
ப.முகைதீன் சேக்தாவூது
நிறைவடைந்த 2017-2018-ம் நிதியாண்டுக்கு வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்குரிய படிவங்களில் சிலபல மாற்றங்களைச் செய்து புதிய படிவங்களை வெளியிட்டுள்ளது வருமான வரித் துறை. அதிலும் குறிப்பாக, மாதச் சம்பளம் வாங்குகிறவர்கள் வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் ஐ.டி.ஆர்-1 (ITR-1 SAHAJ) படிவத்தில் முன்பைவிட கூடுதல் விவரங்களை வரிதாரர் நிரப்பவேண்டியது அவசியமாக்கப் பட்டுள்ளது. அதன்படி, சம்பளம், படிகள், நிறுவனம் செய்துதரும் வாழ்க்கை வசதிகள் (Perquisites) போன்றவற்றை தனித்தனியே சமர்ப்பிப்பது அவசியம்.
இதில், மாதச் சம்பளம் வாங்குபவர்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது, வரி விலக்கு பெறும் படிகள் (Tax exempted allowances) மற்றும் வீட்டுச் சொத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றில்தான். ஏனெனில், இந்த விவரங்கள் புதிய வரிக் கணக்குத் தாக்கல் படிவத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. எனவே, வரிக் கணக்குத் தாக்கல் தேதிக்குமுன் இவை பற்றிய தெளிவினை நாம் பெறுவது அவசியம்.

வீட்டுக் கடன் மீதான வட்டி
* வருமான வரிச் சலுகைக்கான அதிகபட்ச வட்டி, நிதியாண்டு ஒன்றுக்கு ரூ.2 லட்சம். இது, வீடு வாங்க, வீடு கட்ட மற்றும் மனை வாங்கி வீடு கட்டத்தான்.
* வீடு பழுதுபார்த்தல், விரிவாக்கம் செய்தல், மறுகட்டுமானம் (Reconstruction) போன்றவைமீதான கடனுக்குத் தகுதி பெறும் வட்டி ரூ.30,000 மட்டுமே.
* பிரிவு 24(b)-ன்படி, கடன் பெற்ற ஐந்து ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் வீட்டுக்கே வட்டிச் சலுகை பெற முடியும்.
* வீடு கட்டி முடித்தாகிவிட்டது என்பதற்குச் (completion certificate) சான்று ஒன்றைச் சம்பளம் தரும் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்தச் சான்றானது வீட்டைக் கட்டித் தந்தவராகவோ அல்லது நிறுவனமாகவோ இருக்கலாம். ஊழியர், தாமே சான்று செய்யவும் கூடும்.
* வட்டியானது எந்த நிறுவனத்துக்குத் தரவேண்டுமோ, அந்த நிறுவனத்தின் சான்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால், அரசு தரும் கடனைப் பெற்ற அரசு ஊழியருக்கு, இது பொருந்தாது. கடன் வாங்கி வீடு கட்டி, கட்டிய வீட்டிலேயே குடியிருக்கும் ஊழியருக்கு மட்டுமே இவை பொருந்தும்.
வாடகைக்கு விடப்பட்ட சொந்த வீடு

கடன் வாங்கி வீட்டைக் கட்டிய ஊழியர் ஒருவர், கட்டிய வீட்டில் வசிக்காமல், வேலை அல்லது வேறு காரணங்களில் வேறொரு ஊரில் வசிக்கலாம். அப்போது வீட்டை வாடகைக்கும் விடலாம். அதற்கான கணக்கீடு என்ன வெனில், அ) வருடாந்திர வாடகை, ஆ) உள்ளாட்சி வரி, இ) நிகர வாடகை, ஈ) 30% நிலைக்கழிவு, உ) கடனுக்கான வட்டி, வீடு மூலம் வருமானம். இதில் கவனிக்க வேண்டியது, வீட்டுக்குக் கடன் வாங்கி வீட்டில் வசித்தால் அல்லது வீட்டை வாடகைக்கு விட்டிருந் தால், நிதியாண்டில் அதிகபட்ச வட்டிச் சலுகை ரூ.2 லட்சம் கிடைக்கும்.
வாடகைக்கு விடப்படாத சொந்த வீடு
வரியைச் செலுத்த வேண்டிய ஒருவருக்குச் சொந்த வீடு இருக்கிறது. ஆனால், அவர் வேலை காரணமாக வேறொரு ஊரில் வசிக்கிறார். வீடு வாடகைக்கு விடப்படாமல் ஆண்டு முழுவதும் பூட்டியே கிடக்கிறது. அந்த வீட்டின் மூலம் வருமானம் ஏதுமில்லை என்றால், அந்த வீடு அதன் சொந்தக்காரர் வசம் உள்ளதாகவே கருதப்படும். திரும்பக் கட்டும் வட்டியில் ரூ. 2 லட்சத்துக்கு வரிவிலக்குப் பெறலாம். பணி செய்யும் ஊரில், வாடகைக்குக் குடியிருப்பதால், வீட்டு வாடகையும் பெறலாம். அவ்வாறு பெற்ற வீட்டு வாடகைக்குத் தகுதியான வரிக் கழிவும் கோரலாம்.
