நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பாரதிய யுவசக்தி டிரஸ்ட்... - தொழில்முனைவர்களை உருவாக்கும் களம்!

பாரதிய யுவசக்தி டிரஸ்ட்... - தொழில்முனைவர்களை உருவாக்கும் களம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பாரதிய யுவசக்தி டிரஸ்ட்... - தொழில்முனைவர்களை உருவாக்கும் களம்!

பாரதிய யுவசக்தி டிரஸ்ட்... - தொழில்முனைவர்களை உருவாக்கும் களம்!

வித்தியாசமான பிசினஸ் ஐடியா வைத்திருப்பவர்களைக் கண்டுபிடித்து, அவர்கள் பிசினஸில் ஜெயிக்க அனைத்து வகைகளிலும் வழிகாட்டும் அமைப்புதான் பாரதிய யுவசக்தி டிரஸ்ட் (BYST). இந்த நிறுவனம், தனது மூன்றாவது சர்வதேச வழிகாட்டுதல் (Third International Monitering Summit) மாநாட்டினை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தியது. ‘இளம் கிராமத் தொழில்முனைவர்களை அதிகாரம் பெறச் செய்தல்’ என்கிற தலைப்பின்கீழ் இந்த மாநாடு நடந்தது.  

பாரதிய யுவசக்தி டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் லக்‌ஷ்மி வி.வெங்கடேசன், தமிழக அரசின் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், சுந்தரம் ஃபாசனர்ஸ் நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் கிருஷ்ணா, சி.ஐ.ஐ-யின் தமிழகப் பிரிவின் தலைவர் எம்.பொன்னுசாமி உள்படப் பலரும் கலந்துகொண்டனர். பாரதிய யுவ சக்தி டிரஸ்ட்டில் தொழில்முனைவர்களுக்கு வழிகாட்டும் ‘மென்டார்’ களும், அவர்களிடம் பயிற்சிபெறும் தொழில்முனை வர்களும் இந்த மாநாட்டில் உற்சாகக் கலந்துகொண்டது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்.

இந்த மாநாட்டினையொட்டி, பிசினஸ் ஐடியா கான்டஸ்ட் என்கிற புதிய தொழில்களுக்கான ஐடியா போட்டி ஒன்றை நடத்தியது பாரதிய யுவசக்தி டிரஸ்ட். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பிசினஸ் ஐடியாக்களை இந்தப் போட்டிக்கு அனுப்பினர். அவற்றில் சிறப்பான மூன்று பிசினஸ் ஐடியாக்களைத் தேர்வுசெய்து, அவர்களுக்குப் பரிசுகளையும் தந்தது பாரதிய யுவசக்தி டிரஸ்ட். பிசினஸ் ஐடியா கான்டஸ்ட்டில் வெற்றி பெற்ற ஐடியாக்கள் பற்றி சுருக்கமாக இனி...

பாரதிய யுவசக்தி டிரஸ்ட்... - தொழில்முனைவர்களை உருவாக்கும் களம்!

   ஸ்மார்ட் மிரர்ஸ்

இந்தப் போட்டியில் மூன்றாம் பரிசினைப் பெற்றார் சென்னையில் உள்ள எஸ்.ஏ பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படிக்கும் 21 வயது மாணவர் விவேக். திருவள்ளூரில் வசிக்கும் இவர், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். `ஸ்மார்ட் மிரர்ஸ்’ என்கிற இவரது பிசினஸ் ஐடியாவுக்கு விருது தரப்பட்டது. ‘ஸ்மார்ட் மிரர்ஸ்’ என்பது மாற்றுத் திறனாளி களுக்காகவும்,  வயதானவர் களுக்காகவும் உருவாக்கப்பட்டது. வீட்டில் உள்ள மின்சாதனப் பொருள்களின் சுவிட்ச்களை இவர் கள் இருந்த இடத்தில் இருந்தபடியே செல்போன் மூலம் இயக்குவதுதான் இந்த ஸ்மார்ட் மிரர்ஸ்.  வீட்டிலுள்ள அனைத்து சுவிட்ச்களையும் மொபைல் ஆப்பில் இணைத்துவிட்டு, அதன் தொடுதிரையைக்  கண்ணாடியுடன் இணைக்கப்படும். இதில் பொருத்தப்பட்டுள்ள சைகைகளைப் (Hand        Gesture) புரிந்துகொள்ளும் சென்சார்மூலம் எல்லா சுவிட்ச்களையும் உட்கார்ந்தபடியே இயக்கி விடலாம். பார்வைத் திறன் குறைபாடு உடையவர்கள் ஒலி வடிவில் வரும் கமென்ட்களுக் கேற்ப தகவலைப் பரிமாறும் விதமாகவும் இந்த ஆப் அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.

