நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வக்ராங்கி பங்கு விலை வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

வக்ராங்கி பங்கு விலை வீழ்ச்சிக்கு என்ன காரணம்?
பிரீமியம் ஸ்டோரி
News
வக்ராங்கி பங்கு விலை வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

வக்ராங்கி பங்கு விலை வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

டந்த 2017 ஆகஸ்ட்டில் வக்ராங்கி நிறுவனப் பங்கை ரூ.445-க்கு வாங்கப் பரிந்துரை செய்தோம். 2018 ஜனவரியில் இதன் விலை ரூ.505-க்கு அதிகரித்தது. அதன்பிறகு இறக்கம் காணத் தொடங்கிய இந்தப் பங்கின் விலை 2018, மார்ச் 22-ம் தேதிக்குப்பிறகு ரூ.295-லிருந்து ஒவ்வொரு வர்த்தக தினத்திலும் சுமார் 5%  இறக்கம் கண்டது.  கடந்த வெள்ளியன்று இந்தப் பங்கு விலை        ரூ.85-க்கு வீழ்ச்சி கண்டது. இந்தப் பங்கின் விலை ஏன் இப்படி வீழ்ச்சி கண்டுவருகிறது என விளக்கினார் பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.   

வக்ராங்கி பங்கு விலை வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

நிறுவனம் பற்றி...

‘‘இந்தியாவின் நவீன சுற்றுச்சூழலுடன் கிராமப் புற மக்களை இணைப்பதை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது இந்த நிறுவனம். இதன் பழைய பெயர், வக்ராங்கி சாஃப்ட்வேர்ஸ் லிமிடெட். வளர்ந்த நகர்ப்புற இந்தியாவிற்கும், வளர்ந்துவரும் கிராமப்புற இந்தியாவிற்கும் இடையில் நிதி ஒதுக்கீட்டு இடைவெளியைக் குறைக்க முயற்சி செய்கிறது இந்த நிறுவனம். 
 
அரசின் முக்கியத் திட்டங்களை அனைத்துப் பகுதிகளில் இருக்கும் மக்களுக்குக் கொண்டு செல்வதற்காக இந்தியா முழுக்க 75,000 கேந்திராக் களை உருவாக்கி உள்ளது இந்த நிறுவனம். நிதிப் பரிவர்த்தனையை எளிதாக்க உதவும் புதுமையான மென்பொருள்களை உருவாக்கி, அதன் பலனை இந்தியக் கிராமங்களுக்குக் கொண்டுபோய் சேர்க்க விரும்புகிறது இந்த நிறுவனம். வங்கிகள்  ஏ.டி.எம் மூலம் சேவை அளிக்க முடியாத குக்கிராமங்களில்கூட, இந்த நிறுவனம் ஒயிட் லேபிள் ஏ.டி.எம்-கள் மூலம் நிதிச் சேவை செய்து வருகிறது.  

உச்சம் நோக்கி...

வருவாய் மற்றும் நிகர லாபக் கணக்கீட்டின்படி, 2013-ம் ஆண்டிலிருந்து டிசம்பர் 2017 வரை இந்த நிறுவனம் வளர்ச்சிப் பாதையில்தான் இருந்தது. நிறுவனத்தின் வருவாயானது ரூ.1,555 கோடி யிலிருந்து ரூ.3,950 கோடியாக 2017-ம் ஆண்டில் உயர்ந்துள்ளது. அதேபோல, நிகர லாபமானது, ரூ.109 கோடியிலிருந்து ரூ.520 கோடியாக உயர்ந்துள்ளது. 

வக்ராங்கி பங்கு விலை வீழ்ச்சிக்கு என்ன காரணம்?ஒரு பங்கு மூலம் கிடைத்த லாபமானது 2017-ம் ஆண்டில் ரூ.9.88 -ஆக இருந்துள்ளது. மேலும், ஒயிட் லேபிள் ஏ.டி.எம்-களை இரட்டிப்பாக்கிச் சாதித்திருக்கிறது. இந்தக் காரணங்கள் அனைத்தும் முதலீட்டாளர்களை இந்த நிறுவனத்தை நோக்கி ஈர்த்ததில் ரூ.60 என்கிற அளவிலிருந்து ரூ.700 என்கிற அளவிற்குப் பங்கு விலை ஏறியது. இதனால்தான் இந்த நிறுவனம்  1:1 என்கிற அளவில் கடந்த டிசம்பரில் போனஸ் பங்குகளை அறிவித்தது.

சரிவை நோக்கி...

2018 பிப்ரவரி தொடக்கத்தில் இந்தப் பங்கில் முதலீடு செய்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்த நிறுவனமானது உள்வர்த்தகம் மற்றும் விலை நிர்ணயத்தில் மோசடி செய்ததாக செபியால் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து இந்தப் பங்கு விலை 60% திடீரெனச் சரிந்தது. இதன் சந்தை மதிப்பு ரூ.25,000 கோடி இழப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு நாளும் இந்தப் பங்கின் விலை 5% அளவிற்குக் குறைந்துகொண்டே வந்தது.
 
இந்த நிறுவனம் இன்சைடர் டிரேடிங் உள்பட எந்தத் தவறும் செய்யவில்லை; எவ்வித மோசடியும்  நடக்கவில்லை  என இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், பங்குதாரர்களுக்குக் கடிதம் எழுதினார். அது உண்மை என்கிறமாதிரி, கடந்த பிப்ரவரி மாத இறுதியில், செபி அறிவிப்பு வெளியிட்டது. 

எனினும், அந்த நிறுவனம் குறித்து உருவான பயம் விலகவே இல்லை. இந்தப் பங்கு விலையானது ரூ.120-ரூ.240 என்ற அளவுகளுக்குள் வர்த்தகமானது.  இப்போது இன்னும் இறக்கம் கண்டு, ரூ.85-க்கு இறங்கியுள்ளது.

தற்போதைய நிலை

ஏப்ரல் 24-ம் தேதி, இந்தப் பங்கு விலையானது ரூ.120 என்ற நிலையிலிருந்து  வேகமாக இறக்கம் காணத் தொடங்கிய நிலையில், இந்த நிறுவனத்திலிருந்து பிரைஸ் வாட்டர் ஹவுஸ் விலகியது. இது, முதலீட்டாளர்களிடையே மீண்டும் குழப்பத்தை உருவாக்க, இதன் பங்கு விலை மீண்டும் குறையத் தொடங்கியது. விரைவில் வரவுள்ள நான்காவது காலாண்டு முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே இந்தப் பங்குகள் விலை ஏறலாம். மொத்தப் பங்குகளில் 41% பங்குகள் மட்டுமே புரமோட்டர்கள் வசம் உள்ளன. மீதமுள்ள பங்குகள் பொதுமக்கள் வசம் உள்ளன.

இந்த நிறுவனத்தின் மீதான எதிர்மறை உணர் வானது, திடமான கார்ப்பரேட் செயல்பாடுகளின் மூலமே மாற்றமடையும். இதற்குமுன்னர் இந்த நிறுவனமானது தனது முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானம் தந்து, நல்ல பெயரைப் பெற்றது.  இப்போது அதையே முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்றார் அவர். 

இந்த நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவு நல்லபடியாக இருக்கும் என்று எதிர்பார்ப்போம்!

- தெ.சு.கவுதமன்