நிம்மதி தரும் நிதித் திட்டம் -36 - வீடு... கார்... மனைவி... மக்கள்... இளைஞர்களின் கனவு கைகூடுமா?

ஓவியம்: பாரதிராஜா
நாற்பது வயதில் குடும்ப நிதித் திட்டமிடல் குறித்து யோசிக்கத் தொடங்கியது பழைய தலைமுறை. அந்த வயதிலாவது அப்படியொரு எண்ணம் வந்தது பாசிட்டிவான வளர்ச்சி என்றாலும், அந்த வயதில் குடும்ப நிதித் திட்டமிடல் செய்து, அதை நடைமுறைப்படுத்துவதன் மூலம், குடும்பத்தின் எதிர்காலத் தேவைகளை முழுமையாக நிறைவேற்றிக்கொள்ள முடியாது.
குடும்ப நிதித் திட்டமிடலைச் செய்து, 25 வயதிலேயே அதை நடைமுறைப்படுத்த தொடங்கிவிட வேண்டும். இதை இந்தக் காலத்து இளைஞர்களில் பலர் நன்றாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இளைஞர்களில் ஒருவர்தான் மதுரையைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன். குடும்ப நிதித் திட்டமிடல் கேட்டு நம்மை அணுகிய ஹரிகிருஷ்ணனுடன் பேசினோம்.
‘‘என் வயது 25. நான் ஏற்கெனவே ஒரு நிறுவனத்தில் ரூ.27 ஆயிரம் சம்பளத்தில் பணியாற்றி வந்தேன். சமீபத்தில் பெங்களூருவில் உள்ள நிறுவனம் ஒன்றில் சீனியர் இன்ஜினீயராகப் பணியில் சேர்ந்துள்ளேன். தற்போது எனக்கு சம்பளம் ரூ.40 ஆயிரம். அடுத்த வருடத்தின் மத்தியில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருக்கிறேன்.

என் பெற்றோர்கள் பொருளாதார ரீதியாக என்னைச் சார்ந்திருக்கவில்லை. என் சகோதரரின் அலுவலகத்தில் என் பெற்றோருக்கும் சேர்த்து ஹெல்த் பாலிசி உள்ளதால், அவர்களைப் பற்றி எந்தப் பிரச்னையும் இல்லை.
எனக்குக் கிடைக்கும் சம்பளத்திலிருந்து செலவுகள்போக, சில முதலீடுகளைச் செய்திருக்கிறேன். பங்குச் சந்தையில் ரூ.54,000 முதலீடு செய்துள்ளேன். ஆர்.டி, எஸ்.ஐ.பி முதலீடுகளையும் செய்து வருகிறேன். ஆனால், எனக்குச் சில இலக்குகள் உள்ளதால், அதற்கான முதலீடுகளைத் திட்டமிட்டுச் செய்ய விரும்புகிறேன்.
என் திருமணத்துக்குக் குறைந்தது ரூ.2 லட்சமாவது சேர்க்க வேண்டும். சொந்தமாக வீடு, கார் வாங்க வேண்டும் என்று ஆசை. வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்ல வேண்டும் என்பது என் கனவு. இதெல்லாம் எப்போது, எப்படிச் சாத்தியம்..? இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இப்போதிருந்தே திட்டமிட விரும்புகிறேன். இவை அனைத்துக்கும் எப்படித் திட்டமிட்டு முதலீடு செய்வது, எவ்வளவு முதலீடு செய்வது என்று சொன்னால், என் எதிர்கால வாழ்க்கையைத் திட்டமிட மிகவும் உதவியாக இருக்கும்’’ என்றவர், தனது செலவுகள், முதலீடுகள் குறித்த விவரங்களை நமக்கு அனுப்பி வைத்தார்.
வரவு செலவு விவரங்கள் : சம்பளம்: ரூ.40,000, செலவுகள்: ரூ.15,000, ஆர்.டி: 2,500, கல்விக் கடன்: ரூ.10,000 (இன்னும் ரூ.1.5 லட்சம் செலுத்த வேண்டும்), வி.பி.எஃப்: ரூ.1,200, எண்டோவ்மென்ட் பாலிசி: ரூ.200, எஸ்.ஐ.பி முதலீடு: ரூ.5,000.
இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.
