
வால்மார்ட் - ஃப்ளிப்கார்ட் இணைப்பு... - போட்டியைச் சமாளிக்க புதிய வியூகம்!
அமெரிக்காவின் முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட், இந்தியாவின் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாள்களில் ஃப்ளிப்கார்ட்டை வால்மார்ட் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என இரு நிறுவனங்களுக்கும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும்விதமாக அந்த நிறுவனத்தின் பங்குகளை 51% அல்லது அதற்கும் கூடுதலான பங்கினை வாங்க வால்மார்ட் முடிவு செய்துள்ளது. ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 40% பங்குகளை வாங்க வால்மார்ட் நிறுவனம் முதலில் பேரம் பேசத் தொடங்கியது. பிற்பாடு கூடுதலான அளவில் பங்கை வாங்க முடிவெடுத்தது.
ஒரு நிறுவனம், இன்னொரு நிறுவனத்தை வாங்கும்போது, அந்த நிறுவனத்தின் நிதிநிலை, வர்த்தக வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்வது வழக்கம். இந்த ஆய்வினை வால்மார்ட் செய்து முடித்துவிட்டதாகக் சில நாள்களுக்குமுன்னர் தகவல் வெளியானது. இதனால், ஃப்ளிப்கார்ட்டை வால்மார்ட் கையகப்படுத்தும் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஃப்ளிப்கார்ட் நிறுவனம், தனது சந்தை மதிப்பு சுமார் 20 பில்லியன் டாலர் (இன்றைய மதிப்பில் ரூ1.30 லட்சம் கோடி) என்று சொல்லிவந்தது. ஆனால், வால்மார்ட் நிறுவனமோ, 12 பில்லியன் டாலர் (ரூ.78 ஆயிரம் கோடி) என்கிற அளவில் சந்தை மதிப்பு நிர்ணயம் செய்ய விரும்புகிறது. இதற்கு ஈடான பணத்தைத் தந்து, ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பங்குகளை வாங்கித் தன்னுடன் இணைத்துக்கொள்ள வால்மார்ட் விரும்புகிறது.
இதனிடையே, ஃப்ளிப்கார்ட்டில் முதலீடு செய்த முக்கியமான முதலீட்டாளர்களும் தங்களது பங்குகளை வால்மார்ட்டுக்கு விற்க முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, டைகர் குளோபல் மேனேஜ்மென்ட் நிறுவனம் தன்னிடமுள்ள ஃப்ளிப்கார்ட்டின் 20 சதவிகிதப் பங்குகளையும், சாஃப்ட்பேங்க் குரூப் கார்ப். நிறுவனம் 20 சதவிகிதத்துக்கும் அதிகமான ஃப்ளிப்கார்ட் பங்குகளையும் வால்மார்ட்டுக்கு விற்க விரும்புகிறது.
ஃப்ளிப்கார்ட்டின் பங்குகளை வால்மார்ட் வாங்கியபின்னர், அந்த நிறுவனத்தை அதன் நிறுவனர்களே தொடர்ந்து தலைமையேற்று நடத்துவார்களா, அல்லது வேறு யாராவது தலைமை யேற்று நடத்துவார்களா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்பட வில்லை.
தவிர, ஃப்ளிப்கார்ட் பங்கினை வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு சதவிகிதப் பங்குகளை விற்பது அல்லது வைத்துக்கொண்டிருப்பது குறித்தும் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை இதுகுறித்து இறுதி முடிவெடுத்தவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் சொல்லப்படுகிறது.
ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் நிறுவனம் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானால், 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியச் சந்தையில் வால்மார்ட் தனது தடத்தைப் பதித்துவிடும். இந்திய நுகர்வோர்கள் சமீப காலமாக ஆன்லைன் வர்த்தகத்துக்கு மாறிவருவதால், அதில் கோலோச்சும் அமேசான் நிறுவனத்துடன் போட்டிப் போடமுடியாமல், உலகின் மிகப் பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் திணறி வருகிறது. அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் மிகப் பெரிய சில்லறை வர்த்தகத்துக்கான சந்தையைக் கொண்டுள்ளது. தற்போது இந்தியச் சந்தையில் வால்மார்ட் தடம்பதிப்பது, அமேசானின் போட்டியைச் சமாளிப்பதற்கான ஒரு உத்தியாகவே பார்க்கப்படுகிறது.
“இந்தியாவைப் போன்ற சில்லறை வர்த்தகத்துக்கான வாய்ப்பு வேறெந்த நாட்டிலும் வால்மார்ட்டுக்குக் கிடைக்காது. இப்போதைக்கு இது பெரிய விஷயமாக இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் வால்மார்ட் நிறுவனம் பெரிய அளவில் வளர அடிப்படையாக இருக்கும்’’ என்று சொல்கிறார் டெல்லியைச் சேர்ந்த தனியார் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர் ஒருவர்.

ஃப்ளிப்கார்ட்டுடனான இந்த ஒப்பந்தம் தொடர்பாக வால்மார்ட் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் இதுவரை வெளியிடப் படவில்லை. இந்த நிலையில், வால்மார்ட் நிறுவனத்துக்குமுன்பாக அமேசான் நிறுவனத்துடன் பார்ட்னர்ஷிப் வைத்துக்கொள்ள நினைத்து, அதற்கான நடவடிக்கைகளை ஃப்ளிப்கார்ட் தொடங்கியது.
