Published:Updated:

வின்னிங் இன்னிங்ஸ்

வின்னிங் இன்னிங்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
வின்னிங் இன்னிங்ஸ்

பாசிட்டிவ் பகுதிபரிசல் கிருஷ்ணா

காலம் கணித்திடு  

​Success is where preparation and opportunity meet.

 -Bobby Unser​

திருச்சிதான்  கிரீஷ்  மாத்ருபூதத்தின் சொந்த ஊர்.  அப்பா வங்கி அதிகாரி. ஒரு தங்கை. சென்னையில் எம்.பி.ஏ படித்தார். படிக்கும்போது தொழில் தொடங்கும் யோசனையெல்லாம் இல்லை.   

எம்.பி.ஏ முடித்ததும் பிரபல மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. வேலை செய்துகொண்டே `ஜாவா’ மென்பொருள் பயிற்சி வகுப்பும் நடத்தினார் கிரீஷ். அப்போது அமெரிக்காவில் பணிபுரியும் நண்பர்கள் பலர், `நீ அமெரிக்காவுக்கே வந்துடு சிவாஜி’ என்று அழைத்துக் கொண்டேயிருந்தனர். அங்கிருக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து அறிந்த கிரீஷ், பணியிலிருந்து விலகி, ஜாவா பயிற்சி வகுப்புகளையும் நிறுத்திவிட்டு அமெரிக்கா பறந்தார்.

அமெரிக்கா சென்றபோதுதான் Dot Com Crash பிரச்னை சிலிக்கன் வேலியை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருந்தது. ஒரே வருடத்தில் அமெரிக்க வேலையிலிருந்தும் விலகி, இந்தியா வந்தார்.

மீண்டும் ஜாவா பயிற்சி மையம். இந்தியாவிலும் கணினி தொடர்பான படிப்பும் வேலையும் சரிவில் இருந்த நேரம். தகவல் தொழில்நுட்பப்  படிப்பைத் தேர்ந்தெடுப்பதிலும் மாணவர்கள் பெரிய ஆர்வம் காட்டாத நேரம்.

ஒரே வருடத்தில் அதை மூடிவிட்டு, 2001-ம் ஆண்டில் பிரபல நிறுவனமான ‘ஜோஹோ’வில் பணியாற்றத் தொடங்குகிறார். கணினியியலில் கிரீஷுக்கு இருந்த ஆர்வம் அவரை ஜோஹோவில் படிப்படியாக முன்னேற்றியது.

வின்னிங் இன்னிங்ஸ்

``அங்கே என் எண்ணங்களைச் செயல்வடி வமாக்க பெரிய சுதந்திரம் கொடுத்திருந்தனர்” என்கிறார் கிரீஷ். ஒரே வருடத்தில் புதிய புராடெக்டுக்கான யோசனையைச் சொல்லி, அதற்கு செயல்வடிவம் கொடுக்கிறார். 2003-ம் ஆண்டில் அந்த புராடெக்ட் வெளியிடப்பட்டு வெற்றியடைகிறது.  

தொடர்ந்து ஜோஹோவில் பல சோதனை முயற்சிகளும் வெற்றிகளுமாக கிரீஷின் பயணம் தொடர்கிறது. பிராண்டை மேம்படுத்த 2007-ம் ஆண்டில் நிறுவனத்தின் சார்பில் மீண்டும் அமெரிக்கா செல்கிறார். இவர் சென்ற ஒரு வருடத்தில் அமெரிக்காவில் பொருளாதாரச் சரிவு. இயல்பிலேயே நேர்மறையான சிந்தனைகளேகொண்ட கிரீஷுக்கு, தான் அமெரிக்கா வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு பிரச்னை ஏற்படுவதை ஏற்க முடியவில்லை. ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தியா வருகிறார்.

கிரீஷுக்குத் தொழில் ஆரம்பித்தால் இதுதான் ஆரம்பிக்க வேண்டும் என்ற விதை விழுந்தது, இந்தியா வந்தபிறகு நடந்த ஒரு சம்பவத்தின் போதுதான். 

