
தி.ரா.அருள்ராஜன் தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

தங்கம்
தங்கம் விலையில் ஒரு புல்பேக் ரேலி வரலாம் என்று கோடிட்டுக் காட்டியிருந்தோம். தங்கம் தற்போது அதுபோன்று கொஞ்சம் இறங்கி, ஏற முயன்று மீண்டும் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறது.
கடந்த இதழில் நாம் சொன்னதாவது... “தங்கத்தின் உச்சமான 31517 என்பதையே தடை நிலையாகக் கொண்டு இயங்கலாம். கீழே முந்தைய தடைநிலையாக நாம் கொடுத்திருந்த 31150 என்பது தற்போதைய ஆதரவாக மாறலாம். அது உடைக்கப்பட்டால், கீழே 30800-ஐ நோக்கி நகரலாம். இருந்தாலும், உலகப் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டால் தங்கம் மீண்டும் ஏற ஆரம்பிக்கலாம்.’’

தங்கம், தற்போது 31517 என்ற எல்லையை வலிமையான தடைநிலையாகக் கொண்டுள்ளது. ஆனால், ஆதரவு எல்லையான 31157-ஐ சற்றே உடைத்து, அதற்கு அருகிலேயே வியாபாரம் ஆகி வருகிறது. கடந்த திங்களன்று சற்று இறங்கி, இந்த ஆதரவு விலை உடைக்க முயற்சி செய்தது. ஆனால், செவ்வாயன்று மீண்டு எழுந்து 31280 வரை ஏறியது. புதனன்று அதிகபட்சமாக 31324-ஐ தொட்டு டோஜி உருவமைப்பை தோற்றுவித்தது. இதனால் தங்கத்தின் ஏற்றத்திற்கான முயற்சி பலவீனப்பட்டது.
வியாழனன்று, நாம் எதிர்பார்த்ததைப் போலவே, தங்கத்தின் விலை குறைய ஆரம்பித்தது. வியாழனன்று 31251 என்ற புள்ளியில் ஆரம்பித் தாலும், அந்த நாளில் மெள்ளமெள்ளக் குறைந்து 31112 வரை இறங்கியது. அதாவது, நாம் கொடுத்து இருந்த ஆதரவான 31157 என்ற புள்ளியை ஒரு பிவட் புள்ளியாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. ஆனால், வெள்ளியன்று 31157 என்ற புள்ளிக்குக் கீழே வியாபாரத்தைத் துவங்கியுள்ளது.
இனி என்ன நடக்கலாம்?
நாம் கொடுத்திருந்த 31157 என்ற ஆதரவைத் தற்போது தடைநிலையாக மாற்றிக்கொண்டு இருப்பதுபோல் உள்ளது. இனி கீழே 31040-யை உடைத்தால் இறக்கம் வலிமையானதாக இருக்கும். மேலே 31350 என்பது உடனடித் தடைநிலை ஆகும்.

வெள்ளி மினி
வெள்ளி எக்ஸ்பைரியை நோக்கி வந்துவிட்டது. நடப்புமாத கான்ட்ராக்ட் டென்டர் பீரியட் என்று சொல்லக்கூடிய டெலிவரி காலத்திற்குள் நுழைந்துவிட்டதால், நாம் இப்போது ஜூன் மாத கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொண்டோம். எனவே, புள்ளிகளின் அளவு சற்றே மாறுபடும்.

சென்ற வாரம் தங்கம் ஏறிய வேகத்தைவிட வெள்ளி வேகமாக ஏறியது என்று பார்த்தோம். அதேசமயம், சென்ற வாரம் தங்கம் இறங்கிக் கொண்டு இருந்தபோது, வெள்ளி தங்கத்தைவிட வேகமாக இறங்கியது குறிப்பிடத்தக்கது. கடந்த திங்களன்று உச்சமாக 40945-ஐ தொட்ட வெள்ளி, விலை இறங்கிக் குறைந்தபட்சமாக 40125-ஐ தொட்டது. அடுத்த நான்கு நாள்களும் வெள்ளியானது தங்கத்தைப்போலவே மெள்ள மெள்ள இறங்க ஆரம்பித்துள்ளது. இந்த இறக்கம் முக்கியமான ஆதரவுக்கு அருகில் உள்ளது.
இனி என்ன நடக்கலாம்?
வெள்ளியின் தற்போதைய முக்கிய ஆதரவு எல்லை 39650 ஆகும். மேலே 40350 என்ற எல்லையைத் தடைநிலையாகக் கொண்டுள்ளது. எந்தப் பக்கம் உடைக்கிறதோ, அந்தப் பக்கம் பயணிக்கலாம்.

