
டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம்
தீபன் 12-வது முடித்து பட்டப் படிப்புக்குத் தயாராக இருக்கும் ஓர் இளைஞன். விடுமுறை விட்டது முதலே அவனுடைய முக்கியமான வேலை அவனுக்குப் பிடித்தமான கதை எழுதுவதுதான். தீபனுக்கு மனிதர்களின் நிஜ வாழ்க்கைக் கதைகளை எழுத வேண்டும் எனத் தோன்றியது.

இந்த உலகத்துக்கு அறிமுகமில்லாத, படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்த மனிதர் களைப் பற்றிய கதைகளை ‘உலகத்திற்குத் தெரியாத உயர்ந்த மனிதர்கள்’ என்ற தலைப்பில் எழுத ஆசைப்பட்டான். அவனுடைய முதல் கதையின் ஹீரோ அவனுடைய மாமா பாரதி.
பாரதி, அந்தக் கிராமத்தில் சிறு கம்ப்யூட்டர் ஜாப் டைப்பிங் மற்றும் ஜெராக்ஸ் சென்டர் வைத்துள்ளார். கலெக்டர் முதல் கடைநிலை ஊழியரான பியூன் வரை என அனைத்து மட்டத்திலும் பாரதியைத் தெரியாதவர் இருக்க முடியாது. அவருக்கென்று ஒரு தனி மரியாதை இருந்தது. அது தீபனுக்கு அதிகபடியான ஆச்சர்யத்தைக் கொடுத்தது. டைப்பிங் சென்டர் நடத்தும் ஒருவருக்கு இத்தனை மரியாதை எப்படி என்றும், கண்டிப்பாக அதில் சுவாரஸ்யம் இருக்கும் என்றும் முடிவு செய்து தன் மாமாவிடம் அவரைப் பற்றி சொல்லும்படி கேட்டான். தன்னிடம் எந்தவிதத் தனித்திறமையும் இல்லை என எண்ணிய தீபன், எப்படித் தனித்திறமையை வளர்த்துக்கொள்வது என்றும் அவரிடம் கேட்டான்.

பாரதி தன்னைப்பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
“எனக்கு ஸ்கூலுக்கு போறதுன்னாவே பிடிக்காது. என்னைக் கட்டாயபடுத்திதான் ஸ்கூலுக்கு அனுப்புவாங்க. டவுன்ல கொண்டு போய் படிக்க வச்சாங்க. அப்பவும் எனக்குப் படிப்புன்னா வேப்பங் காய்தான். எழுதுறதுன்னா அதை விட மோசம். நிறைய நாள் லேட்டா போய் கிளாஸுக்கு வெளில நின்னுருக்ககேன்.
ஆனா, கம்ப்யூட்டர் வந்தபிறகு எனக்கு வெளில போய் விளையாடவே பிடிக்கலை. எந்த நேரமும் கம்ப்யூட்டரே கதியா இருப்பேன். அதில் கேம்ஸ் விளையாடுறதுதான் என்னோட முக்கியமான வேலையே. காலையில எழுந்ததும் கம்ப்யூட்டரை ஆன் பண்ணிடு வேன். ஸ்கூல் போற வரைக்கும் விளையாடுவேன், அப்புறம் ஸ்கூல் முடிஞ்சி வந்ததும் விளையாடு வேன். என்னோட எண்ணம் எல்லாம் கம்ப்யூட்டர் கேம்ஸ்ல தான் இருக்கும்” என்றார் பாரதி.

