
ஃபோர்ட்டீஸ் நிறுவனத்தை வாங்குவது யார்? - மல்லுக்கட்டும் மணிப்பால் - ஹீரோ!
பெரும் கடனில் சிக்கித் தவிக்கும் ஃபோர்ட்டீஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தை மணிப்பால் குழுமம் வாங்குவதாக அறிவிக்கப் பட்டதிலிருந்தே அந்த நிறுவனத்தில் பல்வேறு குழப்பங்களும், திடீர் திருப்பங்களும் அரங்கேற ஆரம்பித்தன.

ஃபோர்ட்டீஸ் நிறுவனத்துக்கு நாட்டின் பல்வேறு நகரங்களில் 34 மருத்துவமனைகள் உள்ளன. 4,600 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனைகளில் 2,600 மருத்துவர்களும், 6,500 செவிலியர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்தியா மட்டுமல்லாமல், இலங்கை, துபாய், மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளிலும் ஃபோர்ட்டீஸ் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.
மணிப்பால் ஹாஸ்பிட்டல்ஸ்
கடனைச் சமாளிக்க முடியாத நிலையில், ஃபோர்ட்டீஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் பங்குகளை விற்க முடிவு செய்யப்பட, அதனை வாங்க 12-க்கும் அதிகமான நிறுவனங்கள் போட்டியிட்டன. அதில் ஃபோர்ட்டீஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் பங்குகளை மொத்தமாகவோ அல்லது ஒரு பகுதியையோ வாங்க விருப்பம் தெரிவித்த ஐந்து நிறுவனங்களை மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட ஃபோர்ட்டீஸ் நிறுவனம், பெங்களூரைத் தலைமையிடமாகக்கொண்ட மணிப்பால் ஹாஸ்பிட்டல்ஸ் அண்டு டிபிஜி கேப்பிட்டல் நிறுவனத்தின் திட்டத்தை ஏற்க முன்வந்தது.
மணிப்பால் அளித்த ஏலத் திட்டத்தில், நாட்டின் பல்வேறு இடங்களில் நோயைக் கண்டறியும் ஆய்வகங்களைக் கொண்டதும், ஃபோர்ட்டீஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் துணை நிறுவனமுமான எஸ்.ஆர்.எல் லிமிடெட் நிறுவனத்தின் 50.9 சதவிகிதப் பங்கு களை வாங்கிக்கொள்வதாகவும், இதில் ஃபோர்ட்டீஸ் ஹெல்த்கேர் நிறுவனத்துக்கு உள்ள 20% பங்குகளை ரூ.720 கோடி என்கிற விலையில் வாங்கிக்கொள்வதாகவும், மீதமுள்ள 30.9 சதவிகிதப் பங்கு களை அவற்றை வைத்திருக்கும் தனியார் பங்கு முதலீட்டாளர் களிடமிருந்து வாங்கிக் கொள்வதாகவும் சொன்னது.

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை களுக்குப்பின், ஒருவழியாகக் கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி யன்று மணிப்பால் ஹாஸ்பிட்டல்ஸ் மற்றும் டிபிஜி கேப்பிட்டல் நிறுவனத்திடம் பங்குகளை விற்க, ஃபோர்ட்டீஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்தது. இது குறித்த அறிவிப்பு வெளியான அன்றைய தினமே ஃபோர்ட்டீஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் பங்கின் விலை 9.96% சரிவடைந்து, ரூ.128.25 என்ற நிலைக்குச் சரிந்தது.
போட்டியில் குதித்த ஹீரோ
இந்த நிலையில், ஃபோர்ட்டீஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தை வாங்கும் போட்டியில் களமிறங்கிய முஞ்சால் - பர்மனின் ஹீரோ என்டர்பிரைசஸ் நிறுவனம், கடன் பத்திரங்கள் (வாரன்ட்) மற்றும் பங்குகள் ஒதுக்கீடுமூலமாக ரூ.1,800 கோடியை ஃபோர்ட்டீஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வந்தது. இதில் ரூ.1,000 கோடியை, பங்கு ஒன்றுக்கு ரூ.172 என்கிற மதிப்பில் கடன் பத்திரங் கள் மூலமாகவும், ரூ.800 கோடியைப் பங்கு ஒன்று ரூ.167 என்ற மதிப்பிலும் பங்குகளை வாங்குவதன்மூலம் முதலீடு செய்வதாக அது அறிவித்தது.

இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள் வதாக ஃபோர்ட்டீஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, இந்த மாதம் 10-ம் தேதி அறிவித்தது.
திட்டத்தை மாற்றிய மணிப்பால்
ஃபோர்ட்டீஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தைக் கையகப்படுத்த, முன்னர் அளித்த விலைப் பட்டியலை மாற்றி, மணிப்பால் ஹாஸ்பிட்டல்ஸ் நிறுவனம் வேறொரு திட்டத்தை மே 14-ம் தேதி முன்வைத்தது. அதன்படி, ஃபோர்ட்டீஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் பங்கு ஒன்றுக்கு, முன்னர் கொடுப்பதாகச் சொன்ன 96.5 ரூபாய்க்குப் பதிலாக, 21% கூடுதல் விலையில், அதாவது 116.90 ரூபாய் மதிப்பில் வாங்கிக்கொள்வ தாகத் தெரிவித்தது.
திடீரென்று குதித்த மலேசிய நிறுவனம்
இந்தப் போட்டியில் திடீரென்று குதித்த மலேசிய நிறுவனமான ஐ.ஹெச்.ஹெச் (IHH) நிறுவனம், ஃபோர்ட்டீஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான பங்குகளை ரூ.7,400 கோடி தந்து வாங்கிக் கொள்வ தாகவும், மே மாதம் 29-ம் தேதி வரை இந்த ஆஃபருக்கு அவகாசம் உள்ளதாகவும் கடந்த 17-ம் தேதியன்று அறிவித்தது.

ஆனால், ஃபோர்ட்டீஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் பங்குகளை அதிகம் வைத்துள்ள யெஸ் பேங்க், மணிப்பால் ஹாஸ்பிட் டல்ஸ் நிறுவனத்தின் திருத்தி அளிக்கப்பட்ட திட்டத்தைப் பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியது.
இயக்குநர்கள் நீக்கமும் சேர்ப்பும்
இதனையடுத்து இயக்குநர்கள் குழுவில் இடம்பெற்ற ஹர்பல் சிங், தேஜிந்தர் சிங் மற்றும் சபினா வாய்ஷோஹா ஆகியோர், அதிலிருந்து ராஜினாமா செய்தனர். ஃபோர்ட்டீஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் பொதுக் குழு கூட்டம் (Extraordinary general meeting - EGM), மே 22-ம் தேதி (செவ்வாய்க் கிழமை) அன்று கூட்டப்பட்டது. குறிப்பாக, ஃபோர்ட்டீஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் 12 சதவிகிதப் பங்குகளை வைத்திருக்கும் இரண்டு பெரிய முதலீட்டாளர்களான ஈஸ்ட்பிரிட்ஜ் கேப்பிட்டல் மற்றும் ஜூபிடர் இண்டியா ஆகிய நிறுவனங்கள் இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.இதனையடுத்து, முதலீட்டாளர்கள் தங்களுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவர உள்ளதை அறிந்து ஹர்பல்சிங், தேஜிந்தர்சிங் முன்கூட்டியே விலகியதாகச் சொல்லப்பட்டது. ஆனால், இதனை அவர்கள் இருவருமே மறுத்துள்ளனர்.
கடந்த மே 22-ம் தேதியன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், ஏற்கெனவே ராஜினாமா செய்த ஹர்பல் சிங், தேஜிந்தர் சிங் உள்பட நான்குபேரை நீக்கிவிட்டு, புதிதாக மூன்று தன்னாட்சி இயக்குநர்களும் நியமிக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இனி என்ன நடக்கும்?