ஆனால், இந்தியாவில் ஃப்ளிப்கார்ட் டின் பிரதான போட்டியாளராகவும், இரண்டாவது மிகப் பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாகவும் அமேசான் இருக்கிறது. மேலும், வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம் எதிலும் ஈடுபடவில்லை என்பதால், சட்ட விதிகள் தொடர்பான தடைகள் பெரிய அளவில் இருக்காது. எனவேதான், வால்மார்ட்டுடன் கைகோக்கவே, ஃப்ளிப்கார்ட் நிறுவன இயக்குநர்கள் குழு அதிக ஆர்வத்துடன் இருக்கிறது. இதேபோல, ஃப்ளிப்கார்ட் நிறுவனர்களான சச்சின் மற்றும் பின்னி பன்சாலும் விரும்புகிறார்களாம்.
ஃப்ளிப்கார்ட் - வால்மார்ட் நிறுவனங்களின் இணைப்பு பற்றி பிராண்ட்காம் (BrandComm) நிறுவனத்தின் சி.இ.ஓ ராமானுஜம் ஸ்ரீதரிடம் கேட்டோம்.
‘‘இன்றைக்கு ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நோக்கமே, குறுகிய காலத்தில் நிறுவனத்தின் பிசினஸ் மதிப்பை அதிகரித்து, பின்னர் நல்ல விலைக்கு விற்று, லாபம் பார்த்துவிட்டுப் போய்விட வேண்டும் என்பதாகவே இருக்கிறது. நீண்ட காலத்துக்கு நன்கு தொழில் செய்து, மார்க்கெட் ஷேரைப் பிடித்து, காலத்துக்கும் நிலைத்து நிற்க வேண்டும் என்று நினைக்கிற மாதிரித் தெரியவில்லை. நிறுவனத்தின் மதிப்பை அதிகரித்துக் காட்டும் ஒரு வேல்யூவேஷன் கேம்தான் (Valuvation game) இப்போது நடக்கிறது.
புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், ஆன்லைன் பிசினஸ் மூலம் வாடிக்கையாளர்களை எளிதில் ஈர்க்கும் வித்தையைக் கற்றுள்ளனர். குறுகிய காலத்தில் நிறுவனத்தின் பிசினஸ் மதிப்பை வெகுவாக உயர்த்திவிட்டு, அதன்பிறகு நல்ல விலைக்கு விற்று லாபம் பார்க்கின்றனர்.
உலகமே இதுமாதிரியான சிந்தனைப் போக்கில் இருக்கும்போது, இதைத் தவறு என்று சொல்ல முடியாது. எனினும், நீண்ட காலத்துக்குத் தொழில் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்துடன் செயல்பட்டால், குறுகிய காலத்தில் கிடைக்கும் லாபத்தைவிட அதிகமான லாபத்தையும், நல்ல பெயரையும் பெறலாம்’’ என்றார்.
ஃப்ளிப்கார்ட் - வால்மார்ட் இணையும் அறிவிப்பு இன்னும் சில நாள்களில் வெளியாகும்பட்சத்தில், வரும் நாள்களில் வால்மார்ட்டுக்கும், அமேசானுக்கும் இடையே கடும்போட்டு நடக்கும் என்பதில் சந்தேகமில்லை.
-பா.முகிலன்
போட்டியைச் சமாளிக்க அமேசான் அதிரடி!
ஃப்ளிப்கார்ட் நிறுவனம் வால்மார்ட்டுடன் கைகோக்க இருப்பதால், போட்டியைச் சமாளிக்க அமேசான் நிறுவனமும் தயாராகி வருகிறது. அவகோடா முதல் உருளைக்கிழங்கு வரை, இறைச்சி முதல் ஐஸ்க்ரீம் வரை வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் எந்தவகையான பொருள்களையும், ஆர்டர் கொடுத்த இரண்டு மணி நேரத்தில் ஃப்ரெஷ்ஷாக டெலிவரி செய்யும் எண்ணத்துடன் ‘அமேசான் ஃப்ரெஷ்’ என்ற பெயரில் புதிய திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது.
ஃப்ரெஷ்ஷான மளிகைப் பொருள்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் திட்டத்துடன் அமெரிக்காவில் பத்து ஆண்டுகளுக்குமுன்னர் ‘அமேசான் ஃப்ரெஷ்’ தொடங்கப்பட்டது. அதைத்தான் தற்போது இந்தியாவில் தொடங்க அமேசான் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் இணைய வர்த்தகச் சந்தை அடுத்த பத்து ஆண்டுகளில் 200 பில்லியன் டாலராக வளர்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், 10 கோடி பேரைத் தங்களது வாடிக்கையாளர்களாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், பொருள்களை மாற்றித் தருவது உள்ளிட்ட வாடிக்கையாளர் களைக் கவரும் பல்வேறு திட்டங்கள் மூலம் இதனை அடையப் போவதாகவும் அமேசான் சொல்லியிருக்கிறது.