மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - முருங்கை மதிப்புக் கூட்டலில் முத்தான லாபம்! - 17

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! ( துரை.நாகராஜன் )

மதிப்புக் கூட்டல் தொடர் - 17

முருங்கை இயற்கையாகவே மருத்துவக் குணம் நிறைந்தது என்பதால், இதனைப் பல வழிகளில் மதிப்புக் கூட்டி நல்ல லாபம் பார்க்கலாம். முருங்கையை மதிப்புக் கூட்டி விற்பது தமிழ்நாட்டில் பரவலாகச் செய்யப்பட்டு வந்தாலும், மிகச் சிலரே முருங்கைக்கான சந்தை வாய்ப்பைச் சரியான முறையில் பின்பற்றி மதிப்புக் கூட்டல் செய்து லாபம் பார்த்து வருகிறார்கள். அவர்களில் ஒருவரான கோவை மாவட்டம், பேரூரை அடுத்த பச்சபாளையத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஈஸ்வர் அய்யப்பனைச் சந்தித்துப் பேசினோம். முருங்கை மதிப்புக்கூட்டல் தொழில்நுட்பங்கள் பற்றியும், அதற்கான சந்தை வாய்ப்புகள் பற்றியும் விரிவாக விளக்குகிறார், ஈஸ்வர் அய்யப்பன்.

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - முருங்கை மதிப்புக் கூட்டலில் முத்தான லாபம்! - 17

   முருங்கையில் ஏன் மதிப்புக் கூட்டல்?

மதிப்புக் கூட்டலில் முக்கிய மான இடம் முருங்கைக்கு உண்டு. தமிழ்நாட்டு முருங்கைக்கு அதிக மருத்துவக் குணம் உண்டு. தமிழ் நாட்டில் முருங்கை நேரடியான உணவாகவே எடுத்துக்கொள்ளப் படுகிறது. அதனால் முருங்கை மதிப்புக் கூட்டல் என்பது நிச்சய மாக வெளிநாட்டு மக்களுக் கானதுதான்.

நம் நாட்டு முருங்கைக்கு உள்நாட்டுச் சந்தை வாய்ப்பினை விட வெளிநாட்டுச் சந்தை வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. முருங்கையைப் பொடியாக்கி விற்பனை செய்வது வரைக்கும் தான் நம்மில் பெரும்பாலானா மக்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், முருங்கைக் காயில் இருக்கும் விதைகள் வரை தனித்தனியாக விற்பனை செய்யும் அளவிற்கு முருங்கையின் சந்தை சர்வதேச அளவில் பெரியது என்பது பலருக்கும் தெரியாது.

  முருங்கை மதிப்புக் கூட்டல் பொருள்கள்

முருங்கை மதிப்புக் கூட்டலின் மூலம் முருங்கைப் பட்டை, இலை, விதை என அனைத்தையும் விற்பனை செய்ய முடியும். முருங்கையில் முருங்கைப் பொடி தொடங்கி முருங்கை டீ மிக்ஸ், முருங்கை ஸ்ட்ராபெர்ரி மிக்ஸ், முருங்கை பெப்பர் மிண்ட், முருங்கைப் பட்டை எண்ணெய், விதை எண்ணெய், இலை எண்ணெய், முருங்கைப் பருப்பு, முருங்கைப் புண்ணாக்கு, முருங்கை ஷாம்பூ, முருங்கை சோப்பு, முருங்கை முகப் பொலிவு பேஸ்ட், முருங்கை சூப் மிக்ஸ் உள்ளிட்ட பல பொருள்களை மதிப்புக் கூட்டித் தயாரிக்கலாம்.

  மூலப்பொருள்கள் கிடைக்கும் இடங்கள்

இயற்கை விவசாயத்தின் மூலம் கிடைக்கும் மூலப்பொருள்களான முருங்கைப் பொருள்களைக் கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நான் வாங்கிக்கொள்கிறேன். தமிழ்நாடு முழுவதும் முருங்கைப் பொருள்கள் பரவலாகக் கிடைப்பதால், அதனை அந்தந்தப் பகுதிகளில் வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

   முதலீடு

10 அடிநீளம், 15 அடி அகலம் கொண்ட ஓர் இடத்தில் முருங்கை மதிப்புக் கூட்டல் தொழில் செய்ய குறைந்தபட்சம் ரூ.4 லட்சம்  செலவாகும். 

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - முருங்கை மதிப்புக் கூட்டலில் முத்தான லாபம்! - 17

