
பாசிட்டிவ் பகுதிபரிசல் கிருஷ்ணா - படங்கள்: க.பாலாஜி
எண்ணத்தை செயலாக்கு
“Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.”
- Albert Schweitzer
ஸ்ரீராம் சுப்ரமண்யா மூன்று சகோதரர்களில் கடைக்குட்டி. ஸ்ரீராமின் அப்பா, மதுராந்தகத்தில் உள்ள 135 வருடப் பள்ளியான ‘இந்து மேல்நிலைப் பள்ளி’யில் ஆசிரியர், தலைமை ஆசிரியர், கரஸ்பாண்டென்ட் என்று கல்விப் பணியில் இருந்தவர். ஆறாம் வகுப்பு வரை ஸ்ரீராம் படித்ததும் அங்குதான். அதன் பிறகு, திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தில் படித்தார். கல்லூரிக் காலத்திலேயே ‘படித்து முடித்ததும், சில வருடங்கள் படிப்புக்கேற்ற வேலை. வருமானத்தைச் சேமித்துவைத்து அதற்குப் பிறகு ஒரு தொழில் தொடங்குவது’ என்ற எண்ணத்தில் இருந்தார்.

திட்டமிட்டபடி, பொறியியலில் பட்டப்படிப்பு முடித்தார். ஆயில் கூலர் உற்பத்திக் கூடத்தில் எட்டு வருடங்கள் பணிபுரிந்தார். அடுத்து... தொழில் தொடங்குவதுதானே?!. வேலையிலிருந்து வெளியேறினார்.
‘ஏதாவது ஒரு தொழில் தொடங்க வேண்டும். என்ன தொழில் தொடங்கலாம்?’ எல்லா தொழில்முனைவோருக்கும் இருக்கிற அதே `முதல் கேள்வி’. நண்பர்கள், வல்லுநர்களிடம் கலந்தாலோசித்து இறுதியில் ஐ.டி சம்பந்தப்பட்ட தொழில் என்று முடிவுசெய்கிறார் ஸ்ரீராம்.
இவரோடு மனைவி அனுவும் கைகோக்க, 1994-ம் ஆண்டில் புதுச்சேரியில் 1200 சதுரஅடியில் DTP அலுவலகம் திறக்கிறார். அதுதான் வெவ்வேறு படிநிலைகளாக உருமாறி, இன்றைக்கு ‘Integra Software Services Pvt Ltd’-ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது.
முதல் தலைமுறைத் தொழில்முனைவோர் சந்திக்கும் சவால்களில் ஒன்று, தொழில் தொடங்கும்போதே ‘இவர்கள் இதற்கு சரியானவர்களா?’ என்று பிறர் பார்க்கும் சந்தேகப் பார்வைதான். ‘வாடகை சரியா வராதே!’ என்று ஸ்ரீராமுக்கு வாடகைக்கு இடம் கொடுக்க மறுத்திருக்கிறார்கள். பேசிப், புரியவைத்து தேவையைச் சொல்லி, இடம் பிடித்தார்.
முதல் மூன்று வருடங்கள்... நஷ்டம்தான். சேமிப்பெல்லாம் கரைந்துவிட்டது. நகைகள் அடகு வைக்கப்படுகின்றன. நஷ்டத்தின்போதும் வாடகையையும், ஊழியர்களின் சம்பளத்தையும் சொன்ன தேதிக்குக் கொடுக்காமல் இருந்ததில்லை. வரி உள்பட அரசு சொல்லும் நெறிமுறைகளை கண்ணியமாகக் கடைப்பிடிக்கிறார்.
புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்விக்கான புத்தகங்கள் உருவாக்கத்துக்கான ஆர்டர் வருகிறது. வெவ்வேறு கோர்ஸ், வெவ்வேறு பாடப்பிரிவுகள் என்று புத்தகங்களுக்கான பக்க வடிவமைப்பு உள்பட எல்லாவற்றையும் தயாரித்து பி.டி.எஃப் வடிவில் கொடுக்கும் பணி. கல்வி சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், அதீத அக்கறையுடன் முடித்துக்கொடுக்கிறார். ஐ.டி சர்வீஸில் இந்தக் குறிப்பிட்ட வேலைக்கு நல்ல எதிர்காலம் இருப்பதைக் கணிக்கிறார். முழுக்க அந்த மாதிரியான வேலைகளைத் தேடி ஆர்டர் எடுக்கிறார். வெளிநாடுகளில் இந்த மாதிரியான ஆர்டர்கள் எடுக்கத் தீர்மானிக்கிறார். அதற்கான மென்பொருள்களை உருவாக்குகிறார். ஒரு படிப்புக்கான சிலபஸ் என்ன, அதற்கான உள்ளடக்கம் என்ன என்பதைத் தீர்மானிக்க அந்தந்தப் பாடப்பிரிவுகளில் விற்பன்னர்களைக்கொண்ட குழுவை அமைக்கிறார். Innovation Lab, R&D குழு என்று அடித்தளம் வலுவாகிறது. வெளிநாடுகளிலிருந்து ஆர்டர்கள் வர ஆரம்பிக்கின்றன.
பிற போட்டியாளர்களிடமிருந்து இன்டெக்ரா வேறுபட்டுத் தெரிவது நான்கு விஷயங்களால்தான் என்கிறார் ஸ்ரீராம்.
* தரம்.
* நிலைத்தன்மை.
* சொன்ன நேரத்துக்கு ஆர்டரை முடித்துக் கொடுப்பது.
* தொழில்நுட்பத்தை மேம்படுத்திக்கொண்டே இருப்பது.
ஒரு குறிப்பிட்ட தர அளவுகோலை அடிப்படையாகக் கொண்டுவிட்டால், பிறகு அதிலிருந்து தரம் உயர்ந்துகொண்டே இருக்க வேண்டும். அதுதான் ‘Consistency’ எனப்படும் நிலைத்தன்மை.
பத்து வருடங்களுக்கு முன் இன்டெக்ராவின் வரலாற்றில் நடந்தது ஒரு முக்கியமான விஷயம். அமெரிக்காவிலிருந்து ஆர்டர்கள் வந்துகொண்டிருந்தாலும், அவற்றில் மேலும் சில ஆர்டர்கள் எடுக்கச் செல்லும்போது ஒன்றை அறிகிறார் ஸ்ரீராம். பாடப்புத்தகங்களுக்கான சில குறிப்பிட்ட வேலையை அவர்கள் நாடு தாண்டி வெளியே கொடுப்பதில்லை. அப்போது ஸ்ரீராம் எடுத்த முடிவு, பெருமையானதும் முக்கியமானதுமாகும்.
அமெரிக்காவிலேயே ஒரு Value added பப்ளிஷிங் சர்வீஸ் நிறுவனத்தை, 2007-ம் ஆண்டு வாங்குகிறார். இவரது சர்வீஸ் குறித்து ஏற்கெனவே அறிந்தவர்கள் ஆர்டர்களைக் குவிக்க, மீண்டும் அடுத்த வருடமே இன்னோர் அலுவலகத்தையும் அங்கே வாங்குகிறார்.
பத்து வருடங்களுக்கு முன், இந்தியாவிலிருந்து ஒருவர் - அதுவும் முதல் தலைமுறைத் தொழிலதிபர்- அமெரிக்காவில் ஓர் அலுவகத்தை வாங்குவது என்பது குறிப்பிட்டே ஆகவேண்டிய சாதனை.