பழைய இயக்குநர்கள் குழு, ஹீரோ என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக இருந்த நிலையில், புதிய குழு மலேசிய நிறுவனமான ஐ.ஹெச்.ஹெச் (IHH) நிறுவனத்துக்கோ அல்லது மணிப்பால் ஹாஸ்பிட்டல்ஸ் அண்டு டிபிஜி கேப்பிட்டல் நிறுவனத்துக்கோ ஃபோர்ட்டீஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் பங்குகளைக் கையகப்படுத்தும் வாய்ப்பை அளிக்கும் எனத் தெரிகிறது.
இதுதொடர்பாக, ஈக்னாமிக்ஸ் ரிசர்ச் அண்டு அட்வைஸரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.சொக்கலிங்கத்திடம் பேசினோம். “ஃபோர்ட்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தில் நடப்பதைப் பார்க்கும்போது, மிகவும் குழப்பமான நிலையே காணப்படுகிறது. இருப்பினும், மலேசியாவின் ஐ.ஹெச்.ஹெச் நிறுவனமோ அல்லது முஞ்சால் - பர்மனின் ஹீரோ என்டர்பிரைசஸ் நிறுவனமோ ஃபோர்ட்டிஸ் பங்குகளை வாங்குவதே முதலீட்டாளர் களுக்குப் பலனளிப்பதாக அமையும்” என்றார்.
ஃபோர்ட்டீஸ் நிறுவனத்தை இனி எந்த நிறுவனம் வாங்கும் என்பதைப் பொறுத்தே அதன் எதிர்காலம் நிர்ணயமாகும் என்பதில் சந்தேகமில்லை!
-பா.முகிலன்
பூஷன் ஸ்டீலை வாங்கும் டாடா ஸ்டீல்!
பெரும் கடன் சுமையில் தத்தளித்துவந்த பூஷன் ஸ்டீல் நிறுவனத்தை டாடா ஸ்டீல் கையகப்படுத்தி உள்ளது. ரிசர்வ் வங்கி, கடந்த ஆண்டு அறிவித்திருந்த திவால் நிறுவனங் களின் பட்டியலில் பூஷன் ஸ்டீல் நிறுவனமும் இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து பூஷன் ஸ்டீல் நிறுவனத்தின் கடன் நிலுவைக்குத் தீர்வு காணும் முயற்சியாக, தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (The National Company Law Tribunal) இந்த நிறுவனத்தை ஏலம்விட முடிவு செய்தது. இந்த ஏலத்தில் பங்கேற்ற டாடா ஸ்டீல், பல்வேறு தடை களுக்குப்பின் பூஷன் ஸ்டீலைக் கையகப்படுத்தி உள்ளது.
பூஷன் ஸ்டீல் நிறுவனத்தின் 72.65 சதவிகிதப் பங்குகளை வாங்கும் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் திட்டத்துக்கு மே 15-ம் தேதியன்று தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்தது.
தற்போது பூஷன் ஸ்டீல் 3-3.5 மில்லியன் டன் அளவிலான ஸ்டீலை உற்பத்தி செய்யும் நிலையில், டாடா நிர்வாகத்தின்கீழ் கண்டிப்பாக இதன் உற்பத்தித்திறனை 4-4.5 மில்லியன் டன் ஆக உயர்த்த முடியும் என டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் நரேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், டாடா ஸ்டீல் ஏல விண்ணப்பத்தி லேயே இந்த நிறுவனத்தின் 5,000 ஊழியர்களையும் டாடா ஸ்டீல் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் யாரும் பணிநீக்கம் செய்யப்படமாட்டார்கள் என டாடா தெரிவித்துள்ளது. கடன் சுமையில் இருக்கும் நிறுவனங்களை நல்ல நிறுவனங்கள் வாங்கினால், வங்கிக்கு வந்து சேர வேண்டிய பணம் திரும்பவரும் என்பதில் சந்தேகமில்லை!