
ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)ஓவியங்கள்: ராஜன்
கோவா விமானநிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தாள் தான்யா. அவளுடைய விமானம் இன்னும் மூன்று மணி நேரத்தில் டேக்-ஆஃப் ஆகும்.
காலையில் அவள் மிகவும் மோசமான `மூடில்’ இருந்தாள். பீச்சில் சந்தித்தபின்பு, வருண் மீண்டும் காணாமல் போய்விட்டான். அவள் தங்கியிருக்கும் அறை வரை அவளைக் கொண்டுவந்து விட்டு விட்டு ஒரு குட்பைகூடச் சொல்லாமல் போய் விட்டான். தொடர்ந்து தொடர்பில் இருப்போம் என்பது போன்று அவனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. அவன் எப்படித் திடீரென்று வந்தானோ, அதுபோலவே எந்தத் தகவலையும் சொல்லாமல் திடீரென்று காணாமலும் போய்விட்டான்.
தான்யாவின் சிந்தனையைக் காவல்துறையின் சைரன் கலைத்தது. தான்யா பஸ்ஸின் ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். அவள் தவறான பாதையில் வந்துகொண்டிருந்த மூன்று போலீஸ் வேன்களையும், இரண்டு ஃபயர் என்ஜின் வண்டி களையும் பார்த்தாள். அவர்கள் மிகவும் அவசரத்தில் இருந்தது தெரிந்தது. வண்டிகள் நகர முடியாமல் அங்கங்கே நின்று கொண்டிருந்ததால் டிராஃபிக் ஸ்தம்பித்தது. அவள் வாட்சைப் பார்த்தாள், விமானத்தைத் தவறவிட்டுவிடுவோமோ எனக் கவலைப்பட்டாள்.

அவள் விமான நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்த பஸ் நிறுத்தப்பட்டது. அவளுடைய சக பணியாளர்களில் சிலர் என்ன பிரச்னை என்று தெரிந்துகொள்வதற்காக பஸ்ஸை விட்டுக் கீழே இறங்கிச் சென்றனர். அப்படிச் சென்றவர் களில் திரும்பிய ஒருவர், ‘‘நேற்றிரவு `டிட்டோ’ஸ் பப்’புக்குப் பக்கத்தில் கலவரமாம். போதை மருந்து விற்பது சம்பந்தமாக இரண்டு கோஷ்டிகளுக் கிடையே ஏரியா தகராறு. நைஜீரியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அந்தக் கோஷ்டிகள் தங்களுக்குள் தெளிவாக ஏரியாவை பிரித்துக் கொண்டு அதற்குள் சுதந்திரமாக வியாபாரம் செய்து வருகிறார்கள். இந்தியக் கோஷ்டியின் எல்லைக்குள் நைஜீரியக் கோஷ்டி வந்து வியாபாரம் செய்து `எழுதப்படாத சட்டத்தை’ அவர்கள் மீறியதால், இந்திய கோஷ்டி நைஜீரியக் கோஷ்டியைச் சேர்ந்த சிலரைத் தாக்கியிருக்கிறது. டிட்டோ’ஸ் நிர்வாகம் உடனே போலீசைக் கூப்பிட்டிருக்கிறது. போலீஸ் வந்தவுடன் எல்லோரும் கலைந்துபோயிருக்கிறார்கள். ஆனால், இன்றைக்குக் காலையில், சில நைஜீரியர்கள் பதிலுக்குத் தாக்கியிருக்கிறார்கள். இரு கோஷ்டிகளுக்கும் நடந்த தெருச் சண்டையில் ஒரு நைஜீரியன் கொல்லப்பட்டிருக்கிறான்’’ எனக் கூறி முடித்தார்.
‘`சரி, அதுக்கு ஏன் டிராஃபிக் ஜாம்?”

‘`இங்கிருக்கும் நைஜீரிய சமூகத்தைச் சேர்ந்த எல்லோரும் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரோட்டிற்கு வந்து வன்முறையில் ஈடுபட்டிருக்கின்றனர். இரண்டு போலீஸ் ஜீப்புகளுக்கு வேறு தீ வைக்கப்பட்டிருக்கிறது. சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போலீசார் போராடி வருகின்றனர். நாம் இங்கிருந்து திரும்பச் சென்றுவிடுவது நல்லது’’ என அவர் மேலும் கூறினார்.
