ஃபண்ட் டேட்டா! - 20 - ஆக்ஸிஸ் ஃபோக்கஸ்டு 25 ஃபண்ட்... - பணம் உபரியாக உள்ளவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்!

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)

மியூச்சுவல் ஃபண்டுகளின் கட்டுப்பாட்டு வாரியமான செபி, மியூச்சுவல் ஃபண்டுகளின் வகைகளைச் சமீபத்தில் அறிவித்தது. அந்த அறிவிப்பில் பங்கு சார்ந்த ஃபண்டுகளில் ஃபோக்கஸ்டு ஃபண்டுகளை ஒருவகையாக அறிவித்துள்ளது. இந்த வகைத் திட்டங்கள், தங்களது போர்ட்ஃபோலியோவில் 30 பங்குகளுக்கு மிகாமல் வைத்திருக்க வேண்டும். மேலும், எந்தவகைப் பங்குகளில் (லார்ஜ், மல்டி, மிட், ஸ்மால் கேப்) ஃபோக்கஸ் செய்யப்போகின்றன என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

பிற டைவர்ஃசிபைடு லார்ஜ் கேப் மற்றும் மல்டிகேப் ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த வகை ஃபண்டுகளில் ரிஸ்க் சற்று அதிகம். ஏனென்றால், இந்த வகை ஃபண்டுகளில் கான்சென்ட்ரேஷன் அதிகம். ஆக்ஸிஸ் ஃபோக்கஸ்டு 25 ஃபண்ட் ஒரு ஃபோக்கஸ்டு ஃபண்டாகும்.
இதன் ஃபண்ட் மேனேஜர் ஜினேஷ் கோபானி ஆவார். இவரே ஆக்ஸிஸ் லாங்க் டேர்ம் ஈக்விட்டி என்ற டாக்ஸ் சேவர் ஃபண்டின் மேனேஜரும் ஆவார். இவர் ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்டின் பங்கு சார்ந்த முதலீடுகளின் தலைவரும் ஆவார். இந்த ஃபண்ட் தற்போது ரூ.3,000 கோடிக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.

இந்த ஃபண்ட், நன்றாக லாபம் தரக்கூடிய டாப் 25 நம்பிக்கை பங்கு களில் மட்டும் முதலீடு செய்யும். இந்த 25 பங்குகளை, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள டாப் 200 நிறுவனங்களுக்குள் இருந்து வடிகட்டி எடுக்கிறது. இதன் டாப் 10 ஹோல்டிங்ஸ் 58 சதவிகிதத்துக்கும் அதிகமான வெயிட்டுடன் உள்ளது.
இந்த ஃபண்ட் கன்ஸ்ட்ரக் ஷன், இன்ஜினீயரிங், கேப்பிட்டல் கூட்ஸ், ஆட்டோ, லாஜிஸ்டிக்ஸ், சிமென்ட் போன்ற துறைகளில் ஓவர்வெயிட் டாகவும், ஆயில் அண்டு கேஸ் மற்றும் மெட்டல் துறைகளில் அண்டர் வெயிட்டாகவும் உள்ளது.
அதிக ரிஸ்க் எடுத்தபோதிலும், இந்த ஃபண்டின் பீட்டா சந்தைக்குச் சமமாகவே 1 என்ற அளவில் உள்ளது. இதன் ஆல்ஃபா 4.35 என்ற அளவில் உள்ளது.

இந்தியா வளரும் பொருளாதாரம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆகவே, பல முதலீட்டாளர்கள் வளரும் நிறுவனப் பங்குகளையே வாங்க விரும்புகின்றனர். இந்த ஃபண்டும் வளரும் நிறுவனப் பங்குகளையே வாங்குகிறது. அதுவும் நல்ல தரத்துடன் வளரக் கூடிய பங்குகளையே இந்த ஃபண்ட் வாங்குகிறது. இதற்கு இந்த நிறுவனம் பயன்படுத்தும் முதல் ஃபில்டர் குவாலிட்டி ஆகும். அதற்கடுத்து, வளர்ச்சி என்கிற ஃபில்டர் இந்த நிறுவனத்தின் தேர்வில் வருகிறது. குவாலிட்டியில், மேனேஜ் மென்ட் குவாலிட்டியை முக்கியமாகக் கவனிக்கிறது.
இதன் போர்ட்ஃபோலியோவில் தற்போது சுமார் 70% லார்ஜ்கேப் பங்குகளிலும், எஞ்சியது மிட்கேப் பங்குகளிலும் முதலீடு செய்யப் பட்டுள்ளது. இந்த ஃபண்டின் நான்கில் இரண்டு பகுதி, தொடர்ச்சியாக ஸ்டெடியாக வளரக்கூடிய பங்குகளிலும், ஒரு பகுதியானது அடுத்த ஓரிரு ஆண்டுகளில் அதிக வருமானம் தரக்கூடிய பங்குகளிலும், கடைசிப் பகுதி எதிர்காலத்தில் (5-க்கும் மேற்பட்ட வருடங்களில்) வேகமாக வளரும் என நம்பக்கூடிய பங்குகளிலும் முதலீடு செய்யப்படுகிறது.
இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது (ஜூன் 29, 2012) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், தற்போது ரூ.2,70,100-ஆக உள்ளது. இது கூட்டு வட்டி அடிப்படையில் ஆண்டுக்கு 18.65% ஆகும்.இந்த வகை ஃபண்டுகள் ரெகுலர் மல்டிகேப் ஃபண்டுகளைவிட அதிக ரிஸ்க் உடையவை ஆகும். ஆகவே, ரெகுலர் மல்டிகேப் ஃபண்டுகளை விட சற்றுக் கூடுதல் வருமானம் கிடைப்பதற்காக, சற்று அதிக ரிஸ்க்கை எடுக்க விரும்புபவர்கள், ஆக்ஸிஸ் ஃபோக்கஸ்டு 25 ஃபண்டில், எஸ்.ஐ.பி முறையிலும் மற்றும் சந்தை சரிவுகளைப் பயன்படுத்தி மொத்தமாகவும் முதலீடு செய்யலாம்.

யாருக்கு உகந்தது?
பணம் உபரியாக உள்ளவர்கள், சந்தையைவிட சற்று அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள், பங்கு சார்ந்த முதலீட்டில் மீடியம் ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள், ஏற்கெனவே மியூச்சுவல் ஃபண்டு களில் முதலீடு செய்துள்ளவர்கள், செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்கள்.
யார் முதலீடு செய்யக்கூடாது?
குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், முதலீடு செய்வதற்கு சர்ப்ளஸ் இல்லாதவர்கள், உறுதியான/நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், பங்குச் சந்தை ஏற்ற இறக்கம் குறித்துப் போதிய ஞானம் இல்லாதவர்கள், சந்தையை ஒட்டிய ரிஸ்க்கையே எடுக்க விரும்புபவர்கள்.