
ரவி சுப்ரமணியன் (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)ஓவியங்கள்: ராஜன்
பதினாறாவது மாடியிலிருக்கும் நவநாகரிகமான இண்டிஸ்கேப் கேமிங் கார்ப்பரேஷனுக்குள் நுழைந்தார் ஆதித்யா. இந்த நிறுவனம் தொடங்கி சுமார் 18 மாதங்கள்தான் ஆகியிருக்கிறது; இதற்குள் இந்தியாவில் அதிகமாக விசிட் செய்யும் கேமிங் வலைதளங்களில் இண்டிஸ்கேப்.காமும் ஒன்றாக மாறிவிட்டது.
ஆதித்யா உள்ளே நுழைந்தபோது அலுவலகத்தின் வலதுபக்கத்திலிருந்து பெரிய போர்டு ஒன்றில் அவருடைய மேற்கோள்களில் ஒன்று இடம் பெற்றிருந்தது. ‘எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் வைத்திருங்கள். வாடிக்கையாளரை மகிழ்விப்பதில் கவனம் செலுத்துங்கள். அவர்கள் விளையாடுவதை விரும்பும்பட்சத்தில் வருமானம் வரஆரம்பிக்கும்’ என்பதுதான் அது.

கடந்த ஆறு மாதங்கள் இண்டிஸ்கேப்புக்கு நன்றாகவே இருந்தது. சர்வதேசச் சந்தைகளில், குறிப்பாக அமெரிக்காவில், இதன்மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட ஆரம்பித்திருந்தது. அமெரிக்காவில் மிகவும் பிரபலமான கேம்கள் பட்டியலில், இதனுடைய `மாஃபியா டான்ஸ் (Mafia Dons)’ என்கிற கேம் 10-வது இடத்தைப் பிடித்திருந்தது மிகப்பெரிய வெற்றியாகும். பிரைவேட் ஈக்விட்டி சமூகத்தினரிடையே ஆதித்யா `கனவுக் கதாநாயகனாக’க் காட்சியளித்தார்.
இண்டிஸ்கேப், `ஃப்ரீ டூ யூஸ்’ மாடலில் இதை இயக்கிக்கொண்டிருந்தது. வாடிக்கையாளர்கள் இண்டிஸ்கேப்.காம் தளத்தில் இலவசமாக விளையாடலாம். நிறுவனத்துக்கு விளம்பரங்கள் மூலமாக வருமானம் வந்து கொண்டிருந்தது. லாபம் அதிகம் இல்லையென்றாலும், மாதந்தோறும் தீவிரமாகப் பயன் படுத்துகிறவர்களின் எண்ணிக்கை (monthly active users or MAU) அதிக எண்ணிக்கையில் இருந்ததை அறிந்து முதலீட்டாளர்கள் குதூகலித்தனர். இண்டிஸ்கேப்பில் ஒரு தடவை விளையாடினால் போதும், போதை மருந்துக்கு அடிமையானதுபோல ஆகி விடுவார்கள் வாடிக்கையாளர்கள்.

அன்றைக்கு, ஆதித்யா டவுன் ஹால் மீட்டிங்கில் பேசினார். அதில் எல்லா அலுவலகங்களி லிருந்தும் சுமார் 280 பணியாளர்கள் கலந்துகொண்டனர். சந்தீப்பும் அதில் கலந்துகொண்டார். அவர் ஆதித்யாவின் சர்வதேச பி.பி.ஓ வணிகத்தை நிர்வகித்து வந்தாலும், இண்டிஸ்கேப்பை நிறுவுவதிலும் உதவியாக இருந்தார்.
