
ஓவியம்: அரஸ்
“நான் மும்பையில் இருக்கிறேன். கேள்விகளை அனுப்புங்கள்” என ஷேர்லக்கிட மிருந்து வாட்ஸ்அப் தகவல் வரவே, கேள்விகளை அனுப்பிவிட்டுக் காத்திருந்தோம். சரியாக மாலை ஐந்து மணிக்கு நம் மெயிலுக்கு பதில்களை அனுப்பிவைத்தார். இனி நம் கேள்விகளும், அவரின் பதில்களும்...
சுஸ்லான் எனர்ஜிக்கு செபி அபராதம் விதித்துள்ளதே?
“காற்றலை டர்பைன் தயாரிப்பு நிறுவனமான சுஸ்லான் எனர்ஜி, இன்சைடர் விதிமுறைகளை மீறியதற்காக அந்த நிறுவனத்துக்கு செபி, ரூ. 1.1 கோடி அபராதம் விதித்துள்ளது. இந்த நிறுவனம் பெற்ற சில ஆர்டர்கள் தொடர்பான தகவல்களை செபிக்குத் தெரிவிக்கத் தவறியது தொடர்பாகவே இந்த விதிமீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பிரைஸ் சென்சிட்டிவ் இன்ஃபர்மேஷன் (Price Sensitive Information) எனும் பங்குகளின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தகவலை, ஒன்றுக்கும் மேற்பட்ட முறை செபிக்கு அளிக்கத் தவறியதால் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.’’

நிதி நிறுவனங்களின் காலாண்டுகள் முடிவுகள் எப்படி?
“கலவையாக வந்துகொண்டிருக்கின்றன. பல முன்னணி நிறுவனங்களின் மார்ச் மாத நிதிநிலை சொல்லிக்கொள்ளும்படி பாசிட்டிவாக இல்லை.
தனியார் துறையைச் சேர்ந்த ஆக்ஸிஸ் பேங்க், முதன்முதலாக ஒரு காலாண்டில் நிகர இழப்பைச் சந்தித்துள்ளது. வாராக் கடனுக்கான ஒதுக்கீடு மூன்று மடங்கு அதிகரித்ததால், அதன் நிகர இழப்பு ரூ.2,188.74 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இதன் நிகர லாபம் ரூ. 1,225.10 கோடியாக இருந்தது. இதைத் தொடர்ந்து இந்த வங்கியை கோட்டக் மஹிந்திரா பேங்க் கையப்படுத்தும் வாய்ப்பு அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
அதேசமயம், தனியார் வங்கியான யெஸ் பேங்கின் நிகர லாபம் நான்காம் காலாண்டில் 29% அதிகரித்து ரூ.1,179 கோடியாக உள்ளது. வாராக் கடனுக்கு அதிக ஒதுக்கீடு செய்தும்கூட (ரூ.399.60 கோடி) அதன் நிகர லாபம் அதிகரித்திருக் கிறது. நிகர வட்டி வருமானம் 31.4% அதிகரித்ததே இதற்கு முக்கியக் காரணம்.
கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் எல்.ஐ.சி ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 2% மட்டுமே அதிகரித்துள்ளது. வாராக் கடன் அதிகரித்ததே இதற்குக் காரணம்.
நிதிச் சேவை நிறுவனமான சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்டு ஃபைனான்ஸ் நிறுவனம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 32.6% உயர்வுடன் ரூ.291.09 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. வாராக் கடன் குறைந்தது, செலவினங்கள் குறைந்தது மற்றும் கட்டணம் மூலமாக ஈட்டிய நல்ல வருவாய் போன்றவையே இதற்குக் காரணம்.
வாராக் கடன் மற்றும் கடன்கள் மூலமான இழப்புகளின் அதிகரிப்பால், ஐ.டி.எஃப்.சி வங்கியின் நிகர லாபம் 76% குறைந்து, ரூ.42.93 கோடியாகக் குறைந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து வெளிநாட்டு முதலீடுகள் அதிக அளவு வெளியேறி உள்ளதே?
“ஏப்ரல் மாதத்தில், இந்தியப் பங்குச் சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், கடந்த வெள்ளிக் கிழமை வரை ரூ.4,200 கோடி அளவுக்குப் பங்குகளை விற்றுள்ளனர். மேக்ரோ பொருளாதாரம் பற்றி அதிகரிக்கும் கவலைகள், பிரண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 74 டாலராக உயர்ந்தது போன்றவைகளே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த அளவுக்குப் பங்குகளை விற்கக் காரணங்கள். இந்தக் காரணங்கள் உடனடியாக மாறிவிடுவதற்கில்லை என்பதால், வரும் நாள்களிலும் இந்தப் போக்கு தொடரலாம்.