   கோகோ கப்ஸ்

தேங்காய் உடைத்தபின் தூக்கியெறியப்படும் கொட்டாங்குச்சியைப் பயன்படுத்தி, பனிமலர் தந்த ‘கோகோ கப்ஸ்’ பிசினஸ் ஐடியாவுக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த வரான பனிமலர், மிகுந்த சிரமங்களுக்கிடையில் சென்னை லயோலா கல்லூரியில் முதுகலைக் கணிதம் படித்துவருகிறார். தனக்குத் தொழில் கடன் கிடைத்தால், இந்த பிசினஸ் ஐடியாவை இன்னும் பெரிய அளவில்கொண்டு செல்லத் திட்டமிட்டிருக்கிறார் பனிமலர்.

பாரதிய யுவசக்தி டிரஸ்ட்... - தொழில்முனைவர்களை உருவாக்கும் களம்!

   கொசு நுழையா உறை

எந்த ஊரில் வசித்தாலும், கொசுக்கடி இல்லாத இரவுத் தூக்கம் என்பது அபூர்வமான அனுபவம்.  இந்தப் பிரச்னைக்கு ஓர் எளிய தீர்வினைக் கண்டு பிடித்திருக்கிறார் கலைச்செல்வன். இவர் உருவாக்கியுள்ள கொசு நுழையா உறையை, கை மற்றும் கால்களில்  மாட்டிக்கொள்வதன் மூலம் கொசுக்கடியிலிருந்து தப்பிக்கலாம். இவரின் இந்தக் கண்டுபிடிப்பு இரவு நேரப் பணியாளர்களுக்கு மிகவும் உதவும். 

இந்த உறையை உருவாக்கிய கலைச்செல்வனின் வாழ்க்கை, போராட்டம் மிகுந்தது. தற்போது சித்த மருத்துவராக இருக்கும் இவர், ஏழ்மையான குடும்பப் பின்னணியைக்கொண்டவர். வங்கியில் கல்விக் கடன்  பெற்றுக் கல்லூரிப் படிப்பை முடித்தவர்,  தற்போது சென்னை செயின்ட் தாமஸ் மவுன்ட்டில் சித்த மருத்துவ மனை ஒன்றை நடத்தி வருகிறார்.

சிறந்த பிசினஸ் ஐடியாக்களுக்குப் பரிசு வழங்கியபின், பாரதிய யுவ சக்தி டிரஸ்ட்டின் வழிகாட்டுதலின் படி செயல்பட்டு, இன்றைக்குப் பெரிய அளவில் தொழில் செய்யும் மூவருக்கு ‘எமர்ஜிங் ஆன்ட்ரபிரனர் அவார்டு’ அளித்து கெளரவிக்கப் பட்டது. அந்த மூன்று தொழிலதி பர்கள் குறித்து இனி பார்ப்போம். 

   ரூ.12 லட்சம் டூ ரூ.2.72 கோடி


27 வயதான பாபு, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர், தனது நண்பர்களுடன் மயூரா ஹெல்த் புராடக்ட்ஸ் என்னும்  நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த ஹெல்த் புராடக்ட்ஸ் முழுக்க முழுக்க இயற்கை தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. சென்னையில்  தொடங்கப்பட்ட இவருடைய தயாரிப்புகள், இன்று ஆஸ்திரேலியா, மலேசியா என பல நாடுகளுக்கு ஏற்றுமதி  ஆகின்றன.  பாபு, இந்தத் தொழிலை ஆரம்பிக்க  வங்கிக் கடனாகப் பெற்ற தொகை ரூ.12 லட்சம். ஆனால், இன்று ஆண்டுக்கு ரூ.2.72 அளவுக்கு டேர்ன் ஓவர் செய்கிறார். 

பாரதிய யுவசக்தி டிரஸ்ட்... - தொழில்முனைவர்களை உருவாக்கும் களம்!

   செயற்கைப் பற்கள்

கட்டடத் தொழிலாளியின்  மகளான ஜெனிபர், இன்று 15  பணியாளர்களுக்கு நேரடியாகவும், 75 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைத் தந்து வருகிறார். 

