நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஷேர்லக்: இது ஐ.பி.ஓ காலம்!

ஷேர்லக்: இது ஐ.பி.ஓ காலம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்: இது ஐ.பி.ஓ காலம்!

ஓவியம்: அரஸ்

“உங்கள் அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் காபி ஷாப்பில் இருக்கிறேன். நீங்கள் வருகிறீர்களா..?” என்று அழைத்தார் ஷேர்லக்.  அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர் சொன்ன இடத்தில் நாம் ஆஜர் ஆனோம். நமக்கும் சேர்த்து, லெமன் ஜூஸ் ஆர்டர் செய்து  காத்திருந்தார். ஜூஸைக் குடித்தபடி தயாராக வைத்திருந்த  கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம். 

ஷேர்லக்: இது ஐ.பி.ஓ காலம்!

ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் பங்கு விலை ஐ.பி.ஓ-க்குப் பிறகு 30% வீழ்ச்சி கண்டிருக்கிறதே?

“ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் குழுமத்தைச் சேர்ந்த  ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம், அண்மையில் புதிய பங்கு வெளியீட்டில்  (ஐ.பி.ஓ)களமிறங்கியது. இந்தப் பங்கு வெளியீட்டுக்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இந்தப் பங்கு, சந்தையில் பட்டியலானபின்பு தொடர்ந்து விலை குறைந்தது. இந்த நிலையில், ஒரு மாத லாக்-இன் பிரீயட் முடிந்ததும், இந்தப் பங்கில் முதலீடு செய்த ஆங்கர் முதலீட்டாளர் ஒருவர் பங்குகளை அதிக எண்ணிக்கையில் விற்றதால், இந்தப் பங்கின் விலை கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டும் 12% வீழ்ச்சி கண்டிருக்கிறது. இந்தப் பங்கு ஐ.பி.ஓ வந்தபின்பு மொத்தம் 30% விலை குறைந்துள்ளது. இந்த நிலையில், இதை வாங்க லாமா என சில முதலீட்டாளர்கள் கேட்கிறார்கள். நன்கு யோசித்துப் பார்த்துவிட்டுத்தான் முதலீட்டு முடிவினை எடுக்க வேண்டும் என்பதே என் பதில்.’’
 
ஹெச்.சி.சி பங்கின் விலை ஒரேநாளில் 25% வீழ்ச்சி கண்டிருக்கிறதே?

“ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக் ஷன் கம்பெனியின் (ஹெச்.சி.சி) துணை நிறுவனம் லவாசா. இதன் கடன் குறித்த ஆடிட்டரின் அறிக்கை கடந்த வியாழக்கிழமை வெளியானது. இதனையடுத்து இந்தப் பங்கின் விலை ஒரே நாளில் ரூ.28.84-லிருந்து ரூ.17.55-க்கு வீழ்ச்சி கண்டது. இது 25.42% இறக்கமாகும்.  ஆனால், வெள்ளிக்கிழமை இந்தப் பங்கின் விலை 5% அதிகரித்தது.’’

எம்.எஸ்.சி.ஐ இந்தியா இண்டெக்ஸில்  இந்தியாவின் வெயிட்டேஜ் குறைகிறதே?

“சீனாவின் ஏ கிரேட்  பங்குகள் சேர்க்கப்படுவ தால், எம்.எஸ்.சி.ஐ. இந்தியா இண்டெக்ஸில்  இந்தியாவின் வெயிட்டேஜ் 0.20% குறைய வாய்ப்புள்ளதாக மார்கன் ஸ்டேன்லி தெரிவித்து உள்ளது. பிடிலிட்டி இண்டஸ்ட்ரீஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா பங்குகள்          எம்எஸ்.சி.ஐ இந்தியா இண்டெக்ஸில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் அல்ட்ரா டெக் சிமென்ட் மற்றும் கன்டெய்னர் கார்ப்பரேஷன் பங்குகளின் வெயிட்டேஜ் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. டாடா மோட்டார்ஸ் டி.வி.ஆர், வக்ராங்கி பங்குகள் இந்த இண்டெக்ஸை விட்டு வெளியேற வாய்ப்புள்ளன. பார்தி ஏர்டெல், பார்தி இன்ஃப்ரா டெல் ஆகிய தொலைத் தொடர்புத் துறை நிறுவனப் பங்குகள் தொலை தொடர்புப் பிரிவில் சேர்க்கப்படவுள்ளது. மீடியா துறையைச் சேர்ந்த ஜீ என்டர்டெயின்மென்ட் பங்கு எம்.எஸ்.சி.ஐ. இண்டெக்ஸ் பிரிவில் மறுவகைப்படுத்தபட உள்ளது.”