“அப்புறம் எப்படி நீங்க ஹார்டுவேர் ஒர்க்கும் பார்க்குறீங்க; சாஃப்ட்வேர் ஒர்க்கும் பார்க்குறீங்க... அதுக்கப்பறம் படிச்சீங்களா?” என்றான் தீபன்.
“நான் அப்படி கேம்ஸ் விளையாடிட்டே இருந்ததுல ஒரு நாள் ஏதோ வைரஸ் என் சிஸ்டத்துல நுழைஞ்சு, என் கம்ப்யூட்டரை நாசமாக்கிடுச்சு. அப்ப என் அப்பாவுக்கு தெரிஞ்ச ஒருத்தர்தான் என் சிஸ்டத்தை சரிசெஞ்சு குடுத்தார். அதெல்லாம் பார்த்துகிட்டே இருந்தேன். அதுக்கு அப்புறம் ரிப்பேர் ஆகும் போதெல்லாம் நானே சரிபண்ண முயற்சி செஞ்சேன். கம்ப்யூட்டர் பத்தின என்னோட தேடல் அப்ப ஆரம்பிச்சுது. ஆனா, அப்பவும் நான் நிறைய கேம்ஸ்தான் விளையாடுவேன்.
அதுக்கப்புறம் 12-வது ரிசல்ட் வந்துச்சு. ஒரு பாடத்துல ஃபெயில் ஆயிட்டேன். அப்பவெல்லாம் அடுத்த வருஷம்தான் எக்ஸாம் எழுத முடியும். ஏன் டைம் வேஸ்ட் பண்ணணும்னு திருச்சியில இருக்குற என்னோட அத்தை வீட்டுல தங்கி, டி.டி.பி கோர்ஸ் பண்ணினேன்.
அப்பத்தான் உங்க தாத்தா நடத்திக்கிட்டிருந்த டைப்பிங் இன்ஸ்டிடியூட் சரியாப் போகாம மூடவேண்டிய நிலைமையில இருந்துச்சு. அப்பத்தான் நான் முடிவு செஞ்சேன்... வேலை தேடி வெளியில அலையறதைவிட அப்பாவோட பிசினஸையே இன்னும் பெரிசா வளர்த்தெடுக் குறதுன்னு முடிவெடுத்தேன்.
என்கிட்ட இருந்த ஒரே ஒரு சிஸ்டத்தை வச்சு ஆரம்பிச்சேன். அப்புறம் ஒரு சின்ன பிரின்டர், ஜெராக்ஸ்மெஷின் என ஒவ்வொண்ணா வாங்கினேன். இடையில என்னோட 12-ம் வகுப்பு ஃபெயிலான பாடத்தை எழுதி பாஸ் பண்ணினேன். டிஜிட்டல் பத்தின புத்தகங்களைப் படிச்சு அறிவைக் கொஞ்சம் கொஞ்சமா வளர்த்துக்கிட்டேன். எனக்கு தெரிஞ்சவங்க சிஸ்டம் ரிப்பேர் ஆனா என்னைக் கூப்பிட ஆரம்பிச்சாங்க. சில ஆபீஸ்ல சிஸ்டம் ஃபெயிலியர், பிரின்டர் பிராப்ளம் வந்தா என்னைத்தான் கூப்பிட்டுப் பார்க்கச் சொல்வாங்க. நான் அதுக்கெல்லாம் பணம் வாங்கமாட்டேன். காரணம், நானும் கத்துக்குறேன் இல்லையா...!
எனக்கு என்னோட பிசினஸ் மேல இருந்த ஆர்வத்துல எந்த நேரம் வேலை தந்தாலும் நேரம் காலம் பார்க்காம முடிச்சு கொடுத்துடுவேன். அதனாலயே என்மேல் எல்லோருக்கும் மதிப்பு ஜாஸ்தியானது. இதெல்லாம் செஞ்சிக்கிட்டே என்னோட பி.பி.ஏ டிகிரியும், எம்.பி.ஏ டிகிரியும் முடிச்சேன். ஒருமுறை கவர்மென்ட் ஆர்டர் வந்துச்சு. கலெக்டர் ஆபிஸ்ல இருந்த சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள் முடியாதுன்னு சொன்ன விஷயத்தை நான் முடிச்சு கொடுத்தேன். கலெக்டரே என்னைக் கூப்பிட்டுப் பாராட்டினர். என்னோட தேடல்தான் பலபேருக்கு வேலை கொடுக்கற அளவுக்கு என்னை உயர்த்திருக்கு” என்று முடித்தார் பாரதி.
தீபன், தன் கதையின் முடிவில், இவரைப்போல ஒவ்வொரு நாளும் தன்னையும் உயர்த்தி, அடுத்தவர்களுக்கும் உயர்வு கொடுக்கும் மனிதர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அடுத்த வாரம் இன்னொரு உயர்ந்த மனிதரைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம் என்று முடித்தான்.
இதன்மூலம் நான் உங்களுக்குச் சொல்ல வந்த விஷயம் என்னவெனில், ஸ்பெஷல் டேலன்ட் என்பதே நம்முடைய செயல்பாடுகளில் உருவாகக் கூடியதுதான். நம்மிடம் இருக்கக்கூடிய சில தனிப்பட்ட விஷயங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. நம் தனித்திறனை யாராவது பாராட்டுகிறபோதுதான் அதைப் பற்றி யோசிக்கிறோம்.
மற்றவர்களுக்குப் பயன்படுகிற, உங்களுக்குப் பிடித்த எந்த வேலை யையும் கண்டிப்பாகச் செய்யலாம். இந்த உலகத்தில் வாழ நமக்குப் பணமும் தேவை. எனவே, அதற்கான வேலையை முதலில் தேடிக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
உங்கள் ஆர்வம், விருப்பம் எதன்மீது இருக்கிறது என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். அப்படி எதுவுமே என்னிடம் இல்லை என்கிற வர்கள் யாரும் இருக்க முடியாது. உங்கள் ஆர்வம் எதன்மீது என்பதை நீங்கள் கண்டுபிடிக்க முயற்சி எடுக்க வேண்டும். பிறகு உங்களுக்குப் பிடித்த விஷயத்தைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் விருப்பமாக இருந்த அந்த விஷயம் திறமையாக மாற்றம் பெறும்.
அந்தத் திறமையை எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். திறமையை வளர்த்துக்கொள்ள தொடர்ந்து அதற்கான களத்தில் செயல்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். திறனை எப்படி மேம்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டும். அதற்காகக் கடுமையாக உழைக்க ஆரம்பிக்க வேண்டும். கடுமையாக உழைக்கிறபோது உங்களுக் கான பாதை தெளிவாகும். அப்போது உங்கள் இலக்கும் சுலபமாகத் தெரியும். அதில் தொடர்ந்து பயணித்தால் வெற்றி நிச்சயம்.
(காலம் வெல்லும்)
படங்கள் : ப.சரவணக்குமார்

டி.சி.எஸ் சி.இ.ஓ-வின் சம்பளம் 100% உயர்ந்தது!
டி.சி.எஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ-வான ராஜேஷ் கோபிநாதனின் சம்பளம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் 100% உயர்ந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டில் 6.2 கோடி ரூபாய் மட்டுமே அவருக்கு சம்பளமாகக் கிடைத்தது. ஆனால், 18-ம் ஆண்டில் அவர் சம்பள மாகப் பெற்ற தொகை மொத்தம் ரூ.12 கோடி ஆகும். இதில் ரூ.1.02 கோடி சம்பளமாகவும், ரூ.10 கோடி கமிஷனாகவும் தரப்பட்டுள்ளது. டி.சி.எஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ பதவியை ஏற்று, ஓராண்டு காலத்தை முடித்திருக்கிறார் ராஜேஷ். அடுத்துவரும் ஆண்டுகளில் இன்னும் பெரிய டீல்களை முடிக்கத் தயாராக இருப்பதாக சொல்கிறார் அவர்.