நடப்பு
தொடர்கள்
Published:Updated:

விற்க முடியாத ஏர் இந்தியா!

விற்க முடியாத ஏர் இந்தியா!
பிரீமியம் ஸ்டோரி
News
விற்க முடியாத ஏர் இந்தியா!

விற்க முடியாத ஏர் இந்தியா!

ருபது ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு, அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியாவைத் தனியார் நிறுவனத்துக்கு விற்கும் அறிவிப்பினைச் சமீபத்தில் வெளியிட்டது மத்திய அரசு. இதற்குப் பெரிய அளவில் எதிர்ப்பு எதுவும் கிளம்பவில்லை என்றாலும், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை யாரும் வாங்கத் தயாராக இல்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம். 

ஏர் இந்தியாவின்  (இனி சுருக்கமாக ஏ.இ) 76% பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவினை அறிவித்தவுடன், இன்டிகோ நிறுவனம், கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து ஏ.இ-யை வாங்க விரும்புவதாக அறிவித்தது. அதேபோல, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஏர் ஃபிரான்ஸ் கே.எல்.எம் மற்றும் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனங்களுடன் கூட்டாக இணைந்து ஏ.இ-யை வாங்க விரும்புவதாகவும் அறிவித்தது. ஆனால், என்ன காரணத்தினாலோ இந்த இரண்டு நிறுவனங்களும் ஏ.இ-யை வாங்கும் முயற்சியிலிருந்து பின்வாங்கிவிட்டது.

விற்க முடியாத ஏர் இந்தியா!

டாடா நிறுவனம் நடத்திவந்த விமான நிறுவனத்தைத்தான் நமது அரசாங்கம் கைப்பற்றி 1946-ல் நாட்டுடமையாக்கி, ஏர் இந்தியா என்கிற பெயரையும் சூட்டியது. இப்போது ஏ.இ-யை மீண்டும் தனியாருக்கு விற்க முடிவெடுத்தபோது, டாடா நிறுவனம் அதனை வாங்கி, தனதாக்கிக்கொள்ள நினைத்தது. ஆனால், ஏ.இ-க்கு இப்போதிருக்கும் கடனையெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்த டாடா நிறுவனம், ஏ.இ-யை  வாங்கும் திட்டத்தைக் கைவிட்டது.

ஏ.இ நிறுவனத்துக்குக் கடந்த 2017 மார்ச் மாத முடிவின்படி, ரூ.48,447 கோடி கடன் உள்ளது. இந்தக் கடனில் மூன்றில் இரண்டு பங்கினை ஏ.இ-யை வாங்கும் நிறுவனம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறது மத்திய அரசாங்கம். அதாவது, ஏறக்குறைய ரூ.32,250 கோடியை ஏ.இ-யை வாங்கும் நிறுவனம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். டாடா போன்ற பெரிய நிறுவனங்களே இந்தக் கடன் தொகையை நினைத்து மிரளும்போது, மற்ற நிறுவனங்கள் மூர்ச்சையாகிப்போய் நிற்கின்றன.

ஏ.இ-க்கு இருக்கும் மொத்தக் கடனில் பெரும்பங்கு செயல்பாட்டு மூலதன மாகப் பெற்ற கடன்தான். ஏறக்குறைய ரூ.31 ஆயிரம் கோடி இந்த வகையில்தான்  வருகிறது. இதுதவிர, விமானங்களை வாங்கியதற்காக ரூ.17 ஆயிரம் கோடி கடனையும் பெற்றிருக்கிறது. இந்த 17 ஆயிரம் கோடி கடனை ஏ.இ-யை நிறுவனம் வாங்கும் கம்பெனியானது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருந்தால்கூட, ஏதாவதொரு விமான நிறுவனம் அதைப் பரிசீலிக்க வாய்ப்புண்டு. ஆனால், ரூ.31 ஆயிரம் கோடி கடனை ஏற்றுக்கொள்ளவேண்டு மென்றால், அதை எந்த நிறுவனம்தான் ஏற்றுக்கொள்ளும்?

கடந்த எட்டு ஆண்டுகளில் ஏ.இ-யை  லாபப் பாதைக்குத் திரும்பிவிடும் என்கிற நம்பிக்கையில் தொடர்ந்து முதலீட்டைத் தந்துகொண்டே இருந்தது. கடந்த 2011 தொடங்கி, இந்த ஆண்டு வரை ஏறக்குறைய ரூ.26,500 கோடிக்கு மேல் முதலீட்டைத் தந்திருக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இன்னும் ரூ.3,686 கோடியை முதலீடு செய்யும் திட்டமும் மத்திய அரசிடம் உண்டு.

இவ்வளவு முதலீட்டைத் தந்தபின்பும், ஏ.இ  நஷ்டத்தையே தருகிறது. கடந்த 2010 ஏப்ரல் முதல் 2017 டிசம்பர் வரை யிலான காலத்தில் ஏ.இ அடைந்த நஷ்டம் மட்டுமே ரூ.46,256 கோடி. இந்த நிறுவனம் கடந்த 2016-17-ல் அடைந்த நஷ்டம் மட்டுமே ரூ.3,700 கோடி என்பதே.

ஏ.இ-யின் இந்தப் பெரும் நஷ்டத்துக்குக் காரணம், அளவுக்கதிகமானவர்கள் அங்கு வேலை பார்ப்பதுதான். தனியார் விமான நிறுவனமான இண்டிகோவில்  14 ஆயிரம் பேர் வேலை பார்க்க, ஏ.இ-யில் 18 ஆயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள். இவர்களில் ஒருவரைக்கூட வேலை விட்டு அனுப்பக்கூடாது என மத்திய அரசாங்கம் கண்டிஷன் போட்டால், எந்த நிறுவனம் ஏ.இ-யை வாங்கும்?

ஆக, இப்போதைய நிலையில், ஏ.இ-யை விற்க முடியுமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது!

- ஆகாஷ்

ஏர் இந்தியாவை வாங்குமா எல்.ஐ.சி?

 பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள முதலீட்டினைத் திரும்பப் பெற (Disinvestment) மத்திய அரசாங்கம் முயற்சி செய்யும்போது, அதை வெற்றிகரமாகச் செய்ய முடியவில்லை எனில், எல்.ஐ.சி நிறுவனம்தான் கடைசியில் கைகொடுக்கும். மத்திய அரசாங்கம் ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியாருக்கு விற்க முடியவில்லை எனில், எல்.ஐ.சி நிறுவனம் அதை வாங்க வாய்ப்பிருப்பதாக இப்போது பேச்சு கிளம்பியிருக் கிறது. எல்.ஐ.சி-யிடம் பணம் இருக்கலாம். ஆனால், ஒரு விமான நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தும் திறமை இருக்கிறதா என்பது சந்தேகமே. ‘‘ஏர் இந்தியா நிறுவனத்தை இந்திய நிறுவனம்தான் வாங்க வேண்டும்’’ என ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் சொன்னதைப் பார்த்தால், எல்.ஐ.சி-யின் தலையில் ஏர் இந்தியா கட்டப்படுமோ என்கிற சந்தேகம் வருகிறது!