ஃபண்ட் டேட்டா! - 23 - எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட்... அதிக ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்!

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)
எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் தற்போது ரூ.836 கோடி மதிப்புள்ள சொத்துகளை நிர்வகித்து வருகிறது. இதற்குமுன் இந்த ஃபண்ட் எஸ்.பி.ஐ ஸ்மால் அண்டு மிட்கேப் ஃபண்ட் என அழைக்கப் பட்டது. இதன் ஃபண்ட் மேனேஜராக இருக்கிறார் ஆர்.ஸ்ரீனிவாசன்.

மே 15, 2018-ம் தேதி வரை இந்த ஃபண்ட் புதிய முதலீடுகளை ஏற்றுக்கொள்ளவில்லை. 16/05/2018 முதல் இந்த ஃபண்ட் புதிய முதலீடுகளை ஏற்றுக்கொண்டு வருகிறது. ஒருநபர் அதிகபட்ச மாக மாதம் ஒன்றுக்கு ரூ.25,000 வரை எஸ்.ஐ.பி மூலமாகவோ அல்லது எஸ்.டி.பி மூலமாகவோ இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம். அதற்குமேல் முதலீடு செய்ய வருபவர்களை இந்த ஃபண்ட் ஏற்றுக்கொள்வதில்லை.

இந்த ஃபண்டை நாம் பரிந்துரை செய்வதற்கு முக்கியக் காரணம், இதன் உன்னதமான வருமானம்தான். சுமார் 8 வருடங்களுக்குமுன்பு (09/09/2009) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், தற்போது ரூ.5,74,174-ஆக உள்ளது. இது ஒரு உன்னதமான வருமானமாகும். இது சி.ஏ.ஜி.ஆர் அடிப்படையில் 22.27% ஆகும்.
பொதுவாக, ஸ்மால்கேப் ஃபண்ட் மேனேஜர்கள் ரிஸ்க்கைக் குறைப்பதற்காக, அதிகமான நிறுவனங்களின் பங்குகளை போர்ட் ஃபோலியோவில் வைத்துக்கொள்வார்கள். ஆனால், இந்த ஃபண்டோ வெறும் 29 பங்குகளையே தனது போர்ட்ஃபோலியோவில் கொண்டுள்ளது. இதன் டாப் ஹோல்டிங்ஸாக வெஸ்ட்லைஃப் டெவலப்மென்ட், கிர்லோஸ்கர் ஆயில் இன்ஜின்ஸ், ஹாக்கின்ஸ் குக்கர்ஸ், அலெம்பிக் ஆகிய பங்குகள் உள்ளன. இதன் டாப் முதலீட்டுத் துறைகளில் எஃப்.எம்.சி.ஜி, சர்வீசஸ், இன்ஜினீயரிங், கன்ஸ்ட்ரக்ஷன் போன்றவை ஆகும். இந்த ஃபண்ட் வைத்திருக்கும் பங்குகளின் ஆவரேஜ் சந்தை மதிப்பு ரூ.2,932 கோடியாகும். ஸ்மால்கேப் பங்குகளில் கிட்டத்தட்ட 75 சதவிகிதமும், எஞ்சியது மிட் மற்றும் லார்ஜ்கேப் பங்குகளிலும் உள்ளது.

இதன் ஃபண்ட் மேனேஜராக இருக்கிறார் ஆர்.ஸ்ரீனிவாசன். அவர் நிர்வகிக்கும் வேறுசில திட்டங்கள் எஸ்.பி.ஐ ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்ட் (எஸ்.பி.ஐ மேக்னம் பேலன்ஸ்டு ஃபண்ட்) மற்றும் எஸ்.பி.ஐ ஃபோக்கஸ்டு ஈக்விட்டி ஃபண்ட் (எஸ்.பி.ஐ எமர்ஜிங் பிசினஸஸ் ஃபண்ட்) ஆகும்.

இந்த ஃபண்டின் பீட்டா 0.78 என்ற அளவில் சந்தையைவிடக் குறைவாகவும், ஆல்ஃபா 9.86 என்ற அளவில் உன்னதமாகவும் உள்ளது. இதன் பெஞ்ச்மார்க் குறியீடு பி.எஸ்.இ ஸ்மால்கேப் டி.ஆர்.ஐ (BSE Small Cap TRI) ஆகும். இதன் போர்ட் ஃபோலியோவின் டேர்னோவர் விகிதம் 81% என்ற அளவில் அதிகமாக உள்ளது.


சமீபத்தில் ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகளின் விலை சந்தையில் குறைந்துள்ளன. இருந்தாலும், நீண்டகால நோக்கில் பார்த்தால், இந்த கேட்டகிரியைச் சார்ந்த ஃபண்டுகள் நல்ல வருமானத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே, உங்களின் நீண்ட நாள் தேவைகளுக்கு மட்டும் இந்த ஃபண்டில் முதலீடு செய்யுங்கள். மேலும், ஸ்மால்கேப் ஃபண்டுகளில் ஃபண்ட் மேனேஜரின் திறமையும், லார்ஜ்கேப் ஃபண்டு களைப்போல் அல்லாமல், அதிகமாகத் தேவைப்படும்.

யாருக்கு உகந்தது?
சந்தையைவிட அதிகமான ரிஸ்க்கை எடுக்க விரும்புபவர்கள், செல்வத்தை உருவாக்க மற்றும் வளர்க்க விரும்புபவர்கள், நீண்ட காலம் (7 ஆண்டுகளுக்கு மேல்) பணத் தேவைப்படாதவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் அனுபவமுள்ள வர்கள், அதிக வருமானத்தைப் பெறுவதற்காக அதிக ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள், இளம் வயதினர் அல்லது பணம் அதிகம் உபரியாக உள்ளவர்கள்.
யார் முதலீடு செய்யக்கூடாது?
குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், உறுதியான/ நிலையான வருமானத்தை விரும்பு பவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்கு பவர்கள்.