மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - அசத்தல் லாபம் கொடுக்கும் ஆவாரம்பூ! - 21

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! ( துரை.நாகராஜன் )

மதிப்புக் கூட்டல் தொடர் - 20

திப்புக் கூட்டலில் மூலிகைப் பொருள் களுக்கு முக்கியமான இடம் உண்டு. தமிழ்நாட்டு மூலிகைகளுக்கு மருத்துவக் குணங்கள் நிறையவே உண்டு. பலவிதமான மூலிகைகள் மதிப்புக் கூட்டல் செய்யப்பட்ட பொருளாக விற்கப்பட்டு வருகிறது.   

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - அசத்தல் லாபம் கொடுக்கும் ஆவாரம்பூ! - 21

இப்படி விற்கப்படும் பூக்களில் ஆவாரம் பூ முக்கியமானது. தமிழகத்தில் இயற்கை யாகவே கிடைக்கும் பூதான் இந்த  ஆவாரம் பூ. தமிழ்நாட்டில் இருந்து உலகின் பல       நாடுகளுக்கும் ஆவரம் பூ ஏற்றுமதியாகிறது.

ஆவாரைச் செடியை மதிப்புக் கூட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறார், ஜி.சி.டி நேச்சர்ஸ் புராடெக்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சாருமதி. ஆவாரம் பூ மதிப்புக் கூட்டல் பற்றி பகிர்ந்துகொண்டார் அவர்.

“உலகின் பல நாடுகளிலும் ஆவாரை விளைந்தாலும், தமிழ்நாட்டு ஆவாரைக்கு நல்ல சந்தை வாய்ப்பு உண்டு. ஆவாரம் பூவைப் பொடியாக்கி விற்பனை செய்வது வரைக்கும் தான் நம்மில் பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்திருக்கும்.

ஆனால், ஆவாரம் செடியில் இருக்கும் வேர், பூ, இலைகள் எனத் தனித்தனியாக மதிப்புக் கூட்டல் செய்து விற்பனை செய்ய முடியும். ஆவாரம் செடி மதிப்புக் கூட்டலின் மூலம் இலை, பூ, வேர் என அனைத்தையும் விற்பனை செய்ய முடியும். ஆவாரையில் ஆவாரைப் பொடி தொடங்கி, ஆவாரை டீத்தூள், ஆவாரைச் சூரணம் (Capsules), ஆவாரை முகப்பொலிவு கிரீம்கள் எனப் பல பொருள்களை மதிப்புக் கூட்டித் தயாரிக்கலாம்.

என்ன சிறப்பு?

தற்போது ஆர்கானிக் மற்றும் மூலிகைகள் பற்றிய விழிப்பு உணர்வு பெருகி வருவதால், ஆவாரைப் பூ தொடங்கி அதன் உபபொருள் களுக்கும் சந்தையில் தனிமதிப்பு உண்டு. அதிகமான மக்களும் விரும்பி வாங்க ஆரம்பித்துள்ளனர்.

ஏன் ஆவாரம் பூவில் மதிப்புக் கூட்டல்?

ஆவாரம் பூவினை மதிப்புக் கூட்டி விற்பது  இன்றைய சந்தையில் முக்கியமான தொழிலாகப் பார்க்கப்படுகிறது. காரணம், மூலிகைகளுக்கான சந்தை விரிவடைந்து இருக்கிறது. அதனால் ஆவாரம் பூ மதிப்புக் கூட்டல் தொழில் நல்ல லாபம் பார்க்கக்கூடியதாகவும் இருக்கும்.

தயாரிப்பு முறை

நான் ஆவாரம் பூவில்தான் அதிகமான பொருள்களைத் தயாரித்து வருகிறேன். ஆவாரம் பூவைப் பொறுத்தவரை, பொடியாகவும் விற்பனை செய்யலாம். டீத்தூள் வடிவத்திலும், முக அழகு சாதனப் பொருள்களாகவும் கொடுக்கலாம். மேலும், அரைத்த ஆவாரம் பூ பொடியைச் சூரணம் வடிவிலும் தரலாம். ஒரு வடிவத்தில் மட்டும் பொருள்களைத் தயாரித்தால் விற்பனை சற்றுப் பின்னடைவைச் சந்திக்கக்கூடும். அதனால் ஆவாரம் பூவில் அனைத்துப் பொருள்களையும் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்.