  தயாரிப்பு முறையில் கவனிக்க வேண்டியவை

முருங்கையை இலை, பட்டை, விதை எனக் காய வைத்துத் தயார் செய்யும்போது, தரையில் காய வைக்கக்கூடாது. தரையில் காய வைப்பதால் மண், தூசி கலந்து சுத்தம் குறைவாக இருக்கும். முருங்கை மதிப்புக் கூட்டல் பெரும்பாலும் விற்பனையாவது வெளிநாடுகளில் என்பதால், சுத்தம் மிக முக்கியம். பொருள் சுத்தமில்லாமல் இருந்தால், உள்ளூர் சந்தைகள் தாண்டி, வெளிநாடுகளில் மதிக்க மாட்டார்கள். அதனால் முருங்கை இலையை சோலார் டிரையரில் காயவைக்கும்போது, மண், தூசி கலக்காமல் தேவையான வெப்பநிலையில் முருங்கை இலையைக் காயவைத்துப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதேபோல, முருங்கை விதையையும் காயவைத்து மேற்புறத் தோல்பகுதியை பாலீஷ் செய்து விற்பனை செய்தால், நல்ல லாபம் கிடைக்கும். அதுதான் சந்தையில் விரும்பியும் வாங்கப்படுகிறது. மதிப்புக் கூட்டல் பொருள்களுக்கு முக்கியமானது, தரமும், அதற்குத் துணை யாக நிற்கும் இன்றைய நவீனத் தொழில்நுட்பம்தான்.

   சந்தை வாய்ப்பு

தமிழ்நாடு தவிர, இந்தியாவின் பல மாநிலங்களில் முருங்கைப் பொருள்கள் விற்பனையாகிறது. வெளிநாடுகளில் மருத்துவப் பொருளாக மதிப்புக் கூட்டல் முருங்கைப் பொருள்கள் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட பெரும் பாலான நாடுகளில் தினசரி உணவிலும் முருங்கையை உபயோகித்து வருகின்றனர். முருங்கை விதைகளை ஜப்பானில் பெரும்பாலும் அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். தரமான முருங்கைப் பொருள்களின் இறக்குமதிக் காக இன்று பல நாடுகள் காத்துக் கிடக்கின்றன. ஆனால், அவர்களுக்குத் தேவை இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருள்கள்தான். இயற்கையை விரும்பும் அவர்களுக்கு ரசாயன விவசாயத்தில் தயாரான பொருள்களைக் கொடுத்தால், நிச்சயம் ஒதுக்கி விடுவார்கள். அதற்குப் பின்னர் சந்தை வாய்ப்பும் நம் கையை விட்டுப் போய்விடும். 

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - முருங்கை மதிப்புக் கூட்டலில் முத்தான லாபம்! - 17

   லாபம்

இந்த மதிப்புக் கூட்டலைப் பொறுத்தவரை, ஆண்டுக்கு ரூ.36 லட்சம்  வருமானமாக எனக்குக் கிடைக்கிறது. மூலப்பொருள்களின் செலவு ரூ.15 லட்சம். ஆட்கள் சம்பளம் ரூ.6 லட்சம்,  போக்குவரத்துச் செலவு ரூ.7 லட்சம், பேக்கிங் செலவு, மின்சாரம்  ரூ.2 லட்சம் எனச் செலவுகள் ரூ.30 லட்சத்தைக் கழித்ததுபோக, ரூ.6 லட்சம் ரூபாய் லாபமாகக் கிடைக்கிறது. அவரவர் தொழில் முதலீட்டுக்கு ஏற்பவும், திறனுக்கு ஏற்பவும் லாபம் கிடைக்கக்கூடும்.

   தரம்தான் முக்கியம்

    நல்ல உணவுக்காக எப்போதும் வெளிநாட்டு மக்கள் பணம் செலவழிக்கத் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால், நம் ஊர் ஆட்களில் ஒரு சிலர் ஏற்றுமதி என்ற பெயரில் தரமில்லாத பொருள்களை விற்பனை செய்துவருகின்றனர். அதனால்தான் முன்பின் அறிமுகமில்லாத ஆட்களிடம் வெளிநாட்டினர் பொருள்களை வாங்கத் தயங்குகின்றனர்.

இந்தியாவில் தயாராகும் மதிப்புக் கூட்டல் பொருள்களில் தரம் என்று வரும்போது, சில குறைகள் இருப்பதை மறுக்க முடியாது. தரத்தில் மட்டும் எந்தவிதச் சமரசத்தையும் செய்துகொள்ளாமல் பொருள்களைத் தயாரித்தோம் எனில், மதிப்புக் கூட்டல் தொழிலில் நம்மை விஞ்ச உலகத்தில் ஆட்களே கிடையாது என்று அடித்துச்சொல்வேன்’’ என்கிறார் ஈஸ்வர் அய்யப்பன்.

(மதிப்புக் கூடும்)

-துரை. நாகராஜன்
படங்கள்: தி.விஜய்

மதிப்புக் கூட்டல் பயிற்சி கிடைக்கும் இடங்கள்!

மதிப்புக் கூட்டுப் பொருள்களைச் செய்ய விரும்பும் தொழில்முனைவருக்கு முறையான பயிற்சியும், சந்தை வாய்ப்புகள் பற்றிய தேடலும் மிக அவசியம். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மைசூர் மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், தஞ்சாவூர் ஐ.ஐ.எஃப்.பி.டி மற்றும் தமிழ்நாட்டிலுள்ள கே.வி.கே பண்ணைகள் எனப் பல இடங்களில் மதிப்புக் கூட்டலுக்கான பயிற்சிகள் முறையாக வழங்கப்படுகின்றன. பின்னர் சந்தை வாய்ப்புகளை முழுமையாக ஏற்படுத்திக்கொண்டு தொழிலில் இறங்கலாம்.