அமெரிக்காவிலிருந்து வீட்டுப்பொருள்களை எல்லாம் இந்தியாவுக்குக் கொண்டுவர குழு ஒன்றில் ஆலோசனை கேட்கிறார். அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்த பலரும் இருக்கும் ஒரு குழு அது. அங்கே கிடைத்த ஆலோசனையில், ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனம் ஒன்றின்மூலம் பொருள்களை இந்தியா கொண்டுவர பதிவுசெய்கிறார்.

பல நினைவூட்டல்களுக்குப் பிறகு இரண்டரை மாதம் கழித்துத்தான் வீட்டுப்பொருள்கள் இந்தியா வருகின்றன. பிரித்துப் பார்த்தவருக்கு அதிர்ச்சி. தொலைக்காட்சி சேதமடைந்திருந்தது. காப்பீடு செய்திருந்ததால் மீண்டும் அந்த இறக்குமதி நிறுவனத்தைத் தொடர்புகொள்கிறார். காப்பீடுக்கான பத்திரங்கள், தொலைக்காட்சி வாங்கியதற்கான ஆவணம் எனப் பல அலைக்கழிப்புகள்.

ஐந்தரை மாதங்கள் பொறுத்துப்பார்த்த கிரீஷ், அந்தக் குழுவிலேயே, அந்த ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனம்குறித்து ஒரு வாடிக்கையாளராகத் தனக்கு நேர்ந்த அனுபவத்தை எழுதுகிறார். சில நாள்களிலேயே அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி அதற்கு மறுமொழி இடுகிறார். கிரீஷுக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்துக்கு வருத்தம் தெரிவித்த அவர், உடனேயே அந்தப் பிரச்னையைத் தீர்த்துவைக்கிறார்.

அலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் எனப் பல முயற்சிகள் சாதிக்காததை ஒரு குழுவில் எழுதியது சாதித்தது எப்படி என யோசிக்கிறார் கிரீஷ். அப்போதுதான் வாடிக்கை யாளர் சேவை சார்ந்த மென்பொருள்களுக்கான தேவை நிறைய இருப்பதை உணர்கிறார். தொழில் தொடங்கினால், இது சம்பந்தமான தொழில் தொடங்க வேண்டும் என்ற பொறி தட்டுகிறது.

சில மாதங்கள் கழித்து, வாடிக்கையாளர் சேவை சார்ந்த மென்பொருள் சேவை செய்துகொண்டிருந்த நிறுவனம் ஒன்று தனது கட்டணத்தை 300 சதவிகிதம் உயர்த்துகிறது. அதாவது, அந்த மென்பொருளைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் வாடிக்கை யாளர்கள், தொடர்ந்து பயன்படுத்த வேண்டுமானால் மூன்று மடங்கு கட்டணம் செலுத்தியாக வேண்டும்.

புதிதாகத் தொழில் தொடங்கும் ஆவலில் இருப்பவர்கள் கற்றுக் கொள்ளவேண்டியது இதைத்தான். உங்களிடம் ஒரு யோசனை இருக்கும். அதை எந்த நேரத்தில் செயல்படுத்த வேண்டும் என்பது அதிமுக்கியம். வாலி எழுதியதுபோல `காற்றடிக்கும் நேரம் மாவு விற்கவும், கொட்டும் மழைக்காலத்தில் உப்பு விற்கவும்’ செய்துவிட்டு, ``தொழில் தொடங்கிறதெல்லாம் வேஸ்ட் ப்ரோ. எங்கேயாச்சும் சம்பளத்துக்கே காலம் தள்ளலாம்” என்று பேசுவது அறியாமை.

300 மடங்குக் கட்டண விஷயம், கிரீஷுக்கு ‘ஒரு கதவு திறக்கிறது’ என்பதை பளிச்சென உணர்த்தியது. நண்பர் சண்முகம் கிருஷ்ணசாமியிடம் கலந்தாலோசிக்கிறார்.

இருவருமாக `Fresh Desk’ என்னும் மென்பொருள் நிறுவனத்தை ஆரம்பிக்கிறார்கள். நிறுவனம் டேக் ஆஃப் ஆகும் வரை இருவருமே சம்பளம் எடுத்துக்கொள்வதில்லை என்ற உறுதியுடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் `Fresh Desk’.     

