
ஓவியம்: அரஸ்
தமிழகத்தின் மற்ற ஊர்களில் நல்ல மழை பெய்துவர, சென்னையில் சொட்டு மழை இல்லாத நிலையில், மாலையில் வெயில் நன்கு சாய்ந்தபின் நம் அலுவலகத்துக்கு வந்துசேர்ந்தார் ஷேர்லக். வந்தவரை வரவேற்று, சில்லென்று இளநீரைக் கொடுத்தோம். ஸ்ட்ராவில் அதனைக் கொஞ்சம் உறிஞ்சியவர், நம் கேள்விகளுக்கு உற்சாகமாகப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

பங்குச் சந்தையைவிட எஃப்.எம்.சி.ஜி பங்குகள் அதிக வருமானம் தருகின்றனவே?
“நடப்பு நிதியாண்டில் இதுவரைக்கும் நிஃப்டி எஃப்.எம்.சி.ஜி குறியீடு சுமார் 6% அதிகரித்துள்ளது. இதே காலத்தில் நிஃப்டி குறியீடு 1 சதவிகிதமே உயர்ந்துள்ளது. இதற்குக் காரணம், முடிந்த மார்ச் காலாண்டில் எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக வந்துள்ளதே.
சென்செக்ஸும், நிஃப்டியும் உச்சத்தைத் தொட்டுவிட்டு, இறங்கும் நிலையில் உள்ளன. ஆனால், பி.எஸ்.இ எஃப்.எம்.சி.ஜி குறியீடு மற்றும் என்.எஸ்.இ எஃப்.எம்.சி.ஜி குறியீடு முறையே 2.5% மற்றும் 3.1% அதிகரித்துள்ளது.
2018 ஜனவரி உச்சவிலைக்குப் பிறகு, நெஸ்லே இந்தியா பங்கின் விலை சுமார் 28% அதிகரித்துள்ளது. இதேபோல், ஸைடஸ் வெல்னஸ், பிரிட்டானியா, ஜுபிளன்ட் போன்ற நிறுவனங்களின் பங்குகளின் விலை முறையே 23%, 22% மற்றும் 18% அதிகரித்துள்ளன.
எஃப்.எம்.சி.ஜி துறை பங்குகள் தந்த லாபத்தைப் பார்த்து, இவற்றில் முதலீடு செய்யலாமா என நீங்கள் கேட்கலாம். கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் வேகமாக அதிகரித்து வருவது, இதனை மூலப்பொருளாகக் கொண்ட இந்தத் துறை நிறுவனங்களுக்குப் பாதகமான அம்சம். அதேசமயம், விவசாயப் பொருள்களுக்கு அதிகபட்ச ஆதரவு விலையைக் கொடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவது சாதகமான விஷயம். எனவே, குறுகிய கால முதலீட்டைத் தவிர்த்து, நீண்ட கால முதலீட்டுக்கு எஃப்.எம்.சி.ஜி பங்குகளைக் கவனிக்கலாம். அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் எஃப்.எம்.சி.ஜி மியூச்சுவல் ஃபண்டுகளைக் கவனிக்கலாம்”
மார்ச் காலாண்டில் நிகர இழப்பு அதிகரிப்புக்குப் பின்னரும்கூட எஸ்.பி.ஐ பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்களே?
‘‘2018, மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் எஸ்.பி.ஐ ரூ.7,718 கோடியை நிகர இழப்பாகச் சந்தித்துள்ளது. இந்த இழப்புக்கு வாராக் கடன் அதிகரித்ததும், கடன் பத்திரங்கள் மூலமான வியாபார வருவாய் குறைந்ததுமே முக்கியக் காரணம். நான்காவது காலாண்டில் சுமார் ரூ.1,728 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படலாம் என 14 அனலிஸ்ட் நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கு மாறாக மிக அதிகமாகவே அதாவது, ரூ.7,718 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

எதிர்பார்த்ததைவிட அதிக இழப்பு ஏற்பட்டாலும், பல தரகு நிறுவனங்கள் இலக்கு விலையைக் குறைத்தாலும்கூட, இந்தப் பங்குகள் தொடர்ந்து ஏற்றம் காணும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்கள் மத்தியில் காணப்படுகிறது. அதிக சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு களுடன் அதிகக் கிளைகள், அதிக மதிப்புடைய சொத்துகள் மற்றும் சந்தை மூலதனம் கொண்ட வலுவான வங்கியாகத் திகழ்வதால், பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள் பட்டியலில் எஸ்.பி.ஐ எப்போதுமே முதலீட்டாளர்களின் விருப்பமாகவே உள்ளது.’’