ஐந்து பேரில் ஆரம்பிக்கப்பட்டு, இன்று 1,600 பேர்களுக்கு மேல் பணிபுரிகிறார்கள். இவர்களில் 52 சதவிகிதம் பேர் பெண் ஊழியர்கள். தனது வெற்றிக்கு இன்டெக்ராவின் டீமும் முக்கியக் காரணம் என்கிறார். இந்தியாவில் ஐந்து இடங்களிலும், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் என வெளிநாடுகளிலும் இன்டெக்ராவின் கிளைகள் இருக்கின்றன.
‘`லோக்கலா ஆரம்பிச்சு... குளோபல் ஆகிட்டோம்” சிரித்துக்கொண்டே சொல்கிறார் ஸ்ரீராம். சில்வர் ஜூப்ளியைக் கொண்டாட இருக்கும் இன்டெக்ராவில் பப்ளிஷர்களுக்கான 40 வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன.
10 வருடங்களுக்கு முன் இவர் ஆரம்பித்த ‘ஸ்ரீராம் சாரிட்டபிள் டிரஸ்ட்’ மூலம் கிராமப்புறப் பள்ளிகளுக்குக் கணினி வழங்குதல், கல்விக்கான நிதியுதவி, மரக்கன்றுகள் நடுதல் என்று சமூகத்துக்கும் பங்காற்றுகிறார்.
புதுச்சேரி அரசின் தொழில்முனைவோருக்கான கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள ஸ்ரீராம், தொழில் தொடங்குபவர்களை ஊக்குவிக்க ஆலோசனைகள் உள்பட பலவற்றைச் செய்துகொண்டிருக்கிறார். தனது தொழில் என்பதைத் தாண்டி, இதைச் செய்யவேண்டியதன் அவசியத்தை அவர் இப்படி சொல்கிறார்...
‘`2020-ம் ஆண்டு, இந்தியாவின் மக்கள்தொகையில் பெரும்பான்மையோர் வேலைசெய்யும் வயதில் இருப்பார்கள். ஆகவே, வேலை தேடுபவர்களைவிட வேலை கொடுப்பவர்கள் அதிகமாக நாட்டில் தேவைப்படுவார்கள். எனவே, தயக்கமே இல்லாமல் ஏதாவது ஒரு தொழிலைத் தேர்வுசெய்து தொடங்க பலரும் முன்வர வேண்டும்.”
படித்தது ரூரல் பள்ளி. பள்ளி, கல்லூரி எல்லாமே தமிழ் மீடியம். பெரிய நகரத்தில் பிறந்து வளர்ந்தவர் அல்ல. எம்.பி.ஏ என்று மேனேஜ்மென்ட் கோர்ஸ் எதுவும் படிக்கவில்லை. குடும்பத்தில் இவருக்கு முன் யாரும் வியாபாரத்திலும் இல்லை. இவற்றையெல்லாம் தாண்டியும் ஒருவர் ஒரு தொழிலைத் தொடங்கி வெற்றிகரமாகப் பயணிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக ஸ்ரீராம் இருக்கிறார்.
‘`எண்ணங்களுக்கு சக்தி அதிகம். பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அடுத்த 10 வருஷங்கள்ல 25,000 பேருக்கு வேலை கொடுக்கணும். என்னால் முடியுமென்றால் எல்லோராலும் முடியும்!” என்கிறார் ஸ்ரீராம்.

ஸ்ரீராம் சுப்ரமண்யாவின் பிசினஸ் மொழிகள்
எண்ணம், சொல், செயல். இம்மூன்றும் நேர்மறையாகவும், நேர்கோட்டிலும் அமைந்துவிட்டால், எதையும் பெரிய அளவில் சாதிக்கலாம்.
மகிழ்ச்சியாக இருங்கள். புன்னகையுடனே இருங்கள். எந்தக் கடினச் சூழலையும் இவ்விரண்டும் மாற்றும்.
உங்களிடம் உள்ள செல்வம், அறிவு, தகவல்களைப் பகிர்ந்துகொண்டே இருங்கள். அவை பல மடங்காக உங்களிடம் திரும்ப வந்துசேரும்.