
தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

தங்கம் மினி
தங்கம் தொடர்ந்து தடைகளை உடைத்து வலிமையாக ஏற ஆரம்பித்தது உண்மை. ஆனால், வார முடிவில் ஒரு தடைநிலையில் வலிமையாகத் தடுக்கப்பட்டு, திணற ஆரம்பித்துள்ளது. இது ஒரு ரிடிரேஸ்மென்டுக்கு வழிவகுக்கலாம்.
கடந்த இதழில் சொன்னது... “தங்கம் முந்தைய தடையான 30800-ஐ உடைத்து ஏறிய நிலையில், தற்போது அதுவே ஆதரவுநிலையாக உள்ளது. இது உடைக்கப்பட்டால் வலிமையான இறக்கம் நிகழலாம். மேலே 31150 என்பது உடனடித் தடைநிலை ஆகும்.’’

தங்கம் கடந்த சில வாரங்களாக ஒரு குறுகிய எல்லைக்குள் இருந்ததைப் பார்த்தோம். அந்த எல்லை கீழே 30100 ஆகவும், மேலே 30800ஆகவும் இருந்தது. அதன் பின் கீழ் எல்லையான 30100-ல் இருந்து மெள்ள ஏறி 30400-ல் ஒரு பாட்டத்தைத் தோற்றுவித்து ஏறியது. இந்த ஏற்றம் 30800-ல் பலதடவை தடுக்கப்பட்டாலும், இந்த முறை 30800-ஐ உடைத்து ஏற ஆரம்பித்தது. இந்த நிலையில் அது அடுத்து 30150 வரை செல்லலாம் என்று கடந்த இதழில் கூறி இருந்தோம். அதுபோல் 31150-ஐ தொட்டது மட்டுமல்ல, அதையும் தாண்டியது. திங்கள் முதல் வியாழன் வரை ஒரு தொடர் ஏற்றத்தில் இருந்தது. குறிப்பாக அட்சய திருதியை அன்று ஒரு உச்சத்தையும் தோற்றுவித்தது. ஆனால், வியாழனன்று ஒரு ஏற்றம் நிகழ்ந்தாலும், அது ஒரு கேண்டில் அமைப்பான தொங்கும் மனிதனை உருவாக்கியது. அதாவது உச்சமாக 31517-ஐ தொட்ட பிறகு, ஒரு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. அடுத்து வெள்ளியன்று கொஞ்சம் திணற ஆரம்பித்துள்ளது.
இனி, தற்போது உச்சமான 31517 என்பதையே தடைநிலையாகக் கொண்டு இயங்கலாம். கீழே முந்தைய தடைநிலையான 31150 என்பது தற் போதைய ஆதரவாக மாறலாம். அது உடைக்கப் பட்டால், 30800-ஐ நோக்கி நகரலாம். இருந்தாலும், உலகப் பொருளாதார நிலையில் மந்தநிலை ஏற்பட்டால் தங்கம் மீண்டும் ஏற ஆரம்பிக்கலாம்.

வெள்ளி மினி
சென்ற வாரம் சொன்னது... “38550 என்ற புள்ளியில் ஆதரவு எடுக்க முயற்சி செய்கிறது. இது உடைக்கப்பட்டால் இறக்கம் கடுமையானதாக இருக்கலாம். மேலே 38950 என்பது உடனடித் தடைநிலையாகும்.’’

தங்கம் வலிமையாக ஏற ஆரம்பித்தபோது, வெள்ளி கூடவே வலிமையாக ஏற ஆரம்பித்தது. இந்த ஏற்றம் தங்கத்தைவிட, மிகமிக வேகமாக இருந்ததாகச் சொல்லலாம். அதுவும் 38950-ஐ தாண்டியவுடன் வேகமெடுத்து 39500 என்ற எல்லைக்குத் தாவியபிறகு, புதனன்று படுவேகமாக ஏறி, ஒரே நாளில் 1000 புள்ளிகள் ஏறி, 40500-க்கு அருகாமையில் சென்றது. வியாழனன்று தங்கத்தை விட வேகமாக ஏறி, 40773 என்ற உச்சத்தைத் தொட்டது. ஆனால், வெள்ளியன்று சுணக்கம் ஏற்பட்டுக் கீழே திரும்பியுள்ளது.
இனி, வெள்ளி நன்கு ஏறிய நிலையில், 40800 என்ற எல்லை இனி தடைநிலையாகச் செயல்படலாம். கீழே 39800 என்ற எல்லை ஆதரவாகச் செயல்படலாம்.

கச்சா எண்ணெய் மினி
கச்சா எண்ணெய், இன்னும் வலுவாக ஏறிக்கொண்டு இருந்தாலும், தற்போது கொஞ்சம் பக்கவாட்டு நகர்வை நோக்கிப் போகலாம். கச்சா எண்ணெய் ஒரு ஏற்றத்துக்குப் பிறகு, 4420 என்ற எல்லையில் தடுக்கப்பட்டு இருந்தது. கீழே 4290 என்ற ஆதரவைக்கொண்டு இயங்கி வந்தது. கடந்த புதனன்று தடைநிலை 4420-ஐ உடைத்து வலிமையாக ஏறியது. அது 4493 என்ற புதிய உச்சத்தைத் தோற்றுவித்தது. அடுத்து வியாழனன்று வலிமையாக ஏறி, 4575 என்ற புதிய உச்சத்தைத் தோற்றுவித்தாலும் முடியும்போது இறங்கி, அது ஷீட்டிங் ஸ்டார் என்ற கேண்டில் அமைப்பைத் தோற்றுவித்தது. வெள்ளியன்று சற்று வலிமை குன்றிக் காணப்பட்டது.
இனி, கொஞ்சம் இறங்கலாம். கீழே முந்தையத் தடைநிலையான 4420 தற்போது ஆதரவாக மாறலாம். மேலே 4575 என்பது தடைநிலையாக செயல்பட வாய்ப்புள்ளது.

அக்ரி கமாடிட்டிப் பகுதியைப் படிக்க: https://bit.ly/2HPrVye