
ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)ஓவியங்கள்: ராஜன்
நியூயார்க் இன்டர்நேஷனல் பேங்கிங் குரூப்பின் (NYIB) இந்தியக் கிளையின் தலைவராக மாள்விகா நியமிக்கப்பட்ட அறிவிப்பு இறுதியாக வந்தது. அதோடு, மாட் மெட்ஸ்கர் அடுத்த சி.இ.ஓ என்கிற ஆச்சர்ய மான அறிவிப்பும் வந்தது.

இந்த அறிவிப்பு மாள்விகாவைத் தவிர, இன்னொருவருக்கும் உற்சாகத்தைத் தரவில்லை. மாள்விகாவிற்குப்பிறகு சுவாமிதான் அந்த இடத்துக்கு வரக்கூடும் என்று நம்பிக்கொண்டிருந்தார். உண்மை யிலேயே, அவர் இந்தியாவில் ரீடெயில் பேங்கிங் பிரிவுக்கு மீண்டும் வந்தபோது, பீட்டர் பாரனுக்குமுன்பு இருந்தவர், மாள்விகாவுக்குப்பின் இவர்தான் சி.இ.ஓ–ஆக ஆக்கப்படுவார் என்று உறுதியளித்திருந்தார்.
ஆனால், பெருநிறுவன உலகில், தொடர்ந்து வருபவர்களுக்கு முன்பு இருந்தவர்கள் தந்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற நியதி எதுவுமில்லை. ரீடெயில் பேங்கிங்கின் தலைமைப் பொறுப்பிலிருந்த சுவாமி செயல் பாட்டுரீதியில் `மாட்’ டுக்குத்தான் ரிப்போர்ட் செய்துகொண்டிருந் தார். ஆனால், உறவு அவ்வளவு இணக்கமாக இருக்கவில்லை. அவர் இப்போது இந்தியாவுக்கு வந்தால் அது இன்னும் மோசமாகக் கூடும்.

அதற்கான காலம் அதிகமாக இல்லை. புதிய சி.இ.ஓ–வாக பதவி யேற்ற சில நாள்களிலேயே அந்த மாதிரியான ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.
வழக்கமான ஓரியன்டேஷனின் ஒருபகுதியாக, ‘மாட்’ பல பிசினஸ் குழுக்களைச் சந்தித்தார். அதில் ரீடெயில் பேங்கிங்கும் அடங்கும். ஒருநாள் முழுவதும் நடைபெற்ற அந்த நிகழ்வுக்குப்பிறகு, சுவாமி `மாட்’டை கான்ஃபரன்ஸ் ரூமில் விட்டுவிட்டு, தன் அறைக்கு வந்தார். மாட் அவசரமாக சில இ-மெயில்களைப் பார்க்க விரும்பினார். 15 நிமிடங்களுக்குப் பிறகு, சுவாமி அவரைப் பார்க்கச் சென்றார். அவருடைய செகரட்டரிதான் அப்போது அங்கிருந்தாள். அவள் போனில் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் `மாட்’ எங்கும் காணவில்லை.
போனில் பேசிக்கொண்டிருந்த செகரட்டரி தனது போனை மூடிக் கொண்டு, சுவாமியைப் பார்த்து `அவர் இங்குதான் இருக்கிறார்... வந்துவிடுவார்’ என்று சொல்லி விட்டு, மீண்டும் போனில் பேசியபடி அந்த அறையைவிட்டு வெளியேற அங்கே சுவாமி மட்டும் நின்றுகொண்டிருந்தார்.

அவள் என்ன சொன்னாள் என்று சுவாமியால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே, அங்கிருந்து வெளியே செல்ல நினைத்தபோது ‘மாட்’ காலையில் பார்த்துக் கொண்டிருந்த சில காகிதங்கள் மேசையில் குவியலாக இருந்தன. அதில் ஒரு காகிதத்தின் மேற்புறத்தில் சுவாமியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் அவர் மேசையை நோக்கிச் சென்றார். அவருடைய இதயம் நின்றுவிடுவதுபோல இருந்தது. அவர் தனது ஐபோனை எடுத்து அந்தப் பக்கத்தை `க்ளிக்’ செய்து விட்டு அந்த அறையிலிருந்து வெளியேறினார்.
‘`பிட்ச்..!” - அன்று மாலை ஆதித்யாவைச் சந்தித்தபோது அந்தக் காகிதத்தைக் காட்டி, தனது எரிச்சலைக் காட்டினார். அது ‘மாட்’ பதவி ஏற்றுக்கொள்கிற செயல்பாட்டின் ஒருபகுதியாக சுவாமி குறித்து மாள்விகா சமர்ப்பித்த ரகசிய அறிக்கையாகும். அதில் மாள்விகா சுவாமி குறித்து மிகவும் கடுமையாக விமர்சித்திருந் தார். அதில், அவர் தனக்குக் கீழ்ப் படிவதில்லை என்றும், திறமையில்லாதவர் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதுவரை சுவாமியைப் பற்றி இப்படி யாரும் எழுதியதில்லை.
‘`ஆதித்யா, எனக்கும் மாள்விகாவுக்கும் என்ன பிரச்னை? அவர் என்னைப் பற்றி ஏன் இப்படி சொல்லியிருக்கிறார்?’’

