுவனங்கள், போன்றவற்றில் 90% பேர் எங்களின் YAP பிளாட்ஃபார்மை பயன்படுத்துகிறார்கள். UPI, QR கோடு சேவைகள் போன்றவற்றுக்காகச் சுமார் 15 வங்கிகள் எங்களின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. வங்கிகளின் நேரடி செயல்பாடுகள் தவிர்த்து, பிற அனைத்துச் சேவைகளுக்கும் எங்களால் தொழில்நுட்பத்தை உருவாக்கித்தர முடியும். இன்று யெஸ் பேங்க், யூனியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, டி.சி.பி வங்கி, ஈக்விடாஸ் நிறுவனம், முத்தூட் நிறுவனம், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் உள்பட நாட்டின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் எங்களின் API-ஐ பயன்படுத்துகின்றனர். இதுவரைக்கும் 80-க்கும் மேற்பட்ட பிரச்னைகளுக்குத் தீர்வுகள் கண்டிருக்கிறோம். 50 நிறுவனங்களுக்குத் தொழில்நுட்ப உதவிகளைச் செய்திருக்கிறோம்’’ என்றபடி விடை தந்தனர்.

இருந்த இடத்தில் இருந்தபடி பணப்பரிமாற்றம் செய்வது கட்டாயமாகிவிட்ட இந்தக் காலத்தில், இவர்களின் தொழில்நுட்பம் நிச்சயம் வெற்றி தரும்!

-ஞா.சுதாகர்

 படங்கள்: தே.அசோக்குமார்

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - பணப் பரிவர்த்தனையைச் சுலபமாக்கும் புதிய தொழில்நுட்பம்!

புஷ் பேமென்ட்களின் வெற்றி!

“சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பணமில்லாப் பரிவர்த்தனைகள் அனைத்துமே கார்டுகள் மூலம் மட்டும்தான் நடந்தன. இந்த முறைக்கு ‘Pull Payments’ என்று பெயர். அதாவது, நம் கார்டு ஒரு PoS இயந்திரத்தில் ஸ்வைப் செய்யப்படும். பின்னர் இயந்திரம் அந்த கார்டின் வங்கிக்கு அந்தத் தகவல்களை அனுப்பும். பின்னர் அந்த வங்கி, அந்த இயந்திரம் தொகையை அனுப்புவதற்கு அனுமதியளிக்கும். பிறகு பணம் அந்த இயந்திரம் இணைந்துள்ள வங்கிக்குச் செல்லும். இந்த முறையில் எவ்வளவு பணம் வேண்டும் என்பதைப் பணம் பெறுபவர் முடிவு செய்வார். இதற்காக நம்முடைய கார்டுகளை அவரிடம் தரவேண்டும்.

இதில் நிறைய பாதுகாப்புக் குறைபாடுகள் இருக்கின்றன. நமக்கே தெரியாமல் யாரேனும் ஸ்கிம்மிங் செய்யலாம்; நம் பாஸ்வேர்டுகளை தெரிந்துகொண்டு தவறாகப் பயன்படுத்த லாம்; இப்படிச் செய்வதற்கு மாறாக வந்த முறைதான் புஷ் பேமென்ட்ஸ். இதற்குச் சரியான உதாரணம் QR கோடு மூலம் பணம் செலுத்துவது. இந்த முறை மூலம் பணம் செலுத்துபவர் தான் பாஸ்வேர்டு உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்கிறார். எனவே, பிறருக்கு நம் தகவல்கள் எதுவுமே தெரியாது. பாதுகாப்பு அதிகம்; ஒரே மொபைலில் நிறைய அக்கவுன்ட்களை பராமரிக்க முடியும் என்பதால் சௌகர்யமும் அதிகம். தற்போது பயன்பாட்டில் இருக்கும் IMPS, UPI, பாரத் QR போன்ற புஷ் பேமென்டுகள் அனைத்தும் வெற்றி பெற இதுதான் காரணம். இதில்தான் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்திவருகிறோம்” என்கிறார் முத்துக்குமார்.

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - பணப் பரிவர்த்தனையைச் சுலபமாக்கும் புதிய தொழில்நுட்பம்!

பாதுகாப்புக் குறைபாடுகள் இல்லாத பணப் பரிவர்த்தனை!

‘‘தொழில்நுட்பம் அதிகம் வளர்ந்துவிட்ட இந்தச் சூழ்நிலை யிலும்கூட இன்னும் நிறைய இடங்களில் பணப் பரிவர்த்தனை கள் நடைபெறுவதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. அதிக நேரம் எடுத்துக்கொள்வது, பரிவர்த்தனைக் கட்டணம் அதிகமாக இருப்பது, பாதுகாப்புக் குறைபாடுகள் இப்படி நிறைய உள்ளன. அவற்றையெல்லாம் களைந்து பணப் பரிவர்த்தனை வசதிகளை இன்னும் மேம்படுத்த வேண்டும்; தொழில்நுட்பத்தின் உதவியோடு அதனைச் சாதிக்க வேண்டும். அதுதான் எங்களின் நோக்கம்’’ என்கிறார் பிரபு.