
அங்காடித் தெரு - 18 - சகலமும் கிடைக்கும் தஞ்சாவூர் கீழவாசல்!
கடுகு தொடங்கிக் கல்யாணத்திற்குத் தேவையான மளிகைப் பொருள்கள் வரை, வீடுகட்டுவதற்குத் தேவையான மரச்சாமான்கள் முதல் புதுவீடு கட்டி கிரஹப்பிரவேசத்தில் செய்யப்படும் கணபதி ஹோமத்திற்கான பொருள்கள் வரை, கற்களால் செய்யப்படும் சாமிச் சிலைகள் தொடங்கி மண்ணைக்கொண்டு செய்யப்படும் மண்பானை வரை, பித்தளைப் பாத்திரங்கள் முதல் இரும்புச் சாமான்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பது தஞ்சாவூரின் மிக முக்கிய அடையாளமாக விளங்கும் கீழவாசலில்தான்.
தஞ்சாவூர் நகரத்தின் மொத்த சுற்றளவே சுமார் 10 கிலோமீட்டர்தான் இருக்கும். தஞ்சாவூரின் மையப்பகுதியில் உள்ளது அரண்மனை. இந்த அரண்மனையைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தெற்கு வீதி, கீழவீதி, வடக்கு வீதி, மேல வீதி எனப் பெயரிடப்பட்டு, நான்கு வீதிகளாக மன்னர்கள் காலத்திலேயே பிரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நான்கு வீதிகளில்தான் முக்கியக் கடைத்தெருக்கள் இருந்தன. மிகப் பெரிய வர்த்தகம் நடக்கும் பகுதியாக இந்த வீதிகள் வரலாற்றில் இருந்துவந்திருக்கிறது.

இந்த நான்கு வீதிகளுக்கு நடுவில் உள்ளது மானோஜியப்பா வீதி. இதை அய்யங்கடைத் தெரு என்று சொன்னால்தான் உள்ளூர்க் காரர்கள் தொடங்கி வெளியூர்க் காரர்கள் வரை அனைவருக்கும் தெரியும். பெரியவர்கள்தான் இந்த வீதியில் அதிகம் கடைகள் நடத்தி வந்துள்ளார்கள். அவர்களை மக்கள் ‘அய்யா’ என்றே அந்தக் காலத்தில் அழைத்திருக்கிறார்கள். அதனாலேயே நாளடைவில் அய்யங்கடைத் தெரு என இந்தத் தெருவுக்குப் பெயர் வந்திருக்கிறது.
மளிகைப்பொருள்கள் மற்றும் மொத்த வியாபாரத்திற்கான கடைகள், காய்கறிகள் வாங்குவதற்கு பெரிய மார்க்கெட் என்று அழைக்கப்படும் காமராஜர் மார்க்கெட், நகைக் கடைகள், கொலுசு உள்ளிட்ட வெள்ளி பொருள்கள் வாங்குவதற்கான கடைகள், துணிக்கடைகள், ஃபர்னிச்சர் பொருள்கள் வாங்வதற்கான கடைகள் என எல்லாமே இந்த அய்யங்கடைத் தெருவில் அடங்கியிருந்தது.
திருமணத்திற்கான பொருள்கள் வாங்க இந்தக் கடைத் தெருவிற்கு வந்தால், அனைத்தையும் இங்கேயே வாங்கிக்கொண்டு திருமணம் நடக்கும் மண்டபத்திற்கு நேராகச் சென்றுவிடலாம் என்பார்கள். அந்த அளவிற்கு அனைத்துப் பொருள்களும் கிடைத்த இடமாக இருந்திருக்கிறது அய்யங்கடைத் தெரு.
ஆனால், இன்றைக்கு ஊர் விரிவடைந்து, மக்கள்தொகை பெருகிவிட்டது. அதனால் பஜார்கள் எனப்படும் கடைத் தெருக்கள் பெருகிவிட்டன. இந்த இடத்தில் சிறிய அளவில் கடை வைத்திருந்தவர்கள்கூட வெளிப் பகுதிக்குச் சென்று பெரிய அளவில் கடை வைத்திருக்கிறார்கள்.

