நடப்பு
தொடர்கள்
Published:Updated:

சர்க்கரைப் பங்குகள்... லாபம் தருமா?

சர்க்கரைப் பங்குகள்... லாபம் தருமா?
பிரீமியம் ஸ்டோரி
News
சர்க்கரைப் பங்குகள்... லாபம் தருமா?

ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்

மோகமான கரும்பு விளைச்சல் காரணமாகச் சர்க்கரை உற்பத்தி ஏகத்துக்கும் அதிகரித்து, மொத்தச் சந்தையில் சர்க்கரை விலை இறக்கம் காணத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், சர்க்கரை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பங்குகளும் கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்குக் குறைந்தபட்ச நிலையை எட்டியுள்ளன. இந்தச் சமயத்தில் சர்க்கரைப் பங்குகளை வாங்குவது சரியா,  அப்படி வாங்க விரும்பினால், இந்தத் துறை தொடர்பாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி இனி பார்ப்போம். 

சர்க்கரைப் பங்குகள்... லாபம் தருமா?

   சுழற்சிப் பங்குகள்

சர்க்கரைத் துறை போன்ற கமாடிட்டித் துறைகள் சுழற்சி அடிப்படையில் இயங்கக் கூடியவை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, ஒரு குறிப்பிட்ட காலம் வரை விலை அதிகரித்து வர்த்தகம் நடப்பதும், அதன்பிறகு தொடர்ந்து சில வருடங்கள் விலை குறைந்து வர்த்தகமாவதும் இதுமாதிரியான கமாடிட்டிப் பொருள்களைக்கொண்ட துறையில் வாடிக்கையான ஒன்று. சர்க்கரைத் துறை மட்டு மல்ல, இதுமாதிரி சுழற்சி முறையில் இயங்கும் கமாடிட்டி  சார்ந்த  பங்குகளில் (Cyclical stocks) எந்த நேரத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதையும், எந்த நேரத்தில் விற்க வேண்டும் என்பதையும் தெரிந்துகொண்டு முதலீடு செய்வது மிகவும் அவசியமாகும். இதைப் புரிந்துகொள்ளாமல் முதலீடு செய்தால், நஷ்டத்தையே சந்திக்க நேரிடும்.

   இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி

சர்க்கரைப் பங்குகள்... லாபம் தருமா?


இந்தியாவின் சர்க்கரை உற்பத்தியில் மஹாராஷ்ட்டிரா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

சர்க்கரை உற்பத்திப் பருவம் என்பது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் துவங்கி, செப்டம்பர் வரையிலான காலமாகும். ஒவ்வோர் ஆண்டும் உலக அளவிலும், இந்திய அளவிலும் பருவ மழைப்பொழிவு பற்றிய செய்திகள், முந்திய வருடத்தின் கையிருப்பு, உள்நாட்டுத் தேவை,  அரசு நிர்ணயம் செய்கிற குறைந்தபட்ச ஆதரவு விலை ஆகியவற்றின் அடிப்படையில் சர்க்கரை விலை சந்தையில் நிர்ணயம் ஆவதால், சர்க்கரை ஆலைகள் பல நிதிச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. இதன் தாக்கம், பங்குகளின் விலைகளிலும் எதிரொலிக்கின்றன.

சர்க்கரை உற்பத்தியானது சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டில் மஹாராஷ்ட்டிரா 140%, கர்நாடகா 65%, உத்தரப்பிரதேசம் 20% என்கிற அளவில் கூடுதல் உற்பத்தி செய்துள்ளது.

2017-18 சர்க்கரைப் பருவத்தில் குறிப்பாக, சென்ற அக்டோபர் துவங்கி ஏப்ரல் 15-ம் தேதி  வரையிலான காலத்தில், நமது சர்க்கரை உற்பத்தி 299 லட்சம் டன்களாக இருப்பதாக இந்திய சர்க்கரை ஆலைகளின் சங்கம் (ISMA) அறிவித்துள்ளது. அதாவது, முடிவடைந்த ஏழு மாதங்களிலேயே 50 லட்சம் டன் சர்க்கரை  எதிர்பார்த்ததைவிட கூடுதலாக உற்பத்தியாகி யிருக்கிறது.  இது நமது தேவையைவிட மிக அதிக அளவிலான உற்பத்தியாகும்.

சர்க்கரைப் பங்குகள்... லாபம் தருமா?

நடப்புப் பருவத்தில், நம் நாட்டில் சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 524 ஆலைகளில், இதுவரை 227 ஆலைகள் முழு வீச்சில் இயங்கி வருகின்றன. மீதமுள்ள ஆலைகளும் வரும் மாதங்களில் உற்பத்தியைத் தொடங்கும்பட்சத்தில்,  நம் தேவையைவிட உற்பத்தி மிக மிக அதிகமாக இருக்கும். இதன் காரணமாக, சர்க்கரையின் சந்தை விலையானது கிலோ ஒன்றுக்கு ரூ.8 குறைந்து வர்த்தகமாகி வருகிறது. இதனால், உற்பத்திச் செலவைவிடக் குறைவான விலைக்குச் சர்க்கரையை விற்க வேண்டிய கட்டாயத்திற்குச் சர்க்கரை ஆலைகள் தள்ளப் பட்டுள்ளன. இதனால், சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயி களுக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகையும் கணிசமாகப் பாக்கி வைத்துள்ளன.

