
சுமதி மோகனப் பிரபு
கடந்த 2018-19-ம் நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்தே, தகவல் தொழில்நுட்பப் பங்குகளின் உதவியுடன் மேல்நோக்கிப் பயணித்து வருகிறது உலகம் முழுக்க உள்ள பங்குச் சந்தைகள். அதேசமயம், நமது இரண்டு முக்கியப் பங்குச் சந்தைகளும் கடந்த இரண்டு வாரங்களாக மேல்நோக்கிச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றன. சந்தைகளின் இந்தத் தடுமாற்றத்துக்கு என்ன காரணம், இந்தக் காரணங்கள் சாமான்யர்களை எப்படிப் பாதிக்கும் என்பது குறித்த கேள்விகள் முக்கியமானவை.
அமெரிக்கச் சந்தைகளின் தாக்கம்
வருகிற 2020-ம் ஆண்டுக்கான அமெரிக்க அரசாங்கத்தின் கடன் ஒரு ட்ரில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.66 லட்சம் கோடி) அளவை எட்டும் என்கிற அச்சத்தில், அமெரிக்க அரசின் பத்தாண்டு கடன் பத்திரத்தின் வட்டி விகிதம் 3 சதவிகிதத்தை மீண்டும் எட்டியுள்ளது.
எதிர்பார்த்ததைவிட அதிகமான தொழில் வளர்ச்சி மற்றும் வேகமாக அதிகரிக்கும் பண வீக்கத்தின் அடிப்படையில் அமெரிக்க மத்திய வங்கி 2018-ல் இரண்டு தவணைகளாக 0.50% வரை வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற பயமும் அமெரிக்கச் சந்தைகளை ஆட்டிப் படைக்கிறது.

இந்தியாவுக்கும் பாதிப்பு
அமெரிக்க வட்டி விகிதத்தில் ஏற்பட்ட வேகமான மாற்றங்கள் இந்தியக் கடன் சந்தையையும் விட்டு வைக்கவில்லை. ஏப்ரல் 2018 மாதத்தில் மட்டும் அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.6,500 கோடிக்கும் அதிகமான மதிப்பில் இந்தியக் கடன் பத்திரங்களை விற்பனை செய்திருக்கிறார்கள். இதன் விளைவாக, கடந்த 20 நாள்களில் மட்டும் நமது பத்தாண்டுக் கடன் பத்திர வட்டி விகிதம் 7.13 சதவிகிதத்திலிருந்து 7.73 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
நிதியியல் கொள்கை குழுவின் அறிக்கை
ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா 1934 சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நிதியியல் கொள்கை குழுவின் பத்தாவது அமர்வின் அறிக்கை, கடந்த ஏப்ரல் 19-ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. சர்வதேச சந்தையில் அதிகரித்துவரும் கச்சா எண்ணெய் விலை, இந்தியாவில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையும் தற்போது அதிகமாக உள்ளதால், உள்ளூர் சந்தையில் பெட்ரோல் வரிகளைக் குறைக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இந்திய மத்திய வங்கி யானது தற்போது பின்பற்றிவரும் மத்திம அல்லது மென்மையான நிதிக் கொள்கையினை (Neutral Monetary Stance) மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.
இந்த அறிக்கையின் தொடர்ச்சியாக, இந்திய கடன் சந்தையில் வட்டி விகிதம் வேகமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 6.13 - 6.15% வட்டி என்கிற அளவிலேயே 2-3 மாதக் கடன் பத்திரங்களை விநியோகித்துவந்த ரிலையன்ஸ் நிறுவனம், கடந்த 20.4.2018 அன்று 7.10% வட்டி அளவில் மூன்று மாதக் கடன் பத்திரங்களை விநியோகம் செய்தது.
இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் சக்தி வாய்ந்த நிறுவனமான ரிலையன்ஸே வட்டியை உயர்த்தித் தரவேண்டிய நிலைக்கு ஆளாகியிருக் கிறது என்றால் மற்ற சிறு, குறு நிறுவனங்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை.
வர்த்தகப் பற்றாக்குறை
தனது பெட்ரோலியத் தேவை களுக்குப் பெருமளவு இறக்குமதி யையே சார்ந்திருக்கும் இந்தியப் பொருளாதாரம், கடந்த நான்கு ஆண்டுகளாகக் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பலனை நன்கு அனுபவித்து வந்தது.