சென்செக்ஸ் புள்ளிகள் 32000-க்குக் குறையும் என பேங்க் ஆஃப் அமெரிக்கா கணித்துள்ளதே? 

“நாட்டின் மேக்ரோ பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருவதால், வரும் டிசம்பரில் சென்செக்ஸ் 32000 புள்ளிகளாகக் குறையும் என்று பேங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லின்ஞ் மதிப்பீடு செய்துள்ளது. தற்போது 35000 புள்ளிகளில் சென்செக்ஸ் பயணிக்கிறது. நாட்டின் மைக்ரோ பொருளாதாரம் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. ஆனால், மேக்ரோ பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகிறது.  கச்சா எண்ணெய் விலை உயர்வு, பொதுத் தேர்தலினால் அரசியல் நிலையற்றதன்மை ஏற்பட வாய்ப்பு போன்றவற்றால் இந்தியப் பங்குச் சந்தை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

அதேசமயம், குறிப்பிட்ட சில நிறுவனங்களின் வருவாய்  நன்றாக உள்ளதால், அந்த நிறுவனப் பங்குகளின் விலை  அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சிமென்ட், மின்சாரப் பயன்பாடு அதிகரிப்பு, சில்லறை கடன்கள் அதிகரிப்பு, ஊரகப் பகுதிகளில்  வாங்கும் திறன் அதிகரிப்பு ஆகியவற்றினால் இந்தியப் பொருளாதாரம் சற்று வளர்ச்சி கண்டு வருகிறது.”

இது ஐ.பி.ஓ காலம் போலிருக்கிறதே?

“முடிந்த 2017-18-ம் நிதியாண்டில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் 65% நிறுவனங்களின் பங்குகள் விலை, வெளியீட்டு விலையைவிட அதிகரித்துக் காணப்படுகின்றன. இந்த ஆண்டு பட்டியலிடப்பட்ட 41  நிறுவனங் களில் 27 நிறுவனங்களின் பங்கு விலை,  வெளியீட்டு  விலையைவிட அதிக விலைக்கு வர்த்தகமாகி வருகின்றன. மீதியுள்ள 14 நிறுவனங்களின் பங்கு களின் விலை முதலீட்டாளர்களைக் கவராததால்,  வெளியீட்டு விலையைவிடக் குறைவாக வர்த்தகமாகி வருகின்றன.

லாபமீட்டிய 27 நிறுவனங்களின் லாபம் 1 முதல் 325 சதவிகிதமாக உள்ளது. இவற்றில் ஆறு நிறுவனங்கள், 100 சதவிகிதத்திற்கும் அதிகமாக விலை அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரலில் பட்டியலிடப்பட்ட சங்கரா பில்டிங் புராடக்ட்ஸ் நிறுவனப் பங்கு விலை அதிகபட்சமாக 325% அதிகரித்துள்ளது. அபெக்ஸ் ஃபுரோஸன் ஃபுட்ஸ் நிறுவனப் பங்கு 270%,  சலசர் டெக்னோ இன்ஜினீயரிங் 258% விலை அதிகரித்து உள்ளன. அஸ்ட்ரோன் பேப்பர் & போர்ட் மில்ஸ் மற்றும் பி.எஸ்.பி புராஜெக்ட்ஸ் 174%, ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் 103% விலை அதிகரித்துள்ளன.”

பிராந்தியக் கிராமிய வங்கிகள் ஐ.பி.ஓ வரும் போலிருக்கிறதே! 

‘‘2018-19 பட்ஜெட் உரையில்,  பிராந்தியக் கிராமிய வங்கிகள், பங்குச்   சந்தையில் பட்டியலிடப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஐ.பி.ஓ-வுக்கான   அனைத்துப் பணிகளும் முடிந்து தயாராக உள்ள நிலையில், நான்கு கிராமிய வங்கிகள் நடப்பாண்டில்  ஐ.பி.ஓ வெளியாக வாய்ப்புள்ளன.