2010-ம் ஆண்டு ஆரம்பித்தபோது இரண்டு பேர். பிறகு  ஆறு பேர்.  2011-ம் ஆண்டு ஆகஸ்டில் முதல் புராடெக்ட் வெளிவருகிறது. விளம்பரமோ, பெரிய அளவிலான மார்க்கெட்டிங்கோ இல்லை. கூகுளில், அப்படியான ஒரு மென்பொருளைத் தேடிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர்தான் முதல் வாடிக்கையாளர். முதலில் இவரது மென்பொருளை வாங்கிய ஆறு பேர், நான்கு வெவ்வேறு கண்டங்களைச் சேர்ந்தவர்கள்.

``எங்க பிசினஸ் ஆரம்பிக்கிறோமோ அங்கேயே பிசினஸ் பண்ணணும்கிறது இல்லைனு புரிஞ்சுக்கிட்டோம்” என்கிறார் கிரீஷ். படிப்படியாக மென்பொருளின் தரம் அறிந்து வாடிக்கையாளர் கூட, 100 நாளில் 100 வாடிக்கையாளர்கள்,  200 நாளில் 200 வாடிக்கையாளர்கள் என Fresh Desk-ன் அந்த மென்பொருள், சந்தையில் பிரபலமானது. இரண்டே வருடங்களில் 10,000 வாடிக்கையாளர்கள் என ஸ்பீடெடுக்கிறது நிறுவனம்.  முதலீட்டாளர்கள், இவரது நிறுவனத்துக்கு முதலீடு செய்ய முன்வருகிறார்கள்.

அடுத்ததாக ஐ.டி நிறுவன சர்வீஸுக்கென்றே `fresh service’ என்ற புராடெக்ட் வெளியிடப்படுகிறது. பிறகு, `fresh sales’ என்று தொடர,  `Fresh works Inc’ என்ற பெயருடன் தொடர்ந்து செயல்படுகிறது. அமெரிக்காவைத் தாண்டி, கூகுள் முதலீடு செய்த முதல் நிறுவனம் இவர்களுடையதுதான்!

``5 இடங்கள், 1,200 ஊழியர்கள் என இன்றைக்கு ஃப்ரெஷ் வொர்க்ஸின் வளர்ச்சிக்குப் பின்னால் அத்தனை ஊழியர்களும் இருக்கிறார்கள். நிறுவனம் ஆரம்பித்தபோது வைத்த ஒவ்வோர் அடியையும் கவனமாகவும் உறுதியுடனும் வைத்தோம். அதுதான் இந்த நிலைக்கு எங்களைக் கொண்டுவந்திருக்கிறது. நான் ஒருவன் மட்டுமல்ல, என்னுடைய ஊழியர்கள் ஒவ்வொருவரும் BMW காரில்தான் வரவேண்டும். அதை நோக்கியே அனைவரும் உழைக்கிறோம்” என்றார் கிரீஷ் மாத்ருபூதம்.

வின்னிங் இன்னிங்ஸ்

கிரீஷின் பிசினஸ் மொழிகள்

* வாய்ப்புகள் நம் கண்முன்னேதான்  இருக்கும். அவற்றை எந்த நேரத்தில் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து நம் வளர்ச்சி இருக்கும்.

* வெற்றியை நோக்கி நாம் போகவேண்டும் என  உழைப்பது ஒரு வகை. வெற்றியை நம் பக்கம் கொண்டுவருவது இன்னொரு வகை. நான் இரண்டாவது வகையைத்தான் நம்புகிறேன்.

* நீங்கள் எங்கு பணிபுரிந்தாலும் அதை உங்கள் நிறுவனமாக நினைத்து அர்ப்பணிப்புடன் பணிபுரியுங்கள். நாளை நீங்கள் சொந்தமாக ஒரு நிறுவனம் ஆரம்பிக்கும்போது, அந்த உழைப்பும் அர்ப்பணிப்பும் நிச்சயம் கைகொடுக்கும்.