இந்தச் சூழலில் மியூச்சுவல் ஃபண்ட் மூலமான முதலீடுகள், கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு மார்ச்சில் குறைந்துள்ளது. கடந்த ஏப்ரலில் சுமார் ரூ.4,600 கோடி அளவுக்கு மட்டுமே பங்குகள் வாங்கப்பட்டு உள்ளன. இதுகுறித்த ஏப்ரல் மற்றும் மே மாதத்துக்கான புள்ளிவிவரங்கள்தான் உள்நாட்டு முதலீடுகள் குறித்த தெளிவான நிலையைத் தெரிவிக்கும் என முதலீட்டு ஆலோசனை நிறுவனமான சி.எல்.எஸ்.ஏ தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு போர்ட் ஃபோலியோ முதலீடுகள் (எஃப்.பி.ஐ) இந்த ஆண்டு குழப்பமாகவே காணப் படுகின்றன. ஜனவரியில் முதலீட்டு வரத்து நல்ல நிலையில் காணப்பட்டது. ஆனால், பிப்ரவரியில் அதற்கு ஈடான முதலீடுகள் வெளியேறி, மார்ச்சில் மீண்டும் அதிகரித்துள்ளது. வட்டி விகிதத்தில் காணப்படும் தடுமாற்றமான போக்கே எஃப்.பி.ஐ-களின் குழப்பத்துக்குக் காரணம். கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் எஃப்.பி.ஐ-கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் இந்தியப் பங்குச் சந்தைகளுக்கு முறையே ரூ.42,000 கோடி மற்றும் ரூ.20,700 கோடி முதலீடுகள் வந்துள்ளன. இந்த ஆண்டில் இதுவரை இவை முறையே ரூ.9,700 கோடி மற்றும் ரூ.37,300 கோடி என்ற அளவில் உள்ளன.”

சிறப்பாகச் செயல்படும் பங்குகளை வாங்க, பல ஃபண்ட் மேனேஜர்கள் தவறிவிட்டார்களே?
“கடந்த ஓராண்டில் டி.சி.எஸ், ஹெச்.யூ.எல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டைட்டன் மற்றும் விப்ரோ போன்ற புளூசிப் பங்குகள் மிக அதிக அளவு லாபம் தரும் என்று பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜர்கள் எதிர்பார்க்க வில்லை. அதனைச் சரியாகக் கணிக்க அவர்கள் தவறிவிட்டனர். இந்தப் பங்குகள் மிதமான அளவிலேயே லாபம் தரும் என்று பல்வேறு மியூச்சுவல் ஃபண்டுகள் கூறியிருந்ததாக அனலிஸ்டுகள் கூறுகின்றனர்.
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இவ்வாறு வாய்ப்புகளைத் தவறவிட்ட போதிலும், நிதி நிறுவனப் பங்குகள் மற்றும் மிட் கேப் பங்குகளின் உதவியால் பெஞ்ச் மார்க் அளவையும் தாண்டி பல ஃபண்டுகள் சிறப்பாகச் செயல் பட்டுள்ளன. இப்போதைக்கு நிதி நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், எரிசக்தி மற்றும் பார்மா ஆகிய துறைகளின் பங்கு களை மியூச்சுவல் ஃபண்டுகள் அதிக அளவிலும் ஆட்டோ மொபைல்ஸ், நுகர்வோர் பொருள்கள் மற்றும் ஐ.டி துறைப் பங்குகளைக் குறைவான அளவிலும் வைத்துள்ளன.”
பார்மா மற்றும் பொதுத்துறை வங்கிப் பங்குகள் மீதான முதலீட்டை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குறைத்துக் கொண்டுவிட்டனரே?
“அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை வங்கிகள் மற்றும் பார்மா நிறுவனங்களின் பங்குகளின் மீதான வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவு குறைந்திருப்பதை மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் பார்க்க முடிகிறது. வாராக் கடன்கள் தொடர்வது குறித்த கவலை மற்றும் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் போன்றவற்றால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏறக்குறைய அனைத்து அரசுத் துறை வங்கிகளின் பங்குகள் மீதான தங்களின் முதலீடுகளைக் குறைத்துக்கொண்டனர்.
தனியார் வங்கிப் பங்குகளில் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் கலந்தே காணப்பட்டன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தங்கள் பங்குகளை அதிகம் விற்ற மற்றொரு துறை பார்மா துறை. இருப்பினும், மியூச்சுவல் ஃபண்டுகள் பார்மா பங்குகளைப் பெரும்பாலும் வாங்குவதன் பக்கமே நின்றன.