“வேலையில் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்தவுடன், ஆசைப்பட்டதையெல்லாம் வாங்கிக் குவிக்கலாம், இஷ்டத்துக்கு ஊர் சுற்றலாம் என்று நினைக்கும் இளைஞர்கள் ஏராளம். ஆனால், 25 வயதில் பொறுப்பை உணர்ந்து நிதித் திட்டமிடல் கேட்டு ஆர்வமுடன் அணுகி இருப்பதைப் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. 25 வயதில் சம்பாதிக்கத் தொடங்கியிருக்கும் அனைத்து இளைஞர்களும் உங்களைப்போலச் சிந்திக்கத் தொடங்க வேண்டும்.
உங்களுக்கான இலக்குகளை உங்களால் தெளிவாக வரையறுத்துச் சொல்ல போதிய அனுபவம் இன்னும் உருவாகவில்லை என்றாலும், அது ஒன்றும் பெரிய தவறில்லை. உங்களுக்கான இலக்குகளை வரிசைப்படுத்தி, தேவையானவற்றுக்கு திட்டமிடலைச்் சொல்கிறேன்.
உங்களுடைய திருமணம், கல்விக் கடனை அடைத்தல், வீடு வாங்குதல், கார் வாங்குதல், குழந்தைகள் படிப்பு என்பதெல்லாம் உங்கள் கனவாகவும், இலக்குகளாகவும் உள்ளன. ஆனால், இன்றைய சூழலில், வருமான அடிப்படையில், உங்களுக்கான இலக்குகளில் என்னென்ன சாத்தியமோ அவற்றுக்கான திட்டமிடலை மட்டும் முதலில் சுட்டிக்காட்டுகிறேன்.
உங்கள் திருமணத்தை எளிமையாகச் செய்து முடிக்க வேண்டும் என்றால்கூட ரூ.2 லட்சம் தேவை. நீங்கள் தற்போது முதலீடு செய்துவரும் எஸ்.ஐ.பி முதலீடுகளின் மூலம் ரூ.65 ஆயிரம் கிடைக்கும். இன்னும் ரூ.1.35 லட்சம் சேர்க்க வேண்டும். அதற்கு மாதம் ரூ.11,900 முதலீடு செய்ய வேண்டும்.
கல்விக் கடனைப் பொறுப்பாகக் கட்டி முடிக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தைப் பாராட்டுகிறேன். நீங்கள் கல்விக் கடனை விரைவில் கட்டி முடிக்க முயற்சி செய்கிறீர்கள். மாதம் ரூ.10 ஆயிரம் செலுத்துவதற்குப் பதிலாக ரூ.5,000 செலுத்திவாருங்கள். இதில் ரூ.5,000 முதலீடு செய்ய வாய்ப்பு கிடைக்கும். இதனுடன் உங்களுக்கு மீதமாகும் 6,000 ரூபாயையும் சேர்த்து மாதம் ரூ.11,000 முதலீடு செய்யவும். பற்றாக் குறைக்குப் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள ரூ.54 ஆயிரத்திலிருந்து பயன்படுத்திக் கொள்ளவும்.
கல்விக் கடனை மாதம் ரூ.5,000 செலுத்திவந்தாலே இரண்டு வருடங்களில் அடைத்துவிடலாம்.
அடுத்ததாக, வீடு வாங்குவது பற்றிக் கேட்டுள்ளீர்கள். பொதுவாகவே, நடுத்தர வருமானம் கொண்டவர்கள் திருமணத்துக்குமுன்னதாக வீடு வாங்குவது குறித்துத் திட்டமிடத் தேவையில்லை. திருமணத்துக்குப்பிறகு மனைவியின் சூழல், வேலை, விருப்பம் போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடுவதே சரியானதாக இருக்கும். 30-32 வயதுவரை வீடு வாங்கும் திட்டத்தைத் தள்ளிப் போடுங்கள்.
ஆனால், சொந்த வீட்டுக்கான வீட்டுக் கடன் வாங்குவதற்குமுன் 40% அளவுக்குப் பணத்தைச் சேர்த்துக்கொள் வது நல்லது. உதாரணமாக, ரூ.50 லட்சத்துக்கு வீடு வாங்குவது எனில், ரூ.20 லட்சம் வரை முன்கூட்டியே சேர்த்துக்கொள்வது அவசியம். திருமணத்துக்குப்பிறகு, மனைவி வேலைக்குப் போகும்பட்சத்தில், மாதம் ரூ.25,000 வீதம், ஐந்து வருடங்களுக்கு முதலீடு செய்துவந்தால், ரூ.20 லட்சம் சேர்க்க வாய்ப்புண்டு.