ஆண்டின் சில மாதம் வாடகை
கடன் வாங்கிக் கட்டிய வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு வேறொரு ஊரில் வசித்துவந்த ஒருவர், ஆண்டு மத்தியில் ஊருக்கு வந்து வாடகைதாரரைக் காலி செய்துவிட்டு, தாமே குடியிருக்க நேரிடலாம். அந்த மாதிரியான சமயத்தில், அதுவரைக்கும் பெற்ற வாடகையை வருமானமாகக் காட்ட வேண்டும். அதேநேரம், திரும்பக் கட்டும் வட்டியில் நிதியாண்டில் மொத்தம் ரூ.2 லட்சம் வரை வரிச் சலுகை பெறலாம்.
உதாரணமாக, ஒருவர் கடன் பெற்றுக் கட்டிய வீட்டை நான்கு மாதம் மட்டுமே வாடகைக்கு விட்டுள்ளார். பின்னர், குடியிருப்பவரை வீட்டைக் காலி செய்யச் செய்துவிட்டு, தனது வீட்டில் குடியேறிவிடுகிறார். வாடகையாக நான்கு மாதத்தில் அவர் பெற்றுக் கொண்ட வாடகை ரூ.40,000. இந்த 40,000 ரூபாயை வருமானமாகக் காட்ட வேண்டும். திரும்பக் கட்டும் வட்டியில் வழக்கம்போல் ரூ.2 லட்சம் வரை வரிச் சலுகை பெறலாம்.
ஒன்றுக்குமேல் சொந்த வீடு
ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சொந்த வீடுகள் இருக்குமானால், அவர் தேர்வு செய்யும் ஒரு வீடு மட்டுமே அவர் குடியிருக்கும் வீடாகக் கருதப்படும். மற்ற வீடுகள் வாடகைக்கு விடப்பட்டதாகவே கருதப்படும். கணக்கிடப்படும் அந்த வாடகை, வீட்டுச் சொத்து மூலம் பெற்ற வருமானமாகக் கருதப்பட்டு, வரி விதிப்புக்கு உட்படும்.
ஒரே வீடானது, ஒன்றுக்கு மேற்பட்ட தனித்தனிப் பகுதியாக இருக்குமானால், வீட்டுச் சொந்தக்காரர் குடியிருக்கும் பகுதிபோக மீதமுள்ள பகுதிக்கான வாடகை, வீட்டுச் சொத்தின் மூலமாகக் கிடைக்கும் வருமானமாகவே கணக்கிடப்படும்.
துணைவர் (கணவன்/மனைவி) அல்லது மைனர் பிள்ளைக்கு வீட்டை மாற்றம் செய்து, அந்த வீட்டின் மூலம் (மாற்றம் பெற்றுள்ள கணவர்/ மனைவி) பெறும் வாடகை, வீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகும். வாடகை பெறுபவர் வீட்டு உரிமையாளரல்ல. எனினும், பெற்றுள்ள வாடகைக்கு வீட்டுச் சொத்து வருமானத்துக்கான வருமான வரியைச் செலுத்த வேண்டும்.
அதேசமயம், வீட்டுக்கு உரிமை இல்லாத, வாடகைக்குக் குடியிருக்கும் ஒருவர், தனது வாடகை வீட்டின் ஒருபகுதியை வாடகைக்கு விட்டு உள்வாடகை பெற்றால், அந்தப் பணமும் வரிக்கு உட்படும். ஆனால், அது ‘இதர வருமானம்’ என்ற கணக்கில் வருமே தவிர, வீட்டுச் சொத்தின் மூலம் பெற்ற வருமானம் (Income from House Property) என்ற தலைப்பில் வராது.

இன்னுமொரு வட்டிச் சலுகை
2016-2017-ல் வீடு கட்டும் கடனுக்குப் பிரிவு 80EE-யின் படி ஒரு சலுகை தரப் பட்டுள்ளது. அதாவது, பிரிவு 24(b)-ன் கீழுள்ள சலுகையைத் தவிர்த்து, இந்த ரூ.50,000 வரிச் சலுகை தனி. இதற்கான நிபந்தனைகள் பின்வருமாறு:
* வீட்டுக் கடன் 2016-17-ல் வாங்கியிருக்க வேண்டும்.