‘`ஒருவேளை உங்களுடைய புத்திசாலித்தனம் அவரை அச்சுறுத்தி யிருக்குமோ? சி.இ.ஓ பதவி அவருக்குப்பிறகு உங்களுக்குக் கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்ட வாக்குறுதி அவருக்குத் தெரிந்திருக்கலாம். அது அவருக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம்.’’
‘‘தெரியவில்லை ஆதித்யா. ஆனால், நான் மாள்விகாவைத் திறமையற்றவர் என்று சீனியர் மேனேஜ்மென்டிடம் சொல்லி நிரூபிக்கப் போகிறேன். இது சத்தியம்!’’
‘`அது அவர்களுக்குத் தெரியாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவரை ஏன் தலைவர் ஆக்கியிருப்பதாக நினைக்கிறீர்கள்? அவரை சி.இ.ஓ-வாகவே வைத்திருக்க முடியாது. அந்தப் பதவியிலிருந்து நீக்கவும் முடியாது. எனவே, இதைச் செய்திருக்கிறார்கள். இப்படிச் செய்ததின் மூலம் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அவர் குறுக்கிடமாட்டார். அதற்குள் பீட்டர் பாரனின் பதவிக்காலம் முடிந்துவிடும். அதன்பின் யாராவது வந்து அவரைத் தலைவர் பதவியிலிருந்து நீக்குவது எப்படி என்று யோசிப்பார்கள்.’’
‘`இது என்ன நியாயம்? நாம் பேசாமல் வேலையை விட்டுவிடவா?’’
‘`சுவாமி, நீங்கள் வேலையைவிட்டாலும்கூட நல்ல நிலையில் இருக்கும்போது விடவேண்டும். அப்போதுதான் உலகம் உங்களுக்கு மதிப்புத் தரும்.’’
சுவாமி எதுவும் சொல்லவில்லை. அவர் ஜன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
‘`சுவாமி, நான் மாள்விகாவிடம் இதுபற்றி பேசுகிறேன். அவருடன் எனக்கு நல்ல பழக்கமுண்டு. அவருக்கு உங்கள்மீது என்ன கோபம் என்று தெரிந்துகொள்கிறேன். இந்த ஃபிஷிங் ஸ்கேமில் உங்களைப் பலிகடாவாக்க அவர் நினைத்திருக்கலாம். யாருமே பாதுகாப்பின்மையை உணர நேர்ந்தால், இப்படி செய்யத் தோன்றும்...’
அவருடைய போன் `ரிங்’கானதால், உரையாடல் தடைபட்டது. அவர் போனை பார்த்துவிட்டு, சுவாமியைப் பார்த்தார். ‘`0832...? இது எங்கிருந்து?” அவர் அழைப்பை ஏற்றுக்கொண்டார். ‘`ஹலோ’’ அவர் மிகவும் மெதுவாகச் சொன்னார்.
‘`டாட்!”
‘`என்ன ஆச்சு, போனில் யார்?’’ சுவாமி கேட்டார். பித்து பிடித்தது போல இருந்த அவரது முகத்தைப் பார்த்த சுவாமிக்குக் கவலை அதிகமானது. ‘`என்னோடு வாருங்கள்’’ என்று மட்டும்தான் அந்த நேரத்தில் அவரால் சொல்ல முடிந்தது. அவருடைய குரலில் ஒரு தவிப்பு தெரிந்தது.

