ஃபண்ட் டேட்டா! - 19 - ஐ.டி.எஃப்.சி ஸ்டெர்லிங் ஈக்விட்டி ஃபண்ட்... - அதிக ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்!

சொக்கலிங்கம் பழனியப்பன் டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)

ஐ.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பல பங்கு சார்ந்த திட்டங்கள் சமீப காலமாக நன்கு செயல்பட்டு வருகின்றன. இதற்கு முந்தைய சி.ஐ.ஓ கென்னத் ஆண்ட்ரேட் இருந்தபோதுகூட, ஐ.டி.எஃப்.சி பிரீமியர் ஈக்விட்டி போன்ற ஒருசில திட்டங்கள்தான் நன்றாகச் செயல்பட்டு வந்தன. அவர் விலகியபின்பு, ஃபண்ட் நிர்வாகத்தில் சற்றுத் தொய்வு ஏற்பட்டது. யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்டின் முன்னாள் சி.ஐ.ஓ-வான அனூப் பாஸ்கர் 2016-ல் இந்த ஃபண்ட் நிறுவனத்தின் சி.ஐ.ஓ-வாகப் பொறுப்பேற்றார்.

அதிலிருந்து ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக, அந்த நிறுவனத்தின் பல ஃபண்டுகளும், ஐ.டி.எஃப்.சி ஸ்டெர்லிங் ஈக்விட்டி உட்பட, நன்றாகச் செயல்பட்டு வருகின்றன.
ஐ.டி.எஃப்.சி ஸ்டெர்லிங் ஈக்விட்டி ஃபண்டை சற்று விரிவாக நாம் இப்போது பார்ப்போம். இது ஒரு ஸ்மால் அண்டு மிட்கேப் ஃபண்டாகும். இந்த ஃபண்ட் தற்போது ரூ.2,600 கோடிக்கும் மேலான சொத்து களை நிர்வகித்து வருகிறது. தனது போர்ட் ஃபோலியோவில் கிட்டத்தட்ட 75 சதவிகிதத்தை ஸ்மால் அண்டு மிட்கேப் ஃபண்டு களிலும், எஞ்சியதை லார்ஜ்கேப் பங்குகளிலும் வைத்துள்ளது. இதனுடைய போர்ட்ஃபோலியோவில் கிட்டத்தட்ட 80 பங்குகளுக்கும் மேலாக உள்ளது. இது ஒரு ஸ்மால் அண்டு மிட்கேப் ஃபண்ட் என்பதால், போர்ட் ஃபோலியோ ரிஸ்க்கைக் குறைக்க அதிக எண்ணிக்கையில் பங்குகளை வைத்துள்ளது. எந்தவொரு பங்கும் போர்ட் ஃபோலியோவில் 5 சதவிகிதத்துக்கு அதிகமாக இல்லை. இதனால் கான்சென்ட் ரேஷன் ரிஸ்க் இந்த ஃபண்டிற்குக் கிடையாது.

ஃப்யூச்சர் ரீடெய்ல், கே.இ.சி இன்டர்நேஷனல், ராம்கோ சிமென்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற பங்கு கள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. இதன் பீட்டா 1.02 என்ற அளவில் சந்தையைவிட சற்று அதிகமாகவும், ஆல்ஃபா 6.51 என்ற அளவில் நன்றாகவும் உள்ளது. ஃபைனான்ஸ், சர்வீசஸ், இன்ஜினீயரிங், கன்ஸ்ட்ரக்ஷன் போன்றவை முறையே இதன் டாப் துறை சார்ந்த ஹோல்டிங்ஸாக உள்ளன.
நிலம், தொழிலாளர்கள், முதலீடு மற்றும் டெக்னாலஜி ஆகிய நான்கு வளங்களும் தொழில் செய்வதற்கு அவசியம். இதில் முதலீட்டைத் தவிர, மீதி மூன்றையும், சிறிது முன்பின் இருந்தாலும் சமாளித்துவிட லாம். ஆனால், முதலீட்டை (பங்கு மூலதனம்) மிகச் சரியாக நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆகவே தான் ஐ.டி.எஃப்.சி ஸ்டெர்லிங் ஈக்விட்டி ஃபண்ட் முதலீட்டைத் திறமையாகப் பயன்படுத்தக்கூடிய நிறுவனப் பங்குகளைத் தேடி முதலீடு செய்கிறது. அதுபோல் எந்த நிறுவனங் களுக்கு முதலீட்டைச் சேகரிப்பது சிரமமில்லாமல் இருக்கிறதோ, அந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்கிறது. உதாரணத்திற்கு, யெஸ் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ்.
மேலும், தான் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்குக் கடன் சுமை இல்லாமல் அல்லது அவ்வாறு இருந்தால் மிகவும் குறைவாக இருக்குமாறு பார்த்துக்கொள்கிறது. அதுதவிர, ஃப்ரீ கேஷ் ஃப்ளோ அதிகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது. இதன் போர்ட்ஃபோலி யோவில் 58% நிறுவனப் பங்குகள் கடன் சுமை இல்லாமலோ அல்லது நல்ல கேஷ் ஃப்ளோ ஜெனரேட் செய்யக்கூடிய நிறுவனங்களாகவோ உள்ளன.