* கடன் தொகை ரூ.35 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
* கட்டப்பட்ட வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு மேல் இருக்கக்கூடாது.
* கடன் பெற்றவருக்கு, கடன் வழங்கப்பட்ட நாளில் வேறு சொந்த வீடு இருக்கக்கூடாது.
தற்போதைய வரித் தாக்கல் படிவத்தில் வீட்டுச் சொத்தின் மூலம் பெறப்படும் வருமானம் மற்றும் வரிவிலக்குப் பெறாத படிகள் (Allowances), பிரிவு 16-ன் கீழ்வரும் வரிக்கழிவுகள் முக்கிய இடம்பெற்றுள்ளன.
வீட்டுச் சொத்தின் மூலம் பெறப்படும் வருமானம் பற்றிய தகவல்கள் முந்தைய பத்திகளில் விவரிக்கப்பட்டுள்ளன. மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர் போன்றோர்க்குத் தகுதியான தகவல்கள் இவை.
வீட்டு வாடகைக் கழிவு
இது இரண்டு வகையாக உள்ளது. அதாவது, சம்பளத்துடன், வீட்டு வாடகைப்படி பெறுபவர் களுக்கு அவர்கள் பெறும் வீட்டு வாடகைப்படியைத் தகுதி அடிப்படையில், மொத்தச் சம்பளத்தில் கழித்துக்கொள்வது இந்த முறை. மிகவும் கவனம் செலுத்தவேண்டிய இனம் இது என்றே சொல்ல லாம். எனவே, வீட்டு வாடகைக் கழிவு பற்றி ஒரு கணக்கீடு...
* ஊழியரின் ஓராண்டு சம்பளம் - அதாவது, அடிப்படைச் சம்பளம் + அகவிலைப்படி மட்டும் - ரூ.9 லட்சம் (உதாரணம்)
* ஆண்டுச் சம்பளத்தில் 10% (ரூ.90,000)
* மாதம் ரூ.7,000 வீதம் இவர் செலுத்திய வீட்டு வாடகை (12x7,000) = ரூ.84,000.
* ஆண்டு முழுவதும் சம்பளத்துடன் பெற்ற வீட்டு வாடகைப்படி - ரூ.51,600.
சம்பளத்துடன் தரப்படும் வீட்டு வாடகைப் படியை, சம்பள வருமானத்தில் கழித்து, வரிச் சலுகை பெறலாம். அதற்கான நிபந்தனைகள் பின்வருமாறு:
* ஆண்டு முழுவதும் பெற்ற சம்பளத்தில் 10%
* ஆண்டு முழுவதும் ஊழியர் பெற்ற வீட்டு வாடகைப்படி
* ஊழியர், தனது 10% சம்பளத்தைவிட, வாடகையாகக் கொடுத்த தொகை.
இந்த மூன்றில் எது குறைந்த தொகையோ, அந்தத் தொகையைச் சம்பள வருமானத்தில் கழித்து வரிச் சலுகை பெறலாம். அதாவது, தாம் வாங்கிய வீட்டு வாடகைப்படியை சம்பளத்தில் கழிக்கவேண்டுமானால், தாம் வாடகையாக வீட்டுச் சொந்தக்காரருக்குக் கொடுத்த வாடகைப் பணம், தனது 10% சம்பளத்தைவிட ஒரு ரூபாயாவது அதிகமாக இருக்க வேண்டும். ஆனால், மேற்கண்ட உதாரணத்தில் இவரது 10% சம்பளம் ரூ.90,000. அவர் கொடுத்த வீட்டு வாடகை ரூ.84,000. எனவே, இவர் வீட்டு வாடகைப்படிக்கு வருமான வரிச் சலுகையைப் பெறும் தகுதி இல்லை.
வீட்டு வாடகைக்கான இன்னொரு சலுகையும் உண்டு. அதாவது, இந்தச் சலுகை சம்பளத்துடன் வீட்டு வாடகைப்படியைப் பெறாதவர்களுக்கு. இதற்கான வருமான வரிப்பிரிவு 80GG, இந்தச் சலுகை மூலம் மாதம் ரூ.5,000 வீதம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.60,000 வரை வரிச் சலுகை பெறலாம். இதற்கான நிபந்தனைகள் வருமாறு:
* இந்தச் சலுகை பெற, ஊழியர் கொடுத்த வாடகை, அவரது 10% சம்பள வருமானத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.
* வேலை பார்க்கும் இடத்தில் சொந்த வீடு இருக்கக் கூடாது.
* வரிச் சலுகை ரூ.5,000 அல்லது அவரது மாதச் சம்பளத்தில் 25% - இவை இரண்டில் எது குறைவோ, அந்தத் தொகை மாதச் சலுகையாக இருக்கும். இது வருடத்துக்குக் கணக்கிடப்பட்டு வரிச் சலுகை கிடைக்கும்.
