நடப்பு
தொடர்கள்
Published:Updated:

சரிவில் ஏர்டெல்... முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

சரிவில் ஏர்டெல்... முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
பிரீமியம் ஸ்டோரி
News
சரிவில் ஏர்டெல்... முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

சரிவில் ஏர்டெல்... முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த நான்காம் காலாண்டில் 77.8% வீழ்ச்சி கண்டுள்ளது. இதற்கு என்ன காரணம், இனி இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கும், இந்த நிறுவனப் பங்கில் முதலீடு செய்திருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்று பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம். நம் கேள்விக்கு விளக்கமான பதிலைச் சொன்னார் அவர்.

“வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் பலவிதமான சேவைகளை அளிப்பதன்மூலம், அனைத்துத் தொலைத் தொடர்பு நிறுவனங்களையும் தொடர்ந்து பாதித்துவரும் ரிலையன்ஸ் ஜியோ இதற்குக் காரணம். கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் இதன் நிகர லாபம் ரூ.82.90 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.373 கோடியாக இருந்தது. தொலைத்தொடர்புக் கட்டுப்பாட்டு அமைப்பானது, சர்வதேச டெர்மினேஷன் கட்டணத்தைக் குறைக்க முடிவெடுத்ததன் காரணமாக வருவாயானது 10.5% வீழ்ச்சியடைந்து ரூ.19,634 கோடியாக உள்ளது.

கடந்த நிதியாண்டின் ஒருங்கிணைந்த வருவாயானது ரூ.83,688 கோடியாகவும், நிகர வருமானம் ரூ.1,099 கோடியாகவும் உள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, ஒருங்கிணைந்த மொபைல் டேட்டா மற்றும் வாய்ஸ் ட்ராஃபிக் 505% மற்றும் 55% வளர்ச்சியடைந்துள்ளது. அதேபோல, ஆப்பிரிக்காவில் இந்த நிறுவனத்தின் நிகர வருவாய் 13.4% மற்றும் எபிட்டா (EBITDA) மார்ஜின் 35.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனமானது 30 கோடி இந்திய மொபைல் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. 

சரிவில் ஏர்டெல்... முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

  அதிகரிக்கும் வாடிக்கையாளர்கள்

இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 16 நாடுகளைச் சேர்த்து மொத்தம் 41.38 கோடியாக உள்ளனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இது 12.1% அதிகமாகும். அதேபோல, ஒருங்கிணைந்த மொத்த வருவாய் ரூ.19.64 கோடியாகவும், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 5.4% குறைவாகும்.
இந்தியாவில் இந்த நிறுவனத்தின் வருவாய் 7.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. ஆனால், ஆப்பிரிக்காவில் இதன் வருவாய் 10.7% அதிகரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் மொபைல் டேட்டா பயன்பாடு எதிர்பார்த்த படியே அதிகரித்திருக்கிறது. இது மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

ஆப்பிரிக்க எபிட்டா மார்ஜின், கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால், 10.3% அதிகரித்து 35.9 சதவிகிதமாக உள்ளது. ஒருங்கிணைந்த எபிட்டா ரூ.70.34 கோடியாக உள்ளது. ஒருங்கிணைந்த எபிட்டா மார்ஜின், கடந்த ஆண்டோடு ஒப்பிட் டால், 0.6% குறைந்து 35.8 சதவிகிதமாக உள்ளது.

  பங்கு விலை அதிகரிக்குமா? 


பார்தி ஏர்டெல் பங்கின் விலை நடப்பு ஆண்டில் இதுவரை 21% வீழ்ச்சி கண்டுள்ளது. சென்செக்ஸ் இதே காலகட்டத்தில் 1.5% லாபம் ஈட்டியுள்ளது. சென்செக்ஸ் பங்குகளில் மிகவும் மோசமாகச் செயல்படும் பங்காக இது இருக்கிறது.

மோசமான செயல்திறன்மிக்க பங்காக இந்தப் பங்கினைச் சிலர் அடையாளப்படுத்தினாலும்,  பங்குச் சந்தை ஆய்வாளர்கள் ஏர்டெல் பங்குகளை இன்னும் பாசிட்டிவாகவே பார்க்கிறார்கள். இதன் பங்குகளை ஆய்வு செய்த நிபுணர்கள், வாங்கலாம் என 69% பேரும், விற்கலாமென 12% பேரும், அப்படியே வைத்திருக்கலாம் என 18% பேரும் மதிப்பீடு செய்துள்ளனர்.

சரிவில் ஏர்டெல்... முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் அதிகரித்துவரும் ஸ்பெக்ட்ரம் செலவுகள் மற்றும் தொடர்ந்து  முதலீடு செய்வதன் காரணமாக எபிட்டா அளவு குறைந்ததால், முந்தைய ஆண்டில் 6.5 சதவிகிதமாக இருந்த  இதன் ஆர்.ஓ.சி.இ 4.7 சதவிகிதமாகக் குறைந்து உள்ளது. ஆர்.ஓ.சி.இ அளவானது, ஒரு நிறுவனம் அதன் மூலதனத்திலிருந்து பெறப்பட்ட லாபத்தை எந்த அளவு திறனுள்ளதாகச் செலவழிக்கிறது என்பதைக் கணக்கிட உதவும் முறையாகும்.

   முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு 2017-18-ம் நிதியாண்டில்,  பங்கு ஒன்றுக்கு 2.50 ரூபாய் இறுதி டிவிடெண்டாக வழங்கப் பரிந்துரைத்துள்ளது. ஒரு பங்குக்கான வருமானமானது (இ.பி.எஸ்) 78% சரிவடைந்து, ரூ.0.21-ஆக உள்ளது.

கடந்த 2017 நவம்பர் மாதத்தில் இருந்து 2018 மார்ச் வரை பார்க்கும் போது, கடந்த ஐந்து மாதங்களில் ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு விலை 33% சரிவடைந்து, ரூ.564-ல் இருந்து குறைந்து ரூ.374-ஆக உள்ளது.

ரூ.370 என்ற நிலையில், வலுவான  ரெசிஸ்டன்ஸ் ரூ.420 - 440-ஆக உள்ளது. பங்கின் விலை ரூ.370-க்குக் கீழ் இறங்கினால், ரூ.320/290 என்ற அளவிற்கு இறங்கக்கூடும். மேலேறினால் 440 ரூபாய் என்ற அளவிற்கும் உயரக்கூடும்.

இந்தப் பங்கில் சற்று எச்சரிக்கை உணர்வுடன் முதலீடு செய்வது நல்லது. அடுத்த காலாண்டின் முடிவு எப்படி அமையும் என்பதைப் பொறுத்து இந்தப் பங்கின் விலையில் மாற்றம் வரலாம்’’ என்றார்.

எப்போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லதுதானே!

- தெ.சு.கவுதமன்