
அங்காடித் தெரு - 19 - பழைமை மாறாத குடோன் தெரு!
சென்னையின் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் என்று பாரிமுனையைச் சொல்லலாம். ஒவ்வொரு வகைப் பொருளையும் விற்க தனித்தனித் தெருக்கள் இருப்பது பாரிமுனையில்தான்.

வெள்ளையர்கள் நம்மை ஆண்ட காலத்தில் சென்னையின் மிக முக்கியமான பகுதியாக பாரிமுனை இருந்தது. சென்னை மக்கள் அனைவரும் மாலை வேளையில் பொருள்களை வாங்கிச் செல்வதால் ஈவ்னிங் பஜார் ரோடு என்ற சாலையே அங்குள்ளது.
மொத்தக் காய்கறி விற்பனையகமான கொத்தவால் சாவடி, பூ விற்பனை நிலைய மான பூக்கடைத் தெரு, பர்மா பஜார், நீண்டதூரப் பேருந்து நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், துறைமுகம், உயர்நீதிமன்றம், செயின்ட் ஜார்ஜ் கோட்டைக் கொத்தளம் எனச் சென்னை நகரின் மிக முக்கியமான பகுதிகள் பலவும் ஒருங்கே அமைந்துள்ளதால், பாரிமுனையில் வியாபாரம் மிகப்பெரிய அளவில் இருந்தது. இவற்றில் நீண்ட தூரப் பேருந்து நிலையம், கொத்தவால் சாவடி, பூக்கடை போன்றவை கோயம் பேடுக்கு இடமாற்றம் செய்யப்பட்டவுடன் பாரிமுனையின் வியாபார முக்கியத்துவம் சற்றுக் குறைந்தது.
இங்கு அமைந்துள்ள குடோன் தெருவில் ஜவுளித் துணிரகங்கள், ரெடிமேட் ஆடைகள் போன்றவை மொத்த விற்பனையாக நடந்து வருகிறது. இந்தத் தெருவினுள் நுழையும்போதே பரபரப்பாக ஜவுளி மூட்டைகளைச் சுமந்து செல்லும் தொழிலாளர்கள், மினிபாடி வண்டிகள், மனிதர்களே இழுத்துச்செல்லும் வண்டிகள், சைக்கிள் ரிக்ஷாக்கள் எனப் பழமை மாறாத சென்னையின் பரபரப்பான பகுதிக்குள் நுழையும் உணர்வு ஏற்படுகிறது.
குறுகலான, மிக நீண்ட தெருவுக்குள் நெருக்கியடித்து நிற்கும் கட்டடங்கள் அனைத்திலும் ஜவுளி மொத்த வியாபாரம் மட்டுமே நடக்கிறது. காலையில் பத்து மணிக்கு மேலே பரபரப்பாகிவிடும் இந்தத் தெருவின் நீளத்தைப் போலவே இதன் வரலாறும் மிக நீளமானது.
இந்தத் தெருவில் இருக்கும் பெரும்பாலான கடைகளின் உரிமையாளராக வடநாட்டு முதலாளிகள் உள்ளனர். குடோன் தெரு குறித்து ‘தி மெட்ராஸ் பீஸ் கூட்ஸ் மெர்சன்ட்ஸ் அசோசியேஷன்’ என்னும் அமைப்பின் செயலாளர் கிர்தர்தாஸ் சன்வாலிடம் கேட்டோம். ‘‘1919-ம் ஆண்டு தொடங்கப் பட்ட இந்தச் சங்கத்தில் நான் 45 ஆண்டு களாக உறுப்பினராக இருந்து தற்போது செயலாளராக ஆகியிருக்கிறேன். அடுத்த ஆண்டு நூறாவது ஆண்டை எட்டவுள்ளோம்.