சிட்டி யூனியன் வங்கி போனஸ் பங்குகளையும், டிவிடெண்டையும் தந்து அசத்தியிருக்கிறதே!
‘‘சிட்டி யூனியன் பேங்கின் நிகர லாபம் கடந்த நான்காம் காலாண்டில் 18% அதிகரித்து, ரூ.592 கோடியாக இருக்கிறது. இந்த வங்கி தொடர்ந்து லாபம் தந்து வருவதையொட்டி, 10 பங்குகளுக்கு ஒரு பங்கை போனஸாகவும் வழங்கியுள்ளது. இதனுடன் பங்கொன்றுக்கு 30% டிவிடெண்ட்டும் அறிவித்துள்ளது. ‘‘இந்தத் துறையில் பிற நிறுவனங் களுடன் ஒப்பிடும்போது நாங்கள் திருப்திகரமான ரிசல்ட்டையே தந்திருக்கிறோம்’’ என்றார் சிட்டி யூனியன் பேங்கின் சி.இ.ஓ என்.காமகோடி. இந்த வங்கிப் பங்கு முதலீட்டாளர்களுக்கு ஒரே சந்தோஷம்தான்.’’
பூஷன் ஸ்டீல் நிறுவனத்தை டாடா ஸ்டீல் கையகப்படுத்தியதில் எஸ்.பி.ஐ வங்கி நல்ல ஆதாயம் அடைந்துள்ளதே?
‘‘பெரும் கடன் சுமையில் தத்தளித்து வந்த பூஷன் ஸ்டீல் நிறுவனத்தைப் பல்வேறு போராட்டங்களுக்குப்பின் டாடா ஸ்டீல் கையகப்படுத்தியது. இதனால், எஸ்.பி.ஐ வங்கி ரூ.1,300 கோடி வரை பயனடையும். மேலும், பஞ்சாப் நேஷனல் பேங்க் (ரூ.700 கோடி), கனரா பேங்க் (ரூ. 600 கோடி) மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா (ரூ.500 கோடி) ஆகிய வங்கிகளும் இதேபோன்று பயனடையும். சிண்டிகேட் வங்கி மற்றும் ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆகிய வங்கிகளும் தலா ரூ.400 கோடி ரூபாய் அளவுக்குப் பயனடையும். இதே மாதிரி, வாங்கிய கடனைத் திரும்பக் கட்ட முடியாமல் தவிக்கும் பிற நிறுவனங்களையும் நல்ல நிறுவனங்கள் வாங்கினால், எல்லோருக்கும் நல்லதுதான்.’’
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனப் பங்கு டீலிஸ்ட் செய்யப்படுகிறதே?
‘‘செயல்படாத, விதிமுறைகளைப் பின்பற்றாத மற்றும் மோசடி நிறுவனங்களை செபி பங்குச் சந்தைப் பட்டியலிருந்து நீக்கி (டீலிஸ்ட்) வருகிறது. விஜய் மல்லையாவின் செயல்படாத விமானச் சேவை நிறுவனமான கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் உள்பட 16 நிறுவனங்கள் மே 30-ம் தேதியிலிருந்து பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுகிறது. இந்தப் பட்டியலில் அக்ரோ டாயிச் இண்டஸ்ட்ரீஸ், ப்ராட்காஸ்ட் இனிசி யேட்டிவ்ஸ், க்ரெஸ்ட் அனிமேஷன் ஸ்டுடியோஸ், கே.டி.எல் பயோடெக், கெம்ராக் இண்டஸ்ட்ரீஸ் & எக்ஸ் போர்ட்ஸ், லூமக்ஸ் ஆட்டோ மேட்டிவ் சிஸ்டம்ஸ், நிஷான் காப்பர், ஸ்ரீ அஸ்டெர் சிலிகேட்ஸ் மற்றும் சூர்யா பார்மாசூட்டிகல்ஸ் ஆகிய நிறுவனங் களும் அடங்கும்.’’
வேதாந்தா பங்குகள் சரிந்துள்ளனவே?