அடுத்து, வெளிநாட்டுக்குச் சுற்றுலா செல்ல ஆசைப்படுகிறீர்கள். கனவுகள் கலர்ஃபுல்லாக இருப்பதில் தவறில்லை. ரூ.27ஆயிரம் சம்பளத்திலிருந்து குறுகிய காலத்தில் ரூ.40 ஆயிரம் சம்பளத்துக்கு 25 வயதிலேயே உயரக்கூடிய உத்வேகம் உங்களுக்கு இருப்பதால், சில ஆண்டுகளிலேயே உங்கள் வருமானம் இரண்டு மடங்கு உயரும் வாய்ப்பு அதிகம். அப்போது உங்கள் கனவுகள் நிச்சயம் நனவாகும். தற்போது வருமானத்துக்கேற்ப இந்தியாவிலேயே சுற்றுலா செல்ல ரம்மியமான இடங்கள் நிறைய உள்ளனவே.
அடுத்து, இரண்டு குழந்தைகளுக்கான திட்டமிடலைக் கேட்டுள்ளீர்கள். முதலில் ஒரு குழந்தையின் மேற்படிப்புக்குச் சேர்க்கத் தொடங்கலாம். உங்கள் குழந்தையின் மேற்படிப்புக்கு அன்றைய நிலையில் தோராயமாக ரூ.50 லட்சம் ஆகலாம். எனவே, உங்கள் திருமணத்துக்குப்பிறகு மாதம் ரூ.5,500 முதலீடு செய்யத் தொடங்குங்கள்.
தற்போது ஆர்.டி ரூ.2,500 செலுத்தி வருகிறீர்கள். இதனை ஹனிமூன் செல்வதற்குப் பயன்படுத்திக்கொள்ளவும்.
உங்கள் பெற்றோருக்கு ஹெல்த் பாலிசி இருப்பதால், கவலைப்படத் தேவையில்லை. உங்களுக்குத் திருமணத்துக்கு முன்னதாக ரூ.50 லட்சத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளவும். ஆர்.டி செலுத்திவரும் தொகையை பிரீமியம் செலுத்தப் பயன்படுத்திக்கொள்ளலாம். மொத்தமாக ஆண்டு பிரீமியம் செலுத்த சர்ப்ளஸ் இல்லாதபட்சத்தில் மாத பிரீமியம் செலுத்திக்கொள்ளலாம்.
பரிந்துரை : ஃப்ராங்க்ளின் இந்தியா லோ டியூரேஷன் ஃபண்ட் ரூ.6,000, ரிலையன்ஸ் மீடியம் டேர்ம் ஃபண்ட் ரூ.5,000”
குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்குமானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.
Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor - Reg.no - INA200000878
- கா.முத்துசூரியா
எப்போது கார் வாங்கலாம்?
“ஹரியைப் போல, இன்றைய காலகட்டத்தில் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் கார் வாங்க வேண்டும் என்று பலரும் நினைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். கார் வாங்கிவிட்டு, பிறகு முக்கியமான இலக்குகளுக்கு முதலீடு செய்யமுடியாமல் தடுமாறுகிறார்கள். கார் வாங்குவது பெரிய விஷயமே அல்ல. ஆனால், அதற்கான பராமரிப்புச் செலவு, வருடாந்திர சர்வீஸ், இன்ஷூரன்ஸ், டீசல் எனப் பெரிய தொகையை வருமானத்திலிருந்து ஒதுக்க நேரிடும். எனவே, சராசரி வருமானக்காரர்கள் கார் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. இன்றைக்கு வாடகை கார் அமர்த்திக்கொள்வது உள்பட போக்குவரத்து முறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதால், அவற்றைப் பயன்படுத்தினால் பெருமளவில் பணத்தை மிச்சப்படுத்த முடியும். மாதச் சம்பளம் ரூ.1 லட்சம் தாண்டும்போது கார் வாங்க நினைப்பதே சரி.’’

finplan@vikatan.com என்கிற மெயில் முகவரிக்கு உங்கள் குடும்ப நிதி நிலவரங்களைக் குறிப்பிட்டு குடும்ப புகைப்படங்களுடன் அனுப்புங்கள்.
உங்கள் செல்போன் நம்பரைத் தவறாமல் குறிப்பிடவும்.
தொடர்புக்கு: 9940415222