* படிவம் 10BA சமர்ப்பித்தல் வேண்டும்.
ஆக, சொந்த வீட்டில் குடியிருந்தாலும் சரி, வாடகை வீட்டில் இருந்தாலும் சரி, வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களைச் சொல்லிவிட்டோம். இதனைப் பயன்படுத்தி, வரிச் சலுகை பெறும் முயற்சிகளை இனி நீங்கள்தான் செய்ய வேண்டும். அதற்கான முயற்சியில் இன்றே இறங்குங்கள்!
குழந்தைகள் படிப்புச் செலவுக்கு வரிச் சலுகை!
வருமான வரிப் பிரிவு 10(14)-ன்படி குழந்தைகளுக்கான கல்விப்படி (Children Education allowance), குழந்தை ஒன்றுக்கு ரூ.100 வீதம், இரண்டு குழந்தைகளுக்கு, ஆண்டு ஒன்றுக்கு ரூ.2,400 கல்விப்படியில் வரி விலக்கு பெறலாம். அதேசமயம், பிள்ளைகளின் கல்விக் கட்டணத்துக்கு வரிச் சலுகை இருக்கிறது. இந்தச் சலுகை இரண்டு குழந்தைகளுக்குச் செலவு செய்யும் கல்விக் கட்டணத்துக்கு உண்டு. 80சி பிரிவின் கீழ் அதிகபட்சமாக நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சத்துக்கு வரிச் சலுகை பெறலாம். தம்பதிகள் வருமானம் ஈட்டுபவர்களாக இருந்தால், ஆளுக்கொரு பிள்ளையின் கல்விக் கட்டணத்துக்கு வரிச் சலுகை பெறுவதன் மூலம் கூடுதலாக வரியைச் சேமிக்க முடியும்.

கிரெடாய் சென்னை மிஷன் 2020... வாங்கக்கூடிய விலையில் வீடுகள்!
இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கக் கூட்டமைப்பின் (கிரெடாய்) சென்னைப் பிரிவின் புதிய தலைவராக டபிள்யூ.எஸ்.ஹபீப் பதவியேற்றுள்ளார். வாங்கக்கூடிய விலையில் வீடுகள் (Affordable Housing) என்கிற நோக்கத்தை முனைப்பாகக்கொண்ட ‘மிஷன் 2020’ என்ற தொலைநோக்குத் திட்டத்தை அவர் வெளியிட்டார்.
‘‘வாங்கக்கூடிய விலையில் வீடுகளுக்கு நல்ல தேவை இருக்கிறது. இதற்குப் போதிய நிலங்களை ஒதுக்கீடு செய்தால், சென்னையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அளவைப் பொறுத்து வாங்கக்கூடிய விலையில் வீடுகள் கட்டினால் 20%, 30% மற்றும் 50% கூடுதலாகக் கட்டடப் பரப்பு (எஃப்.எஸ்.ஐ) அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும், அதனை நிறை வேற்றமுடியாத வகையில், தற்போதைய வளர்ச்சிக் கட்டுப்பாடு தொடர்பான விதிமுறைகள் உள்ளன. அதனை மாற்றியமைக்க அரசுடன் பேசி வருகிறோம்.
பொதுவாக, ஒரு கட்டுமானத் திட்டத்தில் பொருளா தாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்காக 10% வீடுகள் ஒதுக்கப்படுகிறது. உயர்வருவாய் பிரிவினர், குறைந்த வருவாய்ப் பிரிவினர் வீடுகள் கலந்திருப்பதால், விலை குறைந்த சிறிய வீடுகளை விற்பனை செய்வது கஷ்டமான காரியமாக இருக்கிறது. அதேசமயம், வாங்கக்கூடிய விலையிலுள்ள வீடுகளுக்கு நல்ல தேவை இருக்கிறது. இதனை மட்டுமே இலக்காகக் கொண்டு புதிய திட்டங்களைக் கொண்டுவரவிருக்கிறோம்.
சென்னையைப் பொறுத்தவரை, சுமார் 300 - 450 சதுர அடி கொண்ட (ரூ.15 லட்சம் முதல் ரூ.25 லட்சம் மதிப்பில்) அடுக்குமாடிக் குடியிருப்புகள், வாங்கக்கூடிய விலைப்பிரிவில் வருகின்றன. இந்தத் திட்டங்களை அதிக புரமோட்டர்கள் நிறைவேற்றினால், அனைவருக்கும் சொந்த வீடு சாத்தியமாகும்’’ என்றார்.
- சி.சரவணன்