மேற்கண்ட தொழில்களுக்குத் தேவையான நான்கு முக்கிய வளங்களில், முதலீட்டிற்கு அடுத்த படியாக டெக்னாலஜி இடம் பெறுகிறது. ஆகவே, டெக்னாலஜி அதிகமாகத் தேவைப்படக்கூடிய ஐ.டி, பார்மா போன்ற நிறுவனப் பங்குகளில் 22% முதலீட்டை வைத்துள்ளது.
அதைப்போல், நிறுவனப் பங்குகளைத் தேர்வு செய்யும்போது அந்த நிறுவனங்கள் அவை செய்யும் தொழில்களில் முன்னணியில் அல்லது முன்னணியில் இருக்கும் நிறுவனத்துக்கு சவால்விடும் நிறுவனங்களாக இருக்குமாறு பார்த்துக்கொள்கிறது. இதன் போர்ட் ஃபோலியோவில் 53% நிறுவனப் பங்குகள் லீடராகவும், 22% நிறுவனப் பங்குகள் லீடரைச் சவால்விடும் நிறுவனப் பங்குகளாகவும் உள்ளது.
இந்த ஃபண்ட் இடைப்பட்ட காலங்களில் சற்றுத் தொய்வான செயல்பாட்டுடன் இருந்துவந்தது, தற்போது சரியாகி, தற்போது நன்றாகச் செயல்பட்டு வருகிறது. ஆரம்பித்த போது (மார்ச் 07, 2008) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், தற்போது (ஏப்ரல் 13, 2018) ரூ.5.70 லட்சமாக உள்ளது. இது சி.ஏ.ஜி.ஆர் அடிப்படையில் 18.79% வருமானம் ஆகும்.

இந்த ஃபண்டின் மேனேஜர்கள்அனூப் பாஸ்கர் மற்றும் டெய்லின் ஜெரார்ட் பால் பிண்டோ ஆவார்கள். பல மிட் அண்டு ஸ்மால்கேப் ஃபண்டுகள் தற்போது மொத்த முதலீட்டை முதலீட்டாளர் களிடமிருந்து பெறுவதைத் தடை செய்துள்ளன. ஆனால், இந்த ஃபண்ட் இன்றளவிலும் மொத்த முதலீட்டைப் பெற்றுக்கொள்கிறது.
யாருக்கு உகந்தது?
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுககளில் அனுபவமுள்ள வர்கள், அதிக வருமானத்தைப் பெறுவதற்காக அதிக ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள், இளம் வயதினர் அல்லது பணம் அதிக அளவு உபரியாக உள்ளவர்கள், நீண்ட காலத்திற்கு முதலீட்டுப் பணம் தேவைப்படாத வர்கள், செல்வத்தை உருவாக்க/ வளர்க்க விரும்புபவர்கள்.
யார் முதலீடு செய்யக்கூடாது?
குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், உறுதியான/ நிலையான வருமானத்தை விரும்பு பவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள்.