கச்சா எண்ணெய் மினி
சென்ற வாரம் சொன்னது… “கச்சா எண்ணெய், இன்னும் வலுவாக ஏறிக்கொண்டிருந்தாலும், தற்போது கொஞ்சம் பக்கவாட்டு நகர்வை நோக்கிப் போகலாம்.
கச்சா எண்ணெய் முந்தைய வாரம் வலுவாக ஏறி நின்றாலும், அதன்பின் பக்கவாட்டு நகர்வுக்கு மாறியதைப் பார்த்தோம். அந்தப் பக்கவாட்டு நகர்வே சென்ற வாரம் முழுவதும் நடந்தேறியது.
திங்களன்று குறைந்தபட்சமாக 4471 என்ற எல்லையைத் தொட்டு மீண்டது. செவ்வாயன்று வலிமையான ஏற்றத்திற்கு முயற்சி செய்து 4600 என்ற முக்கியத் தடையை உடைத்தது. ஆனால், தொடர்ந்து ஏறமுடியாமல், மீண்டும் பக்கவாட்டு நகர்வுக்கு மாறியுள்ளது.
இனி என்ன நடக்கலாம்?
கச்சா எண்ணெய் தற்போது 4450 என்ற எல்லையை வலுவான ஆதரவாகக் கொண்டுள்ளது. உடைத்தால் பெரிய இறக்கங்கள் வரலாம். மேலே 4620 என்பதும் பலமான தடைநிலை ஆகும்.

மென்தா ஆயில்
மென்தா ஆயில் பொதுவாகப் பரபரப்பாக வியாபாரம் ஆகக் கூடிய கமாடிட்டி ஆகும். ஆனால், மார்ச் இரண்டாம் வாரத்தில் ஆரம்பித்து இதுவரை ஒரு பக்க வாட்டு நகர்விலேயே இருந்துவரு கிறது. இந்தப் பக்கவாட்டு நகர்வின் கீழ் எல்லை 1215 என்ற அளவிலும், மேல் எல்லை 1350 என்ற அளவிலும் உள்ளது.
முந்தைய இதழில் சொன்னது... ‘‘மென்தா ஆயில் இதுவரை தொடர்ந்து 1468 என்ற புள்ளியில் பலமாகத் தடுக்கப்பட்டுதான் வருகிறது. உச்சத்தில் ஒரு டோஜி அமைப்பு தோன்றி, பின்பு இறங்கி முடிவது, இறக்கத்தின் அறிகுறி யாகும். இருந்தாலும், ஏற்கெனவே நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லை 1368 இன்னும் வலுவாகத்தான் உள்ளது.”
மென்தா ஆயில் முந்தைய வாரம் முடியும்போது ஆதரவை உடைத்து 1220 என்ற புள்ளியில் முடிந்துள்ளது. ஆனால், சென்ற வாரம் சற்றே மீண்டு ஒரு புல்பேக் ரேலியில் உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை அவ்வப்போது ஏற்றத்திற்கு முயற்சி செய்தாலும், உச்சமான 1290-ஐ தாண்ட முடியவில்லை.
இனி என்ன நடக்கலாம்?
மென்தா ஆயில் தற்போது 1290 என்ற தடைநிலையையும், கீழே 1240 என்ற ஆதரவையும் கொண்டுள்ளது. எந்தப் பக்கம் உடைக்கிறதோ, அந்தப் பக்கம் பயணிக்கலாம்.

காட்டன்
காட்டன் முக்கியத் தடை நிலையான 21280 என்ற எல்லையில் வலுவாகத் தடுக்கப் பட்டு, கீழே இறங்க ஆரம்பித்துள்ளது. இந்த இறக்கம் ஒரு லோயர் டாப்பை உருவாக்கி இன்னும் இறங்க வாய்ப்புள்ளதைக் காட்டுகிறது. நாம் அடுத்த மாத கான்ட்ராக்டான மே மாதப் புள்ளிவிவரங்களை எடுத்துள்ளோம். எனவே, அது சென்ற மாத ஆதரவு மற்றும் தடைநிலையில் மாற்றம் வரும்.
சென்ற வாரம் திங்களன்று உச்சத்தில் டோஜியை உருவாக்கிய காட்டன், பின்பு செவ்வாயன்று வலுவாக இறங்கியது. புதன், வியாழன் மற்றும் வெள்ளியன்று ஒரு பக்கவாட்டு நகர்வில் முடிந்துள்ளது.
இனி என்ன நடக்கலாம்?
தற்போது 21000 என்ற எல்லை வலுவான தடைநிலை ஆகும். இதைத் தாண்டாத வரை இறக்கம் தொடரலாம்.