
அங்காடித் தெரு - 21 - பாரம்பர்யப் பெருமைமிக்க நாகை பெரிய கடைத்தெரு!
பழங்காலத்தில் கப்பல் போக்குவரத்தால் பன்னாட்டு வணிகத்தோடு, சிறந்த துறைமுகப் பட்டிணமாகத் திகழ்ந்தது நாகப்பட்டினம். கடற்கரையோரம் தற்போதுள்ள பெரிய கடைத்தெருவை, அன்றைக்கே அங்காடித் தெருவாக நிர்மாணித்தவர் ராஜராஜ சோழன். போருக்காகக் கடாரம் செல்லும்முன் அருகே உள்ள வெளிப்பாளையத்தில் தங்கியிருந்த படையினருக்கு இங்குள்ள அங்காடியில் பொருள்கள் வாங்கி உணவு தந்தார் ராஜேந்திர சோழன் என்கிறது வரலாறு.

நாகையின் தெற்கே வேளாங்கண்ணி பேராலயம், மேற்கே சிக்கல் சிங்காரவேலர் கோயில், வடக்கே நாகூர் தர்கா என இயற்கையாக அமைந்திருப்பது வியப்பான விஷயம். ஆக, மும்மதங்களின் சங்கமமாக நாகை இருப்பதால், இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் முக்கிய வர்த்தக மையமாக நாகை பெரிய கடைத்தெரு உள்ளது.
எல்லாப் பொருள்களையும் ஓரிடத்தில் வாங்க தற்போது பெரு நகரங்களில் உள்ள ஷாப்பிங் மால்களுக்குச் செல்கிறார்கள். ஆனால், நாகை பெரிய கடைத்தெருவானது வீட்டிற்குப் பயன்படுத்தும் அத்தனை பொருள்களும் ஓரிடத்தில் கிடைக்கும் ஷாப்பிங் மாலாக பலநூறு ஆண்டு காலமாக இருக்கிறது என்பது ஆச்சர்யமான விஷயம்.
இங்கு நான்கு தலைமுறையாக வியாபாரம் செய்துவரும் ஸ்ரீ.என்.பி.எஸ் மளிகைக் கடையின் உரிமையாளர் பாலகிருஷ்ணனிடம் பேசினோம்.

“எங்கள் தாத்தா மாணிக்கம்பிள்ளை ஒரு மளிகைக் கடையில் தினசரி ஊழியராகத் தன் வாழ்வைத் துவங்கியவர். அவரது விடாமுயற்சியால் சொந்தமாக 1920-ல் வாடகை இடத்தில் மளிகைக் கடை ஆரம்பித்து, மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். அவருக்குப்பின் என் தந்தை பன்னீர்செல்வம் சில்லறை வணிகத்தோடு, மொத்த வணிகமும் செய்ததால் மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. எங்கள் கிளை நிறுவனத்தை வெளிப்பாளையத்திலும் அமைத்தார்.
மூன்றாம் தலைமுறையாக அவர் காட்டிய வழியில் இதே தொழிலில் பயணிக்கிறேன். நான்காம் தலைமுறையாக எனது மகன் பழனிமாணிக்கமும் இந்தத் தொழிலில் சிறப்பாகச் செயல்படுகிறார். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், பெரிய கடைத்தெருக்குப் போனால் தரமான பொருள்களை வாங்கி வரலாம் என மக்கள் நம்பிக்கையைப் பெற்றதால்தான் இங்கே பலரும் தலைமுறைகள் தாண்டியும் வணிகம் செய்துவருகிறார்கள்” என்றார்.

இந்தத் தெருவில் கடந்த நாற்பது ஆண்டுகளாக பிளவர் மில் நடத்தி வரும் தமிழ்ச்செல்வனைச் சந்தித்தபோது, “இப்போதெல்லாம் மிளகாய்ப் பொடி முதல் எல்லாப் பொடிகளும் பாக்கெட்டில் வந்துவிட்டன. ஆனாலும், இந்தப் பகுதி மக்கள் எல்லாப் பொடிகளையும் தாங்களே தயார் செய்து அரைத்துச் சமைப்பதையே விரும்புகின்றனர். அதனால்தான் பண்டிகைக் காலம் மட்டுமல்ல, எப்போதுமே எனது மில் பிசியாக இருக்கிறது” என்றார்.