‘`ஷிட், ரொம்பவும் மோசம்’’ என்ற தான்யா, ‘`ஆனா, நமக்கு விமானத்துக்கு இன்னும் இரண்டு மணிநேரம் இருக்கு. அதனால இங்கேயே காத்திருக்கலாமே’’ என்றாள்.
அவளுடைய சக பணியாளர்களில் ஒருவர், ‘`இந்தத் தடுப்பை மீறி நாம் செல்ல முடியுமென்று தெரியவில்லை. இங்கேயே உட்கார்ந்திருப்பது பாதுகாப்பானதில்லை. நைஜீரியர்கள் எப்போது இந்தப் பக்கம் வந்து நமது பஸ்ஸைத் தாக்குவார்கள் எனத் தெரியாது. எனவே, நாம் திரும்பிப்போவது நல்லது” என்றார்.
தான்யாவைத் தவிர, அனைவரும் அதற்கு உடன்பட்டனர். அவள் எப்படியாவது மும்பைக்குச் சென்றுவிட வேண்டுமென்கிற முனைப்பில் இருந்தாள். தான்யா இப்போதுதான் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பை முடித்து விட்டு, அவள் துறை சம்பந்தமாகப் பிரத்யேகப் படிப்பு ஒன்றில் சேருவ தற்குச் சம்மதித்திருக்கிறாள். அந்தப் படிப்பு இன்னும் நான்கு மாதங்களில் ஆரம்பமாகவிருக் கிறது. அவளுடைய அம்மா கட்டா யப்படுத்தியதால் இடைப்பட்ட காலத்தில் அவள் இந்தியாவுக்கு வரச் சம்மதித்தாள்.
ஒருவழியாக, அன்று மாலை நிலைமை கட்டுக்குள் வந்தது. தான்யாவும், அவள் குழுவினரும் தடைகள் எதுவுமில்லையென்று அறிந்தவுடன் விமான நிலையத்துக்கு விரைந்தனர். ஒரு வழியாக, கோவாவிலிருந்து மும்பைக்குச் செல்லும் கடைசி விமானத்தில் செல்ல டிக்கெட்டுகள் கிடைத்தன.
அவர்கள் நள்ளிரவில் மும்பையைச் சென்றடைந்தனர். அங்கிருந்து தான்யா டாக்ஸியில் வீட்டைச் சென்றடைந்தபோது நள்ளிரவு 1 மணி. அவளுடைய அம்மாவை அந்த நேரத்தில் எழுப்ப வேண்டாம் என்று நினைத்து, தன்னிடம் இருந்த சாவி மூலம் வீட்டைத் திறந்து சத்தம் போடாமல் வீட்டிற்குள் நுழைந்தாள். வீடு கன்னாபின்னா வென்றிருந்தது. வீட்டு வேலைக்கு வரும் மூன்று வேலைக்காரர்களும் அன்று வரவில்லை போல. அவள் அம்மாவின் படுக்கையறைக்குச் சென்றாள். படுக்கையில் படுத்திருந்த அம்மாவின் உடை கலைந்திருந்தது. அசைவு எதுவுமில்லை.

தான்யாவை பயம் தொற்றிக் கொண்டது. அவள் வேகமாக அம்மா படுத்திருந்த பக்கம் சென்று அம்மாவைத் திருப்ப நினைத்தபோது அம்மாவிடமிருந்து முனகல் சப்தம் கேட்டது. கண்கள் மூடியிருந்தன. ஒருவேளை அதிகமாகக் குடித்திருக்கலாம் என நினைத்துக்கொண்டாள். அவளுக்கு ஓரளவு நிம்மதி திரும்பியிருந்தாலும், எரிச்சலாக இருந்தது.
அவர் வந்திருக்கக்கூடும். கோபத்தோடு தரையில் ஓங்கி உதைத்துவிட்டு, அவளது அறைக்குச் சென்றாள். அம்மாவுடைய வாழ்க்கை சம்பந்தப் பட்ட யாருடனும் இவளுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் `அவர்’ மட்டும் பிரச்னையாக இருந்தார்.
