
tax filingப.முகைதீன் சேக்காவூது
முடிவடைந்த 2017-18 நிதியாண்டுக்கு வருமான வரியைச் செலுத்திவிட்டு, வரித் தாக்கல் செய்ய ஆயத்தமாகி வரும் மாதச் சம்பளக் காரர்களுக்கு, முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, வருமானவரித் துறை. ஆண்டு முழுவதும் பெற்றுள்ள சம்பளத்தைக் குறைத்துக் கணக்கு காட்டாதீர்கள். தவறான தகவல்களைத் தந்து, வரிச் சலுகையை அதிகரித்துக் காட்டாதீர்கள். அப்படிச் செய்தீர் கள் என்றால், உங்களுக்குச் சம்பளம் தந்த அதிகாரியிடம் சொல்லி, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று சொல்லியிருக்கிறது வரித்துறை.

இந்தச் சிக்கலில் சிக்காமல் இருக்க வருமானக் கணக்கினை முழுமையாக நாம் மீண்டும் சரியாகப் புரிந்து கொள்வது அவசியம்.

1. சம்பள வருமானம் (Salary Income)
கூலி (wages), கட்டணம் (Fees), கமிஷன் (Commission), போனஸ், விடுப்புச் சம்பளம் (Leave Salary), ஒப்படை விடுப்புச் சம்பளம் (Salary to Surrender of Earned Leave During Service Period) ஓய்வூதியம் (Pension) மற்றும் நிலுவை ஊதியம் முதலானவை.
நிலுவை ஊதியமானது இரண்டு வகை. அதாவது, அனைவருக்கும் பொதுவான நிலுவை, குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கிடைக்கக்கூடிய நிலுவை. எல்லோருக்கும் பொதுவான நிலுவை அகவிலைப்படி நிலுவையே. அகவிலைப்படி நிலுவையானது ஆண்டுக்கு இருமுறை ஜனவரி மற்றும் ஜூலையில் தரப்படும். ஆனால், ஜனவரி முதல் தரப்படும் அகவிலைப்படி உயர்வைப் பெறும்போது ஏப்ரல் மாதம் வந்துவிடும். எனவே, ஒவ்வோர் ஆண்டும் வருமானக் கணக்கில் ஜனவரி முதல் மார்ச் வரையான அகவிலைப்படி நிலுவையை மறவாமல் சேர்த்துக் கொண்டு சம்பள வருமானத்தைக் கணக்கிடுவது அவசியம்.
ஒரு சிலருக்கு மட்டுமான நிலுவை என்பது, நிர்வாகக் காரணங்களால் தாமதமான ஊதிய உயர்வு நிலுவை, பதவி உயர்வு தரும் கூடுதல் பணப்பலன் நிலுவை, மூத்தவர் - இளையவர் ஊதிய முரண்பாடு களைவதால் ஏற்படும் நிலுவை முதலானவை. இந்த நிலுவைகள் எத்தனை ஆண்டுகளுக்கு இருந்தாலும், ‘வரி நிவாரணம்’ (Tax Relief) பிரிவு 89(1)-ன்படி சலுகை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு வரி நிவாரணம் பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள படிவம் 10E-யை முறையாகப் பூர்த்தி செய்து, கணக்கிட வேண்டும். இதற்கு மாறாக, முந்தைய ஆண்டு நிலுவைகளைக் கணக்கில் கொண்டுவராமல், நடப்பு நிதியாண்டு நிலுவையை மட்டும் சேர்த்து வருமான வரியைக் கணக்கிட்டால் அது வருமானத்தைக் குறைத்துக் காட்டியதாகவே எடுத்துக் கொள்ளப்படும்.
2. வீட்டுச் சொத்து மூலம் வருமானம்
ஊழியரின் சொந்த வீட்டுக்கு வாடகை வருமானம் கிடைத்தால், அது ‘Income from House Property’ என்ற தலைப்பில் வருமானக் கணக்கில் சேர்க்கப்படும்.
