
சூப்பர் ஸ்டார்ட்அப்களின் தொழில் ஜாதகம்! - 19
சில ஆண்டுகளுக்கு முன்புவரை, பலவிதமான மென்பொருள்களை நாம் நமது கணினியில் இன்ஸ்டால் செய்தே பயன்படுத்தினோம். ஆனால், தற்போது பல மென்பொருள்களை டவுன்லோடு செய்யாமல் ஆன்லைனிலேயே பயன் படுத்துகிறோம். காரணம், கிளவுட் கம்ப்யூட்டிங். இப்படிச் செயல்படும் சேவைகள் அனைத்தும் சாஷ் (SaaS - Software as a Service) எனப்படும். சிறிய அளவில் செயல்படும் தனியார் நிறுவனங்கள் முதல் அரசாங்கங்கள் வரைக்கும் இந்த சாஷ் சேவைகளையே பயன்படுத்துவதால், இவர்களுக்கான தேவை குறைவதேயில்லை. சாஷ் சேவையில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் ஹிப்போ வீடியோ என்கிற ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத்தான் நாம் இந்த வாரம் பார்க்கப்போகிறோம்.
ஹிப்போ வீடியோ என்பது வீடியோ உருவாக்கம், வீடியோ எடிட்டிங், வெப் ஹோஸ்ட்டிங் போன்ற சேவைகளை வழங்கும் வீடியோ பிளாட்ஃபார்ம். இது வாஸ் (VaaS - Video as a Service) முறையின் மூலம், அதாவது சாஸ் மாடலின் கீழ் இயங்குகிறது. இந்த நிறுவனத்தின் பயணம் பற்றிப் பகிர்ந்துகொள்கிறார்கள் கார்த்தி மாரியப்பன், சீனிவாசன், நீலம் சந்த் ஆகிய மூவரும்.

இன்ஸ்பிரேஷன்
“நாங்கள் மூவருமே ஜோஹோ நிறுவனத்தில் வெவ்வேறு பிரிவு களில் பணிபுரிந்து கொண்டிருந் தோம். மனிதவளத் துறையில் இருக்கும் சிக்கல்கள் குறித்து அறிந்துகொண்டோம். அவற்றில் ஏதேனும் ஒன்றிற்குத் தீர்வு காணவேண்டும் என நினைத்து அதன்படி, LMS (Learning and Management System) என்கிற புரோகிராம் ஒன்றை வடிவமைத்தோம். புதிதாகப் பணியில் இணைபவர்கள், பணியைக் கற்றுக்கொள்வதற்கான ஒரு சிஸ்டம் இது.
இதனை நாங்கள் வடிவமைத்து, நிறைய நிறுவனங்களிடம் கொண்டு சென்றோம். அதைப் பார்த்த சில நிறுவனங்கள், முழு LMS-யைவிடவும் அந்த வீடியோ அம்சம் மிகவும் பிடித்திருப்பதாகச் சொல்லின. அந்தச் சேவையை மட்டுமே தனியாகத் தருமாறு பல நிறுவனத்தினர் கேட்டார்கள். அந்த வேண்டுகோளில் இருந்து தான் ஹிப்போ வீடியோ பிறந்தது.
அடித்தளம்
வீடியோக்களுக்கு இவ்வளவு நல்ல வரவேற்பு இருக்கிறது எனத் தெரிந்ததும், அதைவைத்து என்ன செய்யலாம் எனத் தேடினோம். சந்தையில் வீடியோவிற்கு இருக்கும் வரவேற்பு, அதன் சந்தை மதிப்பு போன்றவற்றையெல்லாம் ஆராய்ந்தோம்.
அந்தச் சமயத்தில் தான் மொபைல் இன்டர்நெட்டும், வீடியோ நுகர்வும் உலகெங்கும் அதிகரித்து வந்தது. எனவே, வீடியோவை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே ஒரு பிளாட் ஃபார்மைத் தொடங்கினால் நல்ல வரவேற்பு என இருக்கும் என நினைத்தோம்.
மேலும், தனிநபர்கள் வீடியோவை உருவாக்கவும், அதனை எடிட் செய்யவும் நிறைய வசதிகள் இருக்கின்றன. ஆனால், வணிக நிறுவனங்கள் வீடியோவைக் கையாள மிகவும் புரொஃபஷனலான மென்பொருள் கள் மட்டுமே இருந்தன. அவற்றிலும் நிறையக் குறைகள் இருந்தன. எனவே, தனிநபர்களுக்கான சேவை என்று நிற்காமல், நிறுவனங் களுக்கான B2B சேவையாக மட்டுமே ஹிப்போ வீடியோவை உருவாக்கினோம். தனிநபர்களுக்கான சேவையை வழங்குவதற்கு நிறைய நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், நிறுவனங் களுக்கு அப்படி இல்லை. இதனை எங்களுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டோம்.