‘‘ஆனாலும், இந்த அய்யங்கடை தெரு மிகவும் பழமை வாய்ந்த கடைத்தெரு என்ற பெயரோடு இன்றைக்கும் இயங்கி வருகிறது’’ என்கிறார் அங்கு கடை வைத்திருக்கும் 80 வயதான கவுஸ் என்பவர். தொடர்ந்து பேசிய அவர், ‘‘கரந்தை, பழைய பேருந்து நிலையம், கீழவாசல், ரயில் நிலையம், மெடிக்கல் காலேஜ், புதிய பேருந்து நிலையம் என விரிவடைந்து பல கடைத் தெருக்கள் இன்று உருவாகி இப்போது வியாபாரம் நடைபெற்று வருகிறது’’ என்கிறார்.
இப்போது கீழவாசல் தஞ்சாவூரின் மிகப் பெரிய சந்தை. இங்கு தினமும் சுமார் ரூ.2 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது என்கிறார் வணிகர் சங்கப் பேரவையின் மாவட்டத் தலைவர் கணேசன்.
‘‘மளிகை, அரிசி, பித்தளை, வெள்ளிப் பாத்திரங்கள், நாட்டு மருந்துக்கடை, மண்பானை, இரும்பு, மீன், காய்கறி மார்க்கெட் என அனைத்துக் கடைகளும் இந்தக் கீழவாசல் பகுதிக்குள் இருக்கிறது. தஞ்சாவூரைச் சுற்றியுள்ள அனைத்து ஊர் மக்களும், கிராமங்களில் கடைகள் வைத்திருப்பவர்கள் சில்லறை விற்பனைக்காகப் பொருள்கள் வாங்குவதற்கு இங்குதான் வருகிறார்கள். அதனால் இந்தப் பகுதி எப்போதும் பரபரப்பாகக் காணப்படும். தஞ்சாவூரை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இருந்தும் தேவையான பொருள்களை மொத்தமாக வாங்க இங்குதான் வருகிறார்கள்’’ என்றார் அவர்.
அபிராமி பித்தளைப் பாத்திரக் கடையின் உரிமையாளர் பெரியசாமி, ‘‘தஞ்சாவூரில் உற்பத்தி செய்யப்படும் பித்தளைப் பாத்திரங்களுக்கு வெளி மாவட்டங்களில் மவுசு அதிகம். இங்கு செய்யப்படும் பித்தளை மற்றும் சில்வர் பாத்திரங்கள் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்குச் செல்கிறது. மேலும், வீடுகட்டத் தேவையான அனைத்துப் பொருள்களும் இங்கேயே வாங்கிவிடலாம். மரத்தினால் செய்யப் படும் பொருள்கள் வாங்குவது தொடங்கி, கற்களால் செய்யப்படும் சாமி சிலைகள் வரை, வீட்டு உபயோகப் பொருள்களான அம்மிக்கல், ஆட்டுக்கல் என எல்லாவற்றையும் கீழவாசலிலேயே வாங்கிவிடலாம்’’ என்கிறார்.

கீழவாசல் பகுதியை ஒட்டியே இருக்கிறது பர்மா பஜார். இங்கு கடை வைத்திருக்கும் ராம்குமார் என்பவர், ‘‘வெளிநாட்டில் தயாரான பென்சில், பலவகையான பேரிச்சம் பழம் என ஃபாரின் பொருள்கள் இங்கே அதிகம் கிடைக்கும். வெளிநாட்டுத் தைலம், வாட்ச், பேனா, வாசனைத் திரவியங்கள், லெதர் பெல்ட் மற்றும் பர்ஸ் போன்ற அனைத்து வகையான பொருள்களும் இங்கு கிடைக்கும். மேலும், வெளிநாட்டுப் பணத்தையும் நம்மூர் பணமாக எளிதாக மாற்றலாம்.
புதிய செல்போன்கள் வாங்வதற்கும், ரிப்பேரான செல்போனை சர்வீஸ் செய்வதற்கும் மிகப் பெரிய சந்தையாகவும் பர்மா பஜார் இருக்கிறது’’ என்றார்.
தெற்கு வீதியில் இருந்து பழைய பேருந்து நிலையத்தை இணைக்கும் மாட்டு மேஸ்திரி சந்து, சுல்தான் ஜியாப்பா சந்து என இரண்டு தெருக்களிலும் பேன்ஸி பொருள்கள் தொடங்கி, சூட்கேஸ், பேக், எலெக்ட்ரிக்கல் பொருள்கள், பெண்களுக்குத் தேவையான அழகு சாதனப் பொருள்கள் மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்கான பொருள்கள் என அனைத்தும் கிடைக்கிறது. இங்கு 90% பேர் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களே கடைகள் வைத்திருக்கிறார்கள்.
- கே.குணசீலன்
படங்கள்: ம.அரவிந்த்
பஜார் ராமர்!
தமிழகத்தின் நெற்களஞ்சியம் எனப் பெயரெடுத்த தஞ்சாவூரில் அரிசியின் மொத்தத் தேவையில் பெரும்பகுதி கர்நாடக உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது என்பது வேதனை தரும் உண்மை. விவசாயமே பிரதானமாகக் கொண்ட தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையத்தைச் சுற்றியே அனைத்துக் கடை களும் இருந்துள்ளது. எட்டாவது உலகத் தமிழ்நாடு நடந்த பிறகு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதுடன், விரிவாக்கமும் செய்யப்பட்டது. இப்போது அந்தப் பகுதியிலும் பெரிய வணிக நிறுவனங்கள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அய்யங்கடைத் தெரு முக்கியமான பஜாராக இருந்ததற்கு அடையாளமாக அங்கு பஜார் ராமர் என்ற கோயிலே இருக்கிறது. அந்தக் கோயிலில் உள்ள மூலவரான ராமரை பஜார் ராமர் என்றுதான் அழைக்கிறார்கள்.
விவசாயம் என்பதைத் தாண்டி, கலைகளில் சிறந்து விளங்கி வருகிறது தஞ்சாவூர். இங்கு தயாரிக்கப்படும் தஞ்சாவூர் கலைத்தட்டு, ஓவியம், வீணை, தலையாட்டிப் பொம்மை போன்ற கலைப்பொருள்கள் தமிழகம் தாண்டி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பொதுவாக, துணிக்கடைகள் இருக்கும் பகுதிதான், ஊரின் மிகப் பெரிய வியாபார ஏரியாவாகவும், எல்லோராலும் அறியப்படும் இடமாகவும் இருக்கும். அந்த வகையில் தஞ்சாவூர் காந்திஜி சாலை மிகப்பெரிய துணிக்கடைகள் இருக்கும் வீதியாகத் திகழ்கிறது!