‘‘ஸ்டெர்லைட் காப்பர் தயாரிப்பு நிறுவனம் தொடர்பாக தூத்துக்குடியில் நடந்த போராட்டம் கைமீறிச் சென்றதன் விளைவாகத் துப்பாக்கிச்சூடு நடந்து 13 பேர் இறந்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து அந்தப் பங்கின் விலை கடந்த பத்து மாதங்களில் இல்லாத அளவுக்குச் சரிந்தது. இதனால் கடந்த புதன்கிழமையன்று வேதாந்தா நிறுவனத்தின் பங்கு விலை 6.23% சரிந்து, 252.70 ரூபாயாகக் காணப்பட்டது.
ஆனால், வேதாந்தாவுக்கு காப்பர் உற்பத்தி மூலமான வருவாய், அதன் மொத்த வருவாயில் சிறிய பங்குதான் என்பதால், இது அந்த நிறுவனத்தின் வருவாயில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.’’
இந்த வாரத்தில் நடந்த பல்க் டீல் பற்றி சொல்லுங்கள்!
‘‘ஃப்யூச்சர் லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் 38.95 லட்சம் பங்குகளை பயனீர் இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட் நிறுவனம் விற்றிருக்கிறது. காவேரி சீட்ஸ் கம்பெனி நிறுவனத்தின் 7.43 லட்சம் பங்குகளை பி.என்.பி. பரிபாஸ் ஆர்பிட்ராஜ் ஃபண்ட் விற்றுள்ளது. ஜெட் ஏர்வேஸின் 6.92 லட்சம் பங்கு களை விற்ற சாஸ்த்ரா செக்யூரிட்டீஸ் டிரேடிங் பிரைவேட் லிமிடெட், ஜஸ்ட் டயலின் 5.27 லட்சம் பங்குகளை வாங்கியிருக்கிறது. இதே சாஸ்த்ரா நிறுவனம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் 6.57 கோடி பங்குகளை வாங்கியிருக்கிறது. இதெல்லாம் ஒரு தகவலுக்காக மட்டுமே.’’
இந்த வாரத்தில் இந்தியப் பங்குச் சந்தைகள் அதிக ஏற்ற இறக்கத்தைச் சந்தித்துள்ளனவே?
‘‘டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்துவருவதும், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பும் இந்தியப் பங்குச் சந்தைகளில் சரிவை ஏற்படுத்தின. தவிர, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்களது பங்குகளை விற்றுவரும் நிலையில், மியூச்சுவல் ஃபண்டுகள் மட்டும் முதலீட்டை மேற்கொள்ளாவிட்டால் பங்குச் சந்தைக் குறியீடுகள் இன்னும் கூடுதலான சரிவைச் சந்தித்திருக்கும்.
ஆனால், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சந்தை நல்ல முன்னேற்றத்தைக் கண்டது. அமெரிக்கா - வடகொரியா நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை முறிவு, வர்த்தக யுத்தம் பற்றிய கவலை போன்ற நெகட்டிவ் செய்திகள் இருந்தபோதிலும், கச்சா எண்ணெய் விலையில் சிறிய இறக்கம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாயின் தொடர்ந்த பலவீனத்தினால், ஐ.டி துறைப் பங்குகளின் விலையேற்றம் சந்தையின் முன்னேற்றத்திற்கு உதவியது’’ என்று பேசிக்கொண்டே இருந்தவர், சுமார் ஏழு மணிக்கு நம் அலுவலகத்தை விட்டுப் புறப்பட்டார்!
பி.ஏ.சி.எல் சொத்துகள்... செபி ஏலம்!
பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டி மோசடியில் ஈடுபட்ட பி.ஏ.சி.எல் நிறுவனத்தின் சொத்துகளை ஏலம் விடும் நடவடிக்கையில் செபி களமிறங்கி உள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்குத் திருப்பி கொடுக்க வேண்டிய 60,000 கோடி ரூபாயைக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளது.
அதன் ஓர் அம்சமாகவே பி.ஏ.சி.எல் நிறுவனத்தின் சொத்துகளை ஏலம் எடுக்க விரும்புவோர்களிடமிருந்து ஏல விண்ணப்பங்களை செபி கோரியுள்ளது. இந்த விண்ணப்பங்களை வருகிற ஜூன் 21-ம் தேதிக்குள் ஆர்.எம். லோத்தா கமிட்டியிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் செபி தெரிவித்துள்ளது.