ஐ.டி துறையைப் பொறுத்தமட்டில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பெருமளவில் அந்தப் பங்குகளை வாங்கின. அதேசமயம், மியூச்சுவல் ஃபண்டுகள் பெரும்பாலும் அவற்றை விற்கவே செய்தன. மெஜஸ்கோ நிறுவனம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளின் விருப்பமாக இருந்தன. முறையே 7% மற்றும் 8% என்ற அளவில் இரண்டு தரப்பும் அந்த நிறுவனத்தின் பங்குகளைத் தங்களது முதலீட்டில் அதிகரித்துக்கொண்டன. முன்னணி ஐ.டி நிறுவனப் பங்குகளில், விப்ரோவைத் தவிர்த்து, மற்ற நிறுவனப் பங்குகளில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் 0.2% முதல் 1.4% வரை அதிகரித்துக் காணப்பட்டன. ஆட்டோ மொபைல் துறையைப் பொறுத்தமட்டில் அசோக் லேலாண்ட் நிறுவனமே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளின் விருப்பமாக இருந்தன.”
இந்தியப் பங்குச் சந்தையின் போக்கு எப்படி இருக்கிறது?
“எஃப் அண்டு ஓ எக்ஸ்பைரியில் சென்செக்ஸ் 212.33 புள்ளிகள் அதிகரித் தது. அந்த ஏற்றம் வெள்ளிக்கிழமையும் தொடர்ந்தது. மே மாதத்துக்கான ரோலோவர் எஃப் அண்டு ஓ புள்ளி விவரங்களை வைத்துப் பார்த்தால், சந்தையின் போக்கு பாசிட்டிவாக இருக்கிறது. இந்த நிலை நீடிப்பது கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறுவதைப் பொறுத்து உள்ளது என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்புக் குறைந்து வருவதை அடுத்து டெக்னாலஜி ஃப்யூச்சர்ஸ் கான்ட்ராக்டுகளில் அதிக ரோலோவர் நடந்துள்ளது. ஏப்ரல் மாத சீரிஸில் சென்செக்ஸ் 5.3% அதிகரித்துள்ளது. அதேசமயம், நிஃப்டி ஐ.டி இண்டெக்ஸ் 9.5% அதிகரித்துள்ளது. பொதுத்துறை வங்கிப் பங்குகளில் அதிக சார்ட் பொசிஷன்கள் கேரி ஃபார்வேர்டு செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை கடைசி நேர வர்த்தகத்தில் அதிகமான பங்குகள் வாங்கப்பட்டதால், சந்தை ஏற்றம் கண்டது.
கடந்த மூன்று மாதங்களில் சந்தையின் ரோலோவர் சராசரியாக 79 சதவிகிதமாக உள்ள நிலையில் ஏப்ரல் மாதத்தில் அது 83 சதவிகிதமாக உள்ளது. மொத்த ஓப்பன் இன்ட்ரஸ்ட் ரூ.1.35 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.53 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் ரோலோவர் கடந்த மூன்று மாதங்களில் சராசரியாக 66 சதவிகிதமாக உள்ள நிலையில், ஏப்ரலில் 72 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. வழக்கமாக, நாட்டில் எங்காவது தேர்தல் நடந்தாலே ஏற்ற இறக்கம் அதிகரிக்கும். தற்போது அந்தச் சூழல் இல்லை. அந்தவகையில் சந்தை இறக்கத்துக்கான வாய்ப்புக் குறைவு. மேலும், சர்வதேசப் பாதக செய்திகளான சிரியா பிரச்னை, சீனா-அமெரிக்கா வர்த்தகப் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவற்றை இந்தியப் பங்குச் சந்தை புறக்கணித்துள்ளது.”
வங்கிப் பங்குகள் விலை ஏற்றம் ஏன்?
கடந்த வெள்ளியன்று சென்செக்ஸ் 237 புள்ளிகள் ஏற்றம் கண்டன. அன்றைய தினம் குறிப்பாக, வங்கிப் பங்குகளின் விலை கணிசமாக அதிகரித்தன. ஆக்ஸிஸ் பேங்க் பங்கு விலை அதிகபட்சமாக 9.37% அதிகரித்தது. அடுத்த இடங்களில் எஸ்.பி.ஐ (4.29%), பேங்க் ஆஃப் பரோடா (3.75%), ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் (3.21%) ஆகியவை இடம்பிடித்தன.
2017 செப்டம்பர் மற்றும் 2018 பிப்ரவரி இடையே 35.3 லட்சம் புதிய வேலைவாய்ப்பு உள்ளதாக நிதி ஆயோக் தகவல் தெரிவித்துள்ளதால், வங்கிப் பங்குகள் விலை உயர்வு கண்டுள்ளன. இந்தப் பணியாளர்கள் வங்கிச் சேவைகளை விரைவில் அதிகமாகப் பயன்படுத்துவார்கள் என்கிற கணக்கில் வங்கிப் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகமாக வாங்கியதால், இந்தப் பங்குகள் விலை ஏற்றம் கண்டன.