ஆனால், ஒரு நாட்டின் முக்கியத் தேவையான ஏற்றுமதி வளர்ச்சியில் கோட்டை விட்டதன் காரணமாக, சர்வதேச வர்த்தகம் பெருமளவில் உயர்ந்துவரும் தற்போதைய உலகப் பொருளாதாரச் சூழலிலும்கூட, (நமது போட்டி நாடுகளான பங்களாதேஷ், வியட்நாம் போன்ற நாடுகள் ஏற்று மதியில் பெருமளவு வளர்ச்சி அடைந்துவரும் நிலையில்), இந்தியா மட்டும் ஏற்றுமதியில் மந்தமாக இருப்பது கவலைக்குரிய விஷயமாகும்.
கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்ததும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (CAD - Current Account Deficit) எனப்படும் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக் குறை உயரத் துவங்கியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், 2013-ம் ஆண்டில் ஏற்பட்ட ‘கரன்சி ஷாக்’ மீண்டும் ஒருமுறை இந்தியா விற்கு அதிர்ச்சி வைத்தியம் தரலாம் என்று சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.
வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் கடன் சந்தையில் அந்நிய முதலீட் டாளர்களின் விற்பனையின் விளைவாக இரண்டு வாரங்களுக்கு உள்ளாகவே டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இரண்டு ரூபாய் அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.
பங்கு சந்தையில் தாக்கம்
இந்தியக் கடன் சந்தை மற்றும் அந்நியச் செலாவணி சந்தையில் வீழ்ச்சி தொடர்ந்தால், பங்கு சந்தையும் பாதிப்படையும். ஏற்கெனவே சொன்னபடி, கடன் வட்டி விகித உயர்வு இந்தியத் தொழில் நிறுவனங் களின் செலவினங்களைப் பெருமளவு பாதிக்கும். அந்நியச் செலாவணியில் கடன் பெற்றிருப்பவர்கள், அதிக தொகையைத் திருப்பித் தர வேண்டியிருக்கும். தொடர்ச்சியான ரூபாய் வீழ்ச்சி, அந்நிய முதலீட்டாளர்ளைப் பங்கு சந்தையிலிருந்தும் வெளியேற தூண்டும்.
அதேசமயம், தகவல் தொழில் நுட்பம், மருந்துப் பொருள் உற்பத்தி எனப் பணவீக்கம் மற்றும் கடன் வட்டி விகித உயர்வினால் பாதிப்பு இல்லாத துறை சார்ந்த ஏற்றுமதி நிறுவனங்கள் ரூபாய் வீழ்ச்சியினால் பலன் பெறுவர்.
சாமான்யர்களின் நிலை
ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு உயர்வதால், தங்க நகைகளின் விலை அதிகமாக லாம். ரூபாய் வீழ்ச்சி தொடரும் பட்சத்தில், பெட்ரோலியப் பொருள்களின் விலைஉயர்வு, பெருமளவு சாலைப் போக்குவரத்தைச் சார்ந்துள்ள அன்றாடம் தேவைப் பொருள்களின் விலை யையும்கூட அதிகரிக்கச் செய்து, பணவீக்கத்தின் உயர்வுக்கு வழிவகுக்கும். வெளிநாட்டுக் கல்வி, சுற்றுப் பயணங்கள், மருத்துவம் போன்ற வற்றிற்கான செலவினங்கள் அதிகரிக்கும். வைப்புத் தொகை மற்றும் கடன் வட்டி விகிங்கள் உயரும்.
‘சுவாரஸ்யமான காலங்களில் வாழ்வீர்களாக’ என்ற சீனப் பழமொழி ஒன்றுண்டு. சந்தைகளின் வசீகரம் எப்போதும் குறைவதேயில்லை. நாமும் இந்த காலவோட்டத்தில் இணைந்து, நடப்பதை யெல்லாம் ஒரு குழந்தைபோல ஆர்வத்துடன் கவனித்து ரசிப்போமாக!

“அந்த சிட்ஃபண்ட், மோசடி நிறுவனமா இருக்கும்போலத் தெரியுதே!”
“எப்படிச் சொல்ற?”
“பின்பக்கமா நாலஞ்சு கதவு வச்சிருக்காங்க!”
-தெ.சு.கவுதமன்