சவால்கள்
சாஸ் தளத்தில் அனுபவமிக்கவர்களைப் பணிக்கு அமர்த்துவது பெரிய சவாலாக இருந்தது. நாங்கள் விளம்பரத்திற்கென தனியாக எந்தச் செலவும் செய்ததில்லை. எல்லோருமே ‘வேர்டு ஆஃப் மவுத்’ மூலம் வந்தவர்களே. இதுதவிர, எஸ்.இ.ஓ (SEO) மற்றும் நண்பர்கள் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் வந்தனர். ஆனாலும்கூட வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை ஆரம்பத்தில் குறைவாகவே இருந்தன. அந்தச் சமயத்தில்தான் புதிதாக குரோம் பிரவுசர் எக்ஸ்டென்சன் என்னும் வசதியை அறிமுகம் செய்தோம். ஆச்சர்யப்படும் படியாக திடீரென, அதிலிருந்து நிறைய வாடிக்கையாளர்கள் வந்தனர். வாடிக்கையாளரின் எண்ணிக்கை அதிகமானதில் அது முக்கியப் பங்கு வகித்தது.

வெற்றி
பொதுவாக, ஒரு நிறுவனத்தில் இரண்டு இடங்களில்தான் வீடியோவிற்கான தேவை இருக்கும். ஒன்று, விளம்பரங்களுக்கு. இதற்காக மார்க்கெட்டிங் ஏஜென்சிகள் மூலமாக வீடியோக்களை எடுப்பார்கள். இரண்டாவது, இணையதளம், சமூக வலைதளம் போன்றவற்றில் வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்ள. இதற்கும் புரொஃபஷனல் மென்பொருள்களையே பயன்படுத்துவார்கள். இப்படித் தயாரித்த வீடியோக்களை யூ டியூப் அல்லது தனியார் ஹோஸ்டிங் நிறுவனங்கள் மூலமாகப் பதிவேற்றம் செய்வார்கள். இப்படித்தான் பெரும்பாலான நிறுவனங்கள் இன்றும் வீடியோக்களை பயன்படுத்தி வருகின்றன.
இதில் இரண்டு பிரச்னைகள் இருக்கின்றன. முதலாவது, செலவு மிகுந்த மென்பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது. இரண்டாவது, வீடியோ உருவாக்க, எடிட் செய்ய, ஹோஸ்ட் செய்ய என மூன்றிற்கும் வெவ்வேறு சேவைகளைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், நாங்கள் தரும் சேவையைப் பயன்படுத்தி, மிக எளிதாக வீடியோவை உருவாக்க முடியும். அவற்றை எடிட் செய்வதும் எளிது. பின்னர் வீடியோவை இணையத்தில் ஹோஸ்ட் செய்யவும் ஹிப்போ வீடியோ பிளாட்ஃபார்மையே பயன்படுத்தலாம். மூன்றாவது, எங்கள் பிளாட் ஃபார்மை பல்வேறு நிறுவனங்களின் சேவை களோடு இணைத்திருப்பதால், வீடியோக்களை எங்கு வேண்டுமானாலும் எளிதில் கையாளலாம். இப்படி முழுமையான வீடியோ பிளாட்ஃபார்மாக இயங்குவது உலகளவில் நாங்கள் மட்டும்தான்.
இன்றைக்கு சி.ஆர்.எம் (CRM - Customer Relationship Management), விற்பனைப்பிரிவு, மனிதவளம் (HR) எனப் பல்வேறு இடங்களில் எங்களின் சேவைகளை நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. உதாரணமாக, ஒரு நிறுவனம் ஒரு பொருளை உருவாக்கி வாடிக்கையாளருக்குத் தருகிறது. அதில் ஏதாவது பிரச்னை வந்தால், அதை எழுத்து மூலமாக விவரிப்பதைவிடவும், வீடியோ மூலமாக விளக்கினால், அந்தப் பிரச்னையைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். இதற்காக அந்த மென்பொருள் நிறுவனம் தன் இணையதளத்தில் எங்கள் சேவையைப் பயன்படுத்தினால் போதும். இப்படிச் செய்வதன் மூலம் அந்த நிறுவனத்தின் விற்பனையும் அதிகமாகும். இந்த வீடியோக்களை உருவாக்கவோ, ஹோஸ்ட் செய்யவோ அதிகம் செலவு செய்யவேண்டியதில்லை. இதுதான் எங்களின் சிறப்பம்சம்.
வணிக நிறுவனங்களுக்காக மட்டுமே என நாங்கள் வடிவமைத்தாலும்கூட, தனிநபர்களும் எங்கள் சேவையைப் பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் சில பள்ளிகளில் மாணவர்கள் ஹிப்போ வீடியோ மூலமாக ஹோம்வொர்க் செய்கின்றனர். இப்படி எங்கள் சேவையை இதுவரை ஆயிரம் நிறுவனங்களுக்கு மேல் பயன்படுத்துகின்றன. அமெரிக்காவில் மட்டும் 200 பள்ளிகள் ஹிப்போ வீடியோவைப் பயன்படுத்தி பாடம் சொல்லிக்கொடுக்கப் பயன்படுத்துகின்றன. பிற துறைகளிலும் வீடியோவிற்கான தேவை அதிகரித்து வருவதால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.
இலக்கு
அலுவலகங்களுக்கான மென்பொருள் சந்தையில் தனித்துவமான இடத்தை எப்படி மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பிடித்திருக்கிறதோ, அதேபோல, அலுவலகங்களுக்கான தனித்துவ மான வீடியோ பிளாட்ஃபார்மாக ஹிப்போ வீடியோ இருக்க வேண்டும். இதுதான் எங்கள் கனவு” என நிறைவு செய்தனர் மூவரும். வித்தியாசமான அணுகுமுறை கொண்ட இவர்கள் ஜெயிப்பது நிச்சயம்!
- ஞா.சுதாகர்,
படங்கள்: ப.பிரியங்கா