மும்பை
சிங்கப்பூருடனான `கான்கால்’ பெருங்கேடாக முடிந்தது. மாள்விகா மிகவும் வசதியாக சுவாமியைக் குற்றம் சாட்டினார். “முதன்முதலாக நடக்கும்போதே இந்தப் பிரச்னையை அடையாளம் கண்டுகொண்டு அதைத் தடுப்பதற்கு முன்யோசனையுடன் செயல்பட்டிருக்க வேண்டும்” என்றார். சுவாமிக்கு அது திகைப்பை ஏற்படுத்தியது. இந்திய வணிகச் செயல்பாட்டுக்கு ஆதரவாக அவர்களோடு நிற்பதற்குப் பதிலாக குளோபல் டீமுக்கு ஆதரவாகப் பேசினார். `டைம்ஸ் ஆஃப் இண்டியா’வினுடைய முதல்பக்க செய்தி ஒரு கரும்புள்ளியாக இருந்தது.

‘`சுவாமி, உங்கள் குழுவிலிருந்துதான் யாரோ ஒருவர் மீடியாவுடன் பேசியிருக்க வேண்டும். நீங்கள் உங்கள் குழுவைக் கட்டுப்பாடோடு வைக்கத் தவறிவிட்டீர்கள்” என்று மாள்விகா போனில் கூறினார். சுவாமிக்கு அது ஆச்சர்யமாக இருந்தது. மீடியாவில் வந்த கட்டுரைக்குப் பொதுஜன தொடர்புத்துறைத் தலைவரான மாதுரிதான் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், மாதுரி, மாள்விகாவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால், இவர் அவரைப் பாதுகாக்க முயற்சி செய்கிறார் என சுவாமி நினைத்துக்கொண்டார்.
‘`எங்களுக்கு ஒருநாள் அவகாசம் கொடுங்கள் மாட் (Matt). நாங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறோம் என்பது குறித்து ஒரு உறுதியான முடிவோடு வருகிறோம்’’ என்று மாள்விகா ரீடெயில் பேங்கின் பிராந்தியத் தலைவரான மாட் மெட்ஸ்கரிடம் (Matt Metzger) கூறிவிட்டு, ‘`அதுவரைக்கும் பீட்டர் பாரனைக் (Peter Baron) கொஞ்சம் கவனித்துக்கொள்ளுங்கள்” என்றார். பீட்டர் பாரன் பிராந்திய சி.இ.ஓ, `மாட்’டினுடைய நண்பர், மாள்விகாவின் பாஸ்.
‘`நான் முயற்சி செய்கிறேன்’’ என்று போனை வைத்த மாட், இன்னொரு நம்பருக்கு டயல் செய்தார். ‘`பீட்டர், ஒரு நிமிஷம் பேசலாமா?’’
‘`இரண்டு நிமிஷம் பேசலாம்! என்ன வேண்டும் மாட்?’’
‘`இண்டியாவின் சி.இ.ஓ–வுக்கு ரீடெயில் பேங்கிங்கில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ஆனால். எல்லாம் தெரிந்தமாதிரி நடந்துகொள்கிறார். ரீடெயில் பேங்கோட தலைவர் சரியாத்தான் நடந்துகொண்டிருக்கிறார். ஆனால், அவருக்கும் சி.இ.ஓ–வுக்கும் இணக்கமான உறவு இல்லை.’’
‘`எனக்கு வயசாயிட்டு வருது, நீங்க என்ன சொல்றீங்க?’’
‘`தலைமைப் பொறுப்பில் இருப்பவர், அனைத்து மேலதிகாரிகளுக்கும் முன்னிலையில், தனக்குக் கீழே இருப்பவர்களை மிகவும் தாழ்வாக நடத்துகிறார். இவர் கண்டிப்பாக ஒரு உத்வேகமுள்ள தலைவராக ஒருபோதும் இருக்க முடியாது.’’

‘`உங்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் வரும் சுவாமியைக் குற்றம்சாட்டியதில் உங்களுக்கு வருத்தமா?’’