செயற்கையான பற்கள் மற்றும் பல் மூடிகள் தயாரிக்கும் ஆஸ்கர் டென்டல் மேனுஃபேக்சர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார். இந்த நிறுவனத்தின் டேர்ன்ஓவர்  ரூ.45 லட்சம். இவரது தயாரிப்பு களைச் சென்னையில் உள்ள 70 டென்டல் கிளினிக்குகளுக்கு விநியோகம் செய்கிறார். இன்னும் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் 13 சிறு நகரங்களில் தனது நிறுவனத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறார் ஜெனிபர்.

   ஜீரோ டு ரூ.15 கோடி

முதல் தலைமுறையைச் சேர்ந்த  பிசினஸ்மேனான சம்பத், இன்றைக்கு ஆண்டுக்கு ரூ.15 கோடி அளவுக்கு டேர்ன்ஓவர் செய்கிறார். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பிரிவில் டிப்ளமோ முடித்த இவர், 1999-ம் ஆண்டில் பவர் பிளான்ட் மற்றும் காஸ் ஸ்டேஷன்களுக்கு டிசைன் செய்துதரும்  சிமி டிசைன்ஸ் (Shimi Designs and Consulting Engineers Pvt. Ltd) நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். ``எப்போதும் வசதியாக வாழ்ந்துவிட்ட நாம், சின்னச் சின்னக் கஷ்டங்களைத் தாண்டி வராவிட்டால், நிச்சயமாக பிசினஸில் வெற்றி காண முடியாது’’ என்கிறார். 

சொந்தமாகத் தொழில் செய்ய வேண்டும் என்று கனவு காண்பவர் களுக்கு அதை எப்படிச் சாத்தியப் படுத்துவது என்று தெரியாது. இவர்கள் பாரதிய யுவ சக்தி டிரஸ்ட்டைத் தொடர்புகொண்டு வழிகாட்டுதல் பெற்றால், பிசினஸில் ஜெயிப்பது நிச்சயம்! 

-சக்தி தமிழ்ச்செல்வன்

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

இளைஞர்களுக்குத் தொழில் வாய்ப்புகள்!

பாரதிய யுவசக்தி டிரஸ்டின் செயல்பாடுகள் குறித்தும் அதன் ஒருங்கிணைப்பாளர்  லக்‌ஷ்மி வி.வெங்கடேசன் நம்மிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னார். முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனின் மகள் இவர்.

பாரதிய யுவசக்தி டிரஸ்ட்... - தொழில்முனைவர்களை உருவாக்கும் களம்!

``கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள், எளிய மனிதர்கள், பெண்கள் ஆகியோர் பயன்பெற்று வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்பதற்காக 1992-ல் பாரதிய யுவ சக்தி டிரஸ்ட் அமைப்பினைத் தொடங்கினேன். கிராமப்புற மற்றும் நகரங்களைச் சேர்ந்த ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பல   இளைஞர்கள் இந்த அமைப்பினால் பலன் அடைந்துள்ளனர். தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கு வங்கிகளில் கடன் உதவி பெற்றுத் தருவதுடன் நிற்காமல்,   அவர்கள் நடத்தும் தொழிலை இன்னும் சிறப்பாக நடத்தத் தேவையான யோசனைகளைத் தந்துவருகிறோம். எங்கள் அமைப்பில் உள்ள மென்ட்டார்கள், இந்த வழிகாட்டுதலை எந்தவிதமான லாபநோக்கமும் இன்றி செய்துவருகிறார்கள்.

கிராமப்புறத்திலிருந்து தொழில் தொடங்கி நடத்துபவர்களுக்கு கார்ப்பரேட் நிறவனங்களிலிருந்து அனுபவமிக்க வழிகாட்டிகளைப் பெற்றுத்தருகிறோம். தொலைநோக்குப் பார்வையும், அனுவமும்மிக்க அவர்களின் வழிகாட்டுதலின்படி பலர் இன்று குறிப்பிட்டுச் சொல்கிற அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள். 

எங்கள் அமைப்பின் மூலம் தொழில்முனைவரான பலரும், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல விருதுகளை வாங்கியுள்ளனர். இதுவரை 5,25,000 இளைஞர்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தியதுடன், கலந்தாய்வு செய்துள்ளோம். பொதுத்துறை வங்கிகளின் மூலம் 240 கோடி ரூபாய் வரையில் கடன் உதவி பெற்றுத் தந்துள்ளோம். 7,000 நிறுவனங்கள் அமைப்பதற்கு உதவி செய்துள்ளோம். 2,50,000-க்கும் அதிகமான இளைஞர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். இன்னும் பல இளைஞர் களையும் பெண்களையும் தொழிலதிபர்களாக்க வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டம்” என்றார் நம்பிக்கையுடன்.