‘`ஃப்ரெண்ட்ஸ், கடந்த மூன்று காலாண்டுகளாக நாம் வியக்கத்தகு வளர்ச்சி அடைந்திருக்கிறோம். உலகத்தில் எந்தவொரு கேமிங் நிறுவனமும் இவ்வளவு வேகமாக வளர்ச்சி அடைந்ததில்லை. உங்களுடைய ஆதரவில்லாமல் இது சாத்தியமில்லை. இண்டிஸ் கேப்பை உங்களுடைய குடும்பத்தில் ஒருவராக உருவாக்குவதற்காக நீங்கள் சிந்திய வியர்வை, ரத்தத்திற்காக உங்கள் அனைவருக்கும் நான் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். நன்றி!” என்று பேசிய ஆதித்யாவின் பேச்சு ஓர் உத்வேகத்தை ஏற்படுத்தியது. தனது பணியாளர்களிடம் மிகவும் பிரமாதமான ஒரு தொடர்பை அவர் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.
கேள்வி-பதிலுக்கான நேரம் முடிந்தபின், ஆதித்யாவை தன்னுடைய அறைக்குக் கூட்டிச் சென்றார் சந்தீப். “நேற்று இரண்டு மணிநேரம் செயல்படாமல் போய் விட்டது’’ என்றார்.
‘`இரண்டு மணி நேரம்! இங்கேயா?”
‘`இல்லை, இல்லை, eTIOS–ல்.’’
‘`என்ன ஆச்சு?”
‘`யாரோ `ஹாக்’ பண்ண முயற்சி பண்ணியிருக்கிறார்கள். DDOS தாக்குதல் – distributed denial of service. பாதுகாப்புக்கு நமது `ஃபயர் வால்கள்’ மிகவும் வலுவானது என நிரூபித்தது. நாங்கள் எல்லா வற்றையும் பரிசோதித்து சுத்தம் செய்துவிட்டோம்’ என்றார்.
ஆதித்யா ஒரு கணம் யோசித்து விட்டு, ‘`பிரமாதம். கவலைப்படு வதற்கு எதுவுமில்லையே?’’ என்றார்.
சந்தீப், ‘`கண்டிப்பாக, இது சம்பந்தமாக இல்லை’’ என்றார்.
‘`நீ சொல்வதின் அர்த்தம் என்ன?” என்று கேட்டுக்கொண்டே ஆதித்யா மேலே பார்த்தார். ‘`சந்தீப், உங்களை எது சங்கடப்படுத்துகிறது?’’
சந்தீப் தயங்கினார். ‘`கடந்த மாதத்துக்கான `நம்பர்கள்’ எல்லாம் வந்துவிட்டன’’ என்றார்.
‘`அதனால் என்ன?”
‘`கடந்த 12 மாதங்களில் முதல்முறையாக நம்முடைய வலைதளத்தைப் பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. நம்முடைய நெட்வொர்க்கிலிருந்து சில வாடிக்கையாளர்கள் லாக்-ஆஃப் ஆகியிருக் கிறார்கள். அவர்கள் முன்பு விளையாடிய அளவுக்கு இப்போது விளையாடவில்லை.’’

‘`என்ன நடந்திருக்கும் என நினைக்கிறீர்கள்?”
‘`உறுதியாகத் தெரியவில்லை. இது அவ்வளவாகக் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில், பெரிய நம்பர்கள் குறைந்துவிடவில்லை. என்றாலும், சிறிய சரிவைக்கூட நான் பார்க்க விரும்பவில்லை. எனவே தான் சொன்னேன்’’ என்றார்.
ஆதித்யா சிரித்தார். ‘‘எனக்குத் தெரியும், சந்தீப். இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசித்தால், இதற்கான காரணம் நிச்சயம் புரியும். நாம் முதலீடு திரட்ட முயற்சி செய்துவரும் வேளையில் வாடிக்கை யாளர்களை இழக்கக்கூடாது. முதலீட்டாளர்களுக்காக நம்மிடமுள்ள ஒரே துருப்புச் சீட்டு அவர்கள்தான். நாம் பெருமையாகச் சொல்லிக் கொள்கிற அளவுக்கு நமக்கு இப்போது வருமானமில்லை’’ என்ற அவர், சிறிதுநேர அமைதிக்குப்பிறகு, ‘`இப்போதைக்கு...’’ என்றார்.
‘`ஆமாம், ஆதித்யா.’’