நாட்டில் மொத்தமுள்ள 56 மண்டலக் கிராமிய வங்கிகளில் புரளும் மொத்தத் தொகை ரூ.4.7 லட்சம் கோடி. இவற்றில் 50 வங்கிகள் லாபத்தில் இயங்குகின்றன. மண்டலக் கிராமிய வங்கிகளுக்கு இருக்கும் 21,200 கிளைகளில் 2016-17-ம் ஆண்டில் நிகர லாபமானது 17%  உயர்ந்து, ரூ.2,950 கோடியாக உள்ளது. இந்தக் கிராமிய வங்கிகளில் மத்திய அரசு 50%, கிராமிய வங்கி 35%,  மாநில அரசு 15% பங்கு மூலதனத்தைக் கொண்டு உள்ளன.

ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸின் வர்த்தக நேரத்தை அதிகரிக்க செபி அனுமதித்திருக்கிறதே!

‘‘தற்போது ஈக்விட்டி டெரிவேட்டிவ் சந்தையில் காலை 9.15 முதல் மதியம் 3.30 வரை வர்த்தகம் நடக்கிறது. இந்த வர்த்தகத்தை காலை 9 மணி தொடங்கி, இரவு 11.55 வரை நடத்த செபி அனுமதி தந்துள்ளது. இது வருகிற அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.’’

பிசி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை திடீரென உயர்ந்தும், குறைந்தும் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறதே!

‘‘இந்த நிறுவனத்தின் நிறுவனர் பி.சி.குப்தா தனது நிறுவனத்தின் பங்கினை, தனது குடும்ப உறுப்பினர்களுக்குப்  பரிசாக அளித்தார் என்கிற குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்தப் பங்கின் விலை சரசரவெனக் குறைய ஆரம்பித்தது.

இந்தப் பங்கின் சந்தை மதிப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏறக்குறைய ரூ.20 ஆயிரம் கோடிக்குப் பக்கத்தில் இருந்தது. ஆனால், இப்போது வெறும் ரூ.6,800 கோடி என்கிற அளவில் மட்டுமே இருக்கிறது. இந்தப் பங்கின் விலை இந்த ஆண்டின் முதல் தேதியிலிருந்து இன்று வரை 61 சதவிகிதமும், கடந்த ஒரு மாத காலத்தில் 41 சதவிகிதமும், கடந்த ஒரு வாரத்தில் 26 சதவிகிதமும் விலை குறைந்திருக்கிறது.

ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை அன்று சற்றும் எதிர்பாராதவிதமாக 43% விலை உயர்ந்தது. மிக மிக ரிஸ்க் எடுப்பவர்கள் மட்டுமே இந்தப் பங்கினைத் தொடர்ந்து வைத்திருக்கலாம். ரிஸ்க்கே வேண்டாம் என்று நினைப்பவர்கள் இந்தப் பங்கிலிருந்து நன்கு விலகியிருப்பதே நல்லது’’ என்றவரின், செல்போன் சிணுங்கியது.

‘‘முக்கியமானதொரு நிறுவனத்தின் எம்.டி- யைச் சந்திக்க போட் கிளப்புக்குச் செல்கிறேன்’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பத் தயாராக, நாமும் அங்கிருந்து நம் அலுவலகத்துக்குப் புறப்பட்டோம்.

எல் & டி: உயரும் வருமானம்!  

ல் & டி நிறுவனம் தன்னுடைய எலெக்ட்ரிக்கல் மற்றும் ஆட்டோமேஷன் வர்த்தகப் பிரிவை ஸ்னைடர் எலெக்ட்ரிக் (Schneider Electric) நிறுவனத்துக்கு ரூ.14 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்கிறது. இந்த விற்பனை நடவடிக்கை  அடுத்த 18 மாதங்களில் நிறைவடையும். இதன்மூலம் எல்&டி பங்கை வைத்துள்ள முதலீட்டாளர்களுக்குக் கூடுதலாக ரூ.45 கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த விற்பனை வாயிலாக, இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் மூலமான வருவாய் 4.5% அதிகரிக்கும். இந்த விற்பனையால் எல்&டி நிறுவனத்தின் வருவாய் 2019-20-ம் நிதியாண்டில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், 2021-ம் நிதியாண்டில் பங்கு மூலதனம் மூலமான வருமானம் 18%-ஆக  அதிகரிக்கும். இது கடந்த நிதியாண்டில் 12.80%-ஆக இருந்தது.”