  என்னதான் தீர்வு?


இந்தப் பிரச்னைக்கு என்ன தான் தீர்வு? தொழில்நுட்பம் வளர்ந்த இந்தக் காலத்திலும், உற்பத்தி அளவை முன்கூட்டியே கணிக்க முடியாமல் போவது மிகவும் வருந்தக்தக்க செய்தி. அப்படியே முன்கூட்டியே கணித் தாலும், நிஜத்தில் அத்தகைய புள்ளி விவரங்களுக்கும், உற்பத்தி அளவிற்கும் மிகப் பெரிய வித்தியாசம்  இருப்பதால், சர்க்கரை ஆலைகளும், கரும்பு விவசாயிகளும் நஷ்டத்தையே சந்திக்க வேண்டியிருக்கிறது.

   சாதகமில்லாத சர்வதேச சந்தை

 உள்நாட்டில் உற்பத்தி அதிகமாக இருப்பதால், வெளிநாட்டுக்குச் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய நிறுவனங்கள் முயற்சி செய்ய நினைத் தால், சர்வதேச விலை சாதகமாக இல்லை. சர்வதேச சந்தையில் ஒரு பவுண்டு சர்க்கரை விலை 12.5 அமெரிக்க சென்ட்ஸ்களாக வர்த்தக மாகி வருகிறது.

இந்த நிலையில், சர்க்கரை ஆலைகள்  1 லட்சம் டன் ஏற்றுமதி செய்தால், ரூ.100 கோடி நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும் என்கிறபோது  எந்த ஆலை வெளிநாட்டுக்குச் சர்க்கரையை ஏற்றுமதி செய்யும்?

உற்பத்தி மிக அதிகமாக இருக்கும்பட்சத்தில் குடோன்களில் சேமித்து வைத்துக்கொள்வது ஒரு வகையான திட்டமிடல் என்றாலும், சர்க்கரை ஆலைகள் ஏற்கெனவே நிதிச் சிக்கல்களில் சிக்கியிருக்கும் நிலையில், கையிருப்பாக வைத்துக் கொள்ளும் அளவுக்கு பல ஆலை களிடம் நிதிவசதி இல்லை. 2 - 3 லட்சம் டன் வரை கையிருப்புக்காக  வைத்துக்கொள்ள அரசாங்கம் உதவும். அதற்குமேல், அரசாங்கத் தினால் முடியாது. சர்க்கரை ஆலை களின் இன்றைய நிதிச் சிக்கலைப் பார்த்தால், வங்கிகள்கூட உதவுமா என்பது சந்தேகமே.

சர்க்கரைப் பங்குகள்... லாபம் தருமா?

  அச்சுறுத்தும் நிலுவைத் தொகை

சர்க்கரை ஆலைகள் விவசாயி களுக்குத் தரவேண்டிய நிலுவைத் தொகை மட்டுமே ரூ.20,000 கோடிக்கு மேல் இருக்கிறது. இதில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. 

ஆக, இப்படிப் பல சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் இந்தத் துறையைக் காப்பாற்ற பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டி யிருக்கிறது. இந்த நிலையில், வரும் மாதங்களில் பருவமழை எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்து, கரும்பு விளைச்சல் குறித்த எதிர்பார்ப்பு மாறும்.

   சர்க்கரைத் துறை பங்குகளை வாங்கலாமா?

தற்போது இந்தத் துறை சார்ந்த பங்குகள் கடந்த 52 வாரத்தில் இல்லாத அளவுக்குக் குறைந்த விலையில் வர்த்தமாகி வருகின்றன. பங்கு விலைகள் 50 சதவிகிதத்துக்கும் மேலாகச் சரிந்துள்ளன. நாம் ஏற்கேனவே குறிப்பிட்டபடி, இந்தத் துறை பங்குகள் சுழற்சி அடிப்படையில் செயல்படுவதால்,   சுழற்சியின் கீழ்ப்பக்கத்தில் வாங்கி, சுழற்சியின் மேல்பக்கத்தில் விற்க  முதலீட்டாளர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆனால், ஒரு நிறுவனத்தின் பங்கு  சுழற்சியின் கீழ்ப்பக்கத்தில் உள்ளது என்பதை எப்படி உறுதி செய்துகொள்வது?  அதனைத் துல்லியமாகக் கணிக்க யாராலும் முடியாது. பங்குச் சந்தையின் தாரக மந்திரமே, விலை குறையும்போது வாங்குவதும், விலை அதிகரித்தபின் விற்பதும்தான். அதன்படி, விலை மிகவும் குறைந்துள்ள நிலையில் வாங்கி, விலை உயரும் வரை காத்திருக்க முடியும் என்பவர்கள், அவசரப் பணத் தேவை இல்லாதவர்கள், விலை குறையைக் குறைய கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம்.

பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு, சர்க்கரைக்கான விலை அதிகரிக்கத் தொடங்கும்பட்சத்தில், இந்தப் பங்கின் விலையும் உடனடியாக அதிகரிக்கும். அப்போது கிடைக்கும் லாபம் கணிசமாக இருக்கும். அதிக ரிஸ்க் எடுத்து, அதிக லாபம் சம்பாதிக்க நினைப்பவர்கள் இந்தத் துறை சார்ந்த பங்கினை எச்சரிக்கையுடன் கவனிக்கலாம்!