3. இதர வருமானம்
குடும்ப ஓய்வூதியம், வட்டி வருமானம் முதலியன இந்தப் பிரிவில் கணக்கிடப்பட வேண்டியவை. அதுமட்டுமல்ல, வாடகை வீட்டில் குடியிருக்கும் ஊழியர் தனது வாடகை வீட்டின் ஒரு பகுதியை உள்வாடகைக்கு (Sub-Let) விட்டு, வாடகை பெற்றால் அதுவும் இதர வருமானம் என்று கணக்கில்கொள்ள வேண்டும்.மேற்கண்ட இனங்களின்கீழ், கடந்த நிதியாண்டில் வந்து சேர்ந்த வருமானம் முழுவதையும் இன வாரியாகக் காட்டிவிட்டால் வருமானத்தைக் குறைத்துக் காட்டிய பிரச்னை வராது. இத்துடன், சம்பளத்துடன் தரப்படும் அனைத்து வகைப் படி களையும் (Allowances) வருமானக் கணக்கில் கொண்டுவந்து, பிறகுதான் வரிச் சலுகை பெற வேண்டும்.

வரிச் சலுகை
இனி, நாம் கணக்கிட்ட வரிச் சலுகை சரியா என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். வரிச் சலுகை என்பது இரண்டு பிரிவாக உள்ளது.
முதலாவது, இது இன்ன காரணத்துக்கான படி (Allowance) எனக் குறிப்பிடப்பட்டு, சம்பளத்துடன் தரப்படுவதே படி. மத்திய அரசைப் பொறுத்தவரை, அண்டார்டிகா அலவன்ஸ் முதல் வாஷிங் அலவன்ஸ் வரை 34 வகையான படிகள் (Allowance) நடைமுறையில் உள்ளன. தமிழக அரசில், மருத்துவப்படி முதல் ஓட்டுநர் படி (Driving Allowance) வரை 32 படிகள் தரப்படுகின்றன.
இவற்றுள் அனைவருக்கும் பொதுவானவை மூன்று மட்டுமே. அவை, 1. அகவிலைப்படி (Dearness Allowance), 2. மருத்துவப்படி (Medical Allowance), 3. வீட்டு வாடகைப் படி (House Rent Allowance). மற்ற வகையான படிகள் அவரவர் பார்க்கும் பதவி மற்றும் பணியாற்றும் இடத்தைப் பொறுத்தது.
வரிச் சலுகை தரும் படிகளில் முக்கியமானது, வீட்டு வாடகைப் படிதான். ஏனெனில், தமிழக அரசில் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.8,300-ம் வீட்டு வாடகைப் படியாகத் தரப் படுகிறது. மத்திய அரசு ஊழியர் களுக்குக் குறைந்தபட்சம் ரூ1,800 முதல் அதிகபட்சம் ரூ.60,000 வீட்டு வாடகைப் படியாகத் தரப்படுகிறது. பணமதிப்பில் பெரிதாக உள்ள வீட்டு வாடகைப் படியில், சலுகை பெறுவதில் தவறான கணக்கீடு செய்யப்பட்டுவிட்டால், வருமான வரித் துறைக்குப் பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படும். எனவே, கூடுதல் கவனம் செலுத்திச் சரிபார்க்க வேண்டியது வீட்டு வாடகைப்படி சலுகைதான். வருமான வரித்துறை கூர்ந்து கவனிப்பதும் அதைத்தான்.
செலவு மற்றும் சேமிப்புக்கான வரிச் சலுகை
கணவர் - மனைவி இருவருமே தமிழக அரசு ஊழியர்களாகயிருந்து வீட்டுக் கடன் பெற்றிருந்தால் 80C-யின்படி அசல் தொகைக்கு ரூ.1.5 லட்சமும், வட்டிக்கு ரூ.2 லட்சமும், இருவரில் ஒருவர் மட்டுமே சலுகையாகப் பெறலாம். ஒரே தொகையை இருவரும் சலுகைக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. இதற்கான சான்று ஒன்றை சம்பளம் தரும் அதிகாரிக்குத் தந்திருக்க வேண்டும்.
இதேபோல், சுகன்யா சம்ருதி போன்ற பிள்ளைகள் பெயரில் செலுத்தப்படும் தொகைக்கும் யாரேனும் ஒருவர் மட்டுமே வரிச் சலுகை கோர முடியும். அதேசமயம், ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால், அவர்களில் ஒரு பிள்ளைக்குக் கணவரும், ஒரு பிள்ளைக்கு மனைவியும் செலுத்திய தொகைக்குச் சலுகை கோரலாம்.