‘`அவர்கள் எந்த வலைதளத்துக்குப் போகிறார்கள் என்பதைக் கண்டு பிடியுங்கள். நம்மிடம் அவர்களின் இ-மெயில் ஐ.டி இருக்கும்தானே?”
‘‘இருக்கிறது. அனைத்து வாடிக்கையாளர்களையும் இண்டிஸ் கேப்புக்குத் திரும்ப வருமாறு அழைக்கும் மெயிலை இன்று காலை அனுப்பிவிட்டோம். அவர்களைத் திரும்பவும் கவர்வதற்கான `பொறி’ நாம் புதிதாக உருவாக்கியிருக்கும் `டவுன்ஸ்விலே-வின் (Townsville)’ ப்ரீவ்யூ ஆகும். உலகத்திலுள்ள மற்றவர்கள் பார்ப்பதற்குமுன் இவர்கள் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு” என்று கூறினார்.

‘`உங்களுடைய வடிவாக்கக் குழுவிடம் கடுமையாக உழைக்கச் சொல்லுங்கள். மாஃபியா டான்ஸ் மாதிரி இதுவும் வாடிக்கையாளர் களிடையே ஒரு பெரும் போதையை உண்டாக்க வேண்டும்’’ என்றார்.
‘`அது சம்பந்தமாக வேலை நடந்துகொண்டிருக்கிறது, ஆதித்யா. நமது வலைதளத்தில் இப்போது விளையாடுபவர்களிடம் கட்டணம் வசூலித்தால் என்ன? பதிவு செய்வதற்கான அறிமுகக் கட்டணம் அல்லது மாதக் கட்டணம்..?”
‘`ஜோக் அடிக்கிறீர்களா சந்தீப்? இங்கே நாம் வாடிக்கையாளர்களை இழந்துகொண்டிருக்கிற சமயத்தில், நீங்கள் கட்டணம் வசூலிக்கலாமே என்று கேட்கிறீர்களே! நான் இதில் சம்பந்தப்பட்டிருக்கும் வரை நம்முடைய வாடிக்கை யாளர்களிடமிருந்து ஒருபோதும் கட்டணம் வசூலிக்கக்கூடாது. அவர்கள் நமது தூதுவர்களாக இருக்கவேண்டுமென்பது என் விருப்பம்” என்று சொன்னார்.
‘`சமூக ஊடகங்கள்...?”
‘‘ஆரம்பக் கட்டத்தில்தான் இருக்கிறோம், சந்தீப். எனக்குத் தெரிந்த அளவுக்கு உங்களுக்கும் தெரியும். சமூக ஊடகத்தைப் பயன் படுத்தினால் அது இண்டிஸ் கேப் பிராண்ட் மேல் தாக்கத்தை ஏற்படுத்தும். நமது போட்டியாளர் கள் அதுமாதிரியான ஒரு முயற்சியைச் செய்தார்கள், இல்லையா?
சமூக ஊடகத்தில் அவர் களுடைய கேம்களுக்கும் வாடிக்கை யாளர்கள் எப்படி ரெஸ்பான்ஸ் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து நாம் முடிவெடுப்போம். கூட்டாளிகளைத் தேடுவதற்குமுன், நம் பிராண்டை நன்றாக உருவாக்கு வோம். நாம் ஃபேஸ்புக் மற்றும் சில ஊடகங்களுடன் கூட்டு வைத்துக் கொள்ளும்போது, நாம் நம் அடை யாளத்தை இழந்துவிடுவோம். இந்தச் சமூக ஊடகக் கூட்டாளி களுக்கும், அவர்களுடைய நெட்வொர்க்கில் விளம்பரம் செய்வதற்கும் பணம் கொடுக்க நம்மிடம் வருமானமில்லை.
இரண்டு விஷயங்களின்மீது நமது கவனம் அனைத்தையும் செலுத்த வேண்டும். ஒன்று, வாடிக்கையாளர்களை அதிகரிக்கப் புதிய, பரவசப்படுத்தும் கேம்களை அறிமுகப்படுத்துவது; இரண்டாவது, நமது வாடிக்கை யாளர்களை எப்படி இழந்தோம் என்பதைக் கண்டறிவது.”