‘`என்னைவிட உங்களுக்கு அதிகம் தெரியும், பீட்டர். நான் சுவாமியைக் கவனமாகப் பார்த்துவிட்டுத்தான் இதைச் சொல்கிறேன். யாராவது ஒருவர் இந்த ஃபிஷிங் படுதோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் இந்த ஸ்கேம்மீது இதுவரை அதிகமாக எதுவும் செய்யவில்லை என்றாலும் மிகவும் `ரெஸ்பான்சிவாக இருக்கிறார்கள். நாம் இந்த மோசடியில் பணத்தை மட்டும் இழக்கவில்லை. மாறாக, நமது பிராண்டின் மதிப்பும் மாபெரும் ரிஸ்க்கில் இருக்கிறது’’ என்றார்.
‘‘சொல்லுங்கள், நான் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்.’’
‘`வளர்ந்துவரும் இந்தப் பெரிய சந்தைக்கு மாள்விகாவுக்கு மாற்றாக வேறு யாரையாவது நியமிக்க நீங்கள் யோசிக்க வேண்டும்’’ என்றார்.
‘`அதாவது… அவரை வேலையிலிருந்து தூக்க வேண்டும்?”
‘`யெஸ்’’- மாட் சிரித்தார்.
‘`முடியாது.’’
‘`முடியாதா அல்லது செய்ய விருப்பமில்லையா?” பீட்டருடன் இதுமாதிரி நக்கலாகப் பேச மாட் விரும்புவதுண்டு.
‘`முடியாது என்று நான் சொன்னதை நீங்கள் கேட்க வில்லையா?”
‘`உங்கள் அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் அர்த்தத்தில் இல்லாமல், ஒரு சுவாரஸ்யத்துக்காகத்தான் கேட்கிறேன், ஏன் முடியாது பீட்டர்?”
‘`பல காரணங்கள். அதில் முக்கியமானது, அந்தப் பெண்ணுக்கு முக்கியமான இடங்களில் தொடர்பு இருக்கிறது. அவரைத் `தூக்கினால்’ நமக்குத்தான் சிக்கல்’’ என்றார்.
‘`எப்படி?”
‘`மாட், நாம் இப்போதைக்கு அந்த முடிவை எடுக்க முடியாது என்பதை மட்டும் நீங்கள் தெரிந்து கொண்டால் போதும்.’’.
‘`அதற்குள் அவர் முழு ஃப்ரான்சைஸையும் சொதப்பிவிடு வார்’’ என்று மாட் புலம்பினார். ‘`அவர் இன்று விவாதித்தைப் பார்த்தால், கேலிக்கூத்தாக இருந்தது. அவர் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் பகுதி உலகத்திலிருந்தே தனியாகிவிட்டதுபோல பேசுகிறார். அவர் இந்தியா தவிர, வேறெந்த நாட்டிற்காவது சி.இ.ஓ–வாக இருந்தால் நானே நடவடிக்கை எடுத்திருப்பேன்.’’
‘`எனக்குத் தெரியும். இதுபற்றி என்னிடம் நீங்கள் இன்றுதான் சொல்கிறீர்கள். ஆனால், நானோ அவரைத் `தூக்க’ 15 மாதங்களாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். அதற்கான சாய்ஸ் என்னிடம் இல்லை.’’
‘`பீட்டர், சாய்ஸ் இல்லை என்றீர்கள். இப்போது உங்களுக்கு அந்த சாய்ஸ் கிடைத்திருக்கிறது!’’
(பித்தலாட்டம் தொடரும்)
தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்

ஆம்பிட்டை விட்டு விலகுகிறார் சவுரப் முகர்ஜி!
பங்கு நிறுவனங்களின் வருமானம் உள்பட பல்வேறு விஷயங்களை அலசி ஆராயும் ஆம்பிட் கேப்பிட்டல் நிறுவனத்தின் சி.இ.ஓ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் சவுரப் முகர்ஜி. இவர் அந்த நிறுவனத்தில் எட்டு ஆண்டுகள் வரை பணி புரிந்திருக்கிறார்.
“நிதித் துறையில் இருபது ஆண்டுகள் வேலை பார்த்துவிட்டேன். சொந்தமாக ஒரு நிதித் துறை நிறுவனத்தைத் தொடங்கி நடத்த வேண்டும் என்பது என் ஆசை. எனினும், அதுபற்றி இறுதி முடிவை நான் இன்னும் எடுக்கவில்லை’’ என்று சொல்லும் சவுரப், வருகிற செப்டம்பரில் ஆம்பிட் கேப்பிட்டல் நிறுவனத்தைவிட்டு வெளியேறுவாராம்!