நிதியாண்டு இறுதிக்குள் வரவு
இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்குக் கட்டப்படும் பிரிமீயம் தொகை ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதிவரைகூட செலுத்தப்படலாம். இது ஒவ்வோர் ஆண்டும் செலுத்தப்படும் தொகை என்பதால், மார்ச் மாதம் செலுத்தப்பட உள்ள பிரிமீயம் தொகைக்கும் சேர்த்து பிப்ரவரி மாத சம்பளப்பட்டியலிலேயே வரிச் சலுகை பெற்றிருந்தால், மார்ச் இறுதிக்குள் அந்தத் தொகை செலுத்தப்பட வேண்டும். ஞாபக மறதி காரணமாக, அந்தத் தொகையானது செலுத்தப்படாமல்விட்டால், அதனை மார்ச் 31-க்குப் பிறகு செலுத்த முடியாது. இதன்படி பார்க்கும்போது, பிப்ரவரி மாதச் சம்பளத்தில் இணைக்கப்பட்ட வருமான வரிப் படிவத்தில் செலுத்தப்படாத பிரிமீயத்துக்கும் வரிச் சலுகை கோரப்பட்டிருக்கும். இதனைத் தவிர்க்க, விடுபட்ட சந்தா தொகைக்கு உரிய வருமான வரியைக் கணக்கிட்டு ரொக்கமாகச் செலுத்திவிடலாம்.
சேமிப்புக் கணக்கு வட்டி
வங்கி, அஞ்சலகம், கூட்டுறவு சங்கங்கள் போன்றவற்றில் பராமரிக்கப் படும் சேமிப்புக் கணக்குகளுக்கு ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டி சேர்க்கப்படுகிறது. இந்த வகை வட்டியில் அதிகபட்சம் ரூ.10,000 வரை பிரிவு 80TTA-ன்படி வரிச் சலுகை தரப்படுகிறது. வட்டியை வருமானத்தில் கொண்டுவந்து, பின்னர் வரிச் சலுகை பெறுவது இதன் நியதி. இந்த வகையில் பிப்ரவரி மாதச் சம்பளத்தில் வரிக் கணக்குப் படிவத்தை இணைத்தபோது, கடைசிக் காலாண்டான மார்ச் மாதத்தில் நமது சேமிப்புக் கணக்கில் சேர்க்கப்படப்போகும் வட்டி எவ்வளவு என்பது தெரியாது. அதன்பிறகுதான் இது தெரியவரும். எனவே, முந்தைய மூன்று காலாண்டு வட்டியுடன், தற்போது தெரியவந்துள்ள நான்காவது காலாண்டு வட்டியும் சேர்த்து 2017-2018-க்கான வட்டி 10,000 ரூபாய்க்குள் இருந்துவிட்டால், அடுத்து செய்ய வேண்டியது வட்டித்தொகை சீரமைப்புதான். ஆனால், மொத்த வட்டி ரூ.10,000-க்குமேல் இருந்தால், இதர வருமானமாக காட்டி, உரிய வரியை உடனே செலுத்தலாம்.
எஃப்.டி-க்கான வட்டி
ஃபிக்ஸட் டெபாசிட்க்கு வங்கி வட்டி தருகிறது. கொடுத்த வட்டிக்குப் பிடித்தம் செய்த வரி விவரம் வருமான வரித்துறைக்கும் செல்கிறது. வட்டியாக வரும் வருமானத்துடன், சம்பள வருமானத்தையும் கூட்டினால் அது மொத்த வருமானம். இந்த மொத்த வருமானத்தில் வரிச் சலுகைகளை கழித்தால் கிடைப்பது வரிக்கு உட்பட்ட வருமானம் (Taxable Income) ஆகும்.
இவ்வாறு, வரி செலுத்தும் வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு உட்பட்டிருந்தால், 60 வயதுக்கு உட்பட்ட ஊழியர் ஒருவர் படிவம் 15G-யை வங்கியில் தாக்கல் செய்திருக்கலாம். அவ்வாறு படிவம் 15G-யைத் தாக்கல் செய்துவிட்டால், வங்கியானது வட்டிக்கு வரிப்பிடித்தம் செய்யாது.