மூலப்பொருள்கள் கிடைக்கும் இடங்கள்

நான் இயற்கையாகவே கிடைக்கும் ஆவாரம் பூவை கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாங்கிக்கொள்கிறேன். தமிழ்நாடு முழுவதும் ஆவாரம் பூ பரவலாகக் கிடைப்பதால், அதனை அந்தந்தப் பகுதிகளில் வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதலீடு

12 அடி நீளம், 20 அடி அகலம் கொண்ட ஓர் இடத்தில் ஆவாரை மதிப்புக் கூட்டல் தொழில் செய்ய குறைந்தபட்சம் 25 ஆயிரம்  ரூபாய் செலவாகும். ஆனால், ஆவாரைத் தொழிலுக்கென இடவரம்பு கிடையாது. வீட்டிலுள்ள பெண்களும் ஆவாரையை மதிப்புக் கூட்டல் செய்து வருமானம் பார்க்கலாம். இதற்கு ஆரம்ப முதலீடாக 10 ஆயிரம் ரூபாய் இருந்தாலே போதுமானது.

மதிப்புக் கூட்டலில் கவனிக்க வேண்டியவை

ஆவாரம் பூவைக் காய வைத்துத் தயாரிக்கும்போது, சுத்தமாக இருக்க வேண்டும். ஏனெனில் நாம் தரப்போகும் பொருள் மக்களுடைய ஆரோக்கியத்துக் கான பொருள். தரையில் காய வைக்கும் போது, முதலில் ஒரு பிளாஸ்டிக் சீட்டை விரித்து, அதில் ஆவாரம் பூக்களைப் பரப்பி, தூசு தும்பு விழாத படிக்குக் காயவைப்பது அவசியம். சிமென்ட் தரையில் காய வைத்தால் மண், தூசி கலந்து சுத்தம் குறைவாக இருக்கும்.  

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - அசத்தல் லாபம் கொடுக்கும் ஆவாரம்பூ! - 21

ஆவாரைப் பொருள்கள் பெரும்பாலும், விற்பனையாவது வெளி நாடுகளில் என்பதால், சுத்தம் ரொம்ப முக்கியம். அப்போதுதான் நல்ல லாபமும் கிடைக்கும். இதுபோன்ற பொருள்கள்தான் சந்தையில் விரும்பி வாங்கப்படுகிறது. மதிப்புக் கூட்டல் பொருள்களுக்கு முக்கியமானது, தரம்தான். நாம் விற்கும் பொருள் உடல்நலத்துக்கானது என்பதால், ரசாயனங்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

லாபம்

200 ரூபாய்க்கு ஒரு கிலோ ஆவாரம் பூ வாங்கினால், அதை மதிப்புக் கூட்டி 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். இதில் மூலப்பொருள்கள், போக்குவரத்து, ஆள்கூலி என 600 ரூபாய்க்குச் செலவானால், 400 ரூபாய் லாபம் கிடைக்கும். ஒரு மாதத்திற்கு இவ்வளவு வருமானம் எனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அவரவர் தொழில் முதலீட்டுக்கேற்பவும், திறனுக்கேற்பவும்தான் லாபம் கிடைக்கும்.

தரத்தில் சமரசம் செய்யாமல் பொருள்களை உற்பத்தி செய்தால், அதிக வருமானம் ஈட்டக்கூடிய நபர்களில் நீங்களும் ஒருவராக இருப்பது நிச்சயம்’’ என்று முடித்தார் சாருமதி.

மூலப்பொருள் எளிதில் கிடைப்பதுடன், நல்ல சந்தை வாய்ப்பும் உண்டு என்பதால், ஆவாரம் பூவை மதிப்புக் கூட்டி விற்று நல்ல லாபம் சம்பாதிக்கலாமே!

(மதிப்புக் கூடும்)

- துரை.நாகராஜன்

படம் :  ல.அகிலன் 

சந்தை வாய்ப்பு! 

“த
மிழ்நாடு, இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் அதிகமான இடங்களில் ஆவாரம் பூ விற்பனை செய்து கொண்டிருக்கிறேன். வெளிநாடுகளில் மருத்துவப் பொருள்களுக்காக ஆவாரைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தரமான ஆவாரைப் பொருள்களின் இறக்குமதிக்காக இன்று பல நாடுகள் காத்துக் கிடக்கின்றன. ஆனால், இயற்கையை விரும்பும் அவர்களுக்கு கெமிக்கல் கலப்பு இருக்கக்கூடாது. அப்படி கெமிக்கல் கலந்தால், அதற்குப் பின்னர் சந்தை வாய்ப்பு கொஞ்சம் சிரமமானதாக இருக்கும். இன்றைய சந்தை வாய்ப்பைவிட எதிர்காலச் சந்தை வாய்ப்பு ஆவாரம் பூவுக்குச் சிறப்பானதாக இருக்கும்” என்கிறார் சாருமதி.