மும்பை, சூரத், அகமதாபாத் போன்ற வட மாநில நகரங்களிலிருந்துதான் பெரும்பாலான ஜவுளிப் பொருள்கள் கொள்முதல் செய்யப்படு கின்றன. பனியன் ஜட்டி போன்ற உள்ளாடைப் பொருள்களை திருப்பூர், கோவை, லூதியானா, அமிர்தசரஸ் போன்ற நகரங்களிலிருந்து வாங்கி வந்து விற்பனை செய்கிறார்கள். சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்தும், அந்தமான், இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும் இங்கு வந்து ஜவுளியைக் கொள்முதல் செய்கிறார்கள்.
ஓராண்டுக்குமுன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பு நீக்கத்தால் வியாபாரம் சற்றுக் குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி வரிக் கணக்கீடு புரியாதவர்களுக்கு விழிப்பு உணர்வுக் கருத்தரங்குகள் நடத்தியுள்ளோம். வணிகர்கள் மத்தியில் இ-வே பில் குறித்தும் விளக்கமளித்து வருகிறோம். மற்றபடி, தற்போது தமிழக அரசாங்கத்தில் நிலைத்தன்மை இல்லாததால், நிறையத் திட்டங்கள் புதிதாகச் செயல்படுத்தப்படாமல் பணப்புழக்கம் குறைந்து உள்ளது. எனவே, ஜவுளித்துறை என்றில்லாமல் ஒட்டு மொத்தமாக அனைத்து வியாபாரங்களையும் இது பாதிக்கத்தான் செய்கிறது.
இங்கே பேக்கிங் மெட்டீரியல்களைப் பிரிப்பதால் உண்டாகும் கழிவுகள் குப்பைகளாகச் சேர்ந்து விடுகின்றன. அவற்றைத் தினமும் அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள இன்னொரு முக்கியப் பிரச்னை, அடிக்கடி ஏற்படும் மின்வெட்டாகும். இங்கு 24 மணி நேரமும் சீரான, தடையில்லா மின்சாரம் தேவை’’ என்றார்.
ஆன்லைன் விற்பனைக்கு...
குடோன் தெருவில் நவநீதா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தை நடத்திவரும் விஷால்ராஜுடன் பேசினோம். “எங்கள் தாத்தா இதே தெருவில் பணியாளராகச் சேர்ந்து, பின்னர் அதே நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்தவர். தற்போது மூன்றாவது தலைமுறையாக நான் இந்த நிறுவனத்தை என் தந்தையுடன் இணைந்து பார்த்துக்கொள்கிறேன். எங்கள் நிறுவனத்திற்கு ஜவுளியை லூதியானா, அமிர்தசரஸ் நகரங் களிலிருந்தும், டவல்களை சோலாப்பூரிலிருந்தும், போர்வை, படுக்கை விரிப்புகளை ஈரோட்டி லிருந்தும் கொள்முதல் செய்கிறோம்.
இந்தத் தெருவில் வியாபாரத்திற்குக் குறை வில்லை என்றாலும் பொதுவாக, தற்போதைய இளைஞர்கள் ஆன்லைன் விற்பனையைப் பெரிதும் விரும்புகிறார்கள் என்பதால், நாங்களும் ஆன்லைன் விற்பனைக்குக் கொஞ்சம் கொஞ்ச மாக மாறி வருகிறோம்.
எங்கள் நிறுவனத்தின் வெப்சைட்டில் எங்களின் அனைத்து விற்பனைப் பொருள்களையும் காட்சிப்படுத்தி விற்பனையின் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறோம். இனிவரும் காலத்தில் கடைகளுக்குச் சென்று பொருள் வாங்கும் பழக்கம் முற்றிலும் மாறக்கூடிய வாய்ப்புள்ளது” என்றார்.
தலைமுறை தலைமுறையாக...
காந்திமதி & கோ என்ற ஜவுளி நிறுவனத்தை குடோன் தெருவில் நடத்திவரும் எஸ்.கே.அமிர்த லிங்கத்துடன் பேசினோம். ‘‘இந்தத் தெருவிலுள்ள எங்களுடைய கடை, இங்குள்ள கன்னிகா பரமேசுவரி ஆலயத்தின் அறக்கட்டளைக்குச் சொந்தமானது. இந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஜவுளிக் கடைகள் இருப்பதால், திருமணம், பண்டிகை களுக்காகக் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் ஜவுளி எடுக்க விரும்புபவர்கள் இங்குதான் வருகிறார்கள். முன்பு தமிழகத்திலேயே குடோன் தெரு மட்டுமே மொத்தமாகக் கொள்முதல் செய்யும் இடமாக இருந்தது. தற்போது சேலம், மதுரை போன்ற நகரங்களிலும் மொத்த வியாபாரம் செய்யும் கடைகள் வந்துவிட்டதால், இங்கு வியாபாரம் செய்வது கொஞ்சம் குறைந்துள்ளது” என்றார்.
குடோன் தெருவுக்கு ஒருமுறை விசிட் அடித்துப் பாருங்களேன்!
- தெ.சு.கவுதமன்
படங்கள்: ப.சரவணக்குமார்

பாரிமுனை தெருக்களும், கிடைக்கும் பொருள்களும்!
சென்னை, பாரிமுனையிலுள்ள சில முக்கியத் தெருக் களும், அங்கே விற்பனையாகும் பொருள்களும்...
பெருமாள் முதலி தெரு: இங்கே வளையல் உள்ளிட்ட பெண்களுக்கான அணிகலன்கள் முக்கிய விற்பனைப் பொருளாக உள்ளது. கிட்டத்தட்ட நானூற்றுக்கும் மேற்பட்ட வளையல் கடைகள் இங்கு உள்ளன. இதன் காரணமாகவே இதற்கு வளையற்காரத் தெரு என்று பெயர் வந்தது.
நைனியப்ப நாயக்கன் தெரு: அறுவை சிகிச்சைக்கு உதவும் பொருள்கள், வேதிப்பொருள்கள், ஆய்வகத்திற் குரிய பொருள்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.
பந்தர் தெரு: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான ஸ்டேஷனரி பொருள்களான நோட்டுப் புத்தகங்கள், டைரிகள், கைவினைப்பொருள்கள், அலங்காரப் பொருள்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன.

தேவராஜ முதலி தெரு: கண்ணாடிப் பொருள்கள், புகைப்பட பிரேம்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆண்டர்சன் தெரு: பிரின்டிங் பேப்பர், பேப்பர் போர்டுகள், திருமணப் பத்திரிகைகள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.
ஈவ்னிங் பஜார் ரோடு: வீட்டு உபயோகப் பொருள்கள், எவர்சில்வர் பாத்திரங்கள், 25 பேருக்குச் சமைத்து எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் பிரமாண்ட டிபன் கேரியர் உள்ளிட்டவை இங்கு விற்பனையாகின்றன.
மூக்கர் நல்லமுத்து தெரு: மோட்டார் பம்புகள், பைப்புகள், ஃபிட்டிங்குகள் உள்ளிட்ட பிளம்பிங் பொருள்கள் அனைத்தும் இங்கு கிடைக்கும்.
ஆவுடையப்ப நாயக்கன் தெரு: உலர் பழங்கள், வாசனைப் பொருள்கள், பாதாம், பிஸ்தா, பட்டை சோம்பு போன்றவை மொத்த வியாபாரம்.
காசிசெட்டி தெரு: ஹார்டுவேர், டைல்ஸ், சானிட்டரி வேர்ஸ் விற்பனை செய்யப்படுகிறது.
கோவிந்தப்ப நாயக்கன் தெரு: கேபிள், பேட்டரி, பல்புகள், கனெக்டர்கள் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள்.