சுவாமி காருக்குள் உட்கார்ந்தார். ஆதித்யா அவருடைய பான்ட்ரா வீட்டிலிருந்து வெளியேவந்து தெற்கு மும்பை பகுதியை நோக்கி காரை ஓட்டினார். நள்ளிரவு நேரம் என்பதால், சிக்னல்கள் எல்லாம் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தன. ஆதித்யா மெர்ஸிடிஸில் பறந்தார்.
‘`நான் டிரைவ் பண்ணட்டுமா?” சுவாமி கேட்டார். ஆதித்யா பதிலேதும் சொல்லவில்லை.
அவர் மலபார் ஹில் பகுதியில் இருக்கும் சிறிய தெருக்களின் வழியே சென்று மிகப் பெரிய கேட்டைக்கொண்டிருந்த கட்டடத்தின்முன் காரை நிறுத்த, சுவாமி அவரை ஆச்சர்யத்துடன் பார்த்தார். அவர் கட்டடத்தைப் பார்த்து எங்கே வந்திருக்கிறோம் என்று புரிந்துகொண்டார். ஆனால், கேள்விகள் எதுவும் கேட்கவில்லை.
மின்னலென ஆதித்யா காரி லிருந்து வெளியேவந்து சுவாமியைப் பார்த்து, ‘`நீங்கள் காரிலேயே இருக்கிறீர்களா, இல்லை என்னுடன் வருகிறீர்களா?” என்று கேட்டார்.
விருப்பமில்லாமல் சுவாமி காரிலிருந்து வெளியே வந்தார். அவர் உள்ளே செல்ல விரும்ப வில்லை. ஆனால், அந்தச் சூழ்நிலை யில் ஆதித்யா மட்டும் தனியாக உள்ளே செல்வதைப் பார்த்துக் கொண்டிருக்கவும் மனம் இல்லை.
ஆதித்யா கட்டடத்திற்குள் வேகமாக நுழைந்தார். அவரோடு சேர்ந்து நடப்பது சுவாமிக்குச் சவாலாக இருந்தது. லிஃப்ட் ஆறாவது தளத்தில் நின்று கொண்டிருந்தது. அது கீழேவரும் வரை காத்திருப்பதற்குப் பதிலாக ஆதித்யா மாடிப்படிகளில் வேகமாக ஏற ஆரம்பித்தார். அவர் குறிப்பிட்ட தளத்தை அடைந்து, ஒரு ஃப்ளாட்டின்முன் நின்று மணியை அழுத்தினார். சில விநாடிகளுக்குப்பின் கதவு திறந்தது.
‘`எனக்கு உங்கள் உதவி தேவை மாள்விகா.’’ ஆதித்யாவுக்கு மூச்சு வாங்கியது.
மாள்விகா அவரது தோள் பட்டையை லேசாகத் தட்டிக் கொடுத்து, ‘`காம் டவுன். உள்ளே வாருங்கள். என்ன நடந்தது என்று சொல்லுங்கள்.’’ அவர்கள் இருவரும் நீண்ட காலமாக நல்ல நண்பர்கள்.
ஆதித்யா என்ன சொல்ல வேண்டுமோ, அதை சொல்லி முடித்த வுடன், மாள்விகா ஒரு எண்ணுக்கு போன் செய்தார்.
ஆதித்யா அதிகாலை விமானத்தில் கோவாவுக்குச் சென்றார். அவர் கோவாவை அடைந்தபோது மணி 5.45. மணி. 6.30-க்கு அவர் கோவாவின் மத்திய சிறைச்சாலையை அடைந்து, அந்த நேரத்தில் அவசரமாக அழைக்கப்பட்டிருந்த ஜெயிலரின் முன்னால் உட்கார்ந்திருந்தார். ஆதித்யாவுக்கு சட்டம் சம்பந்தமாக உதவி செய்ய குத்ரேமுக் & கம்பெனி யிலிருந்து வந்திருந்த வக்கீல்கள் குழுவும் அங்கே இருந்தது.
அன்று மாலை கோவாவிலிருந்து அவர் திரும்பியபோது அவரோடு வருணும் இருந்தான். நைஜீரியர்கள் கலகத்தின்போது கைது செய்யப்பட்ட 123 பேர்களில் வருணும் ஒருவனாக இருந்தான். நிதியமைச்சர் மூலமாக முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வரும் வரைக்கும் வருணை சிறையில் வைத்திருந்ததை எண்ணி காவல் துறை மகிழ்ச்சியில் இருந்தது. அவர்கள் விமானத்தில் திரும்பி வரும்போது ஆதித்யா, ‘`நீ முன்னாலேயே என்னோடு தொடர்பு கொண்டிருக்க வேண்டும்’’ என்றார்.
‘‘எனக்குத் தெரியும். இருந்தாலும் நானே முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்தேன். அது முடியாது என்று தெரிந்தபிறகுதான் உங்களைத் தொடர்புகொண்டேன்’’ என்ற வருண் விமானத்தின் ஜன்னல் வழியாக தூரமாக எதையோ பார்த்துக்கொண்டிருந்தான்.
(பித்தலாட்டம் தொடரும்)
தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்

பணமதிப்பு நீக்கம்... உயர்ந்த ரொக்கம்!
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட பின், பணத்தை ரொக்கமாகப் பயன்படுத்துவது சுமார் 7% வரை உயர்ந்துள்ளது. 2016-ம் ஆண்டு செப்டம்பரில் 17 லட்சம் கோடி ரூபாய் ரொக்கமாகப் பரிமாற்றத்தில் இருந்தது. இது கடந்த ஏப்ரலில் 18.25 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆன்லைன் பணப் பரிமாற்றத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, புதிதாகப் பணத்தை அச்சிட்டு நிலைமையைச் சமாளித்து வருகிறது ஆர்.பி.ஐ. பணம் ரொக்கமாகப் பரிவர்த்தனை ஆகிற வரையில், அரசுக்கு வர வேண்டிய வரிப் பணம் வராமல், கறுப்புப் பணமாக மாறிக்கொண்டேதான் இருக்கும்!