இங்கே காபி வியாபாரம் செய்து வரும் விஜய் கணேஷிடம் பேசினோம். “88 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறோம். மைசூர், சிக்மங்களுர் போன்ற இடங்களில் தரமான காபிக் கொட்டைகளை வாங்கிவந்து, அதனை வறுத்து, அரைத்து விற்பனை செய்கிறோம். பாரம்பர்யத்துக்கு மக்கள் முக்கியத்துவம் தருவதால்தான் எங்களைப் போன்றவர்கள் வெற்றிகரமாக இங்கே தொழில் செய்ய முடிகிறது”் என்றார் மகிழ்ச்சியுடன்.

நூற்றாண்டை நோக்கிப் பயணித்துவரும் உமா பேக்கரி உரிமையாளர் குப்புசாமி, “1920-ல் எங்கள் தாத்தா, கடலை விற்கும் கடையாக இந்தக் கடையை ஆரம்பித்தார். இன்று அது பேக்கரியாக வளர்ந்து பல கிளைகளை நடத்துகிற அளவுக்கு மாறியிருக்கிறது. எங்கள் பேக்கரியில் தயாரிக்கப்படும் முந்திரி அல்வாவுக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். பாரம்பர்யம் மிக்க இந்தக் கடைத்தெருவில் பொதுமக்கள் சிரமமின்றி வந்துசெல்லப் போக்குவரத்து வசதிகளைச் சீர்படுத்துவது அவசியம்’’ என்றார்.
வர்த்தகர் சங்க முன்னாள் தலைவரான குகனுடன் பேசினோம். “இங்கிருந்த தென்னக ரயில்வே அலுவலகம் திருச்சிக்கு மாற்றப் பட்டது. இரண்டு கப்பல்கள் கொண்ட போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. அருகில் இருந்த ஆணி தயாரிக்கும் தொழிற்சாலையும் மூடப்பட்டது. அருகில் இருந்த பேருந்து நிலையம், வெளிப்பாளையத்துக்குப் புதிய பேருந்து நிலையமாக மாற்றப்பட்டது. இந்த மாற்றங்களால் மிகச் சிறப்பாக இருந்த வியாபாரம் கொஞ்சம் குறைந்துபோனது. ஆனாலும், மீனவ மக்கள் மற்றும் மும்மதத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளால் தொழில் தொய்வில்லாமல் நடந்துவருகிறது” என்றார்.
பழைமைக்கும் பாரம்பர்யத்துக்கும் எப்போதும் தனிமுக்கியத்துவம் இருக்கும் என்பதற்கு நாகை பெரிய கடைத்தெரு ஒரு நல்ல உதாரணம். நாகபட்டினத்துக்குப் போகிறவர்கள் அங்குள்ள கடைத் தெருவுக்கு அவசியம் போய் வரலாம்!
-மு.இராகவன்
படங்கள் : க.சதீஷ்குமார்
பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை!
இங்கு தொழில் செய்துவரும் சாமிக்கடை அல்வா உரிமையாளர் நாகராஜன், “நூறு ஆண்டுகளுக்கு மேலாக இங்கே தொழில் செய்கிறோம். சுத்தமான பசு நெய் மற்றும் கோதுமையால் அல்வா செய்கிறோம். சிங்கப்பூர், மலேசியா மற்றும் அரபு நாடுகள் வரை அல்வாவை அனுப்பி வருகிறோம். நாங்கள் எப்போதும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை. ஏனென்றால், பிளாஸ்டிக்கில் உள்ள கெமிக்கல் அல்வாவைப் பாதித்துவிடும்; அதனால், பாரம்பர்ய முறைப்படி புரச இலையில்தான் பேக்கிங் செய்துதருகிறோம். இது சுமார் 25 நாள்களுக்குக் கெடாமல் இருக்கும். வெளிநாடு செல்பவர்கள் இங்கு வாடிக்கையாக வாங்கிச் செல்கிறார்கள்” எனப் பெருமையாகச் சொல்கிறார்.