ஆதித்யா சொன்னதில் சந்தீப்புக்கு அவ்வளவாக உடன்பாடு இல்லை. ஆனாலும், அவரிடம் வேறு `சாய்ஸ்’ இல்லை; சரியான முடிவுகள் எடுப்பதில் ஆதித்யாவின் ட்ராக் ரெக்கார்டு அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.
ஆதித்யா இண்டிஸ்கேப்பில் சில மணிநேரம் செலவிட்டார். அவர் அங்கிருந்து eTIOS–க்கு செல்லும்போது கான்ஃபரன்ஸ் அறைக்கு முன்பாக நின்றபடி, ‘`சந்தீப், மேலே வருகிறாயா?” என்று கேட்டார்.
இண்டிஸ்கேப்புக்கு இரண்டு மாடிகளுக்குமேல் eTIOS அலுவலகம் இருந்தது. அங்கே ஆதித்யாவின் அறையும், சந்தீப்பின் அறையும் அடுத்தடுத்து இருந்தன.
அவர் ஆதித்யாவுடன் மேலே செல்லும்போது, ‘`உங்களைப் பார்த்தால் மிகவும் களைப் படைந்தவர்போல் இருக்கிறது. வணிகத்தை நடத்த உதவிக்கு யாரும் வேண்டுமா?” என்றார். ஆதித்யா இப்படிக் கேட்டது சந்தீப்புக்கு அதிர்ச்சியாக இருந்தது.
‘`நிறுவனத்தை நடத்திச் செல்ல உங்களுக்கு உதவி வேண்டுமா? `பிட்ச்’ செய்வதற்காக நாம் சில சீனியர் களுக்கு வேலை கொடுப்போம். நாம் ஏற்கெனவே இருக்கக்கூடிய வாடிக்கையாளர்களை நம்மோடு வைத்திராவிட்டால், இந்த கேமின் வெற்றி குறித்துக் கவலைப்பட வேண்டியிருக்கும். இந்த கேமை நம்பி அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இது வெற்றி பெற்றால், நிறுவனத்தை நாம் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும்.’’
‘`இப்போதைக்கு நான் பார்த்துக்கொள்கிறேன், ஆதித்யா. என்னால் முடியவில்லையென்றால் அதை உங்களிடம்தான் முதலில் சொல்வேன்’’ என்றார்.
‘`ஓகே!”
ஆதித்யா எலிவேட்டரில் நுழைந்து இரண்டு மாடிகள் மேலே செல் வதற்கான பட்டனைத் தட்டினார். eTIOS அலுவலகமும் அதே கட்டடத்தில்தான் இருந்தது.
(பித்தலாட்டம் தொடரும்)
தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்

பாதுகாப்புக்கு அதிகம் செலவழிக்கும் மார்க்!
ஃபேஸ்புக்கைப் பயன் படுத்துகிறவர்கள் தொடர் பான தகவல்கள் பாதுகாப் பாக இல்லை என்று சர்ச்சை கிளம்பி யிருக்கும் இந்த சமயத்தில், தன்னு டைய பாதுகாப்புக்காக பெரும் பணத்தைச் செலவு செய்திருக்கிறார் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பர்க். கடந்த ஆண்டில் மட்டும் அவருடைய தனிப்பட்ட பாதுகாப்புக்காக 7.3 மில்லியன் டாலரையும், விமானப் பயணம் செய்வதற்காக தனியார் விமானத்தை வாடகைக்கு எடுத்ததில் 1.5 மில்லியன் டாலரையும் செலவு செய்திருக்கிறார் மார்க். கடந்த 2016-ல் வெறும் 5.8 மில்லியன் செலவழித்த சக்கர்பர்க், 2017-ல் 8.8 மில்லியன் டாலரை செலவு செய்திருக்கிறாராம். நல்ல வளர்ச்சிதான்!