ஆனால், இந்தக் கணக்கு 2017-2018-ம் நிதியாண்டின் மத்தியில் மாறுபட்டிருக்கும். காரணம், 7-வது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வந்ததால், அதிகரித்த சம்பள வருமானம். எனவே, படிவம் 15G-யை சமர்ப்பித்தவர்கள் இதனைக் கணக்கிட வேண்டும். நிகர வருமானம் ரூ.2.5 லட்சம் என்ற எல்லையைத் தாண்டிவிட்டிருந்தால் படிவம் 15G-யை விலக்கிக்கொள்வதுடன், வட்டி வருமானத்தை இதர வருமானமாகக் கொண்டு வந்து, வருமான வரியை மறு கணக்கிட்டு, நிகர வரியைச் செலுத்த வேண்டும்.
அதிக வருமானம் உள்ளவர்களுக்கு மேற்கண்ட டெபாசிட்டுக்கு 10% வருமான வரியாகப் பிடித்தம் செய்யப்படும். இப்போது, சம்பள வருமானத்துடன் வட்டி வருமானத்தைச் சேர்த்து வரியைக் கணக்கிடும்போது, வரி விகிதம் 20% மற்றும் 30% என்ற எல்லையைத் தொடலாம். இதுபோன்ற நிகழ்வுகளில் வங்கி பிடித்தம் செய்த வரி போக நிகர வரி செலுத்த வேண்டும். வங்கி வட்டியில் கூடுதல் கவனம் அவசியம்.
வருமான விவரங்களைச் சரியாகச் சொல்லி, அதற்குரிய வரியைக் கட்டிவிட்டால், வரித் துறையின் விசாரிப்புக்கு ஆளாகவேண்டிய நிலை நமக்கு ஏற்படவே ஏற்படாது!

15 பில்லியனுக்கு ஓகே சொன்னது ஃப்ளிப்கார்ட்!
இந்திய ஆன்லைன் நிறுவனமான ஃப்ளிப்கார்ட் டினை அமெரிக்க நிறுவன மான வால்மார்ட்டுக்கு 15 பில்லியன் டாலருக்கு விற்பதற்கு ஃப்ளிப்கார்ட் நிறுவனம் முடிவெடுத்து உள்ளது. (இன்றைய டாலர் கணக்கில் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1,01,550 கோடி) அமெரிக்காவின் கூகுள் நிறுவனமும் வால் மார்ட்டுடன் இணைந்து ஃப்ளிப்கார்ட்டை வாங்கப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை அமேசான் நிறுவனமும் வாங்க முயற்சி செய்தது. ஆனால், அமேசான் நிறுவனத்தை விட, வால்மார்ட் நிறுவ னத்துக்கு தனது நிறுவனத்தை விற்கவே ஃப்ளிப்கார்ட் நிறுவனம் விரும்புகிறது!

தனிப்பட்ட சில சலுகைகள்!
வரிக்குற்றம் (Tax Default) என்ற சிக்கலுக்குள் மாட்டாமல் இருக்கத் தேவையான பொதுவான தகவல்கள் இனி...
* மாற்றுத் திறனாளிக்கான வரிச் சலுகை பெறுவோரின் உடற்குறைவு ‘தற்காலிகமானது’ எனில், மாற்றுத் திறனாளி என்பதற்கான சான்றில் சலுகை பெறுவதற்கு வரையறை செய்யப்பட்ட தேதி குறிப்பிட்டிருக்கும். அதே தேதிக்குப்பிறகு, மருத்துவ மறுமதிப்பீட்டுக்குச் சென்று புதிய சான்று பெறவேண்டும். இல்லாவிடில் பிரிவு 80U-யின்படி சலுகை கிடைக்காது.
* 60 வயதுக்கு உட்பட்ட ஊழியருக்கு ரூ.40,000 வரையான மருத்துவச் செலவு சலுகையானது யூராலஜிஸ்ட், நெப்ராலஜிஸ்ட், ஹேமடாலஜிஸ்ட், இம்யூனாலஜிஸ்ட் போன்ற சிறப்பு மருத்துவர்களின் மருந்துச் (Prescription) சீட்டின் அடிப்படையில் மட்டுமே (சார்ந்து வாழும் மூத்த / மிக மூத்த குடியினருக்கு ரூ.60,000/80,000) பிரிவு 80DDB-யின்கீழ் தரப்படும்.
* ரொக்கமாக ரூ.10,000-க்கும் அதிகமாகத் தரப்பட்ட நன்கொடை, பிரிவு 80G மற்றும் 80GGA-யின்படி சலுகை பெறாது.